சிறுகதைகள்

அரசன் சபை

இளையராஜா இசையில் நனைந்த கதைகள் வரிசை - 2

நெய்வேலி பாரதிக்குமார்

அரசன் சபை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26 ஆம் தேதி சிதம்பரம் பாலக்கரை ராஜா தேநீர்க்கடையில் கூடிவிட வேண்டும் என்பதுதான் 1982 ஆம் ஆண்டு குழு உறுப்பினர்கள் தீர்மானித்த கட்டாயமான விதி. ஆனால் இந்த வருடம் செல்வம் மட்டும் வரவில்லை. வர முடியாதபடி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

உலகத்தில் மிக நீளமான சாலை எதுவென்று கேட்டால் அரசன் சபை உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே குரலில் உரக்கச் சொல்வது சிதம்பரம் பாலக்கரை சாலையைத்தான். அரசன் சபை உருவானது அனேகமாக ராஜா தேநீர்க் கடையில்தான். கடையின் முன்புற கண்ணாடி அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் உப்பிய பூரிகள், மார்கழி மாதத்து வாசல் கோலங்களில் மலர்ந்திருக்கும் பூசணிப்பூவைப் போல அத்தனை அழகாக இருக்கும். முத்தையா தொழில்நுட்பக் கல்லூரிக்குச் செல்பவர்கள்

பேருந்து நிலையத்தில் இறங்கி பாலக்கரை வழியாகத்தான் சென்றாக வேண்டும். பாலக்கரை வழியாகச் செல்பவர்கள் நிச்சயம் ராஜா தேநீர்க் கடையை கடந்து செல்லாமல் கல்லூரியை அடைய முடியாது. ராஜா தேநீர்க் கடையை கடப்பது அத்தனை சுலபமில்லை. கடையைச் சுற்றி அகழிகளோ, அதில் கோரமாக வாய் திறந்து நீந்தும் முதலைகளோ இல்லை. கோட்டையோ அல்லது கோட்டை மீது குறி பார்த்து சுடும் வீரர்கள் கூட இருப்பதில்லை. கடை முதலாளி எவரையும் வலை போட்டு இழுத்து சிறை பிடிப்பதுமில்லை.

கடையின் முதலாளி பெயர் ராஜாவா இல்லை அவரது மகன் பெயர் ராஜாவா என்பதும் தெரியாது. ஆனால் அது ராஜாவின் கடை. இளையராஜாவின் கடை. மிகப் பெரிய ஸ்பீக்கர்கள்தான் அந்தக் கடையின் மாபெரும் சொத்து. மிகத்துல்லியமாக ராஜாவின் பாடல்கள் அதில் ஒலிக்கத் தொடங்கிவிட்டால் பெரும் கூட்டம், அந்தக் கடைக்குமுன் கூடிவிடும். அரசனுக்கு என்று எழுதிவைக்காத சொத்து போல நாற்காலியும் அதற்கு முன் போடப்பட்ட மேஜைஒன்றும் அந்தக் கடையில் உண்டு. அரசன் எப்பொழுது கல்லூரிக்குப் போவார், எப்பொழுது கல்லூரியிலிருந்து வெளியே வருவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவரது நாற்காலியில் எப்பொழுதும் அவர் அமர்ந்திருப்பார். ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப அவரது விரல்கள் மிக மென்மையாக மேஜை மீது தாளமிடும். அது ஒலிக்கும் இசைக்கு ஒருபோதும் ஊறு விளைவிக்காத மகா ரசிகனின் மெல்லிய கைத்தட்டல் என்று கூட சொல்லிவிடலாம். முதலில் செந்திலும், சண்முகமும் அவரோடு அதே மேஜையில் அமரத் தொடங்கினார்கள்.

அதன் பிறகு ஜோதி, ராஜராஜன், கந்தன், சிவகுரு, பாலு, ஐயப்பன், பாபு, பிரபாகரன், மணவாளன் என ஒவ்வொருவராக இணைந்தார்கள். சபை கூடிவிட்டால் பின்னர் நகராது. ஒரே ஆள் இரண்டு அல்லது மூன்று தேநீர் கூட குடிப்பார்கள். இளையராஜாவுக்கு ஒவ்வொரு டீக்கடைக்காரனும் ராயல்டி குடுக்கனும்யா என்று அரசன் வாரத்துக்கு ஒரு முறையாவது சொல்வார்.

எல்லோரும் ஒரே ஜாதி, ஒரே மதம்.... கேட்டால் இளையராஜாவின் மதத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்பார்கள். இளையராஜா இசை மதம் பிடித்தவர்கள் என்று அரசன் உரக்கச்சொல்வார். தொழில்நுட்பக்கல்வி படிக்கும்போது அவர்களுக்கு மிஞ்சிப்போனால் பதினாறு அல்லது பதினேழு வயது இருக்கலாம்.

செந்தில் அப்பொழுதே கவிதை என்று எதையாவது எழுதக்கூடியவன். சண்முகத்தின் கையெழுத்து,நீர் முத்துக்களைக் கோர்த்தது போல அழகாக, கோடுகளே இல்லாமல் வரிசையில் நிற்கும் ஒழுங்கான பள்ளிமாணவர்கள் போல, எழுத்துகள் பேனாவிலிருந்து தாளில் விழுந்து ஒளிரும். சிவப்பு நிறம், பச்சை நிறம், கருப்பு நிறம், நீல நிறம் என்று வண்ணத்துக்கு ஒரு பேனா வைத்துக்கொண்டு, தாளில் ஒரு கணித சூத்திரத்தைக் கூட கவிதை போல எழுதுவான்.

மீன்வளத்துறையில் வேலை பார்த்த செல்வம் பின்னர் குழுவில் இணைந்த மூத்த குடிமகன். அரசன் அவர்களில் சற்று வயது முதிர்ந்தவர் தோற்றம் இருக்கும். ஆகவே அந்தக்குழுவின் தலைவராக யாரும் அவரைத் தேர்வு செய்யாமல் அந்தப் பொறுப்பை அவருக்கு வழங்கிவிட்டார்கள். அரசன் சபை என்று அதற்கு பெயர் சூட்டியவன் செந்தில்தான் எஸ்பிபி போலவே குழைவான குரல் அவருக்கு.. கட்டை விரலையும், நடுவிரலையும் சிமிட்டினால் அப்படி ஒரு அழகான தாளம் போல அவருக்கு உருவாவது அவரது தனித்திறன். இளமையாக்கினார் கோயில் தெருவில் இருந்த மேன்ஷனில்தான் செந்தில் மற்றும் சண்முகத்துடன் பக்கத்து அறையில் செல்வமும் தங்கி இருந்தார். மேன்ஷனின் மொட்டை மாடிதான், இரவு நேரத்தில் இசைக்கருவிகள் இல்லாத கச்சேரி மேடை.

யாரும் வெட்கப்படாமல் உரக்கப்பாடுவார்கள் அலைகள் ஓய்வதில்லை படம் அவர்களை சிறுகச்சிறுக ராஜா தேநீர்க் கடைக்கு கொண்டு வந்து சேர்த்தாலும், சபை ஒருங்கிணைந்த பிறகு 1982 ஆம் வருடம் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம்தான் அவர்கள் கல்லூரி வாழ்வின் தேசியத் திரைப்படம்.

‘இளையநிலா பொழிகிறதே’ என்று இளையராஜா தன் கிதாரை ஒரு பக்கம் வாசித்து கொண்டிருக்கும் போது மகுடி வாசிப்பவனுக்கு கட்டுபட்ட நாகம் போல சுருண்டு கிடந்த சபை, அவர் இன்னொரு கையால் புல்லாங்குழலை வாசிக்கும் போது கஞ்சா அடித்த கும்பல் போல கிறங்கிக் கிடந்தது. எஸ்பிபியும், ஜானகியும் ஒவ்வொரு பாடலிலும் எழுந்திருக்க விடாமல் அவர்களை அமிழ்த்தி வைத்திருந்தனர். ராஜராஜன்தான் எல்லோருடைய சுவைக்கு ஏற்ப தேநீரா, காபியா, பாலா என மாஸ்டரிடம் ஆர்டர் செய்வான். மற்றவர்கள் எல்லாம் தேநீர் கட்சிக்கு வாக்களிக்கும் போது, பெரும்பாலும் அரசனும், செந்திலும், செல்வமும் காபிக்குதான் கை உயர்த்துவார்கள். தேநீர்க்கடைகளில் காபி எப்பொழுதும் சிறுபான்மைதான்.

மூன்றுமுறை சொன்னால்தான் உலகில் உள்ள அத்தனை மாஸ்டர்களும், காபித்தூள் டப்பாவில் கை வைப்பார்கள். பாய்லரை விட செந்தில் சற்றே சூடேறும் போதெல்லாம், செல்வம்தான் “டீ ஆர்டர் பண்ணினவனுக்கு எல்லாம் ரெண்டு பாட்டுதான்.. காபி ஆர்டர் பண்ணுனா ஆறு பாட்டு கன்ஃபார்ம்” என்பார் சிரித்துக்கொண்டே.. காத்திருப்பது எத்தனை சுகம் ராஜா பாட்டு துணை இருந்தால்.. சாலையோரம் சோலை ஒன்று மட்டும்தான் வாடியது அந்தக் கடையில். மற்றபடி உலகத் துயரங்களைச் சுமந்து வருபவர்களைக் கூட இளையராஜா தன் மடியில் சாய்த்து தேற்றிவிடுவார்.

செல்வம் எஸ்பிபியின் மகா ரசிகர். காபியையும் அதுபோலவே ரசித்து, ருசித்து மெல்ல குடிக்க வேண்டும் என்பார். மணியோசை கேட்டு எழுந்து பாடலுக்காக சிரமப்பட்டு இரும கற்றுக்கொண்டார். அந்த ஒரு பாட்டுக்காக காச நோயாளி கூட ஆகலான்டா... “எஸ்பிபியின் குரல் புராணத்தை ஒரு சப்ளாக்கட்டை இருந்தால் அடித்துக்கொண்டே ஊர், ஊராக பாடிக்கொண்டே அலையவும் தயார்” என்பார்.

“முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ... முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”

என்று பாடிக்கொண்டே செல்வம் சட்டென்று நிறுத்துவார். கொலைகார பாவி அழுதிடுமோங்கற வார்த்தையைப் பாடும்போது சிரிப்பார்டா அவரு.. என்று அந்த வரியை அதே போல் பாடிக் காண்பிப்பார். “காஃபி ஒரு விஷம்னா அதை குடிச்சிக்கிட்டே இறந்து போகலாம் தப்பில்லை” என்பார் அரசன். காஃபியின் வகைகளை ராஜாவின் பயணங்கள் முடிவதில்லை பாடல்களோடு, அரசன் ஒப்பிட்டு சிலாகிப்பார்.

கொஞ்சம் பால் தூக்கலா, டிகாஷன் கம்மியா மிதமான சூட்டுல குடிச்சா இளையநிலா பொழிகிறதே.. திக்கா டிக்காஷன் ஊற்றி, பால் கம்மியா செம சூடா குடிச்சா அடி ஆத்தா ஆத்தோரமா வாரியா.. பாலே இல்லாம வெறும் டிக்காஷன் அதுல அஞ்சு ட்ராப் தேன்விட்டு குடிச்சா மணியோசை கேட்டு எழுந்து, பால், டிக்காஷன் சம அளவுல மிதமான சூட்டுல மேல கொஞ்சம் நுரை, அதுக்கு மேல ரெண்டு சொட்டு டிக்காஷன் விட்டா தோகை இளமயில் ஆடிவருகுது.... லேசா சாக்லெட் தூள் போட்டு காபி கலக்கி குடிச்சா சாலையோரம் சோலை ஒன்று ..

“எப்ப மழை பெய்தாலும் ஆவி பறக்க ஒரு காஃபி சாப்பிடுவோமே அதுதான் ராக தீபம் கேட்கும் நேரம்” என்பான் சிவகுரு.. பழைய பாட்டு மாதிரி இப்ப வருதா என்ற டெம்ப்ளேட் வாசகத்தை சமீபத்தில் துறந்து, ரகசியமாய் இளையராஜா கட்சிக்குத் தாவியவன் சிவகுரு.

செல்வம் குறுக்கிடுவார் “உப்பு போட்ட காபி ஒண்ணு இருக்கு அரசா.. பாட்டைக் கேட்டுக்கிட்டே காபி குடிக்கும் போது.. கண்ணுல தண்ணி வரும்.. நம்மளை அறியாம காபியில நாலு சொட்டு கண்ணீர் அதுல விழும்.. வைகறையில் வைகைக் கரையில் பாட்டை கேக்கும்போது மட்டும்தான் அந்தக் காபி கிடைக்கும்.

எந்தக் கொம்பன் கடையிலேயும் அந்தப் பாட்டு இல்லாம அந்தக் காபியை போட முடியாது. எஸ்பிபி கொன்னு கொலை வாங்குவாரு அரசா..”

அந்த செல்வம்தான் இப்பொழுது படுத்தப்படுக்கையாக கிடப்பதாக கந்தன் பார்த்துவிட்டு வந்து சொன்னான். எல்லோருமாக போய் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று சொன்ன ஜோதி தன் கைப்பட வரைந்திருந்த செல்வத்தின் ஓவியத்தை தனது கைப்பையில் இருந்து எடுத்துக் காண்பித்தான். அவனுக்கு அந்தத் திறன் இருந்தது. அச்சு அசலாக செல்வத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது அவன் ஓவியம்.

கந்தன் அந்தப் படத்தை எடுத்துப் பார்த்துவிட்டு “இவரு இப்ப இப்படி இல்லைடா.. இது 82 ஆம் வருஷத்து செல்வம்.. இப்ப எலும்பும், தோலுமா கண்ணு எல்லாம் ஒடுங்கி... பாக்கவே பரிதாபமா..” என்றான துயரம் பொங்க அரசன் “வேண்டாம் கந்தா யாரும் போய் பாக்க வேண்டாம்... அந்த முகம்,, அந்த குரல்,,, அந்த விரலொலி எல்லாம் அப்படியே நம்ம மனசுல இருக்கட்டும்.. தீவிர வியாதிக்காரவங்களை.. அதுவும் வயோதிகத்துல தள்ளாம இருக்கறவங்களைப் போய் பார்க்கக் கூடாது.. நரகத்தை நேர்ல பாக்குற மாதிரி” “அவருக்கு மருந்தே இளையராஜாதான் அந்த டாக்டர்களுக்கு அதெல்லாம் தெரியுமான்னு தெரியலை

‘உன் நினைவே எனக்கோர் சுருதி

உன் கனவே எனக்கோர் கிருதி

உன் நினைவில் மனமே உருகி

வாடுதம்மா மலர் போல் கருகி

பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்

பாடல்கள் கோடி நான் படிப்பேன்

 அன்பே உனக்கே காத்திருப்பேன்

அப்படிங்கற வரிகளை மட்டும் எடிட் பண்ணி அனுப்பி வச்சா எந்திரிச்சு உக்காந்துருவாருடா” என்று துக்கம் பொங்க சொன்னான் அய்யப்பன்.

“ராஜா பாட்டை எல்லாம் ஒரு கேசட்டுல ரெக்கார்ட் பண்ணி அனுப்பலாம்” – பாபு

“இப்ப ஏதுடா கேசட்.. பிளேயர்? ஆளும் யோசனையும்” -பாலு

“இருக்கு நண்பா .. என் கிட்ட இன்னமும் இருக்கு. ஒரு காலத்துல சன் ரெக்கார்டிங் சென்டர் வெச்சிருந்தோம்லே.. ஒரு ஞாபகத்துக்காக கேசட், பிளேயர் எல்லாம் இருக்கு” என்றான் ஜோதி முகத்தில் சலனம் எதையும் காட்டாமல்..

“அட்றா சக்கை... அப்புறமென்ன எழுதுறா பாட்டை” என்று அரசன் எழுதத்தொடங்கினார். எல்லாம் எஸ்பிபி தனிப்பாடல்கள்..... ராஜா இசையில்.. “பெரிசு .. லிஸ்ட்ல ஒரு பாட்டை சேக்கனும்.. ஜேசுதாஸ் பாட்டு” என்றான் செந்தில் தயக்கமாக

“என்னது ஜேசுதாஸ் பாட்டா? செல்வத்துக்கா? எஸ்.பி.பி பாடுன பாட்டைத்தவிர வேற எதையும் அவரு அவ்வளவு ரசிச்சு கேக்க மாட்டாருடா” மணவாளன் ஒப்புக்கொள்ள முடியாமல் எழுந்தேவிட்டான்.

“ஆமாம்பா.. அது ஒரு ரகசிய ரசனை.. காஃபியில எத்தனை வகையை அரசன் சொன்னார்.. அவர் சொல்லாத ஒரு வகை ரகசியமா செல்வம் மைண்ட்ல இருந்துச்சு. 82 ஆம் வருஷம் பிப்ரவரி மாசம் பயணங்கள் முடிவதில்லையும் ரிலீஸ் ஆச்சு.. அதுக்கு முந்தின வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையும் ரிலீஸ் ஆச்சு.. ஒரு வாரம்தான் வித்தியாசம்..”

“ஆமா”

“வழக்கமா காஃபி குடிச்சா தூக்கம் வராது.. அதுக்குத்தான் காஃபி குடிக்கிறதே.. ஆனா டிகாஃபின் அப்படின்னு ஒரு காபி வெரைட்டி இருக்கு.. அதாவது காஃபியிலிருந்து தூக்கம் வராம பண்ற காஃபினை எடுத்துருவாங்க.. டிகாஃபின் காஃபி.. அதைக் குடிச்சா தூக்கம் வரும்.. ஆயிரமாயிரம் பாட்டு தங்கம் மாதிரி எஸ்பிபிக்கு குடுத்துட்டு, ஒரு கோகினூர் வைரத்தைத் தூக்கி ஜேசுதாஸ்கிட்ட குடுத்துட்டாருடா ராஜா.... அப்படின்னு செல்வம் அப்பப்ப என்கிட்ட சொல்லுவாரு”

“யாரு அந்த எஸ்பிபி வெறியரா?”

“ஆமா... அந்தப்பாட்டைக் கேட்டா.... அவரு மனசு நிச்சயம் அமைதியாகும். தூக்கம் வரலைன்னா.. துக்கம் தொண்டையை அடைச்சா.... அந்தப் பாட்டைத்தான் அவரு கேப்பாரு.. கும்பல்ல கேக்கப்படாதுடா....

ஏகாந்தமா கேக்கனும்பாரு”

“அப்படி என்னடா பாட்டு அது”

செந்தில் சொல்லவில்லை தன் மொபைலில் இருந்து ஒலிக்கச் செய்தான்.

“கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஒ ராரிரோ...
ராரிராரோ ஒ ராரிரோ”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram