சாம்பாருக்குத் தாளிக்க அடுப்பில் குழி கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்வதற்குள் கொல்லைக்கதவு திறந்து கைக்கெட்டும் கருவேப்பிலை கொப்பிலிருந்து ஒரு கொத்தை உருவும்போது எதிரே இருளில் தெரிந்த நிழலுருவம் கண்டு அதிர்ந்தே போனாள் கவி. இன்னும் சரியாக இருள் பிரியாத புலர்காலை பொழுதென்பதால் உறக்கம் முற்றிலும் விலகி விடாத கண்களைக் கூர்தீட்டி பார்வையைக் குவித்துப் பார்க்க, “நான்தான்… நான் அனி…” என்று வந்த சங்கடமான குரலில் சட்டென்று புரிந்து கொண்டு சிரித்தாள்.
“அக்கா நீங்களா? இந்த நேரத்துல யாருனு ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல” என்றபடி பின்பக்க விளக்கைப் போட்டாள். “இந்த நேரத்துல தூங்காம என்ன பண்றீங்க?”
“தூக்கம் வரல… அதான் சும்மா தோட்டத்துல இருக்கலாம்னு வந்தேன்” என்றாள் அனிதா, நைட்டியின் மேல் குளிருக்குப் போர்த்தியிருந்த கம்பளி ஷாலை இன்னும் நன்றாக இழுத்து விட்டபடி.
“இப்படி அக்கடான்னு வர்ற நேரத்துல தானே உங்களுக்கு ரெஸ்ட் எடுக்க முடியும். நல்லா தூங்கி எந்திரிக்காம ஏன்க்கா?” உரிமையாகக் கோபித்துக்கொள்கையிலேயே புகையும் மணம் நாசியில் மோத, “அச்சோ. எண்ணெய் காயுது. இதோ வரேன்” ஒரே ஓட்டமாய் உள்ளே வந்து புகைந்து கொண்டிருந்த கரண்டியை மேலே தூக்கிப் பிடித்தபடி அடுப்பை அணைத்தாள் கவி. அனிதா அங்கேயே நிற்கவில்லை. அவர்கள் வீட்டுக்குள்ளும் செல்லாமல் இரு வீட்டுக்கும் பொதுவான தோட்டத்திற்குள்ளேயே மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தாள். அடுக்குமல்லி புதரருகே சென்று அந்தியில் மலர்ந்திருந்த பூக்களை, இலைகளை கையால் வருடியபடி நிற்பது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
‘சின்ன வயசு ஞாபகமோ என்னவோ! பிறந்த வீட்டுக்கு வந்தாலே பொம்பிளை மனசுக்கு இறக்கை முளைச்சிடும்’’ என்று புன்னகைத்துக் கொண்டே மிகுதி காரியங்களைப் பரபரவென முடித்தாள் கவி. தினு ஷிப்ட்டுக்குக் கிளம்புவதற்குள் வேலைகளை முடித்துவிட்டால் நிம்மதி. சஹானா எழுந்தபின் ஒரு வேலையாகாது. அவள் பின்னால் திரியவே சரியாக இருக்கும். “யார்ட்ட பேசிட்டு இருந்த?” தினு இன்னும் ஈரம் உலராத கேசத்தை வாரி படிய வைத்துக் கொண்டிருந்தான்.
“பக்கத்து வீட்ல சசிக்கா தங்கச்சி வந்துருக்காங்கன்னேன்ல. தூக்கம் வரல போல. பின்னாடி உலாத்திட்டு இருந்தாங்க. கதவு திறக்கவும் ஒரு நிமிஷம் பக்குனு ஆயிடுச்சு”
“இங்க எந்த திருடன் வரப்போறான்?” என்றான் தினு. அவன் சாவகாசமாகச் சொல்வது போயிருந்தாலும் அக்கூற்று என்னவோ முற்றிலும் உண்மை தான். திருமணமான புதிதில் அவர்கள் இருந்த மறைமலை நகர் வீடு அத்துவானத்தில் இருப்பது போலிருக்கும். தினுவுக்கு இரவு ஷிப்ட் என்றால் கவி பயப்படுகிறாளோ இல்லையோ தினு பயந்து கொண்டே இருப்பான். ‘போனை பக்கத்திலேயே வைச்சிரு, யாராவது வந்தா கதவை திறக்காத’ என ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டுக் கிளம்புவான். இருவருடன் இணைய மூன்றாவதாக இன்னொரு உயிர் வருகிறது என்றபோது வீடு மாறலாமா என்று யோசித்தார்கள். அக்கம்பக்கம் இருந்தால் பேச்சுத்துணைக்கு அனுசரணை என்பதை விட நாளை குழந்தை வந்தால் உதவிக்கு மனித சகாயம் தேவைப்படும் என்று கவிக்கும் தோன்றியதில் வீட்டு விளம்பரங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
இந்த ஏரியா அவர்கள் தேடும் பட்டியலிலேயே இல்லை என்றாலும் தினுவின் நண்பர் சொன்னார் என்று தான் வந்து பார்த்தது. காம்பவுண்ட் சுவருடன் தனித்து, பின்னால் தோட்டம் வைத்துச் சொப்பு போலிருந்த வீட்டைப் பார்த்த நொடியிலேயே இவர்களுக்குப் பிடித்துப்போனது. வீட்டுக்குப் பின்னாலும் பக்கவாட்டுகளிலும் இருந்த நெருக்கமான லைன்வீடுகளும் மெயின் ரோட்டுக்குச் செல்லும் கிளைசாலை என்பதால் நிறையக் கடைகளும் இருந்ததில் சாலை எந்நேரமும் வெளிச்சமாக இருந்தது. இப்பாதுகாப்பு அம்சங்களை விட வாடகைக்கு வருபவர்கள் அடிமைகள் என்ற தொனியில் அரட்டலாக விசாரிக்காமல் பாந்தமாக பேசிய வீட்டு உரிமையாளர்கள் மேல் மதிப்பு தோன்ற, தினுவின் தொழிலகத்துக்குச் சற்றுத் தொலைவு என்றாலும் கூட இங்கேயே குடி புகுந்திருந்தார்கள். திருட்டுப் பயமோ, குழந்தையுடன் தனியாக இருக்கிறாள் என்ற பதற்றமோ தேவைப்படாத பாதுகாப்பான இடம் தான்.
“இன்னிக்கு டபிள் ஷிப்ட் இருந்தாலும் இருக்கும். போன் பண்றேன்” தூங்கி கொண்டிருந்த பிள்ளையின் கன்னத்தை ஒற்றி முத்தம் பதித்துவிட்டு தினு கிளம்பினான்.
சாப்பாட்டுப்பையுடன் அவன் பின்னாலே சென்று கையாட்டி கேட்டை சாத்தி திரும்புகையில் சசி அக்கா வீட்டு முற்றத்தில் மூவரும் அமர்ந்து ஏதோ பேசி சிரிக்கும் சத்தம் கேட்டது. இவள் வீட்டுக்குள் நடக்க, அங்கிருந்தே பார்த்துக் கையில் இருந்த கோப்பையை உயர்த்திக் காட்டிய சசி, “வா கவி, டீ குடிப்பியாம்” என்றாள்.
“குடிக்க மாட்டேன்னு தெரிஞ்சே கூப்பிடுறீங்க பார்த்தீங்களா!? அப்புறம்… என்ன அக்கா தங்கச்சி மாநாடு நடக்குதாக்கும்?” என்றபடியே அவர்கள் அருகே சென்றாள் கவி. சசி அனிதா எதிரில் சிமெண்ட் திட்டில் பிரபா அண்ணனும் அமர்ந்திருந்தார்.
“என்னண்ணா, ஒருத்தரை கைலயே பிடிக்க முடியல போல. தங்கச்சியை கண்டதும் மூஞ்சில்லாம் லைட் போட்ட மாதிரி மின்னுது”
“இருக்காதா பின்ன? வராதவ இல்ல வந்திருக்கா” என்று சசி சிரிக்க, “அதை ஏன் கேக்குற? நான் ஒருத்தன் இருக்கேன்ற நினைப்பே நேத்துல இருந்து இந்தம்மாவுக்கு இல்ல” என்று பிரபாவும் சிரித்தார். “மாமா” செல்லமாகச் சிணுங்கியபடி அனிதாவும் சிரித்தாள்.
சசியின் தங்கை அனிதா பெங்களூர்வாசி. கணவர், இரண்டு பிள்ளைகள் என்று அங்கேயே செட்டில் ஆனவர்கள். எப்போதோ ஒருமுறை அக்கா வீடு வரும் வழக்கம் போல. இவர்கள் குடி வந்து இப்போது தான் முதல்முறையாகக் கவி பார்க்கிறாள். இந்த வீடு சசி அக்காவின் அம்மா வீட்டுச் சொத்தாம். இரண்டு மகள்களுக்கு ஆளுக்கு ஒன்று என்று இரண்டு போர்ஷன்களாக அப்போதே யோசனையுடன் கட்டி வைத்திருந்தார்கள் பெற்றவர்கள். அனிதாவின் போர்ஷனில் தான் இவர்கள் குடியிருப்பது. இந்தக்கதை எதுவும் குடிவரும்போது தெரியாது. பிரபா அண்ணன் வீடா, சசி மதினி வீடா என்று தான் வாடகைக்கு வீடு தேடி வரும்போதும் சரி, கேஸ், பால், மளிகை என்று ஒவ்வொரு இடமாகச் செல்லும் போதும் சரி, அக்கம்பக்கம் இவர்களை அடையாளப்படுத்திக் கொண்டது. வீடு இருக்கும் திசையைச் சொன்னால் வீட்டின் பெயரை சொல்லி “அவங்கப்பா காலத்துல இருந்து தெரியுமே” என்று தான் பேச்சை ஆரம்பித்தார்கள்.
ஒருவர் கிழக்கென்றால் மற்றவர் மேற்கு என்றிருக்கும் பெருவாரியான தம்பதிகளுக்கு இடையே கணவன் மனைவி இருவருமே எல்லோரிடமும் பிரியமாகப் பிடிப்பாகப் பழகுபவர்கள். அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பதும் கூடுதல் அனுதாபமாகச் சுற்றத்தின் மனங்களில் படிந்திருப்பதைப் பிறகு உணர்ந்து கொள்ள முடிந்தது. இங்கு வந்தது சரியான முடிவு தான் என்பது போல சஹானா பிறந்தநேரம் கைக்குக் கை இவர்கள் உதவி இருந்தது. அதுவே ஊரிலுள்ள இவள் அம்மாவுக்குப் பெரிய நிம்மதி. அந்நேரம் பழகிய பழக்கத்தில் அவ்வப்போது சசியை அழைத்து நலம் விசாரித்துவிட்டு “கொஞ்சம் பாத்துக்கோங்கப்பா” என்பார்.
“என்னக்கா திரும்ப படுக்கலையா? கண்ணெல்லாம் ஜிவுஜிவுன்னு இருக்கு” என்றாள் கவி அனிதாவிடம்.
“என்னமோ தூக்கம் வரல” என்ற அனிதா, சசியின் தங்கை என்பதை விட மகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். முக ஜாடையில் ஒற்றுமை இருந்தாலும் சசியக்காவின் கனத்த உடல்வாகுவுக்கு இவள் சிறுத்து கொடி போல அவள் வயதுக்கு ரொம்பவே இளையவளாகத் தோன்றினாள். ஆனால் உருவத்துக்குப் பொருத்தமில்லாத கணீரென்ற சாரீரம். தன் பதவியையும் அந்தஸ்தையும் பேசும் தொனியிலேயே காட்டிவிடுகிற ஆளுமை. அதுவே சசிக்காவுக்கு மென்குரல். சத்தமாகக் குரலெடுத்தால் தொண்டை கீச்சிடும், சற்றுமுன் அழைத்தாளே அது போல.
“பசங்க அங்க என்ன பண்ணுவாங்களோன்னு பயந்துகிட்டே இருக்கா. காலேஜ் படிக்கிற பசங்க பார்த்துப்பாங்க. அவரும் கவனிச்சுப்பாருன்னு சொன்னா இவளுக்கு மனசு ஆற மாட்டேங்குது” என்றாள் சசி தங்கைக்குப் பரிந்து.
“இரண்டுக்கும் ரெண்டுங்கெட்டான் வயசு. நேரத்துக்கு எந்திரிக்காதுங்க, கிளம்பாதுங்க. இப்ப போன் பண்ணா ‘நாங்க பார்த்துப்போம், அங்க இருந்தும் எங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்காதீங்கன்னு திட்டுதுங்க’” என்றாள் அனிதா சிரித்துக்கொண்டே.
“சரி தானக்கா. நீங்களே உடம்பு சரியில்லைனு வந்திருக்கீங்க. வந்த இடத்துல ஒழுங்கா ரெஸ்ட் எடுத்தா தானே. அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. நீங்க டென்சன் ஆகாம ஃப்ரீயா இருங்க” என்றாள் கவி. தொடர் கணினி பயன்பாட்டினால் கடுமையான கழுத்துவலி, முதுகுவலி, ஓய்வு எடுத்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் அக்கா வீட்டுக்கு வந்திருந்தாள் அனிதா. இரு வாரங்களுக்கு.
“நல்லா சொல்லு” என்ற சசியின் முகம் உண்மையிலேயே பொங்கி பெருகிக் கொண்டிருந்தது. தாய்வீட்டு உறவு வீடு வந்த பூரிப்பா, இல்லை மகள் போன்ற தங்கை வந்திருந்து சீராடுவதன் மகிழ்வா, தாங்கள் இருவர் மட்டுமே சுவாசித்து வெளியேற்றும் தனிமை வெக்கையில் இன்னொருவர் நுழைந்து பரப்பும் ஆசுவாசக் குளுமையா, அல்லது இவை எல்லாமே கலந்த உத்வேகமா … தெரியவில்லை. ஆனால் இருவர் முகத்திலும் தெரிந்த சந்தோஷத்தைப் பார்க்கவே அவ்வளவு அழகாக ரம்மியமாக இருந்தது.
“சரிக்கா. நான் வரேன். குட்டி எழுந்துக்கறதுக்குள்ள வீட்டை கூட்டி துடைச்சுட்டேனா வேலை முடிஞ்சுது”
“அவளை இங்கு கொண்டு வந்து விட்டுட்டு பொறுமையா செய்னா கேட்க மாட்ட. அவ எழுந்துட்டா குரல் கொடு. நான் வந்து தூக்கிக்கிறேன்”
“சரிக்கா” என்றுவிட்டு வந்த கவிக்கு அவர்களிடையே நிலவிய இணக்கமும் பாசமும் தனக்கும் அக்காவோ தங்கையோ யாராவது இருந்திருக்கலாம் என்ற ஏக்கத்தைத் தந்தது. சகோதரி உறவே அலாதியானது என்று தோன்றியது.
அனிதா இருந்த இரு வாரங்களும் அவ்வளாகமே பூப்பறித்துச் சூடி அழகழகாய் உடையுடுத்தி வலம்வரும் இளம்பெண்ணாய் யௌவனம் பூட்டிக் கொண்டது. காலை வேளையில் இளநீர்காரர் செவ்விளநீர் காய்களைக் கொண்டு வந்து இறக்கினார். கறி மீன் முட்டை என ஒவ்வொரு நேரமும் வகையாகச் சமையல் நடந்தேறியது. எலும்புக்கு நரம்புக்கு பலமென்று பிரண்டை துவையலும் கருப்பு உளுந்து கஞ்சியும், நாட்டுக்கோழி முட்டையும், ஆட்டுக்கால் பாயாவும் மணக்க மணக்க தயாராகின. அனிதாவுக்குப் பிடித்த பனங்கிழங்கை எங்கெங்கோ அலைந்து பிரபா வாங்கி வந்தார். பிரபாண்ணா சொல்லி தினு கூட வரும் வழியில் சொசைட்டியில் பதநீர் வாங்கி வந்து தந்தான்.
“பார்க்கவே ஆசையா இருக்கு தினு. ஆனா இத்தனை நாள் அவங்க இங்க வந்த மாதிரியே தெரியல. இவங்களும் நாம வந்த நாளா அங்க போனதில்ல. ஆனா ரெண்டு பிரசவத்துக்கும் இங்கதான் வந்தாங்களாம். அவங்களுக்கு இது தானே அம்மா வீடு. சசிக்கா காலு தரைல நிக்க மாட்டேங்குது. பிரபா அண்ணனையும் சும்மா சொல்லக்கூடாது. மச்சினிச்சினு இல்லாம பொண்ணாட்டம் தாங்குறாரு” என்று தினுவிடம் சொல்லி மாய்ந்து போனாள் கவி.
“நீ சஹியை ரொம்ப நேரம் அங்க விடாத. அவங்களுக்கே வேலை சரியா இருக்கும்”
“அவங்களே வந்து ஆசையா தூக்கிட்டு போகும்போது வேணாம்னு சொல்ல முடியுமா?”
அடுத்த வாரத்தின் ஞாயிறு நெருங்கி வருகையில் சசியக்காவின் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து கொண்டே வந்தது. “அடிக்கடி வந்து போ அனி. புள்ளைங்களயும் அவரையும் கூட்டிட்டு வா. ஓயாம ஓடி ஓடி தான் கழுத்துவலி முதுகுவலினு வாங்கி வச்சிருக்க. இனியாவது உடம்பை பாரு” என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.
“வந்ததற்கு இப்ப எவ்வளவோ தேவலைக்கா. நிம்மதியா இரண்டு வாரம் இருந்தாச்சு” என்று சிரித்துக்கொண்டே திரும்பிய அனிதாவின் கண்கள் தன்னைப் பார்க்கையில் அத்தனை சௌஜன்யமாகத் தோன்றவில்லை கவிக்கு.
“நீங்கதான் உதவியா கொஞ்சநாள் அங்க போய் இருந்துட்டு வாங்களேன் சசிக்கா. அவங்களுக்குதான் லீவ் எடுக்க முடியாது. நீங்க போகலாம்ல” தான் சொன்னதற்கு பிறகே அது அதிகப்பிரசங்கித்தனம் என்பதை கவி உணர்ந்தாள்.
“எங்க சொன்னா குளிர் ஒத்துக்கலைன்னுடுவாங்க. கூப்பிட்டா வந்தா தானே” என்றாள் அனிதாவும் சலிப்பாக. பேச்சை மாற்ற கவி வேறு ஏதோ கேட்க, அனிதாவிடம் இருந்து ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது. சரி என்னவோ என்று நினைத்துக் கொண்ட கவி சஹானாவைத் தூக்கி வந்து விட்டாள். ஆனால் அன்று மதியம் வீட்டுக்கு வந்த அனிதா சாதாரணமாகத் தான் பேசினாள். இவளுக்கே தன் எண்ணம் பிரமை என்று தோன்றிப்போனது.
“நாளன்னிக்கு கிளம்புறேன் கவி” என்று விடைபெற்றுக் கொண்டவள், “அப்புறம் சொல்ல மறந்துட்டேன். என்னோட அக்கவுண்ட் நம்பர் அனுப்புறேன். அதிலேயே டைரக்டா வாடகை போட்டுருங்க. பணமா கொடுத்து மாமாவை ஒவ்வொரு தடவையும் பேங்குக்கு அலைய வைப்பானேன்?” தங்களை வாடகைக்கு வைத்தவர்கள் சொல்லாமல் இவள் சொல்வது ஒரு மாதிரி இருந்தாலும் ‘சரி’ என்ற தலையசைப்புடன் முடித்துக்கொண்டாள் கவி.
இரவு ஷிப்ட் முடிந்து தினு வரும்நேரம் என்பதாலோ என்னவோ அன்று நேரங்கெட்ட நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது கவிக்கு. அசங்கிய மகளை தட்டிக் கொடுத்தபடியே படுத்திருந்தவளுக்கு முதலில் சன்னமாகக் கேட்ட குரல் பிறகு இரவின் நிசப்தத்தில் தெளிவாகவே காதில் விழ, சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டாள். மந்தமாய்ச் செவியுற்ற வார்த்தைகள் மசமசப்பான மூளைக்குள் புகுந்து தம் அர்த்தம் உணர்த்த, நெஞ்சின் வேகம் கூடியது.
“என் வலிக்கென்ன? நான் நல்லா தான் இருக்கேன். இங்க அடிக்கடி நாம வந்து போகாதது மத்தவங்களுக்கு தான் தொக்கா போயிடுச்சுன்னு நினைக்கிறேன். வாடகைக்கு வச்சிருக்குற மாதிரி இல்ல. வீட்டு பொண்ணு மாதிரி எப்ப பாரு வந்து பேசுது. வெளில போகும்போது ஏதாவது வேணுமான்னு கேட்டு வாங்கிட்டு வந்து தருது. பிள்ளைக்கு டே-கேரே தேவையில்ல. எப்பயும் இங்க தான் இருக்கு. அதுக்கு ஊட்டுறது கொஞ்சுறதுனு ஒன்னும் சொல்லிக்க முடியல..ஹ… இல்லல்ல… தனியா தான் இருக்கேன். நாலு மணிக்கு யார் எழுந்து வர போறாங்க?”
‘பக்கம் பார்த்து பேசு’ என்று எதிர்புறத்தில் இருந்து எச்சரிப்பு வருகிறது போல.
“இருங்க… சொல்றதை கேளுங்க. நீங்களும் நான் வந்த கையோட டூர் கிளம்பிடுவீங்க… இப்ப சொன்னா தான் ஆச்சு. அன்னைக்கு ஏதோ பணம் எடுக்கணும்னு அவகிட்ட ஏடிஎம் கொடுத்து அனுப்புறாங்க. ‘பின்’ எல்லாம் தெரியும் போல. எனக்கு பக்குனு ஆயிடுச்சு. என்ன இப்படி பண்றீங்கன்னு கேட்டா ‘நல்ல பொண்ணுமா, நம்ம வீட்டு பொண்ணு மாதிரி’னு சொல்லுது இந்த லூசக்கா. இந்தக்காவுக்கு சுத்தமா அறிவே இல்லங்க. அதான் வாடகையை நம்ப அக்கவுண்ட்லயே போட சொல்லிட்டேன். பிள்ளை இல்லாத சொத்துனா மத்தவங்க உள்ள நுழைஞ்சு ஆட்டைய போட பார்ப்பாங்கனு சொல்றது சரியா தான் இருக்கு. இனிமேல கொஞ்சம் கவனமா இருக்கணும். அடிக்கடி வந்து போகணும். உடையவங்க பக்கத்துல இல்லனா பிறத்தியார் நுழைய தான செய்வாங்க”
ஏஸியை நிறுத்தி காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்துப் படுத்திருந்த கவிக்கு வெளியே துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தபடி அனிதா பேசிய அனைத்தும் துல்லியமாகக் காதில் விழ, அவள் உடம்பும் மனசும் அருவருத்துப் போனது. இதற்கு மேலும் எதுவும் கேட்க வேண்டாமென்று சட்டென்று எழுந்தவள் பாத்ரூமுக்குள் புகுந்து முழுவேகத்தில் நீரை திருப்பி விட்டாள். சத்தத்துடன் தண்ணீர் கொட்ட, வெளியே சரசரவென நடக்கும் சத்தம்.
கவிக்கோ உடலெல்லாம் பற்றியெரிவது போலிருந்தது. அண்டை அயலார் என்று எதார்த்தமாகப் பேசி பழகுவதற்கு இப்படியொரு அர்த்தமா? பார்க்க நாகரீகமாய், படித்துப் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணி செய்யும் இதன் புத்தி ஏன் இப்படி வக்கரித்து யோசிக்கிறது?
அடுத்த இரு நாட்கள் தினுவுக்கு விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே இவர்கள் வெளியே கிளம்பி விட்டார்கள். வாசலில் சசிக்கா தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். “கோவிலுக்கு போயிட்டு அப்படியே இவங்கண்ணன் வீட்டுக்கு போய்ட்டு வரோம்க்கா. தங்கிட்டு நாளைக்கு தான் வருவோம்”
“சரிம்மா. போயிட்டு வாங்க. அனிதாவும் கிளம்பிடுவா” என்றவரின் குரலில் சோர்வு மண்டிக்கிடந்தது. லேசாகப் புன்னகைத்துக் கிளம்பினாள் கவி. அதற்கு மேல் முகம் கொடுத்து பேசத் தோன்றவில்லை. எங்களை எப்படி அவ்விதம் நினைக்கலாம் என்று பொங்கி வந்த கோபமும் ஆற்றாமையும் அகக் கொந்தளிப்பும் இன்னும் அடங்குவதாக இல்லை.
“இதென்ன தேவையில்லாத பொல்லாப்பு. இனி கொஞ்சம் பார்த்தே பழகிக்கலாம். என்ன இருந்தாலும் அவங்க தங்கச்சி. சொந்த ரத்தம். நாளை பின்ன தேவையில்லாத பேச்சு வந்துடக்கூடாது. பேசாம நம்ம சக்திக்கு ஏத்தமாதிரி சின்ன அபார்ட்மெண்ட்மா வாங்கிட்டுப் போறது தான் நல்லது போல” என்றிருந்தான் தினுவும் அவள் சொன்னதைக் கேட்டு.
அடுத்த நாளிரவு அவர்கள் திரும்பி வரும்போது இரு வாரங்களாகக் கலகலவென இருந்த முற்றம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கு பரப்பிரம்மமாய் ஏதோ பத்திரிக்கையைப் புரட்டியபடி அமர்ந்திருந்த இருவரது முகங்களும் கூட.
இவள் உள்ளே வருவதைக் கண்ட சசி, “என்ன கவி, பிள்ளை கைலயே தூங்கிட்டாளா?” என்றபடி எழுந்து வந்தாள்.
“இங்க கொடு” என்றபடி நீண்ட கையைக் காணாதது போல இன்னொரு தோளில் சரிந்த கைப்பையைத் தோளுயர்த்தி இருத்திவிட்டு “ஆமாம்க்கா” என்றாள் கவி.
“எதிர்காத்துக்கே பிள்ளை தூங்கியிருக்கும். அப்புறம் உன்கிட்டயும் மறந்துற போறேன். நேத்து ராத்திரி மருதாணி அரைச்சு அனிக்கு வச்சிட்டு மீதியை ‘பிள்ளைக்கு கொண்டு போ’னு பிரிட்ஜ்ல வச்சேன். எடுத்துக் கொடுக்க நானும் மறந்துட்டேன். அவளும் மறந்துட்டா. நீ வச்சுக்கிறியா கவி? கொண்டு வரட்டுமா?” என்க, “அச்சோ. இன்னிக்குனு பார்த்து எனக்கு சளி பிடிச்ச மாதிரியிருக்கேக்கா” என்ற கவி, அவர் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. பார்க்க முடியவில்லை.
இவ்விரு நாட்களாகத் தேவையில்லாமல் பழி சுமப்பது போல உள்ளம் கூசிக் கொண்டிருந்தது. இதில் இவர்கள் தவறெதுவும் இல்லையென்று புரிந்தாலும் எதற்குப் பொல்லாப்பான அனுமானங்களைத் தாங்கள் ஏந்தி கொள்ளவேண்டும் என்று மனது அழுத்தமான கோடு வரைந்திருந்தது. ஆனால், நேருக்கு நேராகப் பார்க்கையில் பரிதாபமே தோன்றியது. முடிவெடுத்தது போல எல்லைக்கோடிட்டு விலகி நிற்கமுடியுமா, பட்டும்படாமல் இருந்துகொள்ளும் நினைப்பே குற்றவுணர்வு தர, ‘சே, ஏனிந்த தர்மசங்கடம், தினு சொன்னது போல இங்கிருந்து சீக்கிரம் கிளம்பி விடுவது தான் நல்லது’ என்றெண்ணிக் கொண்டாள் கவி.
பைக்கை உள்ளே கொண்டு வர கேட்டை அகல திறந்து வைத்துவிட்டு அவள் நகர, வீட்டின் முகப்பு பலகை ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒளிர்ந்தது.
பித்தளையில் தகதகத்த பெயரைச் சிறு ஏளனச் சிரிப்புடன் பார்த்த கவி, ‘அன்பில்லமாம் அன்பில்லம்! நல்ல அன்பு! தகுதியில்லாதவங்க மேல வைக்கிற அன்பு விஷத்துக்குச் சமானம்’ கசப்புடன் நினைத்தபடி பக்கவாட்டில் நிற்கும் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் துணிவில்லாமல் வேகமாக உள்ளே நடந்தாள்.