சீனு ராமசாமி 
கவிதை

​ சீனு ராமசாமி கவிதைகள்

சீனு ராமசாமி

1. சிலைகளின் நிரந்தரப் போர்

 ​முதல் சிலை உடையும் பேரொலி

உன் செவிகளை எட்டுவதில்லை

​வேடிக்கை பார்க்கும் உன் மௌனமும்

என்றோ கல்லாய்ச் சமைந்திருந்தது.

​உன் மௌனத்தின் மீது வந்து சரிகிறது

உடைந்து விழும் காலத்தின் புழுதி.

​அவர்கள் எதையும் மிச்சம் வைக்கப் போவதில்லை,

​ஒவ்வொன்றாகச்

சரிந்துகொண்டிருக்கின்றன

காலத்தின் சாட்சியங்கள்.

​உடைப்பவர்களின் கரங்களில் இருப்பது

வரலாற்றை அழிக்கும் சம்மட்டி

​அது, அவர்கள் மூளைக்குள்

கெட்டிதட்டிப்போன இன்னொரு கற்பாறை.

​ஆனாலும் விந்தை பார்

அவர்களே சிலைகளை ஆழமாக நம்புகிறவர்கள்,

​சிலைகளின் நிழலில் தஞ்சம் புகுந்தவர்கள்.

​பூஜை அறையிலிருந்து

வீதிக்கு வந்திருக்கிறது அவர்களின் மூர்க்கமான பக்தி.

​ஒரு கணம் உற்றுப்பார்

அவர்கள் சிலைகளைத்தான் உடைக்கிறார்கள்

ஏனெனில்,

எப்படியாவது தாமும் ஒருநாள்

சிலையாகிவிடத் துடிப்பவர்கள் அவர்கள்.

​இங்கு மாமிசமும் ரத்தமும்

எப்பொழுதோ பாறையாக உறைந்துவிட்டன.

​மனிதர்கள் யாருமற்ற வீதியில்

நடமாடும் சிலைகள்,

​நிற்கும் சிலைகளின் மீது

தொடர்ச்சியாகப் போர் தொடுக்கின்றன.

​அது,

சிலைகளை உடைக்கும் சிலைகளின் நிரந்தரப் போர்.

​ரத்தத்திற்குப் பதிலாகத் தெருவெங்கும் சிதறிக் கிடக்கின்றன

வரலாற்றின் துகள்களும்

சிலைகளைத் தின்ற சிலைகளின் எச்சங்களும்.

2. அலைகடல்

​மிதக்கின்ற கப்பல்கள்

​அவற்றின் கட்டுப்பாடு

​ஆழத்தின் மௌனம்

​பாதி பேசாத சொற்கள்.

​திரும்பி வந்து சேராமல் போகலாம்,

​உள்ளிருக்கும் காயங்கள்

​கண்ணீர்த் துளிகளைத் தாங்காது.

​அலையடிக்கும் துயரங்களாக அவை

​எஞ்சியும் இருக்கலாம்,

​எப்பொழுதும்

3. உயிர்களை வளர்ப்பவர்கள்

​வழிபாட்டுக்காகவோ

அன்பின் ஆறுதலுக்காகவோ

அவர்கள் உயிர்களை வளர்ப்பவர்கள்

​நட்பின் பெயராலும்

போலிச் சமத்துவப் பிம்பத்தாலும்

தங்கள் மனதின் கருமையை

அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டார்கள்.

​தனிமையின் வெறுமையை நிரப்பவும்

தங்கள் தவறுகளில் இருந்து நழுவிக்கொள்ளவும்

அவர்களுக்கு உயிர்கள் தேவைப்பட்டன.

​நல்லவர்கள் போல முகமூடி அணிந்து

காரியங்களைச் சாதித்தபடி

வளர்த்த உயிர்களையெல்லாம்

தங்கள் வன்மத்தின் வடிகாலாகவும்

குற்றங்களை மறைக்கும் கேடயமாகவும்

பயன்படுத்திக் கொண்டார்கள்.

​தக்க சமயத்தில் காட்டிக்கொடுக்கவும்

மற்றவர்களை மிரட்டவும்

பயன்படுத்தப்பட்ட அந்த உயிர்கள்

​கடைசியில் அனுப்பப்பட்டது என்னவோ பலிபீடங்களுக்கு

​இன்னும் தீரவில்லை அவர்களின் பசி

​இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வளர்ப்பதற்குப் புதிய உயிர்களை.

​நீங்கள் அருகில் போனால்

உங்களையும் கருணையோடு வளர்க்க காத்திருக்கிறார்கள்.

​4. மூடப்பட்டவைகளின் பசி

​உனதென எஞ்சியிருக்க

ஏதுமில்லை இங்கு,

​எல்லாமே திறக்கப்பட்டோ

அல்லது மூடிக்கிடந்தோ

இருக்கின்றன.

​வெறுமனே மூடிவிட

முடிவதில்லை எதையும்

​திறந்திருப்பதைக் காட்டிலும்

ஒன்றை மூடுவதற்கு

ஒரு பிரத்யேக சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது

​பசி தீர உண்ணவியலாமல்

மூடிவைக்கப்பட்ட  இருளுக்குள்

அடங்கி விம்மிக் கொண்டிருக்கிறது

எஞ்சியவர்களின் தீராப் பசி.

என்றேனும் இவ்வுலகில் நீரின்றி

முளைக்கும் பசியும் கூட.

​5. அசைவே இயக்கம்

​எங்கோ உதிரும்

ஒரு சிறு சருகின் சுழற்சி

நான் விழித்திருப்பதை

எனக்கு உணர்த்துகிறது.

​வெயிலில் அசையும் உன் நிழல் தீண்டல்,

​முழுப்பகலும் ஓடும் நகரத்து வீதிகள்,

​தூரத்து விமானம் வரையும் வெண்கோடு,

​நீரில் கரையும் ஒற்றை மேகம்.

​எங்கிருந்தோ வந்த இச்சிறு பட்டுப் பூச்சி,

​ஜன்னல் கம்பியில் வழியும் மழைத்துளி,

​என் காலம் நகர்வதை

மெல்லச் சொல்கிறது.

​அலையில்லை எனில்

சமுத்திரம் இல்லை,

​அசைவுகளால் மட்டுமே

ஆகியிருக்கிறது உலகம்.

​அசைவு உயிர் தருகிறது

இங்குள்ள எதற்கும்,

​என்றும் ஒரு பிணத்துக்கு

எந்த அசைவுமில்லை.

​அசையும் யானையின் காதுகளில்

பூச்சிகளுக்கு இடமில்லை,

​இலை உதிர்ந்த அசைவற்ற மரம்

கைகூப்பிய தியானி.

​சுற்றிப் பறக்கும் மரங்கொத்திகளால்

அதன் மனதைக் கொத்த முடியவில்லை,

​எனக்கும் உண்டு சிறகுகள்

அசைய அதற்கும் ஓர் ஆகாயம்

  *****

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram