ஓவியம்: பி.ஆர். ராஜன்
சிறுகதைகள்

காத்து கருப்பு

அந்திமழை இளங்கோவன் சிறுகதைப் போட்டி 2025-இல் ஊக்கப்பரிசு

வானவன்

 தட்டில் இருந்த விபூதியை வலது கையால் ஒருபிடி எடுத்து... முகத்துக்கு நேர் வைத்து... எதையோ முணுமுணுத்தபடி சிலவினாடிகள் கடத்தினார் பூசாரி. எல்லோரும் அவர் முகத்தையே பீதியுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பூசாரியின் உடலில் சின்னதாய் அதிர்ச்சி. உடம்பை ஒரு குலுக்கு குலுக்கினார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அந்த வினாடியில் சிறு அதிர்ச்சிக்குள்ளாகி திரும்பினர். அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடி விரல் சூப்பிய குழந்தையொன்று வீல் என்று அலறியது. ஓரமாக நின்ற நாயொன்று உயிரைவிட்டுக் கத்தியது. பூசாரி கையிலிருந்த விபூதியை அழகுவேலின் முகத்தில் வீசினார்.

கட்டைவிரலில் இருந்த விபூதியை  மற்ற நான்கு விரல்களுடன் சேர்த்து பரவவிட்டு அவன் நெற்றியில் பூசிவிட்டார். கயி்ற்றுக் கட்டிலின்மீது படுக்கவைக்கப்பட்டிருந்த அழகுவேல் உடம்பில் எவ்வித அசைவுமில்லை. பக்கத்தில் நின்றிருந்த அவன் அம்மாவும் அக்காவும் அழுதுகொண்டிருந்தனர்.

உள்ளாடையுடன் படுத்திருந்த அழகுவேல்மீது ஒரு பழைய கிழிந்த கைலியை கொண்டு வந்து போர்த்தினாள் அவன் தங்கை.

இரவு ஏழு மணியிருக்கலாம். அமாவாசையிருட்டு. மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் ஒருவர் முகம் மற்றவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

அப்போது அங்கு குமாரவேல் வந்தார். அவருக்கு முன்னரே அவருடன் வந்த மெல்லிய சாராய நெடி அவரை வரவேற்றது.

"வெலகுங்க.. வெலகுங்க.. கூட்டம் போட்டா எப்புடி.. அவனுக்கு கொஞ்சம் காத்தவிடுங்க.."

அவரின் கரகரத்த குரலுக்கு பயந்து கூட்டத்தினர்  விலகி வழிவிட்டனர்.

"என்னங்கடா? என்னாச்சி?"

அதட்டல் தொனியில் அவர் கேட்டதும் யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.

குள்ளமான உருவம்தான் என்றாலும் கட்டுமஸ்தான தேகம். முறுக்கிவிடப்பட்ட மீசை, கம்பி வைத்து கட்டியதுபோல கம்பீரமாய் மேல்நோக்கி நின்றது. சுருட்டு பிடித்து தடித்து கருத்த உதடு. எண்ணையில் ஊறி,  படிய வாரிய தலைமுடி பின்முதுகுவரை விளையாடிக்கொண்டிருந்தது. அகலவிரிந்த முட்டைக்கண் கூடுதலாய் அச்சமூட்டியது. வேட்டி மடிப்பிலிருந்த சொருகருவாவின் புடி வெளியில் துருத்திகொண்டிருந்தது. அவரைப் பார்த்தாலே எல்லோருக்கும் பயம்.

யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு குமாரவேல் அங்கிருந்து புறப்பட்டார். எல்லோரும் இயல்பு நிலைக்கு வந்தனர்.

லேசாகக் கண் திறந்தான் அழகுவேல். தன்னைச் சுற்றி ஊரில் பாதிப்பேர் திரண்டு நிற்பதைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் நினைவைத் திருப்பிப் பார்த்தான். கடைசியாக என்ன நடந்தது என யோசித்தான்.

அப்போது பூசாரி, "கண்ண முழிச்சி பாக்குறான்... கண்ண முழிச்சி பாக்குறான்..."  என கொஞ்சம் வேகமாகவே கத்தினார். அவரின் மந்திரமும் விபூதியும்தான் அவனை எழுப்பியது என்கிற நம்பிக்கையில் அவரின் முகத்தில் சிறு சந்தோஷம்.

பூசாரியின் குரல் கேட்டதும் திரும்பிவந்தார் குமாரவேல். தவறுசெய்துவிட்டோம் என நினைத்தார் பூசாரி. திரும்ப வந்து என்ன வம்பிழுப்பாரோ என யோசிக்கும்போதே,

"டேய் என்னடா ஆச்சி ஒனக்கு?"

அழகுவேலைப் பார்த்து கேட்டார். அவரின் குரலை கேட்டதும் பழையபடி கண்ணை இறுக மூடிக்கொண்டான். திரும்ப அசைவில்லாமல் படுத்திருந்தான். இப்போது அவன் கண்ணை மூடிபடுத்திருப்பது மயக்கத்தில் அல்ல என்பது அழகுவேலுக்கு மட்டும் தெரியும்.

"என்ன?.. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இங்க கூட்டம் போடுறீங்க?... அமாவாச இருட்டு.. தனியா குளிக்க போயிருக்கான்.. எதாவது காத்து கருப்பு அண்டியிருக்கும்.. அதான் பூசாரிவந்து மந்திரிச்சிட்டாருல்ல.. போங்க.. போய் அவங்கவங்க வேலையப் பாருங்க.. அவனே மயங்கி கெடக்கறான்.. அவனுக்கு காத்துவிடாம."

அவருக்கு பயந்து முனகியபடி கூட்டம் கலைந்தது. அவரும் புறப்பட்டார்.

"காவாலிப்பய, குடிச்சிட்டு குத்து கொலன்னு அலையிறவன். வளந்து நிக்கிற மூணுபொட்டப்புள்ளயொள கட்டிகொடுக்க யோக்கியத இல்ல.. இவன் பவுச தெரிஞ்சிகிட்டே எவனும் பொண்ணு கேட்டு வரமாட்டங்குறானுவோ.. பஞ்சாயத்துக்கு வந்துட்டான்.. இவனெப்ப சாவுறானோ அப்பதான் ஊரு நிம்மதியாவும்.. பொண்டு புள்ளைவொ இவனப் பாத்தாலே பயப்படுதுவொ.."

சத்தம் வெளியில் தெரியாமல் பேசினார் குமார் பாட்டி.

பூசாரி பாக்குவெட்டியும் தண்ணீரும் எடுத்துவரச்சொன்னார். பாக்குவெட்டி அவசரத்துக்கு கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டு குமார் ஓடிச்சென்று வீட்டில் பாக்கு வெட்டி எடுத்து வந்தான். அதை வாங்கிய பூசாரி அதன் காம்பு பகுதியை தோலில் கிடந்த துண்டால் நன்றாகத் துடைத்தார். பின்னர் அதில் துரு எதும் ஒட்டியிருக்கிறதா என உற்று பார்த்தார்.

அழகுவேலின் உதட்டை இருவிரல்களால் விலக்கிய பூசாரி, பாக்குவெட்டிக் காம்பை அவன் இரண்டு பல்வரிசைக்கு மத்தியில் வைத்து அழுத்தினார்.

அழகுவேல் சுதாரித்துக்கொண்டான். விட்டால் பூசாரி பல்லை பதம்பார்த்து விடுவார். குமாரவேல் அங்கிருந்து தொலைவில் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டான். மெதுவாக கண்விழித்தான். அது இயல்பாய் இருப்பது போல் பார்த்துக்கொண்டான். அவன் கண் விழித்ததைப் பார்த்ததும் பூசாரி பாக்குவெட்டிக் காம்பை அவன் வாயிலிருந்து எடுத்தார்.

"யாப்பா... என்னப்பா நடந்தது?"

இப்போது அவரின் குரல் தணிந்திருந்தது. அதில் குமாரவேல் வந்துவிடுவாரோ என்ற பயமிருந்தது.பூசாரி கேட்டதும் அழகுவேல் பார்வையை நான்கு பக்கமும் சுழலவிட்டான். எல்லோருக்கும் அவன் என்ன சொல்லப்போகிறான் என்று ஆர்வமாய் இருந்தது. அதற்குள் குமாரு அவன் தலையை நிமிர்த்தினான். ஒரு கைலியை எடுத்து வரச்சொல்லி தலைவழியாகப் போட்டான். அழகு வேலுக்கு கொஞ்சம் நிதானம் வந்தது. எழுந்து நிற்க முயன்றான். முடியவில்லை. எழ முயன்ற நேரத்தில் குமார் அவன் கைலியை ஒழுங்குபடுத்தி கட்டி விட்டான்.

மீண்டும் பூசாரி கேட்டார்.

"ராசா.. என்ன நடந்துச்சி ராசா?"

அழகுவேலிடமிருந்து பதில் ஏதும் இல்லை. அதற்குள் குமார்பாட்டி.

"யேய்.. கொமாரு.. நீ விசாரிடா. பூசாரிய்யா... செத்த நீங்க சும்மாயிருங்க... கூட்டாளி பயலுவொ.. அவங்கேட்டா சொல்லுவான். கொமாரு கேளுடா."

இப்போது குமார் கேட்டான்.

"ஏய்.. அழகு.. என்னடா நடந்தது அங்க.? இத்தன பேரு என்னாச்சோ.. ஏதாச்சோன்னு பயந்து போய் நிக்குறோம்ல.. சொல்லுடா.?"

அழகு வேல் திரும்ப பார்த்தான்.  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

"குளிச்சுகிட்டிருந்தனா.."

"ம்.. சொல்லு.."

"குளிச்சுகிட்டிருந்தனா?"

"டேய்... குளிச்சிகிட்டிருந்த.. அடுத்தது என்ன நடந்தது?"

"கொளத்தாந்தொரைக்கு சோத்தாங்கை பக்கமா ஒரு நாவ மரமிருக்குள்ள.."

"ஆமா.. இருக்கு.."

"அந்த நாவமரத்தோட கௌ கலகலன்னு ஆடுச்சி.."

"ம்.. அப்பொறம்."

அழகுவேல் எதோ சொல்ல வந்தான் ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை. குமாரும் விடுவதாக இல்லை.

"எலேய் அப்பறம் என்னடா நடந்தது.?"

குமாரின் குரலில் கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.

"அதுக்கப்பறம் நடந்தது எதுவும் ஞாபகமில்ல."

அவன் இப்படி சொன்னாலும் குமார் முழுமையாக நம்பவில்லை. உண்மையில் அவனுக்கு நினைவிலில்லையா? இல்லை எதையோ சொல்ல மறைக்கிறானா? தெரியவில்லை.

இவனிடம் தனித்திருக்கும் வேறொரு சந்தர்ப்பத்தில் கேட்கலாம் என நினைத்துக்கொண்டான்.

அப்போது பூசாரி,

"சரிப்பா.. விடுங்கப்பா.. அவனே பயந்து போயிருக்கான். நாம வேற அவன போட்டு இம்ச பண்ணிகிட்டு.. அவன் ஞாபகத்துக்கு வரும் போது அவனா சொல்லட்டும். விட்டுடுங்க அவனெ.. குடிக்க எதாவது கொடுத்து, சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. சாப்ட்டதும் கொஞ்சம் கொழுமோரு காய்ச்சி கொடுங்க."

பூசாரி சொல்லுக்கு கட்டுப்பட்டு கலைந்ததா? இனி இங்கு நின்று நம் வாய்க்கு அவல் கிடைக்கப்போவதில்லை என நினைத்து கலைந்ததா என தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.

அழகுவேலின் அம்மா, அக்கா, தங்கை, குமார் அவன் பாட்டி மட்டுமே இருந்தனர். அவன் அக்கா ஒரு தட்டில் சோறுபோட்டு கொஞ்சம் ரசம் விட்டு பிசைந்து எடுத்துவந்தாள். கூடவே அழகுவேலுக்குப் பிடித்த வெண்டைக்காய் பொரியலும் இருந்தது. அவன் கையில் கொடுத்து சாப்பிடச்சொன்னாள். வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

இப்போது உண்மையில் என்ன நடந்தது என்பதை அழகுவேலிடம் விசாரிக்க அவன் அம்மாவிற்கு ஆசை. ஆனால் மீண்டும் எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தபடியே இருந்தார். எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தான். தங்கை தட்டை வாங்கிக்கொண்டாள். ஒரு துண்டு எடுத்துவந்து அவன் தலையை துவட்டிவிட்டாள் அக்கா.

"ஏட்டி.. ஒரு டம்ளர்ல கொஞ்சம் மோரு எடுத்துகிட்டு தாளிப்பு கரண்டியிருக்குள்ள.. இரும்பு கரண்டி... அது காம்ப சூடுபண்ணிகிட்டு வாடி."

  ஒரு டம்ளரில் மோரில் சூடுபண்ணிய இரும்பு கரண்டியின் காம்பை விட்டதும் சுர்ர்ரென சத்தம் வந்தது. அதை அவனிடம் கொடுத்து குடிக்க வைத்தனர்.

வேறு உடை மாட்டிக்கொண்டு கயிற்றுக்கட்டிலில் படுத்தான். உள்ளே படுக்கச்சொல்லலாம். கோடைக்காலம் புழுக்கமாக இருக்கும். அவனை தனியே படுக்க வைக்க பயமாக இருந்தது. ஒரு பாயைப்போட்டு கட்டில் அருகில் கீழே படுத்துக்கொண்டார் அவன் அம்மா.

 அழகுவேல் வெளியூரில் டிப்ளமோ படித்துக்கொண்டிருக்கிறான். அடிப்படைக்கல்வி வரைதான் கிராமத்தில் இருக்கிறது. விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

விவசாயத் தேவைகளுக்காக கிராமங்களில் நிறைய குளங்கள் உண்டு. ஒவ்வொரு வயலுக்கும் ஒரு குளமிருக்கும். எல்லோரும் குளங்களில் குளிப்பதுதான் வழக்கம். கோடைக்காலமென்றால் சின்ன குளங்களில் குளிப்பார்கள். குளங்களைச்சுற்றியிருக்கும் மரங்களின் நிழலால் வெயில் தண்ணீரில் விழாது. அதனால் தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

அதேபோல் குளிர்காலங்களில் பெரியதாக இருக்கும் குளங்களில் குளிப்பது வழக்கம். சூரிய ஔி நேரடியாக நீரில் படுவதால் தண்ணீர் அவ்வளவு குளிர்ச்சியாக இருக்காது.

குளிக்க மட்டுமல்ல. வெளியத்தரவு போய்ட்டு வந்தாலும் கழுவறதும் அங்கதான்.

அழகுவேலின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி குமாரவேல் வீடு. அருகிலேயே சின்னதாக ஒரு குளம். ஆழம் அதிகமாக இருக்காது. குளத்தைச் சுற்றி நாவல், தென்னை மரங்கள் அடர்ந்திருக்கும்.

விவசாய வேலையெல்லாம் முடிந்தபின் மாலையில் குளிப்பதுதான் பொதுவான கிராமத்து வழக்கம். இன்று அப்படித்தான் வேலைகள் முடிந்து இருட்டான பிறகு குளிக்கச்சென்றான் அழகுவேல். ஓவென அலறல் சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் பார்த்த போது குளத்தங்கரையில் உள்ளாடையுடன் மயங்கி கிடந்தான்.

சின்னப்பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் அரசமரம். மறைந்த பெரியவர் வீராச்சாமிக்கு திருமணம் நடந்தபோது அரசாணிக்கால் நட்டது. வேப்பங்கிளையும் அரசங்கிளையும் நட்டதில் இரண்டும் வளர்ந்தது. காலப்போக்கில் அரசமரத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கமுடியாமல் வேப்பமரம் காணாமல் போனது. அரசமரம் நன்றாக வளர்ந்தது. பாகப்பிரிவினையில் வீராச்சாமியின் இரண்டாம் மகனுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது.

அவர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இடத்தை இலவசமாக வழங்கியபோது பள்ளிக்குழந்தைகளுக்கு நிழலானது அந்த அரசமரம்.

மாலையானால் அங்கு ஒரு பெருங்கூட்டமே இருக்கும். பெரியவர்கள் ஒருபக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இளவட்டங்கள் ஒருபக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருபக்கம் சிலர் சீட்டாடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆடுபுலி ஆட்டம்.

பொதுவான பிரச்சனையென்றால் எல்லாம் ஒன்று கூடிவிடுவார்கள். இன்று அங்கு அழகுவேல் பிரச்சனை முன்மொழியப்பட்டது.

" இது புதுசுல்ல போன மாசமே ஒருதடவ நம்ம கிளார்க் மவன் சுப்ரமணி குளிக்கப்போனப்ப இதே மாதிரி நாவ மரம் குலுங்கி, பயந்தடிச்சி ஓடி வந்துட்டான்.

வழக்கமா நாளைஞ்சி பயலுவோ ஒன்னா போயி கொளத்தந்தொரையில ஒக்காந்து பேசிட்டு, நிதானமா குளிச்சிட்டு வர்றதுதான் வழக்கம். தனியா யாராவது குளிக்கப்போறப்பதான் இந்தப் பிரச்சன.

அதுக்கப்புறம் அந்தக் கொளத்துல யாரும் குளிக்கப்போறதில்ல அழகுவேல் வெளியூர்ல படிக்கப்போயிருந்ததால அவனுக்கு இந்த விஷயம் தெரியாது. தெரியாம அவன் குளிக்கப் போயிருக்கான். நாவமரம் குலுங்கியிருக்கு.  மயங்கி விழுந்திருக்கான். சத்தம் கேட்டு எல்லாரும் ஓடிப்போயி பாத்தா, மயங்கி கெடந்திருக்கிறான். அப்பறம் ராமசாமி வீட்டு கயித்துக்கட்டில்ல போட்டு தூக்கிட்டு வந்திருக்காங்க.. அப்பறம் நம்ம பூசாரி மந்திரிச்ச பின்ன நெனவு வந்திருக்கு."

பன்னீர் சொல்லி முடித்தார்.

"என்னப்பாது.. நம்மூருக்கு வந்த சோதன.. பேய்பிசாசெல்லாம் இந்த காலத்துல போய் நம்பமுடியுமா? நம்பாமலும் இருக்க முடியல. என்னத்த பண்றதுன்னு ஒன்னும் புரியல."

வைரகண்ணு புலம்பினார். அப்போது அங்கு பஞ்சாயத்து தலைவர் குருமூர்த்தி வந்தார்.

அவர் வந்ததும் கவனம் அவர்பக்கம் திரும்பியது.

"என்ன மாமா.. எதாவது விசேஷ செய்தியோட வந்திருக்கீங்களா?" கூட்டத்துல இருந்த இளவரசு குரல் கொடுத்தான்.

"ஆமா மாப்ள.. கெவர்மண்ட்ல கக்கூசு கட்டிக்கொடுக்கப்போறாங்களாம்.. நாம வேலைய ஆரம்பிச்சா கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடுப்பாங்களாம்.. நம்ம பஞ்சாயத்துல யார்யாருக்கு வேணுன்னு கணக்கெடுக்கச் சொல்லியிருக்காங்க.. "

அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டார் ராமநாதன்.

"ஏன் மச்சான்.... அந்த எழவெல்லாம் நம்மூருக்கு எதுக்கு.. அதெல்லாம் டவுனுக்குத்தான் செட்டாவும்.. வேற எதாவது உருப்படியா செய்யலாம்ல... அரசாங்கத்துல பணத்த வெச்சிகிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம அலையுறானுவோ.. ஒங்கள மாதிரி ஆளுவொதான் எடுத்துச்சொல்லணும்."

"அதானே.. இங்க நெறைய பேருக்கு வீடேயில்ல.. அதுக்கு எதுவும் ஏற்பாடு செய்யலாம்ல.. நமக்குத்தான் தெறந்தவெளியிருக்குள்ள.. அதோடநல்ல ஒரம்.. அத ஏன் வீணாக்குவானே?"

ராமநாதனுக்கு ஆதரவா பக்கிரிசாமியும் கொரல் கொடுத்தார்.

"இல்லமாமா.. நாம ஆம்பளைங்க.. எப்ப வேண்ணாலும் எங்க வேண்ணாலும் வேட்டிய தூக்கிகிட்டு ஒதுங்கி ஒக்காரலாம்.. பாவம் பொம்பளையாளுங்க என்ன பண்ணுவாங்க.? அத நெனைச்சி பாத்தீங்களா? அவங்க அவசரத்துக்கு என்ன பண்ண முடியும் சொல்லுங்க.?" இளவரசின் பேச்சிலும் ஒரு ஞாயமிருந்தது.

யாரோ கனைப்பது கேட்டு திரும்பிபார்த்தார்கள். பின்னாடி குமரவேல் நின்றிருந்தார். சுவாரஸ்யமான உரையாடலில் அவரை யாரும் கவனிக்கவில்லை. இப்போது எல்லாரும் அமைதியானார்கள்.

"யப்பா.. எனக்கொரு கக்கூசு கட்டணும்..  கக்கூசு கட்டிட்டா ஏன் நாவமரம் குலுங்கப்போவுது?"

சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு போய்விட்டார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் தலை மறைவதுவரையிலும் யாரும் எதுவும் பேசவில்லை.

"கக்கூசு கட்றதுக்கும் நாவமரம் குலுங்குறதுக்கும் என்ன சம்மந்தம்?.. லூசுமாறி ஒலறிட்டுப்போறான்?"

 பஞ்சாயத்து தலைவர் குருமூர்த்தி கேட்டார். அவர் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் இல்லை.

...... ...... ...... ...... ..... ..... ..... ..... ........

அழகுவேலின் வீடு.. அவன் லீவு முடிந்து ஊருக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தான்.

 "யப்பா.. பாத்து பத்தரமா போப்பா.. பையில கொல தெய்வம் துன்னூரு இருக்கு குளிச்சதுக்கப்பறமா எடுத்து பூசிக்கப்பா.. எல்லாத்தயும் சாமி பாத்துக்கும்.."

அழகுவேல் சுற்றிலும் பார்த்தான். யாருமில்லை.

 "அம்மா..."

"சொல்லுப்பா.."

"ஒன்னு சொன்னா யார்கிட்டயும் சொல்லமாட்டியே?"

 "சொல்லுடா? என்னடா பிரச்சனை?"

"யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லு.. அப்பதான் சொல்வேன்.."

"சரிப்பா.. யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.. சொல்லு.."

அன்னிக்கு குளிக்கப்போனப்ப நாவமரம் குலுங்கிச்சில்லயா?"

"ஆமா.."

"அப்ப மரத்துலேர்ந்து ஒரு உருவம் கருப்பா ஏறங்கிப் போச்சும்மா.."

"ம்ம்ம்.."

"அந்த உருவத்த பாக்குறதுக்கு நம்ம கொமரவேலு மாதிரி இருந்துச்சிம்மா.. இத வெளியில சொல்லிடாத.. அந்தாளு ஒரு மாதிரி.."

வானவன்

கா.குழந்தைவேல் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தன் சொந்த கிராமமான வானவன் மாதேவியின் நினைவாக வானவன் என்ற பெயரில் எழுதுகிறார். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெஷின் மெக்கானிக். அதே சமயம் மரபுக் காய்கறி விதைகளை மக்களிடம் இலவசமாகக் கொண்டு சேர்க்கும் பணியை செய்துவருகிறார். ஒரக்குழி என்ற நாவலும் எழுதியுள்ளார்.