ஆங்கிலச் சிறுகதை: டி. தம்பிமுத்து
தமிழாக்கம்: எழுத்துக்கினியவன், அனுஜா பிரகாஷ்
ஓவியம்: ரவி பேலட்
எலிஸத்தின் கருத்துக்கு அங்கே இடமில்லை. அவளுடைய விருப்பு
வெறுப்புகளோ, தன் வாழ்க்கையின் பாதையை அவளே நிர்ணயி்ப்பதற்கான முடிவுகளைப் பற்றிய யோசனையோ அவளுக்கு இருந்திருக்கலாம் என்று யாரும் எண்ணியதில்லை. அதையெல்லாம் பற்றி அவள் கொஞ்சமாவது யோசித்திருப்பாளோ தெரியாது. ஆனால் அவள் அப்படி யோசித்திருந்தாலும் அதை ஒரு கணத்துக்காகவேனும் அவர்கள் கருத்தில் கொண்டதுமில்லை.
நான் அப்போது ஒரு சிறுவன் மட்டும்தான். ஆனால் நான் வளர்ந்து என்ன தொழில் பார்க்கப் போகிறேன் என்று எல்லோரும் என்னை அடிக்கடி கேட்பார்கள். “டாக்டர்” அல்லது “என்ஜினியர்” என்று நான் பதில் சொன்னால் அவர்கள் சுவாரசியமாகக் கேட்பார்கள். அந்தச் சுதந்திரம் எனக்கு அளிக்கப்பட்டிருந்தது, எலிஸத்துக்கு அளிக்கப் படவில்லை. இந்தப் பாரபட்சம் எனக்குக் கொதிப்பேற்றியது.
எலிஸத்துக்கு என்னைவிட பத்து வயது அதிகமாயிருந்தாலும் நான் அவளை நன்றாகப் புரிந்திருந்தேன் என்று தான் நினைக்கிறேன். எங்களை விட்டு விலகிப் போக அவள் விருப்பப்படவில்லை என்பது எனக்கு நிச்சயம். ஆனால் அவளது இரண்டு அக்காமாருக்கும் அமைந்த விதி இப்போது அவளுக்கும் வாய்த்தது. அவளது திருமண நாள் காலையில் துயரம் அவள் முகத்தைக் கவ்வியிருந்தது. நீண்டு வளைந்த புருவங்களால் மெருகூட்டப் பட்ட அவளது பெரிய கண்கள் வழமை போலப் பளிச்சிட்டு மின்னவில்லை.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவள் இலங்கை வழக்கப்படி, ‘சாரம்’ எனப்படுகிற லுங்கியும் அதற்கு மேல் ஒரு எளிமையான ரவிக்கையும் தான் அணிந்திருப்பாள். ஆனால் அன்று வித்தியாசமாக ஒரு அழகான திருமணச் சேலை அணிந்திருந்தாள். காதிலிருந்து சிவப்புமாணிக்கம் போட்ட தங்கக் காதணிகள் தொங்கின. கைகளில் தங்க வளையல்கள் கலகலத்தன. கழுத்தில் பாரம்பரிய தங்க ஆபரணங்களாக ஒரு பதக்கம் வைத்த அட்டியலும், மூன்றுபட்டுத் தங்க மாலையும், தாலிக்கொடியும் துலங்கின. எனது அம்மாவால் சீதனமாக வழங்கப்பட்ட நகைகள் அவை. அவளது அக்காமார் போல எலிஸமும் எங்கள் கிராமத்திலேயே திருமணம் செய்திருந்தால் இதற்கும் மேலாக சீதனம் வழங்கப்பட்டிருக்கும். அவளது சகோதரிகளுக்குத் தாடித்தாத்தாவின் வளவில் குடிசைகளும் அத்தோடு ஒரு சிறிய காணித்துண்டில் விவசாயம் செய்யும் உரிமைகளும் கிடைத்தன. அந்த வளவு எங்கள் குடும்பத்தின் கையில் இருக்கும் வரை இந்த சீதனச் சலுகைகளும் நீடிப்பன.
ஆனால் எலிஸத்துக்கு அம்மாவிடமிருந்து ஆடைகளும் நகைகளும் மட்டுமே சீதனமாகக் கிடைத்தன. அவளையும் அவளது பிள்ளைகளையும் வைத்துப் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு மாப்பிள்ளையை அவளுக்கு அம்மா பார்த்து வைத்ததே பெரிய காரியம். திருமணச் சந்தையில் அவளது ‘சாக்கிளெட்’ நிறத்துக்குப் பெரிசாக மவுசு கிடையாது. ஆகவே ஒரு ஏழை விவசாயி மாப்பிள்ளை கிடைத்ததே அதிர்ஷ்டம் என்று அம்மா பெருமிதம் கொண்டாள். ஆனால் எலிஸத்துக்கு அதையிட்டு நன்றிக்கடன் இருந்ததாகத் தெரியவில்லை.
மாப்பிள்ளையைக் கண்ட கணத்திலிருந்தே எனக்கு அவன் மீது ஒரு மாதிரியான வெறுப்பு பிறந்து விட்டது. அவன் ‘சிவலை’ — அதாவது, மாநிறமானவன். எலிஸத்தை விட அவ்வளவு உயரங்கூட இல்லை. இலங்கைத் தராதரப் படி பார்த்தால் எலிஸம் உயரமான பெண் தான். திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த கந்தளாயில் அவனுக்கு ஒரு தோட்டக் காணி இருந்தது. அங்கிருந்து எலிஸத்தைப் பெண் பார்க்க ஒரு மாட்டு வண்டியில் வந்திருந்தான். எலிஸம் சமையல் அறையில் பதுங்கி இருந்து கொண்டு வெளியே வராமல் அடம் பிடித்ததைப் பார்த்த போது அவளுக்குத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என்று எனக்குப் புரிந்து விட்டது.
ஏதோ வீட்டு வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு எலிஸத்தை வெளியே வரச்சொல்லி அம்மா எத்தனையோ தடவை அழைத்துப் பார்த்தாள். ஆனால் தன்னைப் பெண் பார்க்கத் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று எலிஸம் ஊகித்து விட்டதால் வெளியே வர மறுத்து விட்டாள். அம்மா என்னை எலிஸத்தை அழைத்து வரும்படி சொன்னார். ஆனால் நான் அம்மா சொல்லித்தான் அழைக்கிறேன் என்றும் எலிஸத்துக்குப் புரிந்து விட்டது.
தேநீர் பரிமாறும் வேளை வந்த போது அவளது மைத்துனி சீதா தான் விருந்தினர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தாள். எலிஸம் சமையலறைக்குள்ளேயே ஒளித்திருந்தாள். அம்மாவின் எந்த விதமான பயமுறுத்தல்களாலும் அவளை மசிய வைக்க முடியவில்லை. ஆனால் அம்மாவுக்கு அது கோபமூட்டவில்லை. எலிஸத்தின் நாணம் அம்மாவுக்குப் பெரிய வேடிக்கையாக இருந்தது, ஏனென்றால் நாணம் ஒரு தமிழ் மணமகளுக்குத் தகுந்த குணம்தான். ஆனால் எலிஸம் வெளியே வர மறுத்ததற்கு நாணம் மட்டும் காரணமல்ல. அவளுக்குத் திருமணம் செய்வதற்கே பிடிக்கவில்லை. அவளுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை எங்களோடு தான் கழித்திருக்கிறாள்---அச்சுவேலியில், சிங்கப்பூரில், பிறகு மலாயாவில். ஆகவே எங்களோடு தொடர்ந்தும் இருக்கத்தான் அவள் விரும்பினாள்.
அந்த விவசாயி மணமகன் சமையலறைக்குள் எட்டிப் பார்த்திருக்கலாம். ஆனால் அது முறையல்ல. திருமணத்துக்கு முதல் மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமான ஒரு தேவையல்ல. பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட வழமையில் அது தற்செயலாகக் கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் இருக்கும்; ஆக மிஞ்சிப் போனால் ஒரு தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்செயலான சம்பவமாக இருக்கும். ஆனால் இந்த விவசாயி ஏதோ தன் சொந்த வீட்டில் இருப்பது போல ஆறுதலாக உட்கார்ந்து வெற்றிலைப்பாக்கு போட்டபடி பொறுமையுடன் காத்திருந்தான்.
எந்த சந்தர்ப்பத்தில் எலிஸம் வெளியே வந்தாள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. மரக்கறிக்காரனோ அல்லது எண்ணெய் வியாபாரியோ வந்ததால் அவள் சமையலறையை விட்டு வெளியே வந்திருக்கலாம். எப்படியோ விவசாயிக்கு அவளின் பெரிய முழு உருவம் சமையலறை வாயிலில் நிற்கும் காட்சியைக் காணும் பாக்கியம் கிடைத்ததால்—சமையலறை பிறிதாக இருந்த ஒரு கட்டடத்திலேயே இருந்தது—மனத் திருப்தியோடு தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டு விடை பெற்றான். செம்மையாக செதுக்கப் பட்ட அவளது நீள்வட்ட முகத்தை எல்லாம் கவனித்திருக்க மாட்டான்.
பிரியாவிடை
எலிஸத்துக்குத் திருமணம் நடந்தபோது அவள் தன் சிறுபிராயத்துக்குப் பிரியாவிடை கொடுத்தாள். அவளது சகோதரிகள், மைத்துனிகள் போலவே அவள் எங்கள் வீட்டுக்கு வந்து சேரும் போது அவளுக்கு வயது இரண்டோ மூன்று தான். அவளது பெற்றோரும் அவளது மைத்துனிகளின் பெற்றோரும் அச்சுவேலியில் தாடித்தாத்தாவின் வளவில் இருந்த குடிசைகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது பிள்ளைகள் தாடித்தாத்தாவிற்கோ அல்லது திருகோணமலையில் அவரது பிள்ளைகளுக்கோ வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதற்கு அனுப்பப் பட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது ஊதியம் கொடுக்கப் பட்டிருக்குமோ தெரியாது. அப்படியென்றாலும் அவர்களின் பெற்றோர்களுக்கே அது போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு வசதியான குடும்பத்தின் இல்லத்தில் வாழக்கூடிய வாய்ப்பும், பதினேழு அல்லது பதினெட்டு வயது வந்ததும் ஒரு சிறிய சீதனத்தோடு திருமணமும் நடத்தப்படும். அது அவர்களுக்கான எங்கள் குடும்பத்தின் கடமை.
எலிஸம் எங்களைப் பேர் சொல்லித்தான் அழைப்பாள். மற்ற வேலைக்காரர்களுக்கு இந்தச் சலுகை அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எங்களை மாதிரி அவளுக்குப் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவள்தான் எங்களை ஒவ்வொரு நாளும் பாடசாலை செல்வதற்குத் தயார்ப் படுத்தினாள். பாடசாலைக்கு கவனமாகக் கொண்டு போய்ச் சேர்த்தது மட்டுமல்லாமல் பிற்பகல் நான்கு மணிக்கே பாடசாலை வாயிலில் எங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லக் காத்திருப்பாள். காலையில் பாடசாலை இடைவேளை நேரத்தில் அவளோ அல்லது அவள் மைத்துனி சீதாவோ நாங்கள் அருந்துவதற்காக ஒரு குவளையில் பால் கொண்டு வருவார்கள்.
சனிக்கிழமையென்றால் எலிஸம்தான் எங்களுக்கு உடம்பெல்லாம் நல்லெண்ணெய் தேய்த்து விடுவாள். பிறகு நாங்கள் காலை வெயிலில் ஓரிரு மணி நேரம் ஓடி விளையாடிக் களைத்த பின்னர் குளிப்பாட்டி விடுவாள். அதற்காக எலுமிச்சம் பழத்தையும், சிகைக்காயையும், அரப்பையும் கலந்து அன்று காலை அவித்தெடுத்த கலவையை ஷாம்பூ போல எங்கள் தலைமுடியில் போட்டு, பிறகு அவித்த எலுமிச்சம் பழத்தால் தேய்த்துக் கழுவுவாள். இப்படிச் செய்வதால் எங்கள் தலைமுடிக்குக் கிடைக்கும் மென்மைக்கும் பிரகாசத்துக்கும் எந்த ஷாம்பூவாலும் போட்டி போட முடியாது. அவள்தான் திருகோணமலைத் துறைமுகத்துக்கோ அல்லது பல்வேறு கடற்கரைகளுக்கோ நாங்கள் செல்வதற்குத் தேவையான ஆயத்தங்களையெல்லாம் செய்து கொள்வாள். வருடத்துக்கு ஒரு முறை மடுவிலோ பாலையூற்றிலோ காட்டுக்குள் கூடாரமடித்துத் தங்கும் போது அவள் தான் எங்களோடு வெளியில் தீமூட்டத்துக்கு அருகில் தூங்குவாள். அவள் எங்கள் வழமையான சமையற்காரி அல்லவென்றாலும், வேட்டையிலிருந்து காட்டுப் பன்றி கொண்டு வரும்போது அவள்தான் அவற்றைப் பதப்படுத்துவாள். எப்போதும் அதிலே ஒரு பெரிய துண்டை எடுத்து எனக்காகத் தருவாள். உறவினர்களுக்கு அனுப்புவதற்கென்று பன்றி இறைச்சியைப் பொதிப் படுத்துவாள். மிஞ்சியிருப்பதை வற்றலாக்குவதற்காக வெயிலில் காய வைப்பாள். பறவை வேட்டைகளுக்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்ததும் அவள் தான் சமைப்பாள். பக்கத்து மாந்தோப்புகளில் கல்லால் எறிந்து விழுத்திய மாங்காய்களைக் கொண்டு வரும்போது, இரகசியமாக அம்மாவுக்குத் தெரியாமல் உப்பும் மிளகாய்த் தூளும் தடவித் தருவாள். அது அம்மாவால் தடை செய்யப்பட்டதென்றாலும் நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம்.
எலிஸம் எப்போதுமே எங்களுக்கு ஏதாவது இனிமையான ஆச்சரியங்களைத் தயார்ப்படுத்தி வைப்பாள். இரவு உணவான சோறு கறிக்குள் கை வைக்கும் போது சோற்றுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சுவையான உணவுகளைக் கண்டு பிடிப்போம்---முட்டை, கோழிக்கால், பொரித்த இறால், கணவாய் அல்லது மீன் முட்டை, சிறு நண்டுகள், பாகற்காய், பொரித்த காட்டுப் பன்றி இறைச்சி, தணலில் சுட்ட மீன், இலையில் சுற்றி வேக வைக்கப்பட்ட இறைச்சி, மென்மையான, கடித்து உண்ணக் கூடிய சுவை நிறைந்த எலும்புகளுடனான சின்னஞ்சிறிய காடைக் குஞ்சுகள், இப்படிப் பல.
கூழ் நாள்
கூழ் காய்ச்சுவதில் விற்பன்னர் என்றால் எங்கள் வீட்டிலேயே எலிஸம்தான். கூழ் என்பது சூப் வகையறாக்களில் தலைசிறந்தது. அதற்கு நிகராக மேலைத்தேய சூப்புகளில் எதுவுமில்லை. பிரஞ்சு நாட்டு சூப்பான ‘ப்ரொவென்ஸால் பூயாபெஸ்’ என்பதுதான் கிட்டத்தட்டவாவது கூழ் மாதிரி இருக்கும். கூழ் வட இலங்கையின் தனித்துவமான பிரதான உணவு வகைகளில் ஒன்று. எலிஸத்துக்கு கூழ் செய்வதற்கான கிராமத்து இரகசியங்கள் எல்லாம் அத்துப்படி.
எங்கள் குடும்பத்தில் கூழ் நாள் எப்போது வருமென்று காத்துக் கிடப்போம். ஏனென்றால் மற்ற உணவுகளைப் போலல்லாது கூழ் குடிக்கும் போது பெரிய பெரிய இறைச்சி அல்லது மரக்கறித் துண்டுகளோடு மல்லாடும் தேவை இருப்பதில்லை. கூழ் காய்ச்சுவதில் உள்ள எல்லா வழிமுறைகளையும் எலிஸமே மேற்பார்வை செய்வாள். மீன் தெரிந்தெடுத்து வாங்குவதில் இருந்து கூழ் குடிப்பது வரை. கூழ் நாள் என்றால் அது சமையலறையில் எலிஸத்தின் விசேடமான நாள். கூழின் நுணுக்கமான அணியமைப்பின் அடிப்படையானது, உலர வைத்த பனங்கிழங்கு ஒடியலை அரைத்துச் செய்த ஒடியல்மாப் பாணி. அதிலே சோற்றுப் பருக்கைகளும் பளிச்சென்ற சிவப்பு நட்சத்திரங்கள் போல செத்தல் மிளகாய்த் துண்டுகளும் மிதப்பன. கூழ் காய்ச்சுகிற குண்டானுக்குள் இன்னும் பலவிதமான சுவையான உணவு வகைகள் சேர்க்கப்படுவன: சிறிய மீன் மற்றும் நெத்தலிக் கருவாட்டுத் துண்டுகள், நடுத்தர அளவிலான சிவப்பு, நீல மீன் துண்டுகள், சிறிய நண்டுகள், நாலாக வெட்டப்பட்ட பெரிய நண்டுத் துண்டுகள், மீன் தலைகள், பலாக்கொட்டைகள், சிறிது சிறிதாக வெட்டப் பட்ட பச்சைப் பலாக்காய்த் துண்டுகள், பெரிய இரட்டை இறால்கள், கடிப்பதற்கு இதமாக இருக்கக்கூடிய கரடுமுரடான கொவ்வை இலைகள்.
திருகோணமலையில் நாங்கள் பீங்கான் கிண்ணங்களில் தான் கூழ் குடிப்போம். ஆனால் எலிஸம் அச்சுவேலியில் கூழ் பரிமாறுவது பலா இலையைக் கோதிச் செய்யப்பட்ட இயற்கையான ‘கிண்ணங்களில்.’ எலிஸம் கூழ்க் குண்டானின் பொறுப்பைத் தானே எடுத்துக் கொள்வாள். அவளது திரண்ட கருநீலக் கூந்தலைத் தலைக்குப் பின்னால் பெரிய கொண்டையாகப் போட்டுக் கொண்டு, தனது நீண்ட அழகான கரத்தில் ஏந்திய அகப்பையால் அள்ளிப் பரிமாறுவாள். எங்களது இரவு உணவை வழமையாக மேற்பார்வை செய்யும் அம்மா கூட கூழ்க் கொண்டாட்டத்தின் நிர்வாகத்தை எலிஸத்தின் கையிலேயே விட்டு விடுவாள்.
எங்கள் நகர்ப்புற வீட்டுக்கு எலிஸம் கொண்டு வந்த இன்னுமொரு கிராமத்து உணவு நடைமுறை, மெல்லிதான புளிக்கரைசலில் ஊற வைத்த பனங்கொட்டைகளின் சாறு. கைகால்களில் எல்லாம் வழிந்தோடாமல் பனஞ்சாறு சாப்பிடுவது என்பது இலகுவான காரியமல்ல. ஆனால் அதன் ருசியோ நிகரில்லாதது. கிராமத்து ஏழைகளுக்கு இது ஒருவேளைக்குப் போதுமான உணவு. நாங்கள் சாரணர் குழாத்தோடு நடைப்பயணங்கள் போகும்போது எலிஸம்தான் எங்களுக்குக் கட்டுச்சோறு பொதிகள் செய்து தருவாள். அவித்த முட்டை, இறைச்சி, மீன் வகையறாக்கள் சோற்றோடு சேர்க்கப்பட்டு வாழையிலையில் சுற்றப் பட்டிருக்கும். வாழையிலைப் பொதிகளை பனையோலை ஈர்க்குகளால் குத்தி இறுக்கமாக மூடிய பிறகு, ஓர் ஓலைப் பெட்டிக்குக்குள் பொதிகளை வைத்துத் தருவாள். உணவின் வெப்பத்தில் வாழையிலை மெதுவாகக் காயும் போது அதன் வாசனை உணவெங்கும் ஊடுருவி அதன் சுவையை நேர்த்தியாக மெருகேற்றும். எலிஸத்தின் பழஞ்சோறு என்றாலும் எங்களுக்கு அளவு கடந்த விருப்பம். இரவு மிஞ்சியிருக்கும் சோற்றைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் இறால் அல்லது ஆமை இறைச்சி போன்ற ஏதாவது சுவையான கறிகளோடு சேர்த்துக் குழைத்துப் பந்துகளாகப் பிடித்துத் தருவாள். பழஞ்சோறு சாப்பிடுவதற்குச் சரியான முறை அந்தப் பந்துகளை வலக்கையில் ஏந்திய ஒரு வாழையிலைத் துண்டின் மேல் வாங்கிக் கொள்வது தான்.
அதற்குப் பிறகு எலிஸத்தின் பச்சடிகள்! அவளும் அவளது மைத்துனி சீதாவும் சேர்ந்து அச்சுவேலியின் எல்லா விதமான பச்சடிகளையும் எங்களுக்காகத் தயாரித்தார்கள்: வாழைக்காய்ப் பச்சடி, கத்தரிக்காய்ப் பச்சடி, கருவாட்டுப் பச்சடி, இறால் பச்சடி. இவையெல்லாம் தணலில் வேக வைத்துச் செய்யப்படுவன. இஞ்சிப் பச்சடி, வேப்பம்பூப் பச்சடி, தாமரைக் கிழங்குப் பச்சடி, வாழைப்பூப் பச்சடி (அவற்றின் ஊதா நிற உறையோடு), செம்பரத்தம்பூப் பச்சடி, வாழைத்தண்டுப் பச்சடி, பருப்புக்கீரைப் பச்சடி, பிரண்டைத்தண்டுப் பச்சடி, வேறு உண்ணத்தகுந்த களைத் தாவரங்களின் இலைகளில் செய்த பச்சடி, இப்படி பச்சடி வகையறாக்களுக்கு முடிவே இல்லை!
கொண்டாட்டம்
இவையெல்லாம் முடியும் தருணம் இப்போது வந்துவிட்டது. தாடித்தாத்தா வீட்டிலிருந்து எலிஸத்தின் தங்கை இன்னேசு எங்கள் வீட்டில் எலிஸத்தின் இடத்தைப் பொறுப்பேற்க வந்திருக்கிறாள். ஆனால் எலிஸம் இல்லாமல் எல்லாம் முன்பு இருந்தது போல் ஒருபோதுமே இருக்காது. கிராமத்திலிருந்து வந்திருந்த எலிஸத்தின் அப்பா கும்மாள குடி போதையில் திருமண விருந்தினரோடு ஒரே வேடிக்கையாக இருந்தார். ஆனால் எலிஸத்தின் தாய் மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். எலிஸமும் அழத் தொடங்கி விடுவாள் போல இருந்தது. அவள் இப்போது ஒரு மனைவி. இது அவளின் பிரியாவிடைக் கொண்டாட்டம், ஆனால் அவள் மனக்கலவரத்தோடு இருப்பது போலத் தென்பட்டது.
இலங்கைத் திருமணக் கொண்டாட்டங்களின் வழமையான நடைமுறை போலவே, ஆண்கள் வரவேற்பறையில் இருக்க பெண்கள் வீட்டின் வேறொரு அறையில் இருந்தார்கள். நான் எட்டு வயது சிறுவன் என்பதால் இரண்டு அறைகளுக்கும் விரும்பியபடி போய் வரும் சுதந்திரம் எனக்கு இருந்தது. மது அருந்தும் ஆண்கள் ஒரு மூலையில் மறைவாக வைக்கப்பட்டிருந்த மதுபான அலமாரிக்கு அடிக்கடி போய் வந்தார்கள். இதுவும் ஒரு வகையான பாரம்பரியம் தான்: மறைவாக மது அருந்துவது மற்றவர்களது மனதைப் புண்படுத்தக் கூடாது என்கிற ஒரு மரியாதைக்காகத் தான்.
முழு வீட்டிலும் யாழ்ப்பாணத்துக் கறுப்புச் சுருட்டு நாற்றம் மூக்கைத் துளைத்தது. விருந்தினர்களில் பலர் வடக்கிலிருந்து வந்த புகைபிடிக்கும் பழக்கத்துக்கு வடிகட்டின அடிமையாகி விட்டவர்கள். எலிஸத்தின் தாயும் அப்படிப் பட்டவள்தான். தானே சுருட்டிய புகையிலையை ஒரு களிமண் குழாய்க்குள் போட்டு புகைப்பாள். மது அருந்தாத விருந்தினர்களும் அங்கங்கே தட்டுகளில் நிறைக்கப் பட்டிருந்த, மதுபானத்தோடு சுவைக்கும் சிற்றுண்டி வகைகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் தாகத்தைத் தீர்க்க எலுமிச்சம்பழச் சாறு, சோடாத்தண்ணீர் என்பவற்றை அருந்திக் கொண்டிருந்தார்கள்.
எலிஸம் வீட்டை விட்டுப் புறப்படும் நேரம் அண்மித்துக் கொண்டிருந்தது. எனது அம்மா, திருமணத்தின் பின் ஒரு பாரம்பரிய குடும்பப் பொக்கிஷமாகப் பேணப்படக்கூடிய எலிஸத்தின் கூறைப் புடவையை பித்தளைத் தட்டொன்றில் ஏந்தி வலம் வந்து, ஒவ்வொரு விருந்தினரின் ஆசீர்வாதங்களுக்காக அவர்களுக்கு முன்னே தட்டை நீட்ட, அவர்களும் கூறைப் புடவையை வலக்கையால் தொட்டு ஆசிர்வதித்தார்கள்.
என் முறை வந்ததும் நான் அந்தப் புடவையைத் தொட்டுவிட்டு, படிக்கும் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த எனது மேசையைத் திறந்தேன். ஒரு கடதாசித் துண்டை எடுத்து தமிழில் இவ்வாறு எழுதினேன்: “அன்புமிக்க எலிஸம். விரைவில் எங்களைப் பார்ப்பதற்காகத் திரும்பி வா.- — துரைராஜா.” அம்மாவின் அறையில் மேசையின் மேல்பித்தளைத் தட்டில் எலிஸத்தின் கூறைப் புடவை இருந்தது. தையல் பெட்டியிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்து, என்னுடைய கடதாசித் துண்டை கூறைப் புடவையின் உள் மடிப்புகளில் ஒன்றில் குத்தினேன். அடுத்த முறை இந்தப் புடவையை எலிஸம் எடுக்கும் போது எனது கடிதத்தைக் காண்பாள்.
இரண்டு எருதுகள் இழுக்கும் தன் வண்டிலை மாப்பிள்ளை எங்கள் வீட்டு வாசலுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான். மற்றப் பெண்களோடு வெளியே வந்த எலிஸம் வண்டிலின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளது கண்கள் பனித்திருந்தன.
மாப்பிள்ளை தனது சவுக்கைச் சொடுக்க, வண்டில் எங்கள் ரோஜா நிற மணற் பாதையில் ஊர்ந்து முன்னேறிச் செல்லஆரம்பித்தது. சூரியன் அந்தப் பாதையில் தங்க நாணயங்கள் போலப் படர்ந்து கிடந்தது. நான் என் சகோதரர்களோடும், பக்கத்து வீட்டு வாம்பீக் குடும்பப் பையன்களோடும் முதலாவது சந்தி வரைக்கும் வண்டிலுக்குப் பின்னால் ஓடிப் போனோம். வண்டிலின் தென்னோலைக் கூரைக்கூடாக எலிஸம் எங்களைக் கடைசி முறையாக ஒருமுறை திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தோம். அவள் கை உயர்த்திக் காட்டவில்லை.
எலிஸத்தின் திருமணக் கொண்டாட்டங்களில் சீனப் பட்டாசு கொளுத்தினோமா என்று எனக்கு ஞாபகமே இல்லை. கொளுத்தி இருக்கலாம்.
அன்று பிற்பகல் நான் மதிய உணவு சாப்பிட மறுத்து விட்டு ஒரு புத்தகத்தோடு சுருண்டு படுத்திருப்பேன் என நினைக்கிறேன். எனக்கு முரணான விஷயமென்றால் இப்படியான ஒரு பகிஷ்கரிப்பு செய்வது எனது வழக்கம். எனது விருப்பப்படி நடப்பதற்கு அது என் சார்பாக ஒரு கடைசி உந்துதல் முயற்சி. அப்படிச் செய்வது ஏதோ விதத்தில் என் மனதைக் கொஞ்சம் தேற்றியது. அநேகமாக அதனால் பலனும் கிடைத்தது. எலிஸத்தின் திருமண நாளன்று நான் இப்படிச் செய்திருந்தால் நிச்சயமாக அதன் காரணம் எனது மனவருத்தமே தவிர வேறெதுவுமில்லை; எங்கள் நாய் லட்சுமி இறந்த நாளன்றும் இப்படித் தான செய்தேன்.
மீள் விஜயம்
அடுத்த ஞாயிற்றுக்கிழமை, எலிஸத்தின் திருமணம் முடிந்த இரண்டாவது நாள், நடுப்பகல் அளவில் எங்கள் முற்றத்தில் மாட்டு வண்டிச் சில்லுகள் மணலை அரைக்கும் சத்தம் கேட்டது. யார் வருகிறார்கள் என்று பார்க்க நான் முன்கதவைத் திறந்த போது எலிஸம் ஓடி வந்து என்னை அள்ளிக் கட்டியணைத்து முத்தமிட்டாள். அதற்கு முன்னர் அவள் அப்படி ஒரு நாளுமே செய்ததில்லை. வண்டிலினருகே அவளது கணவன் கொஞ்சம் அசடு வழியச் சிரித்தபடி நின்றான்.
எலிஸம் திரும்ப வந்திருக்கிறாள் என்ற செய்தி பரவியதும் வீடு அமர்க்களப்பட்டது. எல்லோரும் எலிஸத்தைச் சுற்றி முண்டியடித்துக் கொண்டு நின்றோம். அவள் தங்கை இன்னேசு வாயெல்லாம் பல்லாக களிப்போடு நின்றாள். அம்மா ஒன்றும் புரியாமல் எலிஸத்தின் கணவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.
எலிஸம் தேவாலயத்துக்கு முதன்முறையாகப் போவதற்காகக் கூறைச்சேலையை உடுக்க ஆரம்பித்த போது எனது கடிதத்தைக் கண்டு பிடித்தாளாம். அழுகையை அடக்க மாட்டாமல் ஒப்பாரி வைத்தாளாம். ஆற்ற முடியாமல், உடனே திருகோணமலைக்குத் திரும்ப வேண்டும் என்று அடம் பிடித்தாளாம். ஆக, வேறு வழியில்லாமல் அவளது கணவன் தனது மாட்டு வண்டியில் அவளை இருபது மைல் ஓட்டி வந்தானாம். இப்படித்தான் அவளை நாங்கள் கூறைப் புடவையில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. கண்கொள்ளாத கொள்ளை அழகாக இருந்தாள்.
அன்றைய தினத்தை எங்களோடு கழித்த பிறகு, அடிக்கடி திரும்பி வருவேன் என்று வாக்களித்தாள். சொன்ன மாதிரியே அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போனாள். கி.பி. 601 இல், இரண்டாவது அக்கபோதி மன்னனால் கட்டப்பட்ட கந்தளாய்க் குளத்துக்கு அருகில்தான் அவள் வீடு இருந்தது. அங்கும் எங்களை ஒருமுறை அழைத்துச் சென்றார்கள். அந்தக் குளம் நிறைய முதலைகள். கடவுளால் படைக்கப்பட்ட அத்தனை பறவைகளும் கந்தளாயில் இருந்தன போலும்: கிளுவைப் பறவைகள், நீர்க் காகங்கள், பாம்புத் தாராக்கள், ஆலாப் பறவைக் கூட்டங்கள், விசிறிவால் உள்ளான்கள், ஈப்பிடிப்பான்கள், பூநாரைகள், காட்டு வாத்துகள், நீர்க்கோழிகள், மின்சிட்டுகள், மயில்கள், பலநிறங்கொண்ட காட்டுக் கோழிகள், ஒற்றையாகத் தனித்து நிற்கும் கூழைக்கடா, தேன்சிட்டுகள், தையல் சிட்டுகள், தங்க மாங்குயில்கள், பனங்காடைகள், அண்டங்காக்கைகள், செண்பகங்கள், பெரியதும் சிறியதுமாய்ப் பருந்துகள், பஞ்சுருட்டான்கள், சிறுநீல மீன்கொத்தி, பெரிய மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, தடித்த அலகு மீன்கொத்தி, போன்ற சகல விதமான மீன்கொத்தி வலையறாக்கள். உண்மையாகவே அது ஒரு காந்தர்ய வாழ்விடம் தான்.
அன்று தன் ஓலைக் கொட்டிலில் எலிஸம் எங்களுக்கு அவளது பேர்போன கூழ் காய்ச்சித் தந்தாள், தன் வளவிலிருந்த மரத்திலிருந்து கிடைத்த பலாக்காயும், பாத்தியிலிருந்தெடுத்த பனங்கிழங்கும் போட்டுத் தன் வயலிலிருந்து அறுவடை செய்த நெல்லரிசிச் சோறும் சேர்த்துச் செய்தாள். ஆனால் அது தான் எலிஸத்திடம் இருந்து எங்களுக்குக் கிடைக்கும் கடைசிக் கூழ் என்று அப்போது தெரியவில்லை. அது நடந்து கொஞ்ச நாளிலேயே எலிஸம் பிரசவத்தின் போது இறந்து விட்டாள்.
எலிஸத்தின் தங்கை, அசப்பில் பார்த்தால் எலிஸத்தைப் போலவே இருப்பாள். காலப் போக்கில் அவள் எங்களுக்கு மிகவும் பிரியமானவள் ஆனாள். எலிஸத்தில் வைத்து இருந்த பாசத்தைப் போலவே இன்று அவளிலும் வைத்துள்ளோம். அவளுக்கும் பதினெட்டு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் அது நடக்கும் போது நாங்களும் பெரியவர்களாகி விட்டோம். ஆகவே திருமணத்தை ஒரு கொண்டாட்டமாகவே ரசிக்கும் பருவமும் பக்குவமும் எங்களுக்கு வந்து விட்டது.
இன்னேசுவின் திருமணக் கொண்டாட்டத்தில் சீன வெடி கொளுத்தினோம் என்பது மட்டும் தெளிவாக நினைவிருக்கிறது.
‘The Reporter’ என்கிற அமெரிக்கச் சஞ்சிகையில் 1954ஆம் ஆண்டில் வெளிவந்த, டி. தம்பிமுத்துவின் “Elizam—a reminiscence of Childhood in Ceylon” கதையின் தமிழாக்கம். தமிழாக்கியவர்கள்: எழுத்துக்கினியவன், அனுஜா பிரகாஷ்