தூரிகை: ரவிபேலட்
கவிதை

அற மறம்!

அறிவுமதி

சாந்தமை மார்பில்
நெடுவேல்
பாய்ந்தென
வேந்தரும் பொருது
களத்து
ஒழிந்தனர்!

புறநானூறு-63-9-10.

யானைகளோடு... யானைப் படை
வீரர்களும்
போரில்
இருபடையிலுமாக
ஒருவரும் மிச்சமின்றி
உயிர்விட்டனர்.

குதிரைகளோடு... குதிரைப் படை
வீரர்களும்
போரில்
இருபடையிலுமாக
ஒருவரும்
மிச்சமின்றி உயிர்விட்டனர்.

தேர்களோடு தேர்ப்படை
வீரர்களும்
போரில்
இருபடையிலுமாக
ஒருவரும்
மிச்சமின்றி
உயிர்விட்டனர்.

போரிடும் வீரர்கள்
போரிடுகிற வரை
முரசுகளடித்து
களவெறி மூட்டியவர்கள்
களத்தில்
ஒருவருமற்று
இருபடையிலும்
உயிர்
விட...

முரசுகளை அடித்துக்
கொண்டிருந்த இசை வீரர்கள்
வேல்கள் எடுத்து வீரர்களாகிப்
போரிட்டு
இருபடையிலும்
உயிர்
விட

ஓசையெழுப்ப யாருமற்று
முரசங்கள்
ஒலியிழந்து
கிடந்தன.

ஆம்...
எவரும் மிச்சமற்று
எதுவும் மிச்சமற்று...
இறந்தவர்களின்
படுகளத்து நடுவே
மிச்சமாய்
இந்த மன்னனும்!
அந்த மன்னனும்!

பிழைத்திருக்கும்
இருவரும்
அவரவர்
அரண்மனைக்குத்
திரும்பலாம்தானே...
ம்கூம்...
போர் அறத்தில்
அது
பிழை!

தங்களுக்காக
யானைகளும்
குதிரைகளும்
வீரர்களும்
இறந்து கிடக்க..

இருவரும்
இனிப்
போரிடல் வேண்டாமென
புறப்படுதலும்
ஒருவருக்கொருவர்
புறமுதுகிடுதலே!
அதனால்..

இருவரும் அவரவர் ஆற்றலின் உச்சம்
சென்று
இறந்துகிடப்போர்
மகிழ
வேலோடு வேல்
நெருப்பு தெறிக்கப்
போரிட்டு...
சந்தனம் பூசிய மார்புகள் ஒரு சேரச்
சம்மதிக்க
அவன்

இவனது மார்பிலும்
இவன்
அவனது மார்பிலும்
விரும்பிச் செருகி களத்திலேயே
வீழ்ந்து
மடிவதே
அன்றைய தமிழ் மன்னர்களின்
அற
மறம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram