ஓவியம்: பி.ஆர். ராஜன்
சிறுகதைகள்

அடுத்து

ம. காமுத்துரை

“வாங்க ஸாமி!” வெத்திலை எச்சில் தெறித்து விடாமல் வாயைக் குவித்த வாக்கில் லாவகமாய்ப் பேசி தணிகாசலம் பிள்ளையை வரவேற்றார் அன்னஞ்சி நாயக்கர். வெளிறிய உதடுகளில் காவி நிறத்தில் ஈரம் மின்னியது. வார்த்தைகளில் லூஸ் புகையிலையின் வாசம் கமழ்ந்தது. தலையை அசைத்து அவரைக் கடைக்குள் வரச் சொன்னார். அருகிலிருந்த பத்மநாபன் தொடக்கப் பள்ளியில் காலை நேரத்து இடைவேளை முடிந்து வகுப்புகள் தொடங்கி இருந்தன. வீதி வெப்பலோடிக் கிடந்தது.

கொண்டிச்சாவடித் திடலின் மேலணையின் பிரதான சாலையில் நாயக்கரது வீடு இருந்தது. வீட்டின் வாசலை ஒட்டி பெட்டிக்கடை போட்டிருந்தார். ஜாதகம் பார்ப்பது, முத்துப்போட்டு பலன் சொல்லுவது எல்லாம் நாயக்கரது உபதொழில். வீட்டில் குட்டிகளுடன் நாலைந்து ஆடுகள் உண்டு. கோழிகளும் வாத்துகளும் கிழவி சொந்தமாக வளர்த்து வந்தாள். நாயக்கருக்கு ஊருக்குக் கிழக்கே கொஞ்சம் செவல் பாய்ந்த புஞ்சை நிலம் கிடந்தது. தினசரி ஆட்டுக் குட்டிகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகும் சாக்கில் புஞ்சையைப் பார்த்து வருவார். வெத்திலை பாக்கில் ஆரம்பித்து சோடா, பீடி சிகரட் என விரிந்து வீட்டுக்கான அரசிலவு சாமான்கள்வரை கடையில் அடுக்கி விட்டார். சாமான்கள் அடுக்கியது போக திண்ணயில் நாலுபேர் உட்காரலாம். அதை அளவெடுத்தே சாதிக்காப் பலகையால் கடை அடைத்திருந்தார்.

திண்ணையின் முன்னால் போட்டிருந்த மர ஸ்டாலில் குண்டு சோடா பாட்டில்கள் அரண்போல் நிறுத்தப்பட்டிருந்தன. அதனைக் கடந்து கடைக்குள் வந்தார் பிள்ளை. இருவருக்கும் நாலைந்து வயது வித்தியாசம். பிள்ளைக்கு யாரும் அறுபதை மதிக்க மாட்டார்கள். தலைக்கு மைபூசி, வட்டமுகத்தில் மினுமினுப்பாய் கண்ணாடி. மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டியும் அரைக்கை சட்டையும் அவரது அடையாளம். நாயக்கர் நேரெதிர். சம்சாரிப் போங்கில் தொளதொளத்த சட்டை, மக்கு ஏறிய காவிவேட்டி, தலையில் எண்ணிச் சொல்லும் அளவுக்கான மயிர், பரந்த நெற்றியில் பளிச்சென பார்ப்பவரை அடிப்பது போல நீளமான விபூதிப்பூச்சு, நடுவில் சந்தனத் தீற்றல், துளியூண்டு குங்குமப்பொட்டு. தொண்டை கட்டியது மாதிரியான கரகரத்த பேச்சும் வெடுப்பான நடையும் நாயக்கரது சிறப்பு. பிள்ளை எப்பவும் ஆயிரத்தெட்டு கேள்வியும் குழப்பமுமாய் முகம் சிவந்து திரிவார்.

அருகில் வந்து உட்கார்ந்த பிள்ளையை கண்களால் வரவேற்ற. நாயக்கர் இடதுபக்கம் நகர்ந்து சாக்கடையில் வெத்திலை எச்சிலைத் துப்பினார். சருவச் செம்பிலிருந்த தண்ணீரால் வாய் கொப்பளித்தார். ஒரு மொடக்கு குடித்தும் கொண்டார். காவிபடர்ந்த வாய் சிரித்தது.

“சாப்ட்டாச்சா?” புகையிலை நெடி மத்துவப்பட்டிருந்தது. நாயக்கர் காலைச் சாப்பாடு எடுத்துக் கொள்வதில்லை. பசித்தால் ஒருவாய் வெத்தலை சேர்த்துப் போட்டுக் கொள்வார்.

ஆச்சு என்பதாக பிள்ளை தலையசைத்தார். கழுத்தில் வியர்வை கசகசத்தது. காலரைத் தூக்கிவிட்டார். ஸ்டாலில் கிடந்த தினசரியை எடுத்து விசிறிக் கொண்டார்.

“சர்பத்துக் குடிக்கறிங்களா ? எலுமிச்சம் பழம் இருக்கு”

அவசரமாய்த் தடுத்தார். நிறைய பாக்கி இருக்கிறது. அவர் பாட்டுக்கு எழுதி வைத்துக் கொள்வார். “ச்சும்மா வந்தேன்”

ஒவ்வொரு சந்திப்பையும் இப்படித்தான் ஆரம்பிப்பார். பெருத்த அலுப்புடன் வேட்டியின் மடிப்பில் சொருகி இருந்த மஞ்சள் பையை எடுத்து ஸ்டாலில் போட்டார். ஜாதகக் குறிப்பு நோட்டு; முன்னெல்லாம் சுவாதீனமாக கையிலோ கக்கத்திலோ இடுக்கிக் கொண்டு வருவார். கேட்பவர்களுக்கு மகனுக்கு வரன் பார்க்க அலைவதை சகஜமாய்ச் சொல்வார்.

‘’இன்னுமா முடியல?” யாரோ ஒரு புண்ணியவாளரது கேள்வியில், கையில் இருந்த குறிப்பு, இடுப்பு மடிப்புக்குள் புதைந்தது.

மூக்கபிள்ளை மகனுக்கு இருபத்தேழு வயசில் பெண் தேடத் தொடங்கி முப்பதைத் தாண்டியே முடிந்தது. எம்பிஏ படிச்சவன் நாலுவீடு, ரெண்டு ஏக்கர் தோட்டம் சொத்து உள்ள வரன், மகளுக்கு நாப்பது பவுன் போட்டு கட்டிக் கொடுத்த இடம், அதனால் பையனுக்கு குறைஞ்சது அம்பது பவுன் என குறி வைத்துத் தேடினார். அஞ்சாறு வருசம் நல்ல அலைச்சல். தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, வெளிநாட்டில் கூட ஆள்வச்சு ஜாதகம் அனுப்பினார்.. கடேசியாய் உள்ளூர்ச் சொந்தத்தில் பெண்ணுக்கு நகைபோட்டு கலியாணம் முடித்தார். “பொம்பளப் பிள்ளைக பூராம் படிச்சிருக்குகப்பா, உத்திக்கு உத்தி நிக்கெ பெரும்பாடா இருக்கு” அச்சலாத்தியாய்ப் புலம்பினார்.

அந்த அனுபவத்தில் தனது பையனுக்கு இருபத்தஞ்சு ஆரம்பிக்கவே ஜாதகக் குறிப்பைத் தயார் செய்தார் பிள்ளை. தரகர்கள் வந்து போட்டோ வாங்கிக் கொண்டு போனார்கள். தென்காசி, ஈரோடு, வேலூர் என மாவட்டம் தாண்டி சாதகங்கள் வந்தன. போக்குவரத்து செலவுக்கு ஐநூறு, ஆயிரம் என பில்லும் வந்தது. உள்ளூரில் சாதகத்துக்கு அம்பது ரூபாய்க்குக் குறைவில்லாமல் கேட்டனர். கணக்கு எழுதி எழுதி நோட்டுத் தீர்ந்து போனது.

கோடாங்கிபட்டி தரகர், புது பஸ்ஸ்டாண்டில் இறங்கி வீட்டுக்குவர வாகனம் கேட்டார். கையில் பையனுக்குத் தோதான சாதகம் இருக்கிறதாம் உடனே சாத்தூர் போக வேண்டுமாம். அங்கே பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பேச்சு வார்த்தைக்காக இவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். அரைமணி நேரத்தில் தன்னை அனுப்பிவிட வேணுமென்றார். அது மழைநேரம். அவர் அணிந்திருந்த மொடமொடப்பான உடுப்புகள் அவரது பயணத்தை மெய்ப்பித்தன. ஆட்டோவில் அவரை ஏற்றிக் கொண்டு, பிள்ளை நனைந்தபடி ஸ்கூட்டரில் வந்தார். தரகர் வீட்டை அளக்க ஆரம்பித்தார். அறைகளை எண்ணிச் சொல்ல வேண்டியிருந்தது. இரண்டு பக்கமும் சரியான தகவலைச் சொல்லித்தான் ஜாதகம் தருவாராம்.. பையனை வரச்சொல்லி நேர்முகம் கண்டார். சாவித்திரியிடம் அவளது எதிர்பார்ப்பைக் கேட்டார். குடிப்பதற்கு ப்ரு காப்பிதான் வேணுமென்றார். நாலைந்து ஜாதகம் தந்துவிட்டு அதில் பளிச்சென இருந்த பெண்ணைக் காட்டி இது சாத்தூர்தான், பிடிச்சிருந்தாச் சொல்லுங்க இன்னிக்கி இதையும் சேத்துப் பேசிட்டு வந்திடுறேன். என்றவர்,. “மத்தவங்க மாதரி பவுன் கணக்கெல்லாம் கேக்க மாட்டேன். நீங்களா சந்தோசப்பட்டு இருவதாயிரமோ இருவத்தஞ்சாயிரமோ தருவீங்க. அதுக்குமேல என்னங்க வேணும் ?” என்றார். மறக்காமல் பீஸ் கேட்டார். “எவ்வளோ ?” “ஆயிரம் ரூபாய் மட்டும் குடுங்க, போதும் நல்லசேதியச் சொல்லி மீதிய வாங்கிக்கறேன்” பிள்ளைக்கு தலை கிறுகிறுத்துப் போனது. கடேசியில் அவரும் பெண்ணை கண்ணில் காண்பிக்கவில்லை.

அக்ரஹாரத்து அய்யர் குறித்துக் கொடுத்த ஒரு சுபஹோரையில், சாவித்திரி, பையனை அழைத்துக் கொண்டு திருமணத் தகவல் மையத்துள் நுழைந்தாள், தமிழ்நாடு முழுக்க உள்ள வரன்கள் லெட்ஜர் லெட்ஜராய் ரேக்குகளில் அடுக்கிக் கிடந்தனர். எடுத்துத் தர, பதிய, இருபது முப்பதுக்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் திரிந்தார்கள். வருசம் மூவாயிரம் கட்டினால் நூறு ஜாதகம் தருகிறோம் என்றார்கள். பத்தாயிரம் கொடுத்தால் நாங்களே பெண்வீட்டாரிடம் நேரடியாய்ப் பேசுவோம். என வகைவகையாய் பட்டியல் தந்தார்கள். குலசாமியைக் கும்பிட்டு பணம் கட்டி வந்தார்.

அலைச்சல் இல்லாமல் ஆன்-லைனில் ஜாதகங்கள் கிடைத்தன. கட்டுக் கட்டாக பிரிண்ட் அவுட் எடுத்தார். பொருத்தம் பார்க்க, ஜோதிட ஆலயம் ஒன்றில் பற்றுவரவு கணக்கு தொடங்கியது. எடுத்த ஜாதகத்தில் பாதிக்குமேல் பொருந்தவில்லை. தேறியதில் சில பையனுக்கு பிடிக்கவில்லை, ஆண்வாரிசே இல்லாத வீடா இருக்கு என்பது சாவித்திரியின் குறையாக ஒலிக்கும். பொருந்தி வரும் வரனைத் தொடர்பு கொண்ட போது பெண்வீட்டார் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்கள்.

“கவர்ன்மென்ட் ஜாப்பா இருந்தா பெட்டர்னு பாப்பா ஃபீல் பண்றா!”

“மாப்பிள்ளை சம்பளம் குறச்சலா இருக்கே!”

“பையன் குண்டா இருப்பார் போல?”

“ஏற்கனவே நாலு ஜாதகம் வெய்ட்டிங்ல இருக்கு பாத்துட்டு கூப்புடுறோம்”

“ஸாரி, பேபிக்கு வரன் தெகஞ்சிருச்சுங்க!”

ஒரு இடத்தில் கூட “வாங்க வந்து பொண்ணப் பாருங்க” என்ற சாதகமான பதில் வரவில்லை. இதையெல்லாம் தாண்டி தெரிந்தவர்கள் சொல்லும் பெண்ணுக்கான ஜாதகத்தை பரிசீலித்த ஜோதிட ஆலயம் லக்கனத்தில் எட்டுக்கு ஆறு பொருந்தாது, ஏழில் அவர் இருப்பதால் பன்னண்டில் இவருக்கு ஆகாது, என புத்திக்குப் புரியாத பல கணக்குகளைக் காட்டி வாயடைக்கச் செய்திடுவார். ஆனாலும் ஜோதிட ஆலயத்தில் நின்று டோக்கன் வாங்கும் வேலை தொடரவே செய்தது.

“பையனுக்கு சாதகத்துல ஏதாச்சும் தோசம் இருக்கும் தாயி” முதன் முதலாக சந்தேகத்தைக் கிளப்பினார் கோயில் பூசாரி. புத்துக் கோயிலுக்கு ஏழு வெள்ளிக்கிழமை முட்டையும் பாலும் வைத்துக் கும்பிடச் சொன்னார். ஏழாங்கிழமை பொங்கல் வைத்து ஏழு கன்னிப் பொண்ணுகளுக்கு ரவிக்கை தானம் செய்யச் சொன்னார். அப்படித் தொடங்கிய கோயில் தரிசனம் உள்ளூர் தாண்டி மாவட்டம், மண்டலம் என பரந்துபட்டு சென்றது.

சாவித்திரி, பையனை வாரம் ஒருநாள் எதாச்சும் ஒரு கோயிலுக்கு இழுத்துப் போவது வழக்கமாகி போனது. ‘கங்கணம் கட்டு, காலில் விழு, மாலையைப் போடு, வாழமரத்த வெட்டு, ஆற்றில் முங்கு, அம்மனைச் சுற்றி வா, முழங்காலில் நட, பட்டினியாய்க் கிட’’ ராணுவமாய் உத்தரவு போட்டாள். பையனோடு சேர்ந்து தானும் விரதம் அனுசரித்தாள். வீடே விபூதி மணத்தது. அண்ணனைக் கண்டு சின்னவன் பயந்தான். “நானெல்லா லவ் மேரேஜ் தான்” அம்மாவிடமே சொல்லிவிட்டான். “என்னாங்க சின்ன நாய் இப்பவே இப்பிடிச் சொல்றான்!” விசனத்துடன் பகிர்ந்தாள்.

“கொஞ்சநாள் விட்ருங்கப்பா, ஒரே இரிட்டேட்டிங்கா இருக்கு” தணிகாசலத்தின் பையன் கையெடுத்துக் கும்பிட்டான். நிஜமாகவே தணிகாசலம் பிள்ளக்கும் இடைவெளி தேவைப்பட்டது. கொஞ்சநாள் பேசவே இல்லை. அந்த இடைவெளியில்தான் அன்னஞ்சி நாயக்கரின் அறிமுகம் அமைந்தது.

“யாரோ ஒருத்தருக்கு சாதகமா இருக்கறதுதான்மா சாதகம். ஏதோ ஒரு கணக்குச் சொல்லி முடிச்சு வக்கிறதுக்கு வந்ததுதான் இந்த ஏற்பாடெல்லாம். பிற்பாடு வந்தவங்க இதப் புனிதமா ஆக்கி, உச்சில நிறுத்திட்டாக” ஒரு வீட்டுக்கு பலன் சொல்ல வந்த நாயக்கரது பேச்சில் சினேகமானார் பிள்ளை. “புத்திக்குத் தெரியுது சாதகம் ஒண்ணுமில்லேன்னு ஆனா எதோவொரு அச்சம் பேயா ஆட்டிவச்சு அறிவை மறைக்கிதுல்ல.’’ என்ற வார்த்தைகளில் அவரது நடவடிக்கைகள் ஈர்த்தன.

“பொண்ணுமாப்பிள்ளை பொருத்தம் பாப்பீகளா?”

“நட்சத்திரம் பொருந்தியிருந்தாப் போதும் சாமி, தேவப்பட்டா, ரெண்டு வீட்டாரும் சேந்து நின்னு பாக்கலாம்” ஜோதிட ஆலயம் போல சாதகத்தை நாயக்கர் வடிகட்டவில்லை. பொருத்தம் இருக்கிறது என்று அவர் சொன்ன சில ஜாதகத்தை பெண்வீட்டில் பொருந்தவில்லை என்றனர்.

“பொண்ணு ஜாதகத்தில் சில கிரக பலன்கள் கூடுதலா இருக்கும், அது பையன்கிட்ட இல்லாத பட்சத்தில ஒன்னுக்கொன்னு சமாளிச்சுக்கும். இது சாதகக் கணக்கு ஆனா, இல்லேங்கறத மட்டுமே பலனாச் சொல்லி செலபேர் சாதகம் பொருந்தலனு தள்ளிவிட்ருவாங்க சாமி” ஜோசியத்தின் உள் விவகாரத்தையும் சொன்னார்.

நிறை பௌர்ணமி அன்று சாவித்திரியின் வேண்டுகோளின்படி வீட்டுக்கு வந்து முத்துப்போட்டு பலன் சொன்னார் நாயக்கர். வரும் வைகாசிக்குள் வீட்டுக்கு விளக்கேத்த மகராசி வந்துவிடுவாள் முக்காலும் சத்தியம் என்றார். அவரே சில சாதகங்களும் தந்தார். அதில் ஒரு வரன்தான் சின்னமனூர் செல்வி, ஒரு டிகிரி முடித்திருந்தாள், வாடகை வீடுதான். அப்பாவுக்கு நகைக்கடையில் வேலை. எட்டுப் பொருத்தம் இருந்தது. பெண் வீட்டுக்கு நாயக்கரே நேரில்போய் தகவல் சொன்னார். அங்கேயே அவர்களும் பொருத்தம் பார்த்து சம்மதம் தெரிவித்தனர்.

அடுத்தவாரம் பெண்பாக்க வரச் சொன்னார்கள். சந்தோசத்தில் பிள்ளை டவேரா ஒன்றைப் பிடித்தார். ஒன்பதுபேர் போய் இறங்கினார்கள். உடன்வந்த தில்லை நாயகம் அண்ணன் பெண்பிடித்து விட்டால் அங்கேயே பாக்கு வெத்திலை மாற்றி உறுதி செய்து கொள்ளலாம் என்றார்.. பங்காளிகளில் மூத்தவர், நாலுபக்கம் போய் பழக்கம் உள்ளவர். யாரிடமும் எந்த மிச்சமும் வைக்காமல் பேசிவிடும் காரியக்காரர். குடும்பங்களில் நடக்கும் அத்தனை விசேசங்களுக்கும் அவரைத்தான் முன்னுக்கு நிறுத்துவார்கள்.

பெண்வீட்டாருக்கு தில்லை அண்ணனைத் தெரிந்திருந்தது. இருவரும் குசலம் விசாரித்துக் கொண்டனர். கைகுலுக்கினார்கள் வாய்விட்டு சிரித்துப் பேசினார்கள்.

அதில் அண்ணன் ரெம்பவே கரைந்து பேசினார். அவரது பேச்சுக்கு முன்னால் பெண்வீட்டார் வாய் திறக்கவே இல்லை தலையசைப்பும், புன்னகையுமாகவே இருந்தார்கள். சாவித்திரிக்கு பெண் பிடித்து இருந்தது. கணவரது காலைச் சுரண்டினாள். பிள்ளை அண்ணனது தோளைத் தடவினார்.

ஜிலேபி, காராச்சேவு, பால்க்காப்பி அத்தனையும் உண்டு முடித்து வாயைத் துடைத்துக் கொண்ட தில்லை அண்ணன், “எங்களுக்கு உங்க குடும்பத்தில் பெண்ணெடுக்க பூரணச் சம்மதம். நாள் நல்லா இருக்கதனால, இப்பவே பாக்கு வெத்திலை மாத்தி பொண்ணு மாப்பிள்ளையை உறுதி செய்துக்கலாம்ங்கறது எல்லாரோட அயிப்ராயம்! என்னா நாஞ் சொல்றது?” ஆலாபனையாய் சுற்றி வந்தார்.

“அண்ணெ சொன்னா சரித்தே ! அதுக்கும்மேல சொல்ல என்னா இருக்கு” கூடுதலாக ஒருவரி சேர்த்து அண்ணன் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்தினார் பிள்ளை.

பெண்ணின் தகப்பனார் பெரிதாகக் கும்பிட்டார். ”மெத்தச் சந்தோசம்,. எங்க வீட்லயும் மூத்தவக இருக்காக அவகளையும் கூப்புட்டு அடுத்தவாரம் வரோம். அங்க வச்சே முடிவு பண்ணிக்குவோம்”

அடுத்து, பெண்வீட்டார் வரவே இல்லை. மீண்டும் தூது போன நாயக்கர் முனைமுறிந்த கொம்பனாக முகம் சோம்பி வந்தார்.

என்றோ ஒருநாளில் ஏதோ ஒரு ஊரில் நடந்த பஞ்சாயத்தில், தில்லை அண்ணன் பெண்வீட்டாருக்குப் பாதகமாக நடந்து கொண்டாராம். மறக்கவே முடியாத சம்பவம் அது என சங்கடப்பட்டதோடு. மாப்பிள்ளை, தில்லை வகையறா என்று சொல்லாமல் விட்டதற்காக நாயக்கரை கோபித்துக் கொண்டார்களாம். கடைசியாக தில்லையின் சொந்தபந்தத்தோடு சம்பந்தம் செய்ய சம்மதமில்லை என சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர்.

“வையாசி பொறந்திருச்சு நாக்யரே!” அருகிலிருந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்து தண்ணீர் மொண்டு குடித்தபடி கேட்டார் பிள்ளை. கடவாயில் ஒழுகிய தண்ணீர் சட்டைக்காலரை நனைத்தது. பிள்ளை மிச்சம் வைத்த நீரை வாங்கி குடித்த நாயக்கர். வெறுமனே தலையாட்டினார்.

“இன்னக்கித்தான தேதி ஒன்னு. இன்னம் முப்பதுநாள் இருக்கே சாமி!” என்றவர், “மீனாட்சிபுரத்துல ஒருசாதகம் வந்திருக்கு ஒங்க நட்சத்தரத்துக்குப் பொருந்தும். ஆனா மூத்த பொண்ணு சாதி மாறி காதல் கல்யாணம் செஞ்சுகிடுச்சாம். கொஞ்சம் அப்புராணி வீடுதே!”

“என்னத்தச் சொல்ல!” என்ற தணிகாசலம் பிள்ளை, “ஊருக்குள்ள என்னென்னமோ நடக்குது.. லவ்வுங்கிறான், காதலுங்கறான், நம்ம வீட்ல அப்பிடிக்கூட நடக்கலியே நாய்க்கெரே!” பைக்குள்ளிருந்த குறிப்பு புத்தகத்தை எடுத்துப் பார்த்தார்.

“சாமீ...! பையனுக்கு சாதகம் பாக்கணும்!’

கைலி வேட்டியும் கலர்ச்சட்டையும் அணிந்த உடல் வற்றிய ஒரு ஆணும், தலைமுழுக்க எண்ணெய் வழிய கருத்த நெற்றியில் பச்சைப்பொட்டு வைத்து கணுக்கால் தெரிய சேலை உடுத்திய பெண்ணும் கடைக்கு வந்தனர்.

“ஓ! பாக்கலாமே!” நாயக்கர் அவர்களை உள்ளே வரச் சொன்னார்.

பிள்ளை எழ வேண்டி வந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram