பிரியத்துக்குரிய ரோஜா,
பனி ஒரு வெண்முத்து போல ரோஜாவின் இதழ் மீது பூத்திருப்பதைக் காணும்போதெல்லாம் உன் நினைவு வந்துவிடுகிறது. கூடவே உனக்கு மிகப்பிடித்த பாடலின் வரிகள் என்னையறியாமல் என் உதடுகளின் மீது ஊர்கின்றன. உன்னை எல்லோரும் மீனா என்று அழைத்தாலும் எனக்கு எப்பொழுதும் நீ ரோஜாதான். உன்னை முதன்முதலாக பார்த்தபொழுது ஒற்றை ரோஜாவை கூந்தலின் பக்கவாட்டில் ஒரு பறவையின் சிறகு போல செருகி இருந்தாய். அன்றிலிருந்து நீ எனக்கு ரோஜாதான். ஒருமுறை ஓ வசந்த ராஜா பாடல் காட்சியை படம் பிடித்த கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்று எங்கெல்லாம் அர்ச்சனா நடனமாடினாரோ அங்கெல்லாம் உன்னை நிற்கவைத்து, அபிநயிக்க வைத்து புகைப்படங்கள் எடுத்தது அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
ராஜா அங்குதான் இருக்கிறார். ஆனால் அவரது சேனை இங்கு சிக்கிம் வரை வந்து சோம்கோ ஏரியின் மீது நடனமாடுகிறது. சோம்கோ என்றால் முதன்மை ஏரி என்று சிக்கிமீஸ் மொழியில் அர்த்தமாம். தலைக்காவிரி என்று சொல்வோமே அது மாதிரி. என் கையில் இருக்கும் திறன்பேசியும், வாக்கி டாக்கியும்தான் இங்கு எனக்குத் துணை. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் சக வீரர்கள், என்னைப்போலவே சற்று இடைவெளிவிட்டு வாக்கி டாக்கியுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
ஹர ஹர மகாதேவா ... பம் பம் போலே ஓம் நமச்சிவாய போன்ற சரண கோஷங்கள் ஒலிக்க பக்தர்கள் கூட்டம் என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்பா எனக்குச் சொல்வார் பனி பொழியும் அதிகாலை வேளையில் நமச்சிவாயா என்று சொல்லிப்பார் அத்தனைப் பரவசமாக இருக்கும் என்று.
“ செல்வக்குமார் அருணாச்சலம் .. செல்வக்குமார் அருணாச்சலம்”
“ரெஸ்பான்டிங் சார்’
“ரோல் கால்.. எவரிதிங் நார்மல்?”
“ரொட்டீன் சார்.. நார்மல் சார்”
வழக்கமான கன்ட்ரோல் ரூம் அழைப்புதான். இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதி முடிப்பதற்குள் இன்னும் எத்தனை இடையீடுகள் வருமோ தெரியாது. இந்த ஸ்மார்ட் போன் ஒரு டேப் ரிக்கார்டர் மாதிரிதான் இங்கே. பெரும்பாலான நேரம் இங்கு இணையம் கிடைக்காது. பல நேரம் சேமித்து வைத்திருக்கும் பாடல்களை திரும்பத் திரும்ப கேட்க வேண்டியதுதான். அதனால்தான் எங்கள் படையின் அதிகாரிகள் ஸ்மார்ட் ஃபோனை நம்புவதில்லை. எல்லோருக்கும் வாக்கி டாக்கிதான் தொடர்புகொள்ள நம்பகமானது.
சுற்றிலும் தெரியும் மலை, பச்சை அழகி மாதிரி ஒய்யாரமாகப் படுத்திருந்தது. அதன் மேல் ரோடென்ட்ரன் இளஞ்சிவப்பு மலர்கள் இடைவெளியில்லாமல் பூத்திருந்தன. அதிகாலையில் அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நீதான் இரவோடு இரவாக இங்கு வந்து சாய்ந்து அமர்ந்திருக்கிறாயோ என்று தோன்றும். ரோடென்ட்ரன் என்றால் ரோஜா மரம் என்று பொருள். செடியில் பூத்திருந்தாலே ரோஜா ஒரு குழந்தை மாதிரி சிரித்துக் கொண்டிருக்கும். ரோஜாமரம் என்றால் கேக்கவே வேண்டாம் மழலையர் பள்ளி போல அத்தனை அழகு....
“சார் நீங்க தமிழா?” என்ற குரல் கேட்டு கடிதத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்தேன்
“ஆமா நீங்க எங்கேர்ந்து வர்றீங்க?”
“தஞ்சாவூர்” நெற்றி நிறைய திருநீறு. கழுத்தில் கனமான ருத்திராட்ச மாலை. குளிருக்கு கம்பளி. மேலுடையும் குல்லாவுமாக ஒரு குழு எனக்கு முன் நின்றிருந்தது. நான் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு அவர்களிடம் உரையாடத் தயாரானேன்.
“இங்கிருந்து நாதுல்லா பாஸ் எவ்வளவு தூரம் சார்?”
“ஒரு பதினஞ்சு கி.மீட்டர் இருக்கும் அவ்வளவுதான் ஒரு இருபது நிமிஷத்துல போயிடலாம்”
“பக்கத்துல டீ கடை இருக்குமா சார்?”
“நீங்க நாதுல்லா பாஸ் போயிடுங்க. அங்கேயே ஆல்பைன் கஃபே அப்படின்னு ஒரு சின்ன ரெஸ்ட்டாரண்ட் உண்டு. காபி, டீ, மோமோஸ் எல்லாம் கிடைக்கும்”
“மோமோஸ்னா?” கூட்டத்தில் ஒருவர் இன்னொருவரைக் கேட்டார்.
“கொழுக்கட்டை அண்ணா” என்றார் மற்றவர்.
“கொழுக்கட்டை இந்த ஊர்ல ஒரு சாப்பாடாய்யா? என்னய்யா இது?”
“விண்டர் சீசன்ல இங்க மழை மாதிரி பனி பொழிஞ்சு, மணல் மாதிரி குவிஞ்சு, மலை மாதிரி உறைஞ்சு நிக்கும்.. அவ்வளவையும் ஜேசிபி வச்சு தள்ளி, அள்ளி க்ளியர் பண்ணுவாங்க. அப்பல்லாம் இங்க கடை ரெண்டு மணி நேரம் கூட இருக்காது. பிரெட் வெச்சிருந்தா கல்லு மாதிரி ஆயிடும். சமயத்துல தக்காளி, கூழாங்கல் மாதிரி ஆயிடும். உருட்டி விளையாடுவோம். அந்த லட்சணத்துல இருக்கும். இப்ப வயித்துக்கு ஏதோ கிடைக்குதே அதை நினைச்சு சந்தோஷப்படுங்க சார்” என்றேன் நான்.
“நம்மாளுகளுக்கு வாய் ஜாஸ்தி எங்க போனாலும் திங்கறதையும், முனங்கறதையும் விடமாட்டாங்க” என்றார் வழிகேட்டவர். எல்லோரும் சிரித்தபடி அவர்கள் வந்த வண்டியில் கிளம்பினர்.
நான் மறுபடியும் உனக்காக கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
எல்லோரும் கயிலாய யாத்திரைக்கு செல்பவர்கள். ஒரு பகுதியினர் இங்கே சிக்கிம் வந்து நாதுல்லா கணவாய் வழியாக செல்வார்கள். இன்னொரு பிரிவினர் உத்தரகாண்ட் சென்று அங்கிருந்து லேபுலேக் கணவாய் வழியாகச் செல்வார்கள். சிக்கிம் வழியாக செல்பவர்களுக்கு ITBS பிரிவில் பணியாற்றும் நாங்கள்தான் வழிகாட்டி..... பாதுகாப்பு எல்லாம்..... குளிர்காலத்தில் -20 டிகிரி வரை கூட செல்லும் இடம் இது. நாங்கள் இங்கு எப்படி குளிரில், பனிக்காற்றில் எப்படி விரைத்து நிற்போம் என்பதை உனக்கு வீடியோ அனுப்புகிறேன். இது எனக்கு சிரமமில்லை மீனா. நான் விரும்பி ஏற்ற பணி. பனி உங்களுக்கு கொடுமையாக இல்லையா என்று போன கடிதத்தில் கேட்டிருந்தாய்.
பனி மழை விழும்
பருவக்குயில் எழும்
சில்லென்ற காற்றாட
சேர்ந்த மனம்தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
பாடலை ஒரு பனி பொழியும் இதே போன்றதொரு இரவொன்றில் உன் மடியில் படுத்தபடியே இருவரும் கேட்டுக்கொண்டே நீண்ட இரவை விழித்தபடியே கடந்ததை நினைத்துக்கொள்வேன். இந்தப் பாடல் தொடங்கும் போது, ராஜா ப்ரீ லூட்டில் மணியோசை ஒன்றை தந்திருப்பார். இங்கிருக்கும் புத்த ஆலயங்களில் அதே போல மணியோசை கேட்கும்போது எல்லாம் அந்தப் பாடலும், அந்த இரவும் நினைவுக்கு வரும். கூடவே ஒரு புல்லாங்குழலொலி இங்கும், அங்குமாக என்னை அலைக்கழிக்கும். பண்ணைப்புரத்தில் பிறந்த ராஜா எப்படி சிக்கிம் எல்லை வரை தனது கரங்களை நீட்டி என் தலையை வருடி மடியில் சாய்த்து உன்னிடம் அழைத்துச் செல்கிறார்?. தீபன் சக்ரவர்த்தியின் தாபம் மிகுந்த குரல் என்னுள் அப்படியே புதைந்து கிடக்கிறது.
ஓய்வு நேரத்தில் ஒவ்வொரு இடமாகத் தேடிச்செல்கிறேன். இங்குதான் பனிப்பொழிவு அதிகமாகி, நிலம் சரிந்து யாத்ரீகர்கள் பலரை விழுங்கி இருந்தது என்று சொன்னார்கள். பனித்துகள் ஒவ்வொன்றையும் கையிலெடுத்து நுகர்ந்து பார்க்கிறேன். என் அப்பாவின் வாசம் தெரிகிறதா என்று..
உன்னிடமிருந்து காணொளி அழைப்பு வந்துவிட்டது. இணையத்தொடர்பு அதிசயமாக கிடைத்திருக்கிறது. “ஹலோ ரோஜா..”
“மீனா”
“சரி, மீனா”
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கே”
“உனக்குத்தான் லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
“சரியான லூசுய்யா நீ.... நாமதான் இப்ப வீடியோகால்ல பேசமுடியுதே அப்புறம் எதுக்கு லெட்டர்?”
“பல சமயம் உன் கண்ணைப் பார்த்து பேசமுடியறதில்லே... பல சமயம் இங்க இன்டர்நெட் கிடைக்குறது இல்லை. எல்லாத்தையுமா சொல்லிட முடியுது? போனை வச்ச பிறகு ‘சே’ இதை சொல்லாம விட்டுட்டோமே அப்படின்னு எத்தனையோ தடவை தலையில அடிச்சிட்டு இருக்கேன். அதுவுமில்லாம் லெட்டரை நினைச்சப்ப எல்லாம் எடுத்து, எடுத்து பாத்துக்கலாம். நீ ரொம்ப வருஷத்துக்கு முன்னால எழுதுன லெட்டரை பத்திரமா அப்படியே வச்சிருக்கேன். அப்பா வாங்கிக்கொடுத்த ட்ரெஸ் மாதிரி அப்பப்ப எடுத்து பாத்துக்குவேன்”
“அப்பாவைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?”
“இல்லை கிடைக்கலை. கிடைக்காதுன்னு தெரியும். அவர் கைலாய யாத்திரைக்கு வந்தப்ப பனிச்சரிவுல சிக்கி இறந்து போனவங்க இருநூறுக்கும் மேலே. சரியான கணக்கு கூட இல்லை. ஒருவேளை இதான் உங்க அப்பா அப்படின்னு ஏதாவது ஒரு பாடியைக் காட்டினா, அவர் எங்கேயோ இருக்காரு அப்படிங்கிற நம்பிக்கை சுக்கு நூறாயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு”
“நல்லா இருக்கு உன் கதை.. நீ அந்த எல்லைப் படைக்கு போய் சேர்ந்தே தீருவேன் போனதே, எப்படியாவது உங்க அப்பாவைத் தேடிக் கண்டுபிடிச்சிடலாம்னுதான்”
“ஆமா... கிடைக்கலன்னா ஒரு சமாதானம் வேணுமில்லே.. இதோ பேட்ரோல் வண்டி வருது. லைனைக் கட் பண்ணிடாதே மீனா. அப்புறம் கிடைக்காது. பத்து நிமிஷம் கழிச்சுப் பேசறேன்.”
“குட்மார்னிங் அரசன் சார்”
“வெரி குட்மார்னிங் செல்வா.. மதியம் ஒரு குரூப் வருது. அவங்க சவுத் இந்தியன் குரூப்தான். அவங்க கூட நாதுல்லா பாஸ் போயி அங்கிருந்து, அவங்க நடந்து போறதுக்கு கைட் பண்ணனும். டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் நீங்களே ஒருதரம் செக் பண்ணிடுங்க. அப்புறம் அங்க போய் பிரச்சினை ஆயிடும்”
“ஒகே சார்”
“வர்றவங்க எல்லோரையும் சிவஹிமாலயா ட்ராவல்ஸ் கம்பெனி ஆளுங்கதான் கூட்டிட்டு வர்றாங்க. அவங்கதான் உங்க அப்பா வந்த டீமையும் கூட்டிட்டு வந்தது.. உனக்கு உபயோகமா தகவல் கூட கிடைக்கலாம்.... நான் உன்கிட்ட வந்தா ஒரு பாட்டு கேக்கலாம்னு நினைச்சேன்”
“சார் லைன்ல இருக்கிறது என்னோட ஆளு... கட் பண்ணினா நெட் கிடைக்காது.”
“கட் பண்ணினா உங்க ஆள் கிட்டேர்ந்து கருணையும் கிடைக்காது. சல்லி சல்லியா பேர்த்துடுவாங்க.. அப்புறம் மத்த கான்ஸ்டபிள் முன்னால பேர் சொல்லி கூப்பிடாதே என் கிட்டேர்ந்தும் கருணை கிடைக்காது” சிரித்துக்கொண்டே சொன்னார் அரசன்.
“அப்படியே சின்ன வயசிலேர்ந்து பழகிட்டோம். சாரி சார்..... ட்ரை பண்றேன். தேங்க் யூ சார்” வண்டி கிளம்பிவிட்டது
“அவங்க கிளம்பிட்டாங்க நீ சொல்லு மீனா”
“ஒரு பாட்டு பாடு செல்வா”
“இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை..
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை”
மீனா அந்தப்பக்கம் தொடர்ந்தாள்.
“மௌனமே சம்மதமென்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
“அவலாஞ்ச் நீ பாத்திருக்கியா மீனா?”
“ஊட்டி பக்கத்துல இருக்கே அந்த ஊரா?’
“மண்டு அது அவலாஞ்சி நான் சொல்றது பனிச்சரிவு. குளிர் காலத்துல இங்க அடிக்கடி நடக்கும். அப்பா யாத்திரை வந்தது குளிர் காலம் இல்லைதான். ஆனாலும் அவர் வந்தப்ப பனிமலை உருகி கட்டி கட்டியா சரிஞ்சிடுச்சு. பஞ்சுப்பொதிதான் இலேசானதுதான் ஆனாலும் மூக்குக்குள்ள திணிச்சா எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆயிருக்கும் அன்னிக்கு. நான் இங்க வந்த பிறகு ஒரு முறை பனிச்சரிவுல மனுஷங்க சிக்குனதைப் பார்த்திருக்கேன். நாங்கதான் எல்லாத்தையும் அப்புறப்படுத்தி காப்பாத்துனோம். மரணத்துக்கு கிட்ட போயி காலைப் பிடிச்சு, திரும்பி பூமிக்கு இழுத்து வர்ற மாதிரி அது.”
“உங்களை மாதிரி டீம் அப்ப இல்லையா?’
“ஆமா... சிக்கிம் எல்லைக்கு ரொம்ப வருஷம் கழிச்சுதான் ITBP ஃபார்ம் பண்ணினாங்க. நாங்க இங்க வந்த பிறகு பனிச்சரிவுல யாரும் சாகலை. எல்லோரும் தரிசனம் பண்ணிட்டு நல்லபடியா ஊருக்கு திரும்புறாங்க. இது ஆன்மீகச்சேவை அப்படின்னோ, இல்லே... புண்ணியம் கிடைக்கும் அப்படின்னோ செய்யலை மீனா. எங்க அம்மாவுக்கு வாக்கு குடுத்திருக்கேன். எவ்வளவு தேடியும் பாடி கிடைக்காம கிட்டத்தட்ட 30 பேருக்கும் மேல ஆளுங்க, எங்க அப்பா மாதிரி காணாம போயிட்டாங்க. இங்க நிறைய பள்ளத்தாக்குகள் உண்டு. பனிக்காலத்துல தேடறது கஷ்டம் பனி கண்ணை மறைக்கும். பள்ளத்தாக்குல உருண்டு விழுந்து மறைஞ்சு போயிருக்கலாம். உயிரோட இருக்காரா, வருவாரா எதுவும் தெரியலை.. அம்மாவுக்கு ஏற்பட்ட மனக்கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாது. வீட்டுக்கு வர்றவங்க, போறவங்க எல்லாம் காரியம் பண்ணிடு.. கருமகாரியம் பண்ணலைன்னா அவங்க சொர்க்கத்துக்குப் போகமுடியாது. ஆவியா அலைவாங்க.. இனிமேயா வரப்போறாரு அப்படி இப்படின்னு ஏகப்பட்ட இலவச ஆலோசனைகள். நான் அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். அவர் ஒருவேளை எங்கேயோ உயிரோட கூட இருக்கலாம். அப்படி இருந்துட்டா அவருக்கு காரியம் பண்றது எவ்வளவு பெரிய அநியாயம்? இல்லையா மீனா”
“ஆமா”
“ஒருவேளை தப்பிச்சு எங்கேயோ வழி தெரியாம வரமுடியாம அலைஞ்சு திரிஞ்சுகிட்டு இருந்தா, அவரைக் கண்டுபிடிச்சு காப்பாத்தாம விட்ட குற்ற உணர்ச்சி என்னைக் கொன்னுடும் மீனா.... ஒத்தைப் பிள்ளை…. என்னை கண்ணுல வெச்சு வளர்த்தார்னு சொன்னா டிராமாடிக்கா இருக்கும்.. ஆனா அதுதான் உண்மை.. ஒரு தூசு படக்கூடாது என்மேலே.. அவர்தான் என்னோட ஹீரோ.. சினிமாவுல வர்ற மாதிரி அந்த ஹீரோ என்னிக்காவது ஒருநாள் என் கண்ணுல பட்டுருவார். கூட்டிட்டு வந்து அம்மாக்கிட்ட ஒப்படைக்கணும்”
“ஒருநாள் இது நடக்கலாம் செல்வா”
“நான் எந்த அளவு எங்க அப்பா மேலே உயிரை வெச்சிருக்கேனோ, அதே அளவுக்கு நீ உங்க அம்மா மேல பாசம் வெச்சிருக்கேன்னு தெரியும். அவங்களுக்கு இருக்குற இழுப்பு நோய்க்கு வேலூர் கிளைமேட்தான் பொருத்தமா இருக்கும். ஈசினோபீலியா அவங்க நுரையீரலை பாதிச்சிருக்கும்னும் தெரியும். அவங்களால பக்கத்துல இருக்குற பெங்களூர் குளிரைக் கூட தாங்க முடியாது. அப்புறம் எப்படி இங்க நீ கூட்டிட்டு வர முடியும்? அவங்களுக்கு நீ ஒரே பெண். நீ ஒரு நர்சா இருக்கறதால, அவங்களை நல்லா கவனிச்சுக்க முடியும். நீ அங்கேயே இரு.... நான் இங்கேயே இருக்கேன். நம்ம காதல் இப்பவும் நம்மளை நெருக்கமா வெச்சிருக்கு மீனா. இந்த முடிவுல உனக்கு வருத்தமில்லையே?”
“இல்லவே இல்லை.. இப்பத்தான் உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன் செல்வா. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லுவேன்னு நினைச்சேன்’
“ஓதப்பேன்.. அப்படி எல்லாம் சொல்லமாட்டேன். இன்னொருத்தன்கிட்ட எல்லாம் உன்னை குடுக்க முடியாது. நமக்கு அறுபது வயசானாலும், எழுவது வயசானாலும் பரவாயில்லை அப்புறம் கூட கல்யாணம் பண்ணிக்கலாம். உன்னை யார் கிட்டேயும் தர முடியாது மீனா. எப்பல்லாம் ஊருக்கு வர்றேனோ அப்பல்லாம் நேர்ல பாத்துக்கலாம். இளையராஜா இருக்காரு நமக்காக..... இசையால நாம ஒருத்தருக்கு ஒருத்தர் தொட்டுக்கலாம், திகட்டவே திகட்டாது. பேசிக்கிட்டே லெட்டரை பாதியில விட்டுட்டேன் இன்னிக்கு ராத்திரி அதை எழுதி முடிச்சு நாளைக்கு உனக்கு அனுப்பிடறேன்”
“அனுப்பாதே.... அனுப்பவே அனுப்பாதே”
“அப்புறம்....”
“எழுதிக்கிட்டே இரு.... எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் எழுது. முடிக்காதே செல்வா... நமக்கு ஒரு நாள் நிச்சயம் கல்யாணம் ஆகும். அன்னிக்கு எனக்கு நீ தர்ற கிஃப்ட் அதுதான்.”
“அய்யய்யே அது போவுமே பக்கம் பக்கமா...”
“போகட்டும் ஒரு கொயர் நோட்டு வாங்கி எழுது. அப்புறம் இன்னொரு பாட்டு பாடு செல்வா”
“இங்க லேசா பனி பெய்ய ஆரம்பிச்சிடுச்சு.....
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”
“அதெல்லாம் ஒண்ணும் தெரியாது. நனைஞ்சிடப் போறோம்னு நீ பாதுகாப்பா கடைக்குள்ள ஓடி ஒளிஞ்சு நின்னிக்கிட்டு இருப்பே.... மழையில எப்படி என் முகம் தெரியும்?”
“நீர்த்துளியில தெரியுதுன்னு சொல்லலை. அதுல இருக்கிற ஜில்லிப்பு நீ... காதோரம் சிலிர்க்கிற குளிரும் நீ... சரி... சரி.... கடைசி வரியை நீ பாடு மீனா“
“சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே”