தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் அதிகாலை நேரத்தில் நுழைந்து, கடற்கரை வரை செல்லும் வண்டிக்காக நீங்கள் காத்திருக்க நேரிட்டால் கைகளால் தள்ளியபடி ஒரு மரக்கட்டையிலான படுக்கை வண்டி, அழகான பாடலைப் பாடும் குரலோடு நிச்சயம் உங்களைக் கடந்து சென்றிருக்கும். இ.தி. என்று சாயம் போன சிவப்பு வண்ணத்தில் படுக்கை வண்டியின் மீது எழுதப்பட்டிருக்கும். மழிக்கப்படாத நரை மிகுந்த தாடி, மேலே காவி சட்டையும், அதே காவி வண்ணத்தில் கால்சட்டையும் அணிந்திருக்கும் திருவின் குரலும், முகமும் ஓரிரு முறை பார்த்தாலே எளிதாக உங்களுக்கும் பரிச்சயமாகிவிடும்.
அரசன் எப்பொழுது சென்னை சென்றாலும் சென்னையின் உட்புறப் பகுதிகளுக்குச் செல்ல மின்தொடர் வண்டிகளையே அதிகம் பயன்படுத்துவார். சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து பிரயாணிக்கவும், உடல் அலுப்பற்ற வசதியான இருக்கைக்காகவும் அந்தத் தேர்வு இருந்தாலும், இன்னொரு ரகசியக் காரணமும் இருந்தது. தாம்பரத்தில் வண்டியேறி கடற்கரை நிறுத்தத்தில் இறங்கி பின் அங்கிருந்து ராயபுரம் பயணிக்கும் துறைமுக அலுவலர்கள் குழுவின் இலவச இசைக்கச்சேரி மின்தொடர் வண்டி பயணத்தில் கேட்கக் கிடைக்கும்.
அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா
சொல்லித்தந்த பூமி தந்தையல்லவா
என்கிற திருவின் குரல் கேட்டதும் அரசன் உற்சாகமானார். பழைய சட்டை அரைக்கால் சட்டைதான் இருந்தாலும் நன்றாக துவைத்து, திருத்தமாக அணிந்திருப்பான் திரு. அதிகாலையிலேயே குளித்து முடிந்தவரை முகத்தைப் பளிச்சென்று வைத்திருப்பான். தன் கையிலிருந்த இட்லிப் பொட்டலத்தை அவனிடம் தந்தார் அரசன்.
“வாங்க சாமி.... ரொம்ப நாளாச்சு நீங்க சென்னைக்கு வந்து.... எப்படி இருக்கீங்க?”
“அது ஏன் சாமி சாமின்னுட்டு சும்மா அரசன்னே சொல்லு”
“சோறு குடுக்கறவரு சாமிதானே? ஆனாலும் அரசன்கற பேரும் உங்களுக்கு பொருத்தம்தான் சாமி.. வர்றப்ப எல்லாம் அள்ளித்தான் கொடுக்கறீங்க”
“பாட்டுக்கச்சேரி க்ரூப் இன்னிக்கு வருமா?”
“குடியை கெடுக்குற கூட்டம்னு சொல்லுங்க”
“ ’குடி’யைக் கெடுத்தா நல்லதுதானே?”
“அட அதுக்கு சொல்லலை சாமி... அவங்க பொழுது போவாம பாடிக்கிட்டு வர்றாங்க. நான் பொழப்புக்கு பாடிக்கிட்டு வர்ற ஆளு.. அவங்க அஞ்சாறு பேரு சேர்ந்துகிட்டு மோள தாளம் எல்லாம் தட்டிக்கிட்டு அமர்க்களம் பண்ணிகிட்டு வர்றாங்க.. கூட்டம் முச்சூடும் அவங்களையே பாக்குது. ஒத்தையா பாடிக்கிட்டு வர்ற எனக்கு கேட்க ஒரு காது இல்லாம போயிடுது சார்”
“ஏம்பா அவங்க போறது ஒரு வேளை... வர்றது ஒரு வேளை... அதுவும் ஒரு கம்பார்ட்மெண்ட்.. மிச்சம் இருக்குற நேரமும், ட்ரெயினும் உனக்குத்தான்.. டிடிஆர் செக்கிங் எல்லாம் எங்களுக்குத்தானே?“
“எனக்கும் ஒரு ட்ரெயின்ல ஒரு பொட்டியிலதான் போவ முடியும் சார்... இந்த மொடமான காலை வெச்சிக்கிட்டு, என் பலகை வண்டியை முன்னால நான் ஏத்தி, இறங்கறப்ப அதை மொதல்ல இறக்கி... அதுக்கப்புறம் நான் உந்தி ஏறனும். தேரை ஏத்தி இறக்குற மாதிரிதான்.... இரண்டு தடவை ஏத்தி இறக்குனா அசந்துபோயிடும். அப்புறம் ஏறமுடியாது. ஸ்டேஷன்லேயே சுத்திக்கிட்டு கெடப்பேன்” தன் முட்டி வரை மழுங்கின இரண்டு கால்களையும் கால்சட்டையை சற்று விலக்கிக் காண்பித்தான் திரு.
அரசனுக்கு மனம் உருகிப்போனது. செக்கிங் இல்லை என்பதை ஒரு சலுகை மாதிரி சொல்லி இருக்கக்கூடாதுதான். எல்லா நேரமும் சொற்களையே உதிர்த்துக் கொண்டிருந்தாலும், நாக்கு எப்பொழுதும் சொல்லின் வலி அறியாது. வலியும் ரணமும் மனதுக்குத்தான்.
“அடடா சாரி திரு..” அவனைச் சமாதானப்படுத்த “சரி ஒரு பாட்டு பாடேன் கேப்போம்” என்று குரலில் இனிமை கூட்டி சொன்னார்.
“பூங்காற்று திரும்புமா
என் பாட்டை விரும்புமா
பாராட்ட... மடியில் வச்சு தாலாட்ட…...
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா…
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத உலகம் தாங்காதே”
“அதுக்காக இவ்வளவு சோகமா பாடாதே காலங்காத்தாலே... நல்லா சந்தோஷமா ஒரு பாட்டு பாடு”
“பாடிட்டா போச்சு
பொதுவாக என் மனசு தங்கம் –ஒரு
போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்
நன்மையே செய்வேன்
தன்னானே நான்னா தன தன்னானே நான்னா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்”
தனது கட்டை வண்டியின் நீள்பகுதியில் இரண்டு கைகளின் விரல்களால் தாளமிட்டு பாட...., நிலையதளத்தில் நின்றிருந்தவர்கள் புன்னகையோடு ‘திரு’வைத் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் யாரும் அவனை நெருங்கி பணம் காசு எதுவும் போடவில்லை. கும்பல் உளவியலில் இது முக்கியமான ஒன்று. யாராவது ஒரு ஆள் முதல் ஆளாக ஏதோ ஒரு தொகையை தட்டில் போட்டுவிட வேண்டும். அப்பொழுதுதான் அவரவர் வள்ளல் மனம் தூண்டப்படும்.
அரசன் முன்வந்து ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அவனது தட்டில் போட்டார். பறந்துவிடாமல் இருக்க ஒரு ஐந்து ரூபாய் காசையும் அதன் மேல் வைத்தார். அடுத்து வருபவர்கள் இனி காசுகளை போடத் தயங்குவார்கள். குறைந்தபட்சம் பத்து ரூபாயாவது போடவேண்டும் என்ற கட்டாயத்தை அரசன் உருவாக்கிவிட்டார். அவர் நினைத்தது போலவே அடுத்து, அடுத்து பத்துரூபாய்த் தாள்கள் விழுந்தன.
திருவின் குரல் இன்னும் உச்சஸ்தாயியில் எழும்பியது.
“நீ பொட்டு வச்ச தங்க குடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்துவரும்
ஜோரான தங்க ரதம்
அடி நீ தங்க கட்டி.... சிங்கக்குட்டி
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
சுதி ஏறிவிட்டால் அப்புறம் ‘திரு’ வை யாராலும் கையால் பிடிக்க முடியாது. செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்தொடர் வண்டி தாம்பரம் நிலையத்துக்கு வந்து நின்றது. ஆனால் அதிலிருந்து வரும் பாட்டு சத்தம் நிற்கவில்லை. எப்பொழுதும் ஒன்றாகவே அந்த வண்டியில் பயணித்து வரும் நண்பர்கள் குழு உற்சாகமாகப் பாடிக்கொண்டு வந்தது.
“கன்னத்தில் கொடுக்கற முத்தம் ஒண்ணு
அத கடனா கொடுத்தா தப்பு என்ன
சித்திர சிறுக்கி சுத்தற பொறுக்கி
அய்யய்ய அய்யயே மறந்து போச்சே”
தலையைச் சொரிந்து நடிப்புத்திறனையும் கூட்டி பாடிக்கொண்டிருந்தார் குழுவின் பாடகர் ஒருவர்.
திருவின் குரல் அடங்கியது.
“திரு.. ஏறு வண்டியில”
“வேணாம் சார் இந்த வண்டி போவட்டும். அடுத்த வண்டியில வர்றேன்.”
“இதோ பார் நீ ஒரு கலைஞன் அப்படின்னா, அவர்களும் கலைஞர்கள்தான். நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிட்டு மனசுல வன்மத்தை வளர்க்க கூடாது.. ஏறு சொல்றேன்” என்று அரசன் அவனை வண்டிக்குள் ஏற்றிவிட்டார்.
“பயணிகள் கவனிக்கவும்..... திடீரென்று ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக.. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு தாம்பரம் நிலையத்திலிருந்து மின்தொடர் வண்டிகள் எதுவும் இயங்காது. தொழில்நுட்ப பிரச்சினைகள் சரியான பிறகு மறுபடியும் சேவை தொடரும். எதிர்பாராத இந்த தாமதத்திற்கு வருந்துகிறோம்” என்று நிலைய அறிவிப்பாளரின் குரல் ஒலித்ததும், உள்ளிருந்து ஒலித்த பாடலும் நின்றது.
“இறங்கி பஸ்ஸை பிடிச்சு போயிடலாமா” என்று பாடும் குழுவிலிருந்து ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார்.
“பீக் டைம்.... இப்ப பஸ்ஸைப் பிடிச்சாலும் நாம அங்க போய் சேர்றதுக்குள்ள, ட்ரெயின் ரெடியாகி பீச் ஸ்டேஷன் வந்துடும்”
“ஏற்கனவே நான் ஒரு லேட் பன்ச்-ஐ யூஸ் பண்ணிட்டேன்” என்றார் முதலாமவர்.
“இப்ப நாம என்ன பண்றது?” என்று அரசனைப் பார்த்து மெல்லமாகக் கேட்டான் திரு.
“உனக்கு வேற வழி இல்லை இதுலதான் போகணும். இதுல ஏறினது நல்லதா போச்சு. ஒரு நிமிஷம் இரு” என்றவர் அவசரமாக அந்தக் குழுவிடம் போனார்.
“சார் நான் எப்ப இங்க வந்தாலும், நீங்க வர்ற ட்ரெயினுக்காக வெயிட் பண்ணித்தான் போவேன். ஏன்னா உங்க க்ரூப் பாடிட்டு வர்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும்”
அவர்கள் உற்சாகமானார்கள். “ஓ அப்படியா? நீங்க எங்க போகணும்?”
“நான் பார்க் ஸ்டேஷன் போகணும். ஆனா அங்க இறங்க மாட்டேன். உங்க பாட்டை கேட்டுகிட்டே பீச் வரைக்கும் வந்துட்டு, அப்புறம் திரும்பி வருவேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா என்கிட்ட ஒரு மலேஷியா வாசுதேவன் இருக்காரு. அதுவும் இளையராஜா இசையமைச்ச பாடல்கள்லேர்ந்துதான் பாடுவாரு. அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா?”
“தூக்கிட்டு வாங்க பாஸ் அந்த செல்லத்தை” என்று உற்சாகமாகச் சொன்னார் குழுவிலிருந்த இன்னொருவர்.
அரசன் மகிழ்ச்சியோடு திருவை கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு அவர்களிடம் வந்தார். “இவர்தான் அது”
“எங்க பாடுங்க பாஸ் ஒரு பாட்டை”
திரு ஒரு நிமிஷம் திகைத்து, அரசனைக் கோபமாகப் பார்த்தான்.
“பாடு ராசா”
“ஜாதி இல்லை மதமுமில்லை தண்ணி போட்டுட்டா”
‘ஆஹா அப்படி போடு.. இன்னிக்கு இன்னொரு லேட் பன்ச். போனா போவுது நீ பாடு தலைவா” தாளத்தையும் கைத்தட்டலையும் தொடர்ந்தது குழு.
“ஜாதி இல்லை மதமுமில்லை தண்ணி போட்டுட்டா
அட... மேலுமில்லை கீழுமில்லை போதை ஏறிட்டா
யாரும் ஒண்ணுதான் அப்புறமா ரம்மும் ஜின்னுதான்
சலாம் போடு குருவே நான் சால்ட் பேட்டை சிலுவை
சலாம் போடு குருவே நான் சால்ட் பேட்டை சிலுவை”
உற்சாகத்தில் நடித்துக்கொண்டே பாடுபவர், கமல்ஹாசன் எப்படி அந்தத் திரைப்படத்தில் ஆடுவாரோ அதே போல் ஆட முயற்சித்தார். தொடர்வண்டியின் பெட்டி அதற்கு பேருதவி செய்தது. அது லேசாக குலுங்கும்போது இவர் இன்னமும் தள்ளாடி ஆடினார். பெட்டி முழுதும் தாளம் போட ‘திரு’ முகம் பிரகாசித்தது. பாடி முடித்ததும் பெட்டி அதிர கைத்தட்டினார்கள்.
“தல இன்னொரு பாட்டு பாடுங்க இதே மாதிரி சூடா... காரமா”
ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பண்ணாதிங்க…
பேரு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…
விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேரு வீடு
உங்களை நம்பி
“ஆஹா ஆஹா அப்படி போடு தங்கக்குட்டி” என்று தாளம் போட்டவர் தனக்கு சரியான பாட்டு கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாகத் தாளம் தட்டினார்.,வண்டி புறப்பட்டபின் ஏறலாம் என நினைத்து, நிலையத்தில் நின்ற இன்னும் சிலர் அவசரமாக அதே பெட்டியில் ஏறினார்கள்.
அடுத்த பாடல் கேட்காமலே வந்தது
சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
மறுபடி மழை போல கைத்தட்டல்.....
“தலைவா பின்னிட்டே ஆமா உன் பேர் என்ன?”
“தியோடர் சார்.... தியோடர் ராஜா”
அரசன் அந்தப் பதிலைக் கேட்டதும் அதிர்ந்தார். “என்னது தியோடரா? அப்ப உன் பேர் திரு இல்லையா?”
“இல்லை சார். ஸ்டேஷன்ல உள்ள பிச்சைக்காரவங்க.. கடைக்காரவங்க தியோடர்னு சொல்ல சிரமப்பட்டுக்கிட்டு ‘திரு’ ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. பேர்ல என்ன இருக்கு? எடுக்கறது பிச்சை... கூப்பிட ஏதோ ஒண்ணு..”
“நீ நிஜமாவே ராஜா தான்யா. எங்க ஞானி இசைக்கு ராஜா.. நீ பாடுறதுல ராஜா. உன்னை இத்தனை நாளு நாங்க கவனிக்காம விட்டுட்டோமே”
“நான்தான் சார் அதுக்கு காரணம்.. நீங்க குரூப்பா பாடிக்கிட்டு வர்ற சத்தம் கேட்டதும் நான் நிறுத்திடுவேன். நீங்க இருக்கற பெட்டியில ஏற மாட்டேன். ஜனங்க என்னை கவனிக்க மாட்டாங்க. இத்தினி நாளு இசைதான் சார் எனக்கு சோறு போட்டுக்கிட்டு இருக்கு. நீங்க பாட்டை தின்னுருக்கீங்களா சார்?” எல்லோரும் ஒரு கணம் அவனை அமைதியாகப் பார்த்தார்கள்.
“நான் தின்னிருக்கேன் சார். சந்நியாசி பாட்டு ருசியா இருக்கும் சார். சந்நியாசி யாரு? இளையராஜாதான்.. அவரு பாட்டை கடும் பசியில பாடிப் பாருங்க ருசிக்கும்.” தன் பையிலிருந்து ஒரு மவுத் ஆர்கானை எடுத்தான். அட இவனுக்கு மவுத் ஆர்கான் வாசிக்கத் தெரியுமா என அரசன் மனசுக்குள் வியந்தார். இன்னும் என்னென்ன அதிசயங்களைப் புதைத்து வைத்திருக்கிறான் இவன்?.
“கோடைக்காலக் காற்றே
குளிர் தென்றல் பாடும் பாட்டே” என்று பாடியபின் மவுத் ஆர்கானை வாசித்துக் கொண்டே பாட்டை அதில் தொடர்ந்தான்.
எங்க அம்மா கூட இசையைத்தான் சோறா போட்டாங்க. ‘சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை... அது தேடுது தன் உறவை...’ அப்படின்னு அவங்க பாடுனதுதான் எனக்கு பலநாள் பசியை மறக்கடிச்சுது.”
யாரும் எதுவும் பேசவில்லை. சோகம் சுமக்கும் மவுனம் அங்கே மிதந்தது.
“நீ கவலைப்படாதே.. நாங்க ஒரு ஃபண்ட் வச்சிருக்கோம். மாசம் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஒரு தொகையை தேவைப்பட்ட யாருக்காவது கொடுத்து உதவுவோம். இனிமே மாசா மாசம் உனக்கு ஒரு தொகை அதிலேர்ந்து தர்றோம்” என்றார் அந்தக்குழுவில் தாளம் தட்டிய கண்ணாடி அணிந்தவர்.
“வேணாம் சார்” என்று உடனடியாக மறுத்துச்சொன்ன தியோடரை விநோதமாகப் பார்த்தார் அரசன்.
“அதைவிட விலை மதிப்பில்லாத ஒண்ணை இன்னிக்கு தந்தீங்க சார். கைத்தட்டல்... இத்தினி நாளு பாடி இருக்கேன். ஒரு கைத்தட்டல் இந்தக் காதுல விழுந்ததில்லை. காசுதான் விழும்.. ஜனங்க மனசுல நான் எப்பவும் பிச்சைக்காரன்தான் சார். கலைஞன் இல்லை.. இன்னிக்குத்தான் சார் நான் கலைஞன் ஆகி இருக்கேன். ஒரு உதவி பண்ணுங்க சார். நீங்க ஒரு இசைக்குழு வெச்சிருக்கீங்களாமே.. அப்பப்ப கோயில் திருவிழாவுல பாடுவீங்களாம்.. ஸ்டேஷன்ல பேசிக்கிட்டாங்க.. ஒரு தரம்... ஒரே தரம் எனக்கு மேடையில பாட சான்ஸ் கொடுங்க.. என் காது ரெண்டும் ரொம்ப நாளா பட்டினியா கெடக்குதுங்க சார்.. கலைஞனோட வயிறு பட்டினியா கெடக்கலாம் சார். காது பசியோட இருக்கக் கூடாது சார்..”
“அவ்வளவுதானே அடுத்த கச்சேரியில உன்னை பாட வைக்கிறோம்.. போதுமா?”
“அது போதும் சார்” கையெடுத்து கும்பிட்டான் தியோடர். “இப்ப நீங்க பாடுங்க சார் நான் கேக்குறேன்” அவர்கள் பாடத்தொடங்கினார்கள். இரயில்வே தொழில்நுட்பப் பிரச்சினைப் பற்றிய கவலை இப்பொழுது எவருக்கும் இல்லை.
அரசன் “தியோடர்.. உன் அப்பா பேரு என்ன? நீ கிறிஸ்டீனா?” என்று மெல்லமாகக் கேட்டார்.
“எவனுக்குத் தெரியும்? எங்கப்பன் பேரு... எங்க அம்மாவுக்கே தெரியாது. அவளுக்கு கண்ணு தெரியாது சார். ஒரு நாள் ராத்திரியில நாலு கயவாளி பசங்க நாசம் பண்ணிட்டானுக. எவன் எனக்கு அப்பன்னு எப்படி கண்டுபிடிப்பா? எனக்கு ரொம்ப நாளா பேரே இல்லை சார்.... தம்பின்னுதான் கூப்பிடும் அம்மா. அவங்க செத்துப்போனப்புறம் நான் விழுப்புரம் ஸ்டேஷன்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தப்ப. இந்த பலகை வண்டியை தியோடர் ராஜான்னு ஒருத்தர் எனக்கு சும்மா கொடுத்தார். அன்னியிலேர்ந்து அதான் எனக்கு பேரு. ஒருநாள் ரயில்ல ஏறி அசந்து தூங்கிட்டேன் இங்க வந்து இறங்கிட்டேன். வருமானம் அதிகமா வந்துச்சு. அதிலேர்ந்து இங்கேயே தங்கிட்டேன். நான் கிறிஸ்டீன் இல்லை.... எந்த மதம்னு தெரியாது. என்னோட மீட்பர் இளையராஜாதான் சார். அவரு பாட்டை கேட்டு, கேட்டுதான் இந்த உசுரு ஓட்டிக்கிட்டு இருக்கு. வண்டியை எவனும் திருடக்கூடாதுன்னு. இ.தி. அப்படின்னு எழுதி வெச்சேன். கீழ கெடந்த பிரஷ்ல பெயின்ட் அவ்வளவுதான் இருந்துச்சு”
“இ.தி. அப்படின்னா?”
“இசையைத் தின்பவன்”