கவிதை

நழுவும் வேல்!

அறிவுமதி

எழுத்து: அறிவுமதி தூரிகை: ரவிபேலட்

“நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்: செழிய.”

புறநானூறு: 25

வஞ்சினம் கூறி
உன்னோடு
போரிட வந்த
இரு பெரும் வேந்தர்களைக்
களத்திலே
வெட்டி வீழ்த்திய
மறப்
பெருமிதந்தோடு
திரும்புகிறாய்!


அங்கே...
களத்திலே இறந்துகிடக்கும்
தம் ஆண்களுக்காக
பெண்கள்
தலைவிரி கோலமாய்
மாரடித்துக் கொண்டு
ஒப்பாரி வைக்கிறார்கள்.
கைம்மை பூணும்
மரபில்
அப்பெண்களின்
நீண்ட கூந்தலை
மழித்து, அவர்தம் தலைகளை
மொட்டையாக்குகிறார்கள்.
கண்ட செழியனே!
ஒன்று மொழி
வேந்தனே!
உன் கண்கள் கலங்குகின்றன.
உன்
நெஞ்சு
கலங்குகிறது


இந்தப் பெண்கள்
பெற்று
ஆளாக்கித் தருகிற
பிள்ளைகளைத்தாமே
நாம்
போரில் சாகடிக்கிறோம்!
பெறுவதற்குக் காரணமாக
இருக்கிற
இந்தப் பெண்களின்
கணவர்களைத்தாமே
நாம்
போரில் சாகடிக்கிறோம்!

போர் என்ற பெயரிலும்,
வீரம்
என்ற பெயரிலும்,
நம்மை நம்பி வந்த
ஆண்களைச் சாகடித்து
இந்தப் பெண்களை
எவ்வளவு இழப்புக்கு ஆளாக்கி
வேதனைப்படுத்துகிறோம்!


போர்
கூடாது.
கூடாது. கொலை செய்யும்
இந்த வேல்
இனி
என் கையில்
இருக்கக் கூடாது.
கூடவே கூடாது.
என
அந்த வேலை
உதறி எறிகிறாய்!


புலவர்களின் கைகளில் இருந்த
எழுத்தாணிகளே,
மன்னர்களின் கைகளில் இருந்த
வேல்களை
நழுவச் செய்தன
என்பதை இப்போதாவது நம்புகிறீர்களா!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram