காலச்சுவடு கண்ணன் 
இலக்கியம்

“இட்லிக்குத் தரும் மரியாதையை ஒரு நூலுக்கும் கொடுங்கள்!”- காலச்சுவடு கண்ணன்

அருள்செல்வன்

காலச்சுவடு என்பதை இதழாகவும் பதிப்பகமாகவும் வெற்றிப்பாதையில் கொண்டு சென்று   அதை  ஓர் இலக்கிய இயக்கமாக மாற்றிய பெருமைக்குரியவர் பதிப்பாளர் கண்ணன். அவருடன் ஓர் உரையாடல்!


 காலச்சுவடு இதழ், பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னணி பற்றிக் கூற முடியுமா?

 
1960களிலும் 70களிலும் துடிப்புடன் இயங்கிய சிறுபத்திரிகை இயக்கம் 1980களில் பலவீனப்பட்டு வந்தது. அவ்வியக்கத்தின் சாதகமான தாக்கத்தை வெகுஜன இதழ்களில், பண்பாட்டில், அரசியலில் அன்று அதிகம் காண முடியவில்லை.

தமிழ்ச் சமூகத்தில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மாற்று இதழைத் தொடங்க வேண்டிய சுந்தர ராமசாமி  ஓரிரு முயற்சிகள் ஏற்பட்டபோது அவர் அவற்றுக்குப் பேராதரவளித்தார். ஆனால் அம்முயற்சிகள் நிலைபெறவில்லை. இந்நிலையில்தான் 'காலச்சுவடு' காலாண்டிதழ் அவரால் தொடங்கப்பட்டது. இலக்கியத்தையும் அதற்கு அப்பால் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பாதிக்கும், விவாதத்தை உருவாக்கும் பல ஆக்கங்களை அது வெளியிட்டது. ஆனால் எட்டு இதழ்களுக்கு மேல் அவரால் தொடர முடியவில்லை. தகுதியான உள்ளடக்கத்துடன் இதழை வெளியிட அவசியமான ஆதரவு இலக்கிய அறிவுலகச் சூழலிலிருந்து கிடைக்கவில்லை என்று கருதினார். ஒரு எழுத்தாளராகத் தனது பணிகளையும் காலச்சுவடு பாதிக்கிறது என்று நினைத்தார். 1991இல் ஆண்டு மலர் வெளியிட்டதோடு காலச்சுவடின் இயக்கம் நின்றது.
 
1994இல் காலச்சுவடு இதழை நான் மீண்டும் தொடங்கினேன். ஆசிரியர் குழு அமைத்துச் செயல்பட்டோம். தமிழ்ப்பதிப்புலகம் சார்ந்து அக்காலத்தில் சுராவுக்கு இரண்டு முக்கியமான குறைகள் இருந்தன. ஒன்று அவருடைய படைப்புகள் பெரும்பாலும் வாசகர்களுக்குக் கிடைக்காத நிலையிருந்தது. மற்றது புதுமைப்பித்தனிலிருந்து ஜி. நாகராஜன் வரை நவீனத்துவ முன்னோடிகளின் படைப்புகள் கிடைக்காத நிலையும் அல்லது அவ்வாறு அவை கிடைத்தாலும் நம்பகமான பதிப்புகளாக இல்லாத நிலையும் இருந்தது . அன்று வலுப்பெற்று வந்த  நூலாக்கத்தின் தொழில்நுட்ப மாற்றங்கள், நாகர்கோவிலிலிருந்தே ஒரு பதிப்பகத்தை நடத்தி சென்னையில் நூல்களை அச்சிடும் வாய்ப்பை உருவாக்கின. அதோடு தொலைத் தொடர்புப் புரட்சி விரிவுபெற்று வந்த காலகட்டம் அது. இதனால் ஒரு பதிப்பகத்தின் முகவரியின் முக்கியத்துவம் குறைந்தது. எனவே சுராவின் இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் நோக்கத்துடன் காலச்சுவடு பதிப்பகத்தை 1995ஆம் ஆண்டு தொடங்கினேன். ஒரு சில ஆண்டுகளில் சமகாலப் படைப்புகளையும் வெளியிடத் தொடங்கினோம்.
 
புத்தகக் காட்சிகளிலும் தனிப்பட்ட முறையில் காலச்சுவடு பதிப்பகம் எப்போதும் பரபரப்பான விற்பனையில் இருக்கிறது. அதன் ரகசியம் என்ன? இந்த இடத்தை வந்தடைந்தது எப்படி?
 
நல்ல நூல்களை வெளியிடுகிறோம். காலத்தின் தேவையறிந்து வெளியிடுகிறோம். வெளியிடும் நூல்களின் கருப்பொருளை ஒவ்வொரு ஆண்டும் விரிவுபடுத்தி வருகிறோம். நம்பகமான பதிப்புகளாக, அழகியல் உணர்வுடன் பதிப்பிக்கிறோம். நல்ல நூல்களை நோக்கிச் சிந்திக்கும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறோம். வெளியிடும் நூல்களை வாசகர் கவனத்திற்குக் கொண்டு செல்ல எல்லா வழிகளிலும் முயல்கிறோம். எங்கள் நூல்களை வாசகர் எளிதில் வாங்கும் வண்ணம் உலகளாவிய அளவில் விநியோகிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். நூல்களை எப்போதும் அச்சில் வைத்திருக்கிறோம். சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். வேறு ரகசியம் எதுவுமில்லை.
 
ஒரு தீவிர இதழை நடத்துவதுதான் எங்கள் இறுதி நோக்கம், பதிப்பகம்தான் செயல்திட்டம். அவை எங்களுக்கு மற்றொன்றுக்கான ஏணிப்படிகள் அல்ல. பதிப்பாளர், இதழாசிரியர் என்பதைத் தாண்டி எந்த அடையாளமும் எனக்கு இல்லை.
 
வெளியிடும் நூல்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? படைப்பாளியைப் பார்த்தா? படைப்புகளைப் பார்த்தா?
 
இரண்டு நிலைகள் உள்ளன. ஒரு நூலை வெளியிடத் தேர்வுசெய்வது அதனை மதிப்பீடு செய்துதான். இதில் அதன் சமூகத் தாக்கமும் முக்கியம், அழகியலும் முக்கியம். இவை இரண்டையும் கோழிச்சண்டையில் இறக்கிவிட வேண்டிய அவசியமே இல்லை. இரண்டாவதாக, ஒரு சில படைப்பாளிகளைத் தேர்வுசெய்து அவர்களின் முழுப் படைப்புகளையும் வெளியிடுகிறோம். இந்தத் தேர்வு அவர்களது ஒட்டுமொத்த ஆளுமையையும் பங்களிப்பையும் கருதி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு அனைத்துப் படைப்புகளையும் வெளியிடும்போது அவை ஒரே தரத்தில் இருக்காது, எனினும் வாசகருக்கு அவசியமானவை என்ற அறிதலோடு வெளியிடுகிறோம். காலச்சுவடின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் படைப்புகளின் எண்ணிக்கை அதிகம். வெளியிடும் நூல்களின் எண்ணிக்கையை மெதுவாகவே அதிகரிக்கிறோம். நூல்களைத் தேர்வு செய்யும் எங்கள் செயல்முறையும் மேம்பட்டுவருகிறது. ஆக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் நூல்களின் குணம் மேம்பட்டுவருகிறது என்று நம்புகிறேன்.
 
இதுவரை வெளியிட்ட மொத்த நூல்கள்? எப்போதும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் படைப்பு எது? அதற்கான காரணம் என்ன?
 
இதுவரை 1450 நூல்களை வெளியிட்டிருக்கிறோம். முதல் ஆண்டு வெளிவந்த 'ஒரு புளியமரத்தின் கதை' இன்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’, ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’, தொ.ப.வின் ‘அறியப்படாத தமிழகம்’, ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ இவையெல்லாம் நீண்ட காலமாக விற்பனையில் முன்னணியில் இருப்பவை. ஒவ்வொரு ஆண்டும் முன்னிலை பெறும் நூல்கள் வேறு பல உண்டு.

உலகின் எந்தப் பதிப்பாளருக்கும் தனது வெளியீடுகளில் எவை விற்பனையில் சிறக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. அவர்கள் அனுமானத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிழைத்துப்போனவை சில இருக்கும். எதிர்பாராத ஒரு நூல் மேலெழுந்துவரும். இவற்றைக் கவனிப்பது திகைப்பையும் சுவாரஸ்யத்தையும் ஒருங்கே ஏற்படுத்தும் அனுபவம்.
 
உங்கள் பதிப்பக நூல்களின் விலை அதிகம் என்பவர்களுக்கு உங்கள் பதில்? விலை எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது?
 
2002இல் முதன்முதலில் புதுதில்லி பன்னாட்டுப் புத்தகச் சந்தையில் 22 இந்திய மொழி நூல்களைப் பார்த்தேன். தமிழ் நூல்கள் தயாரிப்பில் மேம்பட்டும் விலையில் குறைந்தும் இருப்பதை அன்று பதிவு செய்திருக்கிறேன். இன்றும் அதே நிலைதான். மராத்தியில் இன்று ஒரு பக்கத்திற்கு ரூ 1.65. காலச்சுவடு நூல் ஒரு பக்கத்திற்கு ரூ 1.30. இலவசமாக சோவியத் யூனியனிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூல்கள் குறைந்த விலையில் இங்கு விற்கப்பட்ட பாரம்பரியம், நூல் மலிவானது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஒரு நூலின் தயாரிப்பு விலையை வைத்து ஒரு நூலின் மதிப்பை நிர்ணயிப்பது பிழை. ஒரு நூலின் உருவாக்கத்தில் தகுதியான ஒரு பதிப்பகம் எவ்வாறு பங்களிக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லை. இதற்கு வாசகர்களைக் குறை சொல்வதைவிட நூலின் மதிப்பைக்கூட்டும் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல் அச்சக புரோக்கர்களாகச் செயல்படக்கூடிய, பதிப்புத்துறை பற்றிய எந்த விழிப்புணர்வும் பற்றுதலும் அற்ற பதிப்பாளர்களைத் தான் முதல் காரணமாகச் சொல்ல வேண்டும்.
 
இட்லி மாவின் அடக்க விலையை வைத்து ஒரு தட்டு இட்லியின் விலையை ஒரு உணவகத்தில் யாரும் கணிப்பதில்லை. எல்லா உணவகங்களும் ஒரே விலையில் விற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. இட்லிக்குத் தரும் மரியாதையையும் அறிதலையும் ஒரு நூலுக்கும் தர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
 
காலச்சுவடைப் பொறுத்தவரை வெளியிடும் நூல்களைக் கவனமாகத் தேர்வுசெய்கிறோம். நூலாசிரியரின் ஒத்துழைப்புடன் நூலை மேம்படுத்துகிறோம். கவனமாக ஒவ்வொரு நூலும் எங்களுடைய எடிட்டர்களால் தகுதிப்படுத்தப்படுகிறது. அதாவது மொழி மேம்படுகிறது, உள்ளடக்கம் துலங்குகிறது. ஒவ்வொரு நூலும் பலமுறை மெய்ப்புப் பார்க்கப்படுகிறது. எல்லா மாற்றங்களும் நூலாசிரியருக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்படுகிறது. இவ்வளவையும் தாண்டி பிழைகள் சில நூலில் மிஞ்சிவிடும் என்பதை உணர்கிறோம். எனவே ஒவ்வொரு நூலிலும் வாசகப் பங்களிப்பைக் கோரியிருக்கிறோம். அவர்கள் பிழைகள் கண்ணில்பட்டால் உடன் எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். அடுத்த அடுத்த பதிப்புகளில் திருத்தங்களை மேற்கொண்டபடியே இருக்கிறோம்.

நூலின் அட்டை கவனத்துடன் வடிவமைக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து இயங்கும் பத்திற்கும் மேற்பட்ட ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எங்களுடன் இணைந்து இயங்குகிறார்கள். பின்னட்டைக் குறிப்பு பலமுறை எடிட் செய்யப்பட்டு வாசகரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கவனத்துடன் அமைக்கப்படுகிறது. வெளிவரும் ஒவ்வொரு நூலையும் வாசகர் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஓர் அணி இயங்குகிறது. சாத்தியமான எல்லா வழிமுறைகளிலும் நூலை விநியோகிக்கத் தனிப்பிரிவு உள்ளது. இதனால் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பதிப்பகத்திற்கும் பயன் உண்டு. முறையாக ராயல்டியும் கொடுக்கிறோம். எங்கள் நூலின் விலையை இந்தச் செயல்களின் பின்னணியில் பரிசோதிக்க வேண்டும்.
 
மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள். எந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களைத் தேர்வு செய்கிறீர்கள்?
 

புதிய மொழிகள், புதிய பண்பாடுகள் தமிழுக்கு வர வேண்டும். இதுவரை 30 நாட்டு நூல்களைத் தமிழாக்கியிருக்கிறோம். புதிய கதைகள், புதிய உள்ளடக்கம், புதிய சொல்முறைகள், அழகியல் பார்வைகள் தமிழுக்கு வருவது தமிழ் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் வளப்படுத்தும். உலகப் பண்பாடுகளை அறியும்போது மனிதப் பொதுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். பரந்த வாசிப்பு குறுகிய மனப்பான்மைகளை உடைத்தெறியும் ஆற்றல்கொண்டது. தமிழ்ப் பண்பாடும் சமூகமும் இதனால் மேன்மையடையும். எங்கள் ஆசிரியர் குழு ஒவ்வொரு நூலையும் படித்துப்பார்த்து, விவாதித்து மொழிபெயர்ப்புக்குத் தேர்வு செய்கிறார்கள். தமிழ்ப் படைப்புகளைத் தெரிவுசெய்யும் அதே சட்டகத்தில்தான் மொழிபெயர்ப்புக்கான நூல்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.
 
 மொழிபெயர்ப்பு வெளியீடுகளில் மன நிறைவு தந்தது எது?
 
காலச்சுவடு வெளியிட்ட முதல் மொழிபெயர்ப்பு தகழியின் ‘தோட்டியின் மகன்’, சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்க்கப்பட்டு 1950களில் சரஸ்வதியில் தொடராக வெளிவந்த பின்னர் 40 ஆண்டுகள் அதை நூலாக்க ஒரு பதிப்பாளர் தமிழில் இருக்கவில்லை. 2000 இல் காலச்சுவடு வெளியிட்டது. சரஸ்வதி இதழ்களைத் தேடி எடுத்துத் தொகுப்பதே ஒரு கடினப்பணியாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 19/20 வயதில் மேற்கொண்ட மொழிபெயர்ப்பை சுரா மீண்டும் தனது நண்பர் எம்.எஸ்.இன் உதவியோடு மேம்படுத்தினார். அது வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று இன்றுவரை அச்சில் உள்ளது.
 
அண்மையில் வெளிவந்த மொழிபெயர்ப்பாக கோனி பால்மானின் ‘உன் கதை என் கதை’ அரவிந்தனின் கடைசி மொழிபெயர்ப்பு. அவர் மிகவும் ரசித்துச் செய்த கடும் பணி. நல்ல வரவேற்பை உடனே பெற்றது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக வந்த முதல் மொழிபெயர்ப்பு ஸ்ரீதரனின் ‘வாரிச்சூடினும் பார்ப்பவர் இல்லை’. சீனரான சோ சின் சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்த ‘மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி’ நூலை இந்த ஆண்டு வெளியிட்டோம். அயல்நாட்டவர் தமிழைக் கற்று தமிழிலிருந்து படைப்புகளைத் தமது மொழிகளுக்குக் கொண்டு சென்றதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ஒருவர் தமிழைக் கற்றுத் தமது மொழி இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்து தமிழுக்கு வளம் சேர்த்த முதல் சந்தர்ப்பம் இதுதான் என்று நம்புகிறேன். சோ சின் தமிழ்க் கவிஞரும்கூட! அவருடைய தமிழ்ப் பெயர் ஈஸ்வரி.
 
காலச்சுவடு வெளியிடும் எதற்கும் ஒரு கறார் தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது என்கிற பெயர் பெற்று உள்ளது. எப்படி? அதற்காக என்ன செய்கிறீர்கள்?

 
பெயர் பெற்றதற்குக் காரணம் அவ்வாறு செய்கிறோம் என்பதுதான். தமிழில் எப்பொருட்களில் நூல்களைக் கொண்டு வர வேண்டும்? எங்களுக்கு அனுப்பப்படும் ஒரு கைப்படியை ஏன் வெளியிட வேண்டும்? ஒரு நூலை வெளியிடும்போது காலச்சுவடு எவ்விதத்தில் அதன் மதிப்பைக் கூட்ட முடியும்? இதுபோன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு அவற்றுக்கான விடையோடுதான் ஒரு நூல் பிரசுரத்திற்குத் தேர்வு செய்யப்படுகிறது.
 
நூலக நூல் கொள்முதல் ஒதுக்கீடுகளில் எந்த அளவிற்கு ஆதரவுப் போக்கு உள்ளது?
 
நூலக ஆணை மிக முக்கியமானது. நூலக வாசகர்களை எட்டுவது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்திற்கும் அவசியமானது. அதைப் புறக்கணிக்கவே முடியாது. அதே நேரம் ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் அரசு நூலக ஆணையை நம்பி இருப்பது ஆரோக்கியமானது அல்ல.

தற்போதைய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் வெளிப்படையான நூலகக் கொள்முதல் கொள்கை சிறப்பானது. அதன் வழி கிடைக்கப்பெறும் நூலக ஆணையைப் புகாரின்றி நிறைவேற்றி வரும் பதிப்பகங்களில் காலச்சுவடும் ஒன்று.
 

தந்தை சுந்தர ராமசாமியுடன் கண்ணன்


ஒரு பதிப்பகம் ஓர் இலக்கிய இயக்கமாக மாறியது எப்படி?
 
காலமும் சூழலும் காலச்சுவடின் அணியின் உழைப்பும் கூடிவந்து அப்படி ஒரு பரிமாண வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காலச்சுவடு ஓர் இயக்கமாக உருப் பெற்றதற்குக் காரணம் அதனுடன் இயங்கும் எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் வாசகர்களின் அபரிதமான ஆதரவும்தான். உலகளாவிய, பன்முகத்தன்மையுடைய, சமத்துவமான, சினிமா சாராத, இத்தனை அறிவாற்றல் உடைய ஒரு குழு இதுவரை எந்தவொரு தமிழ் அமைப்பைச் சுற்றியும் உருவானது இல்லை. இதை ஒரு கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும். காலச்சுவடு மதிப்பீடுகளின் அடிப்படையில் இயங்குகிறது. சமூகப் பயன் கருதிச் செயல்படுகிறது. சுரா உட்பட யாரைச் சுற்றியும் நாயக வழிபாடு உருவாவதை முற்றிலும் தவிர்த்துவருகிறோம். அது புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு. செல்லப்பா, அசோகமித்திரன், அம்பை, சுகுமாரன், பெருமாள்முருகன் என்று தொடரும் நவீன இலக்கிய மரபிற்கு விரோதமானது.

ஒரு பதிப்பகத்திற்கு இன்றியமையாத செயல்முறையான கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம், அதற்காகக் கடுமையாகப் போராடவும் தயாராக இருக்கிறோம்.
 
 பதிப்பகத்தைப் பொறுத்தவரை உங்கள் தந்தையிடம் கற்றுக்கொண்டு பின்பற்றுவது எது?
 
எங்களை வழி நடத்தும் மதிப்பீடுகள் சுராவினுடையவை. அவருடைய பார்வையை அப்படியே பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்பவும், எங்கள் சுயசிந்தனையின் வெளிச்சத்திலும் செயல்படுகிறோம். அவர் சேமித்து வைத்திருந்த நன்மதிப்பு எங்களுடைய அளப்பரிய சமூக மூலதனம். அது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வலுசேர்க்கிறது. காலச்சுவடில் யாரும் தம்மை வலிந்து முன்னிலைப்படுத்திக்கொள்வது இல்லை. ஆழமான செயல்பாட்டின் வழியாகவே எங்களுடைய ஆளுமைகள் உருவாகியிருக்கின்றன. இதுவும் சுராவின் வழிகாட்டுதல்தான்.
 
 சந்தாத் திட்டம், முன்வெளியீட்டுத் திட்டம் போன்றவை எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளன?
 
எங்கள் இயக்கத்தில் வாசகரையும் பங்காளிகளாக்கும் திட்டங்கள் அவை. அவற்றின் வெற்றி என்பது பொருளாதாரத் தன்மையிலானது அல்ல. வாசகருடன் வலுவான பிணைப்பை உருவாக்குவதுதான் முதன்மையான நோக்கம். அவ்விதத்தில் சில ஆயிரம் வாசகர்கள் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு யானை பலத்தை வழங்கியிருக்கிறது. இதுவும் காலச்சுவடு ஓர் இயக்கமாகப் பரிமாணிக்க முக்கிய காரணம்.
 
 ‘காகங்கள்’ போல் இலக்கிய அமைப்பு மீண்டும் தொடங்கும் உத்தேசம் உண்டா?

 
சுரா மறைந்த பின்னர் அவர் நினைவாக, காகங்கள் நடந்த எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் 12 சந்திப்புகள் மட்டும் என்று திட்டமிட்டு நடத்தினேன். சுராவின் காகங்கள் அவருடைய ஆளுமையை மையமாகக் கொண்டு நடந்த தொடர் சந்திப்பு. அதை மீட்டெடுப்பது பெரிய சவால்தான்.
 
  காலச்சுவடு சட்டப் போராட்டங்கள், வழக்குகள், வெற்றிகள் பற்றி?
 
2008இல் காலச்சுவடு இதழை நூலகங்களிலிருந்து நீக்கிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைச் சட்டரீதியாக எதிர்கொண்டோம். ஓர் அரசு ஒரு முடிவைக் காரணகாரியங்களின் அடிப்படையில்தான் எடுக்க முடியும், மனம்போன போக்கில் அல்ல என்பதுதான் அவ்வழக்கின் ஆதாரமான வாதம். தீர்ப்புவரும் தருணத்தில் அரசு மீண்டும் நூலக ஆணையைப் புதுப்பித்தது.
 
அடுத்ததாக பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலைத் தடைசெய்வதற்கு எதிரான வழக்கு. தமுஎகச தொடர்ந்த வழக்கில் காலச்சுவடு ஒரு பதில்வாதி. ஆனால் எங்கள் வழக்கறிஞர் டாக்டர் வி. சுரேஷின் திறமையான வாதங்களால்தான் சிறப்பான தீர்ப்பு கிடைத்தது. இந்த இரு பிரச்சினைகளிலும் ஜி.ஆர். சுவாமிநாதன் பெரிதும் துணை நின்றார்.