ஆட்டோ அந்த இரண்டுதள வீட்டின் முன் போய் நின்றது. ஆட்டோவில் இருந்து ரிஸ்வான் அவனது மனைவி ஆயிஷா இரு மகள்கள் ஹைரின் மற்றும் உஸ்வத்துல் ஹசனா இறங்கினர்.
வீட்டுக்குள்ளிருந்து விஜயபாஸ்கரும் சுகன்யாவும் ஓடி வந்தனர். விஜயபாஸ்கர் மேற்சட்டை அணியாமல் நெற்றியிலும் மார்பிலும் புஜங்களிலும் விபூதிபட்டை அடித்திருந்தார். விஜயபாஸ்கர் அதிதீவிரமான முருகபக்தர். சாண்டோ சின்னப்பா தேவருக்கு சமமான முருகபக்தி கொண்டவர். பேசும் பத்து வார்த்தையில் ஒரு வார்த்தை முருகா தான்.
கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், கந்தகுரு கவசம், பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் மற்றும் பல முருகனின் புகழ் பாடும் திரையிசை பாடல்களும் பாடுவார்.
‘ஓம் சரவணபவ’
‘ஓம் ஷண்முகாயநமஹ’
‘ஓம் குமாராய நமஹ’ உச்சரித்து கைவிரல்களில் ஆன்மிக அபிநயம் பிடிப்பார்.
“செந்தூர் என்றொரு தேசம் - அங்கு
செந்தில் ஆண்டவர் வாசம் -ஒப்பு
இல்லை என சொல்லும்படி
உலகை அவன் காத்தபடி நின்றான்
எனை கொண்டான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை
குமரா!” விஜயபாஸ்கர் பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஐந்து வேளை தொழுது முப்பது நாள் நோன்பு வைத்து ஜக்காத்தும் சதகாத்தும் கொடுக்கும் முஸ்லிம் ரிஸ்வானும் முருகனுக்கு காவடி எடுக்கும் விஜயபாஸ்கரும் முப்பது வருட குடும்ப நண்பர்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும் ரிஸ்வான்!”
“வஅலைக்கும் ஸலாம் முருகா!”
இரு குடும்பங்களும் உள்ளே நடந்தன. வரவேற்பறையில் அமர்ந்தனர் வாங்கி வந்த ஊட்டி வர்க்கியையும் நேந்திரம் சிப்ஸையும் நீட்டினாள் ஆயிஷா.
சுகன்யா வாங்கிக் கொண்டாள்.
“இப்பதான் எங்க வீடு தெரிஞ்சுதா ரிஸ்வான்?”
“எங்கயும் போக முடியல வர முடியல… புக் ஷாப் வேலை ஆளை திங்குது!”
“உங்க மகள்கள் நல்லா படிக்கிராங்களா?”
“சின்னவ டென்த். பெரியவ ப்ளஸ் டூ செகண்ட் இயர்!”
“என்ன திடீர்னு திருச்சி பக்கம்?”
“திருவெறும்பூர்ல ஓர் உறவினர் பங்ஷன். அட்டன்ட் பண்ணினம். முருகா ஞாபகம் வந்துச்சு. அதான் ஓடி வந்திட்டோம்…”
“வாய் நிறைய நீங்க முருகான்னு கூப்பிடுறதை கேட்டு எத்னி நாளாகுது?”
“உங்க முருகன் நல்லா இருக்காரா?”
“முருகனும் வள்ளிக்குறத்தியும் நலம். முருகனின் ஒரு மனைவி வள்ளி இச்சா சக்தியாகவும் இன்னொரு மனைவி தெய்வானை கிரியா சக்தியாகவும் செயல்படுகின்றனர். முருகன் தேனும் திணைமாவும் தின்று அமோகமாக இருக்கிறான்!!”
“சமீபத்தில் முருகன் கோவில் ஏதாவது போனீர்களா?”
“சுவாமிமலை போனேன். வேட ரூப வடிவில் முருகனும் கையில் கவண் ஏந்திய வள்ளியும் உற்சவ மூர்த்திகளாக அங்குள்ளனர்!”
“மகிழ்ச்சி!”
“உங்கள் அல்லாஹ் என்ன சொல்கிறார் ரிஸ்வான்?”
“மனிதநேயம் இல்லாத மதம் பாழ் என்கிறான் அல்லாஹ்!”
ரிஸ்வானின் மகள்களுடன் சுகன்யா பேச ஆரம்பித்தாள்.
“காபி குடிக்றீங்களா, டீ குடிக்றீங்களா?”
“நாங்க நாலு பேரும் நோன்பு வச்சிருக்கிறோம். இப்ப மணி மாலை அஞ்சாகுது. இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கு நோன்பு திறக்க…”
“ஓ… ரம்ஜான் மாதம் தொடங்கிருச்சா?”
“நாலஞ்சு நோன்பு ஓடிருச்சு முருகா!”
“ரம்ஜான் முப்பது நோன்பு மிக மிக நல்ல விஷயம். கூடுதல் எடை குறைக்கலாம். குறை இரத்தஅழுத்தத்தையும் கெட்ட கொழுப்பையும் நேர் பண்ணி இதயநலம் பேணலாம். இரத்த சர்க்கரையை கட்டுபடுத்தலாம். மூளை செயல்பாட்டை மேம்படுத்தலாம். பாதுகாப்பளிக்கும் புரோட்டீனை கூட்டலாம். நீரிழிவு, இதயநோய், நரம்பியல் குறைபாடு போன்ற நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம். பழுதுபட்ட செல்லை சுய சுத்திகரிப்பு செய்யலாம்…”
“மருத்துவக் காரணங்களை தாண்டி நாங்கள் ஈமானோடு முப்பது நோன்பு நோற்கிறோம்..”
“நாங்களும் முருகனுக்காக கந்த சஷ்டி விரதமும் கார்த்திகை விரதமும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை விரதங்களும் நோற்கிறோம். இது தவிர 21 அல்லது 48 நாட்கள் தொடர் விரதங்கள் நாங்கள் இருப்பதும் உண்டு”
“நாற்பத்தியெட்டு நாட்கள் விரதம் எப்ப வைப்பீங்க?’
“வளர்பிறை சஷ்டி, கிருத்திகை அல்லது விசாகம் போன்ற நாட்களில் தொடங்கி 48 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருப்போம் தினசரி காலை மாலை குளித்து திருநீறு அணிந்து முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி சிவப்பு மலர்கள் சாத்தி வழிபடுவோம்!”
“முருகா! உங்க மகள்கள் மகன் சபரிவள்ளல் நன்றாக இருக்கிறார்களா?’
“படுஷேமம்!”
“சபரி வள்ளலுக்கு கல்யாணம் எப்ப?”
“இன்னும் இரண்டு வருஷத்துக்கு கல்யாணம் வேணாம்ன்றான்!”
சிரித்தான் ரிஸ்வான்.
“ஜென் இஸட் ஆண் பெண்களுக்கு திருமணம் என்கிற வார்த்தையே பிடிப்பதில்லை…”
பயணச்சுமைகளைக் கொண்டு போய் இரண்டாவது படுக்கையறையில் வைத்தார் விஜயபாஸ்கர்.
“உங்க மனைவி மகள்களை ஓய்வெடுக்க சொல்லுங்க… நாம பேசிட்டு இருப்போம்!”
சுகன்யா ரிஸ்வானிடம், “தம்பி! நீங்க நாலு பேரும் நோன்பு திறக்க என்னென்ன பலகாரங்கள் தேவை… சொல்லுங்கள் தயார் பண்றேன்!”
“உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
“ஒரு சிரமமும் இல்லை”
“பேரீச்சம் பழம், பஜ்ஜி மற்றும் சர்பத் போதும்”
நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியது. நால்வரும் நோன்பு திறக்கும் நிய்யத்தை உச்சரித்தனர். “யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு நோற்றோம். உன்னையே நம்புகிறோம். உன் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம். உன்னுடைய அருட்கொடையை கொண்டே நோன்பு திறக்கிறோம்!” எனக்கூறியபடி ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தை வாய்க்குள் போட்டனர். “தாகம் நீங்கி விட்டது நரம்புகள் ஈரமாயின. மேலும் வெகுமதி உறுதியானது இன்ஷா அல்லாஹ்!” ரூ. ஆப்ஸா ரோஜா இதழ் சர்பத்தைக் குடித்தனர்.
தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்.
இரவுத்தொழுகைக்கு பின் அனைவரும் டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிட்டனர்.
“முருகா! உங்க வீட்டு பக்கத்ல பள்ளிவாசல் இருக்கா?”
“இருக்கு!”
“நான் நைட் தராவீஹ் சிறப்புக்கூட்டுத் தொழுகை தொழுகனும்!”
“நான் கூட்டிட்டு போரேன்!”
ரிஸ்வான் இருபது ரக்காத்துகள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்தார் விஜயபாஸ்கர். வீடு திரும்பினர்.
“முருகா! ஒரு விண்ணப்பம்!”
“என்ன?”
“எவரேனும் பிறமக்களிடம் விருந்தினராக தங்கி இருப்பின் அவர் அவர்களின் அனுமதியின்றி நோன்பு நோற்கலாகாது- என்கிறது ஒரு நபிமொழி. ‘பிறமக்களிடம்’ என்பது எங்கள் சக முஸ்லிம் உறவினர்களாக இருக்கலாம் மாற்று மத சகோதரர்களாக இருக்கலாம். நாளை அதிகாலை 4: 30 மணிக்கு சஹர் சாப்பாடு சாப்பிட்டு நாளைய நோன்பை நோற்கனும். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா?”
“தவறான கேள்வி. எங்கள் வீட்டில் நீங்கள் சஹர் உணவு உண்டு நோன்பு நோற்பது எங்களுக்கு பெருமை!”
“சஹர் உணவை செயலி மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம்!”
“சஹர் உணவை என் மனைவி தான் சமைப்பார்.. நாளை நீங்கள் நோற்கும் நோன்பில் கிடைக்கும் நன்மையில் பாதியை எங்களுக்கு திருப்பி விடுங்கள்!”
“முழு நன்மையையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!”
“இன்னொரு முக்கியமான விஷயம். நாளை நாங்களும் உங்களுடன் சேர்த்து நோன்பு வைக்கப்போகிறோம்- முருகனின் பெயரால்!”
-சஹர் சாப்பாடு சாப்பிட்டு நோன்பு வைத்த விஜயபாஸ்கரும் சுகன்யாவும் முணுமுணுத்தார்கள். “அறுபடைவீடுகளில் குடியிருக்கும் முருகா! எங்கள் முஸ்லிம் நண்பர் குடும்பத்துடன் நாங்கள் வைக்கும் நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!”
விரும்பினவர்களுக்கு விரும்பின தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஒற்றை பரமபொருள் மகிழம்பூவாய் இதழ் விரித்தது.
அந்திமழை மின்னிதழுக்கான ரம்ஜான் சிறப்புச்சிறுகதை 21.02.2026 எழுதப்பட்டது