ஓவியம்: தமிழ்
சிறுகதைகள்

அனலி

அந்திமழை இளங்கோவன் சிறுகதைப் போட்டி 2025- இல் ஊக்கப்பரிசு

வரத.ராஜமாணிக்கம்

நல்லதங்காள் ஓடை, மயானத்தின் கழுத்துக்கு அட்டிகை போட்டது போல ஒரு பக்கம் சுற்றிக்கொண்டு போனது.  மேற்கு பக்கமாக இருந்த வழியில் வரிசையாக அவர்கள் வந்தது பாதி நிலவொளியில் பட்டும் படாமலும் தெரிந்தது.  முதியவர்களும், இளைஞர்களுமாக அவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். 

மயானத்திற்கு வாசல் கதவு இல்லை.  அது இருந்ததற்கு அடையாளமாக இரண்டு பக்கமும் கல்தூண்கள் இரும்புக் கொண்டிகளுடன் இருந்தன.  ஊருக்கு தெற்குப் பக்கம் நவீன மின் மயானம் வந்த பத்து வருடங்களில் இந்த மயானம் கவனிப்பாறின்றி காடேறிப் போயிருந்தது.  புதைக்கப் பட்டவர்களின் ஞாபகார்த்தமாய் முளைத்திருந்த சமாதிகள் கரையான்கள் அரித்து செத்துக் கொண்டிருந்தன.

கடைசிப் படியில் ஏறி, மயான வாசலில் கால் வைத்த குமரன் கேட்டான்,  ‘தாத்தோவ், இந்த ஓடைக்கு ஏன் நல்லதங்கான்னு பேர் வந்துச்சு?’. பொன்னுத் தாத்தா, ‘ஏன்னு கேட்டா என்னத்தச் சொல்றது?’ என்பது போல பார்த்தார். ‘இல்ல தாத்தா, நல்லதங்கா பொறந்த ஊரு வேற, அவ விழுந்தது கெணத்துல, இந்த ஊரு ஓடைக்கு நல்லதங்கான்னு ஏன் பேரு வச்சான்னு கேட்டேன்’ என மீண்டும் கேட்ட குமரன் பின்னந்தலையைச் சொறிந்து கொண்டான்.

‘டேய் பேராண்டி, நீ நெனக்கிற மாதிரி ஒத்த நல்லதங்கா இல்ல, ஒலகத்துல நெறைய நல்லதங்கா இருக்கிறாளுங்க’ என பெருமூச்சு விட்டவர். ‘இந்த ஊருலயும் ஒருத்தி இருந்திருப்பா, அஞ்சாறு புள்ளை குட்டிகளோட கஞ்சிக்கு கஷ்டப்பட்டிருப்பா, அண்ணந்தம்பி ஆதரவு இல்லாம கடைசியில இந்த ஓடையில புள்ள குட்டிகள இறக்கி, அவளும் செத்துருப்பா, அவ பொல்லாப்பு நமக்கென்னத்துக்குன்னு ஊரு சனம், அவள சாமியா கும்பிட்டுருக்கும், ஊரு ஊருக்கு ஒவ்வொரு பேரா வைக்கும், இப்பிடி கொடுமையில செத்துப் போன பொம்பளைக எல்லாத்துக்கும் நல்லதங்கான்னு ஒரு பேர வச்சுதான் கூப்பிடுவாங்க.  அப்பிடித்தான் இந்த ஓடைக்கும் பேரு வந்திருக்கும்’ என பொன்னுத்தாத்தா சொல்லி முடிக்கவும் அங்கே யாரோ தீப்பந்தம் கொளுத்தினார்கள்.

தீப்பந்த வெளிச்சம் மயானத்தை வேறு மாதிரியான தோற்றத்திற்கு தள்ளிக்கொண்டு போனது.  ஒட்டுமொத்த மயானமும் கரும் பூதத்தைப் போலவும், அதன் அகோரப்பசியில் தீப்பிடித்து எழும் பெரும் நாக்காய் தீப்பந்தஒளி காற்றில் அப்படியும் இப்படியும் என அசைந்து நடனமாடிக் காட்டியது.  மயானத்தின் கடைசியில் பட்டுப் போயிருந்த புளிய மரத்தின் அடித்தூறில் பெரிய பொந்து இருந்தது.  மரத்தைச் சுற்றி விறகுக் கட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.

குமரனும், பொன்னுத்தாத்தாவும் தீப்பந்த வெளிச்சம் நோக்கி ஒத்தையடிப்பாதையில் வந்தார்கள்.  அவர்களுக்கு இடையிலான நாயம் தொடர்ந்து வந்தது.  ‘தாத்தோவ்.. காலம் மாறிப் போச்சு, இப்பல்லாம் பொம்பளப் புள்ளைக அப்பிடி கஞ்சிக்கி சாகறது இல்ல.  ரேசன் கடைல அரிசி எலவசமாக போடுறான்.  வீட்டுச்செலவுக்கு நூறு நாளு வேல தர்றான்.  அதனால கஞ்சிக்கு செத்துப் போக வழியில்லாம போச்சு’ என குமரன் சொன்னதைக் கேட்டு தாத்தா நகைத்தார்.

‘நல்லதங்கா சோத்துக்கு வழியில்லேன்னா செத்தா, மானம் மரியாதைடா, பொம்பளப் புள்ள இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் பொறுக்க மாட்டா.  கொந்தளிச்சிப் போயிருவா.  ராமாயணத்துல ராமனுக்காக சீதேவி காட்டுக்கு போன அந்த தியாகம் ராமனுக்கு தெரியல.  அவள உயிருள்ள பொம்பளயா பார்க்காம ஊர் பயக பேச்சக் கேட்டு உத்தமியான்னு பரிசோதிச்சு பார்த்தான்.  தீக்குள்ள எறக்குனான், அப்பவும் மனசு ஆறாம மறுபடியும் காட்டுக்கே அனுப்பி வச்சான்.  அரமனையில இருந்தாலும் சந்தேகம்... அசோகவனத்துல இருந்தாலும் சந்தேகம்னா அவ என்ன பண்ணுவா, ராமாயணம் ராமனோட புண்ணிய கதை இல்லப்பா சீதாவோட பாவக் கதை.  சீதாயணம்னு தான் பேரு வச்சிருக்கனும்’ என தாத்தா முடிக்கும்போது அவரது குரல் குளிரில் நடுங்கியது.

தீப்பந்த வெளிச்சத்தில் இருந்து விலகி ஓடிய பனி, கோபத்தில் இருட்டையும், காற்றையும் என்ன சங்கதி என கேட்டுக்கொண்டிருந்தது.  வந்திருந்த கூட்டம், பனிக்கும், பாதுகாப்பிற்கும் தீப்பந்தத்தை வளைத்து நின்றது.  இன்னும் ஊர் பெரியதனம் வரவில்லை.  வந்தவர்களில் பலருக்கு பெரியதனம் எதற்காக இந்த அகால நேரத்தில் வரச்சொன்னார் என்று தெரியவில்லை.

பொன்னுத் தாத்தா மெதுவாக இளைஞனைக் கேட்டார்,  ‘ஏண்டா பேரான்டி யாராவது நாண்டுகிட்டானா, எதுக்குடா இன்னேரம் மயானத்துக்கு வரச்சொன்னாங்க’ குமரன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘தெரியலையே தாத்தா, அப்படி யாரும் ஊருக்குள்ள நாண்டுக்கல, இது ஏதோ பெரிய விவகாரமா இருக்கும் போல’ என சத்தம் வராமல் பதில் சொன்னான்.  ‘எது வேணா இருக்கட்டும்டா வயசான காலத்துல இந்தப் பனியில என்னை எதுக்குடா வரச்சொன்னானுக’ என தாத்தா அலுத்துக் கொண்டார்.  குமரன், ‘எல்லாருந்தா வந்திருக்காங்க தாத்தா நீ ஒருத்தன் மட்டும் நம்ம சனத்துல வராம இருந்து, நாளைக்கு போலிசு கேஸ் ஆச்சுன்னா, நீ தான் துப்புக்கொடுத்தவன்னு சாவடியில கைகட்டி நீக்கனும், நீ வந்தது நல்லதா போச்சு, பேசாம இரு’ என அமைதியாக அதட்டினான்.

தீப்பந்தம் வைத்திருந்தவனின் அருகில் நின்றிருந்த பெரிய மீசைக்காரன், அவனுடைய மீசை இரண்டு பக்க கிருதாவுடன் சேர்ந்து உருமா கட்டியிருந்தது, ‘யாரும் இங்கன செல்போனு பேசப்படாது, படம் எடுக்கக்கூடாது’ என கீச்சுக் குரலில் உத்தரவிட்டான்.  அவனுக்கும் அவன் குரலுக்கும் சம்பந்தம் இல்லாமல் செத்துக் கிடந்தது.  பெரிய மீசைக்காரன் போட்ட கீச்சலில், அவர்கள் செல்போனை அணைத்து பாக்கெட்டில் கேட்டுக்கொண்டனர்.

சற்று தெற்கே தள்ளி தலைக்கு மேலே செல்லும் கிழமேல்ரோட்டில் கடைசி டவுன் பஸ் கடாமுடா சத்தத்துடன் போய்க்கொண்டிருந்தது.  ‘இன்னையோட சரி நாளைக்கெல்லாம் நான் வரமாட்டேன்’ என அனத்திக் கொண்டே அந்த பஸ் போனது.  ‘அதுவும் எவ்வளவு நாளக்கி இப்பிடி இழுத்துக்கிட்டே போகும்.  அதை குளிப்பாட்டி குழிதோண்டி புதைக்க ஒரு மயானம் இல்லாம போச்சே’ என்ற மாயாண்டியின் எகத்தாளப் பேச்சு எல்லோருக்கும் சிரிப்பை மூட்டியது.  ‘மாயாண்டி மாமோவ், இந்த பஸ்சும் இல்லைன்னா ஊருக்கு கெழக்கவும் போக முடியாது மேற்கவும் போக முடியாது பாத்துக்கோ’ என்ற இளந்தாரியின் குரலைக் கேட்டு, ‘யார்றா அவன்’ என்பது போல மாயாண்டி இருட்டுக்குள் எட்டிப் பார்த்தார்.

‘எல்லாம் வக்கனையாத்தான் பேசுறானுக, ஆனா ஊர் கட்டுப்பாடுன்ற பேர்ல, இந்த பெரியதனமும் அவனோட சேர்ந்த நாலஞ்சு தடியனுகளும் பண்ற அக்குருமத்த ஒருத்தனாவது தட்டிக் கேக்குறானுகளா’ என தாத்தா குமரனைப் பார்த்து கொந்தளித்தார்.  இளைஞன்  ‘உஷ்..’ என உதட்டில் விரல் வைத்து தாத்தாவை அமைதிப்படுத்தினான்.  இந்த அர்த்த ராத்திரியில் ஊர் சனம் கூடியிருப்பது ஏன் என்று அந்த மீசைக்காரனுக்கு மட்டும் தெரிந்து இருக்கும் என கூட்டம் நம்பியது.  அவன் அடிக்கடி மயானத்திற்கு சரிந்து வரும் மண்பாதையை பார்த்தவாறு இருந்தான்.  ரோட்டிலிருந்து விலகி பாதையில் ஊர்ந்து வந்த ஒரு மோட்டார் பைக்கின் பின்புறம் ஒரு வயசுப் பெண் உட்கார்ந்து இருந்தாள்.  அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூ, சற்று முன் சிறகசைத்த கொக்கை ஞாபகப்படுத்தியது.  அவளும் இருட்டில் ஒரு தேவதையைப் போல பறந்து தான் வந்தாள். தீப்பந்தத்தை உயர்த்தச் சொல்லி மீசைக்காரன் கவனமாக பார்த்தான்.  அவன் பார்த்த திசையில் கூட்டம் முச்சூடும் பார்த்தது.

அன்று காலை 10 மணியளவில் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு, சாணம் போட்டு மொழுகிய திண்ணையில் அனலி விச்ராந்தியாக அமர்ந்திருந்தாள்.  வந்து இரண்டு நாட்களாயிற்று.  முகம் நிறைய மஞ்சள் பூசி குளித்து இருந்தாள்.  நடு நெற்றியில் குங்கும பொட்டு வைத்து கோண வகிடு எடுத்து சீவியிருந்தாள்.  பின்னல் சடையில் அத்தை ஆசையாய் வைத்து விட்டுப் போன மல்லிகைச் சரம் காதோரங்களில் தோரணமாய் இறங்கி, களை கட்டியிருந்தது.

இளவேலனுக்கும், அனலிக்கும் திருமணம், வெள்ளை வேல மரக்கோவில் முன்பு தான் நடந்தது.அவன் தாலிகட்டிய பொழுது பெண்கள் குலவைச் சத்தம் இட்டனர்.  ஆண்கள் தப்பட்டைகளில் ஒலியெழுப்பி கொம்பு ஊதினர்.  பெண்களின் குலவைச் சத்தமும், தப்பட்டையும் கொம்பு ஒலியும் சேர்ந்ததில் அனலி உணர்ச்சிவசப்பட்டு போனாள்.  அவளுக்கு ஏனோ அழுகையாக வந்தது.  அருகிலிருந்த பெண்களின் முகத்தில் அவளது அம்மாவைத் தேடியவாறு இருந்தாள்.

நூறு நாள் வேலைக்குச் சென்ற அத்தை காலையிலேயே மதியத்திற்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு சென்று இருந்தாள். அம்மாவை விட அத்தை குறைந்த வயது தான்.  இடது பக்கமாக மட்டும் நரைத்திருந்த தலைமுடி அத்தையின் படர்ந்த முகத்திற்கு லட்சணத்தை தந்திருந்தது. அனலியின் பாதுகாப்பு கருதி, காலனிக்கு நடுவே வெள்ளை வேல மரக்கோவில் அருகில் இருந்த பூர்வீக குடிசை வீட்டில் வேலன் தங்க வைத்து இருந்தான்.  வேலைக்குச் செல்வதற்கு முன்பு, அவ்வளவு பத்திரம் சொல்லி விட்டுப் போனவனை, அனலி முந்தியைத் தடவி மனதிற்குள் அணைத்துக்கொண்டாள்.

நேற்றைய இரவும், அதற்கு முந்தைய இரவும், அவனது தோளில் முகம் புதைத்து உறங்கிப் போனாள்.  அது ஆழ்ந்த நித்திரைக்கான மயக்கத்தையும், நிம்மதியையும் அவளுக்கு கொடுத்து இருந்தது.  இனி தன்னிலிருந்து அவனை பிரித்து பார்ப்பதற்கு ஏதுமில்லை என்றே அனலிக்கு தோன்றியது. அவனை நினைத்து ஏங்கியவாறு சோம்பல் முறித்தாள்.

வீட்டின் வாசலில் கார் வந்து நின்றதை அனலி முதலில் கவனிக்கவில்லை.  ‘அம்மா அனலு’ என்ற பெரிய அண்ணனின் ஈரக் குரல் கேட்டு நிமிர்ந்தவள் அரண்டு போனாள்.  திகைப்பில் அவரை வா என்று அனலி அழைக்கவில்லை. குழந்தையாகவும், சிறுமியாகவும் இருந்தபொழுது தூக்கி சுமந்த அண்ணனின் தோள்கள் இந்த இரண்டு நாட்களில் தளர்ந்திருந்தன.  ‘ஒன்னத் தேடிட்டு காலனிக்கு தெற்க போயிருந்தேன் அப்பறம் அங்க இருந்த ஒரு பையன்தான் இங்க கூட்டிக்கிட்டு வந்தான்’ என தற்செயலாக வந்ததைப் போல வீட்டுக்குள் அண்ணன் வந்தார்.

‘எங்கம்மா மாப்பிள்ளை இல்லையா?’ என உரிமையோடு கேட்டவர் ‘வேலக்கிப் போயிட்டாரா?’ என அவரே பதிலும் சொல்லிக்கொண்டார். 

அண்ணன் கட்டிலில் அவராக உட்கார்ந்து கொண்டார்.  குடிக்க தண்ணீர் கேட்டார்.  அனலிக்கு  கையும் காலும் ஓடவில்லை.  அண்ணனிடம் ஓரியாண்டு இருந்தால்,  அவரே முன்னின்று இந்த கல்யாணத்த முடித்து வைத்திருப்பாரோ அவசரப்பட்டுவிட்டோமோ என யோசித்தவளின் கண்களில் நீர் துளிர்த்தது, ‘அண்ணே என்னை மன்னிச்சிடுங்கண்ணே’ என்றபோது அனலி அழுதுவிட்டாள்.  அண்ணன் ‘அழுகாதம்மா  நீ நல்லா இருந்தா போதும்மா’ என பதறினார்.  ‘அண்ணே அம்மா எப்படி இருக்காங்னே?’ என அனலி கேட்டதும், அண்ணன் பதில் சொல்லாமல் தலை குனிந்தார்.  பிறகு ‘அத ஏம்மா கேக்குற... நீ போன இந்த ரெண்டு நாள்ல அப்படியே அம்மா துவண்டு போயிட்டாங்க. சாப்பிடல தூங்கல. பிபியும் சுகரும் எறங்கியிருச்சு, டாக்டர்கிட்ட போலாமுன்னா அதுக்கும் மாட்டேன்றாங்க, எம்பொண்ண கண்ல காட்டுன்னு என்னேரமும் அழுகறாங்க’ என தழுதழுத்த குரலில் கூறியவர் ஒரு கட்டத்தில் உடைந்து அழுதார்.  அண்ணன் அழுவதை அதுவரை பார்த்திராத அனலி அதிர்ச்சியில் நிலைகுத்திப் போனாள், ‘அண்ணே அழுவாதீங்க’ என்றவாறு அவரது கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டாள்.

வாசலில், காரைச் சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்திருந்தது. அது வீட்டுக்குள் நடப்பதையும் கவனித்துக் கொண்டிருந்தது.  அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்ட அண்ணன், ‘அது இல்லம்மா அனலு, காலையில இருந்து நாடித்துடிப்பு கொறஞ்சிக்கிட்டே இருக்கு, எந்த நேரத்திலும் அம்மா நம்மள விட்டு போயிருவாங்க போல’ என தேம்பினார். அனலி ஒன்றும் பேசவில்லை.  சிலையாக நின்றாள்.  இளன் வருவதற்கு இரவு ஆகிவிடும்.  அத்தைக்கு தகவல் சொல்லி அவள் வருவதற்குள், காரியம் கை மீறிவிடும் என்ற குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தவாறு இருந்தாள்.  அம்மாவை நினைந்து அனலிக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது.

‘ஒரு வேளை உம் முகத்த ஒரு தடவ பாத்தா அம்மா உசுரு பொழச்சிக்குவாங்கன்ற  நம்பிக்கையில ஒன்னத்தேடிட்டு வந்தேன் அனலு’ என அண்ணன் யாசிப்பது போல கேட்டது அவளது நெஞ்சை உலுக்கிவிட்டது.  தன்னைத் தூக்கி வளர்த்த அண்ணன் பெற்ற தாய்க்காக ஒரு பிச்சைக்காரனைப் போல இறைஞ்சுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவள் கிளம்பினாள்.  அவசரத்தில் செல் போன் எடுக்க மறந்திருந்தாள்.  அண்ணன் குடிக்கக் கேட்ட தண்ணீர் அப்படியே கட்டிலின் ஓரம் இருப்பதையும் அவள் கவனிக்கவில்லை.  கார் கிளம்பி மெயின்ரோடு செல்லும் வரை அந்தக் கூட்டம் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தது.

அனலியோடு அண்ணன்காரன் மயானத்திற்கு வருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  ஒரு தெருவில் குடியிருக்கும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.  அனலிக்கு அவர்கள் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவோ, தூரமாகவோ உறவினர்கள்தான்.  அனலி அவர்கள் பார்த்து வளர்ந்த பிள்ளைதான்.  ஆனால் அவள் இப்போது வேற்று மனுஷியாக அவர்களுக்கு தெரிந்தாள்.  அனலியை கொஞ்சம் தள்ளி நிறுத்திவிட்டு, அண்ணன்காரன் கூட்டத்தோடு சேர்ந்து நின்று கொண்டான்.  அவளுக்கு பட்டுப் போன புளியமரமும் அதைச் சுற்றி அடுக்கப்பட்டிருந்த கட்டைகளும் அருகில் இருந்த எண்ணெய் கேனும் அச்சத்தை ஏற்படுத்தின.  இருட்டில் அண்ணன் முகம் தேடி தோற்றாள்.

காரில் அழுதுகொண்டே அழைத்து வந்த அண்ணன் கடைசி வரை அம்மாவைக் காட்டவில்லை.  அண்ணனுக்கு தெரிந்த நண்பர் வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார்.  அங்கே நண்பரின் மனைவியும், அவரது  பெண் குழந்தையும் இருந்தார்கள்.  அனலி அவளை அக்கா என்றழைத்தாள்.  அதை அவள் விழிகளை விரித்து ஏற்றுக்கொண்டு அன்பு காட்டினாள்.  டிவியை போட்டுவிட்டு, அருந்த ஏலக்காய் டீ கொடுத்தாள்.  டீயில் சர்க்கரை சற்றுத் தூக்கலாக இருந்தது.

அவள் கேட்டாள், ‘அனலின்னா என்ன அர்த்தம்?’ அதற்கு அனலி, தெரியாது என இடமும் வலமுமாய் தலையாட்டினாள்.  ‘சரி இந்தப் பேர யாரு வச்சா’ என அவள் கேட்டபொழுது ‘குண்டத்து காளியம்மன் கோவில் பூசாரி வச்சதா அம்மா சொல்வாங்க’ என்றாள்.  ‘பூசாரியா! என ஆச்சரியப்பட்டவள் பிறகு அவளாகவே. ‘உங்கம்மா அப்பா வேண்டுதலில் பிறந்திருப்ப சாமி கொடுத்ததால பூசாரி சொன்ன பேர வச்சிருக்காங்க’என அவள் சிரித்தபொழுது தெற்றுப் பல் பளிச்சென ஒளிர்ந்தது.

அவள் அலமாரியிலிருந்த தமிழ் அகராதியை ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தாள்.  பிறகு, ‘அனலின்னா அதுக்கு அர்த்தம் நெருப்பு’ என்று சொல்லியவள், ‘இனி மேல் பேருக்கு அர்த்தம் கேட்டால் தெரியாதுன்னு சொல்லாத’ என அனலியின் கன்னத்தை பிடித்துக் கிள்ளினாள்.

அனலிக்கு அந்த இடமே புதிதாக இருந்தது.  அம்மாவின் நினைப்பில் காரில் வந்தவள் அரைமணி நேர பிரயாணத்தில் எங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் தவித்தாள். இளனிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறியதை நினைந்து வருந்தினாள்.  அவனிடம் பேச அந்த அக்காவிடம் செல்போன் கேட்டாள்.  ‘அவரு போனு சர்வீசுக்கு போயிருக்குன்னு எம் போன வாங்கிட்டுப் போனாரு’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அனலிக்கு லேசாக தலை சுற்றியது.  குடித்த டீ வெளியில் வருவது போலிருந்தது.  அப்படியே அனலி சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

இரவு எந்த நேரம் என்று தெரியவில்லை.  அண்ணன் எழுப்பிய போது அவள் அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அந்த அக்காவையும் குழந்தையையும் காணவில்லை.  ‘அனலி கௌம்பு போகலாம்’ என அண்ணன் அவசரப்படுத்தினார்.  அண்ணன் காலையில் வந்த காரைக் காணவில்லை.  இப்போது மோட்டார் பைக்கின் பின்புறம் உட்காரச்சொன்னார்.  அனலி கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், அண்ணன் பறந்து கொண்டிருந்தார்.  அனலிக்கு நேர் எதிர்புறம் அரைவட்ட நிலா பைக்குடன் சேர்ந்து விரைந்து வந்தது.  அது இளனைப் பற்றி ஏதோ செய்தி சொல்வது போலிருந்தது. 

பொன்னுதாத்தாவுக்கு எல்லாம் விளங்கி விட்டது.  ‘டே பேராண்டி சீதேவிய மறுபடியும் தீயில இறக்கப் போறாங்கடா, இதெல்லாம் நல்லதுக்கில்ல. ஊர் கட்டுப்பாடுன்ற பேர்ல இப்படி அநியாயம் செய்யறானுகளே, இதக் கேக்க யாருமே இல்லையாடா’ என மனம் வெதும்பி தாத்தா புலம்பியது அருகிலிருந்த மற்றவர்களுக்கும் கேட்டது.

குமரன், ‘அப்பிடியெல்லாம் நடக்காது தாத்தா, இத்தனை பேரு இருக்கறோம் நம்மள மீறி நடந்துருமா’ என தாத்தாவை சமாதானம் செய்தான்.  ‘டேய் ஊர் பெரியதனம் வந்தான்னா ஒரு பய பேசுவானா, நாஞ் சொல்றது நடக்குதா இல்லையான்னு பாத்துக்கிட்டே இரு’ என்ற தாத்தா பதறினார்.

மயானத்தின் கடைசிப் பகுதி என்பதால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தீப்பந்தம் எரிவது கூடத் தெரியாது.  எங்கும் ஒரு நிசப்தம் சூழ்ந்திருந்தது.  பாம்பு சீறுவதைப் போல, கரண்ட் கம்பியை பனிக்காற்று கடக்கையில் ஏற்படும் மெல்லிய ஓசை துல்லியமாக கேட்டது.  அனலி அதற்கு முன்னர் சுடுகாட்டிற்கு வந்தது இல்லை.  சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் சுடுகாட்டை பார்த்து இருக்கிறாள்.  அதில் தலையில்லாத முண்டங்களும் கால்கள் இல்லாத மனிதர்களும் பேயாக சுடுகாட்டில் அலைவதை பார்த்து பயந்து இருக்கிறாள்.

இங்கே பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  இத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும் போது ஒருவர் முகம் கூட தெரியவில்லை.  கால்களும் தெரியவில்லை, வெள்ளைச் சட்டைகளும், வேட்டிகளும் அந்தரத்தில் தொங்குவது போல அனலிக்கு தோன்றியது.

அனலிக்கு அம்மா, அப்பா, பெரிய அண்ணன், சின்ன அண்ணன், தங்கை என எல்லோரும் இருக்கிறார்கள்.  அவள் விருப்பப்படி இளனை மணந்த பிறகு எல்லோரும் மறைந்து போனார்கள்.  இங்கு அழைத்து வந்த பெரிய அண்ணனும் கூட்டத்தில் மூன்றாம் மனிதராய் கலந்து போனார்.  யாரும் அற்ற அனாதையாக நிற்கும் அவளைப் பற்றி அந்த மயானம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காலையில் அத்தை வைத்த மல்லிகைப் பூ வாடவில்லை.  இளன் போகும் போது கன்னங்களிலும், கழுத்திலும் வைத்துப் போன முத்தங்கள் இப்பொழுதும் அவள் மார்பில் மௌனமொழி பேசின.  அவள் இங்கு இருப்பது இளனுக்கு தெரிந்திருந்தால் காற்றாய் பறந்து வந்து அவளைக் காப்பாற்றி இருப்பான்.  அவனை எதிர்கொள்ள இங்கு யாருக்கும் துணிவு இருக்காது.

அவர்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது.  பெரியதனம் வந்துவிட்டார்.  அவர் நேராக விசயத்திற்கு வந்தார், ‘அந்தா நிக்கிற புள்ள நம்ம சண்முகத்தோட மக, ஊர்கட்டுப்பாட்ட மீறி கீழ்சாதிப் பய்யன கலியாணம் பண்ணிகிட்டா.  இத அப்பிடியே விட முடியாது.  அப்புறம் நம்மள ஒரு பய மதிக்க மாட்டான்.  எவன் வேணாலும் வீடேறி பொண்ணு கேப்பான், இனி எந்தப் புள்ளயும் இப்பிடி போகக்கூடாது.  அதுக்கு முடிவு கட்டத்தான் இந்த புள்ளயை பெத்தவங்க சம்மதத்தோட இவள அக்னிக்கு காவு கொடுக்கறோம்’ என தீர்ப்பு வழங்கினார்.

பெரியதனத்தின் தீர்ப்பைக் கேட்டு, வந்திருந்த கூட்டம் அதிர்ச்சியில் உறைந்து போனது.  அனலியையும் அவளது அண்ணனையும் கூட்டம் மாறி மாறி பார்த்தது.  அனலி அவர்கள் யாரையும் பார்க்கவில்லை.  அரை வட்ட நிலாவை ஒருமுறை பார்த்து விட்டு அமைதியானாள்.  கூட்டத்தில் இருந்து விலகி நின்ற அவளால் அங்கிருந்து தப்பித்து ஓடி விட முடியும்.  இருட்டுக்குள் ஒளிந்து கொள்ள முடியும்.  கத்தி கூப்பாடு போட்டு மெயின்ரோட்டில் போகும் ஆட்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.  அவள் ஒன்றும் செய்யவில்லை. அங்கேயே சிறு அசைவுமின்றி நின்றாள்.  பொன்னுத்தாத்தாவுக்கு கோபம் கொளுந்து விட்டு எரிந்தது.

மாயாண்டி தான் பேசினார்.  ‘ஏம்ப்பா பெரியதனம் தெரிஞ்சோ தெரியாமலோ அந்தப் புள்ள ஊர் கட்டுப்பாட்ட மீறியிருச்சு, இப்ப ஒரு வார்த்த அந்தப் புள்ளயை கேளுப்பா, செஞ்சது தப்புன்னு தாலிய கழட்டி எறிஞ்சிட்டா அந்த மட்டுக்கு விட்ருங்கப்பா’ என அவர் கூறிய ஆலோசனை அந்தக் கூட்டத்திற்கு ஏற்புடையதாக இருந்தது.  ஆனால் பெரியதனம் அந்த மாற்று யோசனையைக் கூட ஏற்க மறுத்து, ‘நீயே கேளு சித்தப்பா...’ என அலட்சியம் காட்டினார்.

‘ஏந்தாயி, நம்ம சாதி சனத்தை மீறி நீ இப்பிடி போனது தப்புமா, இப்பவும் ஒன்னும் மோசமில்ல, செஞ்சது தப்புன்னு ஒத்துகிட்டு அவன் கட்டுன தாலிய கழட்டியிரு, எப்பவும் போல உந்தாயி தகப்பனோட இருந்துக்கலாம் என்ன சொல்ற’ என மாயாண்டி நைச்சியமாக வைத்த கோரிக்கை, அனலியிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.  பெரியதனம், மாயாண்டியை முறைத்துப் பார்த்ததில் அவர் பின் வாங்கிக்கொண்டார்.

‘இம்புட்டுச் சொல்லியும் இந்தப் புள்ள இவ்வளவு வீம்பா இருக்காளே, அந்த ஈனசாதி பயலுக்காக, ஊரையே எம்மாத்திரம்னு கேக்குறா’ என கூட்டத்தின் சிந்தனை பெரியதனத்தின் பக்கம் அலைமோதியது.  பொன்னுத் தாத்தாவால் அதற்கு மேல் அடக்க முடியவில்லை.  ‘ஏம்ப்பா அவ வயசுக்கு வந்த பொண்ணு அவளோட வாழ்க்கைய அவ தேடிக்கிட்டா, அவ என்னப்பா தப்பு பண்னுனா, ஒரு ஆம்பளயத்தான கலியாணம் பண்ணுனா, அதுக்காக அக்கினிக்கு காவு கொடுப்பீங்களா, அவ அடுத்தவனோட  பொஞ்சாதிங்கறத, மறந்துறாதீங்க  இது போலிசுக்கு தெரிஞ்சா பெரிய பொல்லாப்பாயிரும், ஊரு சனம் பூரா கச்சேரியில கை கட்டி நிக்கனும்’என பொரிந்தார்.

‘அதுவும் சரிதான, கெரகத்த பத்தி விட வேண்டியது தான இதுல என்னத்தப் போயி ஊரு கட்டுப்பாடு, ஒரு பொம்பள புள்ளைக்காக ஊரு சனம் ஜெயிலுக்கு போச்சுன்னா  பொழப்பு என்னாகுறது’  என கூட்டத்தின் சிந்தனை மாறி, பொன்னுத் தாத்தாவின் பக்கம் திரும்பியது.

பெரியதனம், ‘பொன்னு மாமா கம்முனு இருங்க. பெத்தவங்களுக்கு இல்லாத அக்கறை ஒங்களுக்கு எங்கிருந்து வந்துச்சு? அவுகளே ஓடிப் போன புள்ளயை வேணான்னு தலை முழுகிட்டாங்க’ என உருமினார்.  இப்படியே பேசிக்கொண்டிருந்தால் நிலைமை சிக்கலாகிவிடும் என அவசரப்பட்டவர், அனலியை அருகில் வரச்சொல்லி அழைத்தார்.  அனலி சிறிதும் அச்சமின்றி அருகில் வருவதைப் பார்த்த கூட்டம், அடுத்து நடக்கப் போவதை எண்ணி பதைபதைத்தது. அனலிக்கு புளிய மரத்தைக் காட்டி ‘அந்த மரத்தோட சேந்து நில்லும்மா’ என பெரியதனம் கட்டளையிட்டார்.

அனலி அந்த கூட்டத்தை உற்றுப் பார்த்தாள்.  அவளது அண்ணன் மூன்றாவது வரிசையில் தலை குனிந்திருந்தார்.  அனலி அவரை ‘அண்ணே’ என்றழைத்தாள்.  அவர் தலை நிமிரவில்லை.  ‘கொஞ்சம் பக்கத்துல வாங்கண்ணே’ என மீண்டும் அழைத்தாள்.  அண்ணன் கூட்டம் விலக்கி முன்னே வந்தார்.  அனலி முன் நின்றார்.  அப்போதும் அவளைப் பார்க்கும் தைரியம் அவருக்கு இல்லை.  ‘இப்பிடி ஏமாத்தி என்னைக் கூட்டிட்டு வந்துட்டீங்களே அண்ணே’ என கேட்பாள் என எதிர்பார்த்தார்.  ஆனால் அவள் அப்படி ஒன்றும் கேட்கவில்லை.  அவளுக்கு கடைசியாக அண்ணனின் தோள்களில் ஒரு முறை சாய்ந்து கொள்ள ஆசையாக இருந்தது.

‘அண்ணே ஒரு தடவ என்னை நிமிர்ந்து பாருங்கண்ணே’ என அனலி இறைஞ்சுவதைப் போலக் கேட்டதும், அவர் தலை நிமிர்ந்தார்.  அவரது கண்கள் சிவந்து விழியோரங்களில் கண்ணீர் தேங்கி இருந்தது.

அனலி நிதானமாக தன் காதுகளில், மூக்கில், கழுத்தில், கைகளில் இருந்த தங்க நகைகளை ஒவ்வொன்றாக கழற்றினாள்.  அண்ணனின் வலது கையைப் பற்றி தங்க நகைகளைக் கொடுத்தவள், ‘அண்ணே என்னைய எரிச்சா இதுவும் சேந்து எரிஞ்சு போகும்ணே அம்மாகிட்ட இத கொடுத்திருங்கண்ணே தங்கச்சி கலியாணத்துக்கு ஆகும்’ என்றவள், புளிய மரத்தை நோக்கி தீர்மானகரமாக நடந்தாள்.  அவளோடு அவளது உயிருக்கு உயிரான இளன் சேர்ந்து வருவதை அனலி மானசீகமாக உணர்ந்தாள். இதைப் பார்த்த அவர்கள் செய்வதறியாது கலங்கி தவித்தனர்.

அதற்கு மேல் தாங்க முடியாத அண்ணன் உணர்ச்சி மேலீட்டில் ‘அய்யய்யோ அம்மா அனலூ..’ என பெருங்குரலெடுத்து அழுதார்.அனலியை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தார்.  ‘ஒன்னச் சாகடிக்க விட மாட்டன்மா, என்ன மன்னிச்சிரும்மா’ என கதறியவர். அனலியை ஒரு சிறுமியைப் போல அள்ளி தோளில் போட்டுக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.  பெரியதனத்துக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘அவள புடுச்சி மரத்துல கட்டுங்கடா’ என பக்கத்திலிருந்த தடியன்களுக்கு உத்தரவிட்டார்.

தடியன்கள், பெரிய அண்ணனிடமிருந்து அனலியை பறித்துச் செல்ல வெறிநாய்களைப் போல பாய்ந்தனர்.  பொன்னுத் தாத்தா குறுக்கே போய் நின்று கொண்டார். அவர் அருள் வந்த அய்யனார்சாமியாக மாறியிருந்தார்.  ‘என்னைக் கொன்னுட்டு போங்கடா’ என கர்ஜித்தார்.  அவருடன் குமரனும் சேர்ந்து கொண்டான்.  அடுத்த ஒரு நொடியில், குமரனையொத்த இளைஞர்கள், பொன்னுத் தாத்தாவுடன் கைகோர்த்து தடியன்களை முன்னேற விடாமல் தடுத்து விட்டனர்.

இதற்கிடையே பெரிய அண்ணன், அனலியை வாகனத்தில் உட்கார வைத்து, மயானத்தைக் கடந்து மண் ரோட்டில் ஏறிவிட்டார்.  இருட்டும் பனியும் இணைந்து அவர்களுக்கு வழிவிட்டதில், பெரிய அண்ணன் வாகனத்தை அண்ணா நகர் காலனியில் உள்ள அனலியின் வீட்டை நோக்கி  ஓட்டினார்.  ‘எப்படியோ இந்த முட்டாள் முரடனுக கிட்ட இருந்து ஒரு சீதேவிய காப்பாத்திட்டம்டா பேரா..’ என முகம் நிறைந்த பெருமையுடன் பொன்னுத் தாத்தா சொன்னார். குமரன் அதை சிரித்தவாறே ஆமோதித்தபொழுது மீசைக்காரன் தீப்பந்தத்தை அணைத்திருந்தான்.

வரத.ராஜமாணிக்கம்

மாணவனாக இருக்கும் காலத்தில் இருந்தே எழுதி வருகிறார். மூன்று சிறுகதை தொகுதிகளும் ஒரு நாவலும் புத்தகமாக வெளிவந்துள்ளன. பழநியைச் சேர்ந்த இவர்  முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார். வழக்கறிஞர் தொழில். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பவர். நகர்மன்றத் தலைவர் பொறுப்பும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram