ஓவியம்: பி.ஆர். ராஜன்
சிறுகதைகள்

குச்சிப்பாளையம் மிஸ்கின் தெரு

அந்திமழை இளங்கோவன் சிறுகதைப் போட்டி 2025-இல் ஊக்கப்பரிசு

ரிஸ்வான்

இன்னிக்கு காலையில பள்ளிவாசலுக்கு பெரியவுக வூட்டுல இருந்து சேதி வந்துச்சு. எல்லாரும்  அப்படியே அசந்து நின்னுட்டாங்க…….

வழக்கமா விடியக்காலைத் தொழுவ முடிஞ்சி பள்ளி வாசலை விட்டு எல்லாம் வெளியானாக.. சிலவுக வழக்கமா பள்ளி வாசல் எதுக்காக நிக்குற வேப்ப மரத்துக்கு கீழ கொஞ்ச நேரம் கூடி இருந்துட்டு ஊர் சேதி ஏதாச்சும் கெடைச்சினா மென்னு துப்பிட்டு  பலா (வம்பு)கழுவிட்டு பொறவு கலைஞ்சி பொழைப்பு கணணியப் பாக்க கெளம்பிருவாக..

செலபேரு பள்ளிவாசலை ஒட்டி இருக்குற சலீம் நாநா(அண்ணன்) கடையில தேத்தண்ணியும் கஜூராவையும் வேங்கி தின்னுபூட்டு  ஊட்டுல இருக்கிறவங்களுக்கு பித்தளைத்தூக்குல தேத்தண்ணி வேங்கிகிட்டு போயிருவாக.. சலீம் நாநா கடையை ஒட்டுனாப் போல வலதுகை பக்கம் கொஞ்சமா வளைஞ்சிங்கன்னா மிஸ்கின் தெரு தொவங்கும்…

ஒன்னு ரெண்டு குடிசைங்களத் தவுற மத்தது ஒலந்து உதுந்துப் போன சோளத் தட்டு மூட்டுன குடிசையங்க, காசநோயில நெஞ்செலும்பு நெம்பிகிட்டு நிக்கிறாப் போல காய்ஞ்சி கருத்துப் போயி பொத்திக்கிட்டு நிக்குற அகத்திக்கீரை கழிகளும், மழையில கரைஞ்சி ஒழுகிப்போன மொட்ட செவுருங்களாதான் தெரியும்.

பள்ளிவாச முத்தவல்லியும் ஊரு பெரிய தலக்கட்டு கப்பக்காரருமான  செய்யது மறைக்காயர் குடும்பத்துக்கு  சொந்தமான மண்ணு.  அவுக பாட்டனாரு அப்பாரு  காலத்துல தைக்கால் தெருவுல  ஊரு தலைக்கட்டுங்களுக்கு தோதா சின்னதா பள்ளிவாச ஒன்ன கெட்டுனாங்க. அப்படியே  அக்கம் பக்கத்துல இருந்த  சப்பாத்திக்கள்ளி பொதருங்களை வளைச்சிப் போட்டு  பள்ளிவாச சொத்தாக்கிட்டாங்க..பொறவு அதுலயே  மையவாடியும்(மயானம்)சின்னதா புள்ளைங்க ஓதுறத்துக்கு தென்ன ஒலைக்குத்துன மதரஸாவும் கெட்டி ஆப்படியே வளைச்சிமடியில கட்டிகிட்டாங்க. செய்யது மரைக்காரு பொறுப்புக்கு வந்த பொறவு பள்ளிவாச சொத்துங்களை மடக்குப் போட பாத்தாரு... வஃக்குபு காரவுக குறுக்கப் பூந்து அணை கட்டிட்டாக.. ஊருக்கு பெரிய தலைக்கட்டுண்ணு பள்ளிவாச கௌரவ முத்தவள்ளியாக்கி வச்சுகிட்டாக.

மிச்சம் கெடந்த இடத்துல பாவப்பட்ட ஏழைப் பாழைக, நிராதரவா நிக்கிறவக, வயசானதுகன்னு  யாராச்சும்  வந்து கேட்டாக்கா  பள்ளிவாச நிர்வாக  சார்பா இடம் ஒதுக்கி குடுத்து உருவானதுதான் இந்த மிஸ்கின் தெரு.   மண்ணை யாரும் விக்க முடியாது. சாகிற வரைக்கு ஆண்டுக் கிடலாம்.   இங்க நிராதரவா நொடிச்சிப் போனவங்க, தங்கிட்டதால அதுவா ஊர் வாயில மிஸ்கின்

(இல்லாதப்பட்டவங்க)தெருன்னு பேரு நின்னுபோச்சு.

குச்சிப்பாளையத்துல தலைக்கட்டுங்க ஊட்டுல  விஷேஷம்ண்டாலும் வெளிநாட்டுப்  பயணம் போறவுகளும்,  ஆண்டவன்  பேருல நேர்ந்துகிட்டு   (ஜும்மா) வெள்ளிக்கிழமை அன்னிக்கு மிஸ்கின்களுக்கு சோறு  குடுக்குறவகலும் மிஸ்கின் தெருவுல இருக்குற இல்லாதபட்ட மனுஷங்களுக்கு பாதியாவுல சோறும் கிண்ணியில கறிஆணமும்(கறிக்குழம்பு)  கொண்ணாந்து குடுத்துட்டுப் போவாக..பொறவு அதுவே ஊரு வழக்கமாயிடுச்சு..

குச்சிப்பாளையத்துல இருக்குறவக எல்லாரும் அப்படி ஒன்னும்  துட்டுக்காரப்பயலுவ இல்ல. அன்னாடம் வெத்தலைக்கொடிகாலுக்கு   தண்ணி பாய்ச்சிறது, அகத்திக்கீரை பறிக்கிறது, முத்துன அகத்திக்கீரை கழிகளை வெட்டுறது, கரும்பு தோட்டம்னு பாடுஎடுத்து கஞ்சிகுடிக்கிரவுகதான்... சொட்டுக்காணு பேருக்குத்தான் கோவணத் துண்டாடம் சொந்த மண்ணு  இருந்துச்சு.. ஆனா வெறட்டு கவுரவம் பாக்குற பக்கிமட்டைங்க  நல்லது பொல்லாததுக்கு  விஷேச ஊட்டுக் காரவுங்க ஊட்டு வாசப்படியில  பத்துவாட்டிவந்து அழைக்கணும் இல்லாட்டி  வெடைச்சுகிட்டு விருந்துல கை நனைக்க மாட்டானுவ. ஆனாக்க மத்தவ வீட்டு விஷேஷத்துக்கு ரெண்டுநாள் முன்னாடியே கைலியும் சட்டையையும் இஸ்திரி போட்டு தயாரா ஆணியில் மாட்டி வச்சிக்கிடுவானுக…

சுபுஹ்தொழுவ முடிஞ்சி எல்லோரும்  வெளியானாங்க. புகாரியும் வெளியெ வந்து பள்ளிவாசலுக்கு  வெளியெ இருக்குற வேப்ப மரத்து கீழ நின்னுகிட்டு பர்கத்அலிக்காக காத்திருந்துச்சு.

புகாரிக்கு பள்ளிவாச எதுக்க  வேப்ப மரத்துக்கீழ சனங்க கூடி நிக்கிறதைப் பாத்ததும் தன்னோட பழைய ஊட்டு ஞாபகம் வந்துடுச்சு.

சுபுஹ் தொழுவிக்குப் பொறவு எப்பவும்   வாப்பா ஆதம்சாய்பு ஊட்டுக்கு எதுக்கால  இருக்குற வேப்பமரத்துக்கு கீழ சாய்வு நாக்காலி போட்டு உக்காந்துக்கிடுவாக.  உச்சியில  நீட்டுக்கு கொத்தா குஞ்சம் வச்ச துர்க்கிதொப்பி.. ஊர்ல எல்லாரும் மரக்கா தொப்பிண்டு சொல்லுவாக. தொப்பியை தலயில இருந்து எடுத்து மடிமேல வச்சுகிட்டு தேத்தண்ணி குடிச்சிகிட்டு தோல் மண்டியில வேலை செய்யிரவகளுக்காக காத்துக் கிடப்பாக. தோல்மண்டிக்கு தோல் போடுறவக அக்கம் பக்கத்து  ஊர்க்காரனுவுக வழக்கமா  வாப்பாவை பார்த்து மண்டிக்கு தோல் போட்டக் கணக்குப் வழக்குகளை பேசிப் புட்டு  கொடுக்கல் வாங்கல் முடிச்சுகிட்டு போவாக.  அப்படியே  யாராச்சும்  பிராதும் கொண்டு வருவாக.. வாப்பா ஆதம்சாய்பு எல்லாத்துக்கும் படிஅளந்துட்டுவர காலையில பசியாற நேரம் வந்துடும்... கொல்லப் பக்கம்போயி வண்டிக் குதிரைங்களுக்கு  புல்லும் கொள்ளும் திங்க கொடுத்துட்டு. செல்லமா தடவிக் கொடுத்துட்டு  வருவாக.(வீட்டுப் பொண்டுப் புள்ளைக அங்கிட்டு இங்கிட்டு காரியமா போவ வார ஒரு குதிரை வண்டியும்.  மண்டி வேலையா போக்குவரத்துக்கு ஒரு குதிரை வண்டியும் அப்ப இருந்துச்சு).  பொறவுதான் தான் பசியாற ஊஞ்சல்ல உக்காருவாக. ஊட்டு நடுக்கால தொங்கும்  நல்லா அகண்டு விரிஞ்ச தேக்கு மரஊஞ்சல். ஆதம் சாய்பு எப்பவும் அந்த ஊஞ்சல்ல உக்காந்துதான் பசியாறுவாக..  அவுக எப்பவும் உக்காருர ஆசனமும், சிலப்ப கண்ணசர படுக்குறதும் அதுலதான்... ஆனா ஊஞ்ச ஆடமாட்டாங்க. 

விசேஷக் காரவுக ஊடுப் போல வடிச்சமா கொட்டனுமாண்டு திங்கறதுக்கு சோறும் கறிஆணமும்  மண்டிக் கெடக்கும்.  மண்டியில வேலை பாக்குரவக, வண்டிக்காரவுக, வீட்டுல சோலி பாக்குறவக இதன்னியில ஒறவுக்காரவுகன்னு வீட்டுல ஜனநடமாட்டமா  இருக்கும்.  உம்மாவும் மனசு கோணாம சளைக்காம பொங்கி போடுவாக…  வாரவக பசியாறிட்டுத்தான் போவனும் மேல் கையி கீழ் கையின்னு பாக்கமாட்டாக எல்லாத்துக்கும் நடு ஊட்டுலதான் சோறு...

.ஹூம் அதெல்லாம் ஒருகாலம்.  எல்லாத்தையும் கெட்டகாலம்  அடிச்சிகிட்டுப் போயி கடல்ல கொட்டிப்புடுச்சு… ஆதம் சாய்போட  சொந்தம் பந்தம் ஒட்டு ஒறவு எல்லாம் ஒன்னுபின்னால ஒன்னா புகாரிய மட்டும் விட்டுட்டு போயிடுச்சு.. இப்ப ஒன்னுமில்ல வயத்துப் பசிக்கே தெனம் போராடுர நெலைமை. 

பர்கத்அலி  யாருமில்ல புகாரி ஊட்டுல வேல பாத்த அலிமாவோட மவன்...ப ர்கத்அலியோட வாப்பா ஒடம்பு அசுகத்துல மவுத் ஆகிட்டாக பொறவு பர்கத்அலிய பள்ளிக்கூடத்துல சேத்ததுல இருந்து பொஸ்தவம்,சொக்காத்துணிண்டு  அவனுக்குத் தேவையானதுக்கு  எல்லாத்துக்கும் ஆதம் சாய்பு அக்கரை எடுத்துக்கிட்டாக.. புகாரி வேற பர்கத்அலி வேறண்டு வெத்தாசம் பாக்க மாட்டாக... புகாரியும் 

பர்கத்அலிகிட்ட வேத்தும காட்டுனதில்ல.  ஆனா பர்கத்அலியோட உம்மா  பெரிய வீட்டுக்காரவுக கிட்ட எப்பவும் மதிப்பு மருவாதையோட  ஒத்தி  நின்னு பழவனும்ண்டு சொல்லிக் குடுத்து வளத்துச்சி..  

பர்கத்அலிக்கு உஸ்கோலு பாடத்துல நாட்டமில்ல... மதரஸாவுல ஒதனும்டு பிரியப் பட்டுச்சு.  பொறவு புகாரியோட வாப்பாத்தான்..மதரஸாவுல அங்கனையேத் தங்கி ஓதுறாப் போல தோது பண்ணிக் குடுத்தாக.. புகாரியும் அம்புட்டு ஒன்னும் படிப்புல ஆர்வமா ஒழப்பு எடுக்கல..  ஒம்பதாவது களாசுல ஒருவருஷம் நின்னுட்டு  படிப்புல மூச்சு முட்டி உக்காந்துடுச்சு… ஆதம் சாய்பும் மவனுக்கு எவ்வளவு வழக்கு சொல்லியும் ஏத்துக்கல. பொறவு தோல் மண்டி கணக்கு வழக்கு,போக்கு வரத்துக்குன்னு  கைக்கு வாட்டமா புகாரிய வச்சுகிட்டாக...

புகாரி எப்பவும் மொட மொடன்னு விரைப்பா வெள்ளச்சட்டையும் கழுத்துப் பட்டையில வேர்வை அழுக்கு ஏறாம இருக்க கைக்குட்டைய சுருட்டி கழுத்து பட்டைக்கு பின்னாடிவச்சிக்கிட்டு அத்தர் வாசனையோடு வெள்ளக் கைலியுமா மைனராட்டும் வாழ்க்கையை வாழ்ந்து பாத்த மனுஷன்.  

பர்கத்அலி பள்ளி வாசல விட்டு வெளியாவுச்சு.

வேப்பமரத்துக்கீழ புகாரி நிக்கிறதை பாத்ததும் மனசுக்குள்ளாற சங்கடமாயிருச்சு..

பர்கத்அலி ஊருக்கு போயிருந்தப்போ புகாரிய பார்க்க வீட்டுக்குப் போய் இருந்துச்சு. அந்த நேரம் லாவா தேவி செய்கிற ஊர்க்கார இஸ்மாயில் ராவுத்தன் ஆதம் சாய்புக்கு குடுத்த கடனுக்காக புகாரி கிட்ட  வூட்ட எழுதி கொடுக்கச்சொல்லி தகராறு பண்ணிக்கிட்டு கிடந்துச்சு. பர்கத்அலிக்கு சங்கடமா போயிருச்சு. பர்கத்அலி இஸ்மாயில் ராவுத்தன் கிட்ட சமாதானம் பேசி அனுப்பிட்டு… புகாரி கிட்ட விலாசம் கொடுத்துட்டு என்னால முடிஞ்சத செய்யிறேன்னு குச்சிப்பாளையத்துக்கு வரசொல்லி இருந்துச்சு..

குச்சிப்பாளையத்துல மிஸ்கின் தெருவுல சிப்பாய் மாமி மௌத் ஆகிட்டதால அந்த இடம் வெறுமனே கந்தல் கோலமா கெடந்துச்சு..பள்ளிவாச உடமைக்காரவுகளான  செய்யது மரைக்கார் கிட்ட பேசி பாக்குலாமுண்டு எண்ணம் இருந்துச்சு... ஆனா இப்ப அது தோதுப் படாதுப் போல…

நேத்து ராத்திரி பள்ளிவாச நிர்வாகக் குழுவுக்கும்  வஃக் போர்டு காரவுகளுக்கும் கூட்டம் நடந்தப்போ பர்கத்அலி ஊடால சின்ன திருத்தம் சொல்லிருச்சு.  சட்டுன்னு கையில தீச்சட்டிய பிடிச்சாப்போல அதுர்ந்து எழுந்த செய்யது மரைக்காயர் கோவத்துல  மருவாதி இல்லாம வைஞ்சுப் புட்டாரு. நிர்வாக கூட்டத்துல தொழவைக்கிற நீயி ஊடால நாக்கப் போடக்கூடாது... அர்த்தமாச்சா... எந்திரிச்சுப் போயி வெளியே நில்லுன்னு கேவலமா பேசிப்புட்டாங்க.  இந்த நேரத்துல புகாரிக்கு மிஸ்கின் தெருவுல மண்ணுகேட்டு செய்யது மரைக்காயர் எதுக்க நிக்கிறது சரிப்படாது….இருந்தாலும் நம்பிக்கையோட வந்திருக்கும் புகாரி நாநாவுக்காக எப்பேர்பட்ட மானக் கேடு வந்தாலும் ஏத்துக்கிடலாம்னு மனசுல தோணுச்சு.. 

சலாம் அலைக்கும் புகாரி நாநா..

புகாரி பழைய ஊட்டு ஞாபகத்துல இருந்து உழுந்து எந்திரிச்சு வெளியே வந்துச்சு. 

பர்கத்அலி புகாரி கிட்டக்க வந்து கைகளைப் பிடிச்சு சலாம் குடுத்துச்சு.

கையெல்லாம் கடு கடுன்னு மொரப்பா இருந்துச்சு...தெனம் வயத்து பொழப்புக்கு நெறைய பாடு எடுத்து இருக்கும் போல.  நோவுல உழுந்த கோழிக்குஞ்சாட்டம்  நொடிச்சுப் போய் நைய்யிஞ்சிப் போனக் கைலியோட நிக்குற புகாரியை பார்த்ததும் பரக்கத்அலிக்கு கண்ணுல ஈரம் தட்டுச்சு..

நேத்து இஸ்மாயில் ராவுத்தன் மறுபடியும் வெவகாரம் பண்ணிட்டாரு.. அலி ஒரே பிடியா ஒருகிழமைக்குள்ளாற ஊட்ட காலிப் பண்ணித் தரணுமுண்டு கெடு வச்சுட்டாரு.... தங்க நிழல் இல்லாம செரமப்படுறேன்... ரொம்ப வருஷத்துக்கு பொறவு மறுபடியும் ஃபரிதா புள்ள உண்டாயிருக்கு இந்த நெலைமையில  எங்க போயி நிக்கிறதுன்னு விளங்கலண்டு சொல்லிட்டு பர்கத் அலியோட கைகளை பிடிச்சிகிட்டு கண்ணீர் விட்டுச்சு…

பர்கத்அலியோட மனசு கலங்கிடுச்சு…எத்தனை குடும்பத்துக்கு ஆலமர நிழலா இருந்த ஆதம் சாய்புக் குடும்பம் அவருக்குப் பொறவு இன்னிக்கு நிராதரவா நிக்குது…

சலீம் நாநா கடையில வயித்து பசியாறிட்டு தேத்தண்ணி குடிச்சுட்டு.. செய்யது மரைக்காயர் வீட்டுப் பக்கம் போனாக ... போவுற வழிநெடுக்க 

பர்கத்அலிக்கு மனக் கலக்கமாவே இருந்துச்சு… எங்கே செய்யது மரைக்காயர் கேவலாமா ஏசிப்புடுவாகலோண்டு சங்கடமா இருந்துச்சு.   உதவி கேட்டு வந்த மனுஷனை அசிங்கப்படுத்தி அனுப்ப வேண்டி வந்துடுமோன்னு கலக்கமா  இருந்துச்சு…

கால் கடுக்க நின்னு ரொம்ப நேரமாச்சிது…யார் யாரோ வீட்டுக்குள்ளாற போறாக வராக..யாரும் என்ன ஏதுன்னு கேக்கல.  கதவை தட்டிப் பாக்க பயமா இருந்துச்சு…சகல  சம்பத்து உள்ள பெரியவக ஊட்டுக் கதவை தட்டிக் கூப்புடுறது மரியாதையும் இல்லையின்னு பர்கத்அலிக்கு தயக்கமா இருந்துச்சு...

ஒரு மணி காலத்துக்குப் பொறவு மரைக்காயரோட பிள்ளை சவுகத் வெளியே வந்து என்னன்னு கேட்டுச்சு...

மையவாடி மராமத்து செய்ய ஆள் வேணுமுண்டு பெரியவக அறிக்கை விட்டு இருந்தாக…ஆளுவந்திருக்கு… பெரியவகள பாக்கனும்.

கேட்டுப்புட்டு உள்ளே போயிடுச்சு. பொறவு எந்த சேதியுமில்ல…

போவுறதா காத்து நிக்கிறதாண்டு தெரியல. புகாரிநாநா வை இந்த நெலமைக்கு கொண்ணாந்து நிப்பாட்டிட்டோமேண்டு  பர்கத்அலிக்கு மனசு வலிச்சது.  

காலஞ்செண்டு…கதவு தெறந்துச்சு…செய்யது மரைக்காயர் புட்டத்தை அகட்டிக்கிட்டு திண்ணையில் ஒருக்கழிச்சு உக்காந்து... கீழ்படியில நின்னுகிட்டு இருந்த பர்கத்அலியையும் புகாரியையும் புருவத்தை தூக்கி என்னண்டு கேக்குறாப் போல பாத்தாரு…

அவுக  பார்வையிலநேத்து ராத்திரி  பர்கத்அலிமேல இருந்த எரிப்பு மிச்சம் இருந்துச்சு…

பெரியவுக பள்ளிவாச மையவாடிக்கு தோதான ஆள் கேட்டு இருந்தீக... அதான்…….

பர்கத்அலிக்கு அதுக்கு மேல பேச்சை நீட்ட முடியயல.

ஒன்னை யாரையும் கூட்டியாரச் சொல்லலையே… நேத்தெ சொன்னே பள்ளிவாச விஷயத்துல தலையை நுழைக்காதேன்னு…உன் பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டு குத்துனாத்தான் ஒனக்கு புத்தி வரும்போல... 

எல்லாத்துக்கும் ஆண்டவனுக்குப் பொதுவா பெரியவுக கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. மனசுல ஏத்து மன்னிக்கனும்...

பர்கத்அலி ரொம்பவும் தாழ்ந்து பேசி ஒருவழியா மிஸ்கின் தெருவுல புகாரிக்கு எடம் புடிச்சு குடுத்துச்சு.. அதன்னியில ஊட்டுக்காரி ஜமீலா கால்ல கெடந்த கொலுசுவை வித்து வீடு தோதுபண்ண காசும் கொடுத்துச்சு.. புகாரி இப்ப மிஸ்கின் தெருவுக்கு பழய ஆளாயிடுச்சு..

மையவாடியில கள்ளிச்செடி பொதரும் கரியான் புத்துமா மண்டி கெடந்துச்சு. சீர்படுத்த  இருபது நாளாச்சும் மூச்சு நெக்க சோலி இருந்துச்சு. வஃக்போர்ட் தலைவரு சுலைமான்   புகாரியோட கஷ்ட்டத்தை பாத்து தெனம் அம்பது ரூவா ஒழைப்புக் கூலிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாரு... இதுக்கெல்லாம் பின்னாடி பர்கத்அலியோட விசுவாசம் இருந்துச்சுன்னு புகாரிக்கு வெளங்குச்சு. வஃக்போர்டு தலைவரு முன்னாடி நின்னதால செய்யது மரைக்காயரு அதுக்குப் பொறவு ஒன்னும் கண்டுக்கல  இருந்தாலும் பர்கத்அலி புகாரி மேலயும் சைத்தானோட பார்வை இருந்துச்சு.  

 பர்கத்அலியும் நேரம் கிடைக்கிறப்போ புகாரிக்கு தொணையா  முள்ளுலயும் கல்லுலயும் சேர்ந்து பாடுஎடுத்துச்சு..

ஜும்மா(வெள்ளிக்கிழமை) தொழுவைக்குப் பொறவு அரிசிகடை நூர்மொம்மது ஊட்டுல இருந்து மிஸ்கின் தெருவுக்கு பங்கிட நெய்சோறும் கிண்ணியில கறியாணமும் வந்துச்சு… புகாரிக்கு ஊட்டுக்கு .சோறு வந்தாக்கா கை நீட்டி வேங்குறதா வேணாமாண்டு தயக்கமா இருந்துச்சு மனசுக்குள்ளாற சங்கடமாயிருந்துச்சு..ஃபரிதாவுக்கு புகாரியோட நெலமை புரிஞ்சுது…

வீட்டத் தேடி வர்ர  ஆண்டவனோட  ரிஸ்ஸக்(பொருள்)ஐ தட்டாதீங்க.. புள்ளையும் நல்ல சோறு திண்டு நாளாயிட்டு.. நம்மளோட பழய வாழ்க்கையை மறந்தாக்காத்தான் புதுசா நம்மள தேடி வந்திருக்க வாழ்க்கையை வாழமுடியும்.. நீங்க கைய்ய நீட்டி வேங்க வேண்டாம்… நான் வேங்கிக்கிறேன்.. பேச்சுக்குப் பின்னாடிவயத்துப் புள்ளக் காரியோட பசியையும் ஏக்கத்தையும் புகாரியால ஒணர முடிஞ்சது…

புகாரி எந்திரிச்சுப் போய் வாசப் படியில சோத்துக்காக காத்து நின்னுகிட்டு இருந்துச்சு.. பாதியா நேறைய  மணக்க மணக்க நெய்சோறும் கறியாணமும் வேங்கிகிட்டு வீட்டுக்குள்ளாற வந்தப்போ.. ஆதம் சாய்போட நெனைப்பு வந்துச்சு… வாப்பா ரொம்ப பிரியமா சாப்பிடுவாங்க… கண்ணு கலங்குச்சு... அவுக கடைசிகாலத்துல வாய்க்கு ருசியா எதையும் செஞ்சி குடுக்க முடியாமப் போச்சு.

புகாரி மத்தவங்க கிட்ட கைநீட்டி சோறு வாங்க தயங்கும்ங்குற எண்ணத்துல பர்கத்அலியும் பித்தளை தூக்குல நூர்மொம்மது ஊட்டுல இருந்து தனக்கு வந்த நெய்சோறும் கறியாணத்துலயும் பங்கு கொண்ணாந்துச்சு. குச்சிப் பாளயத்துல முக்காவாசிப் பேரு ஊட்டுல இன்னிக்கு மதியம் இந்த சோறுதான் பசியாறன்னு தெரிஞ்சுச்சு… புகாரிக்கு  மனசுல இருந்த ஏதொ ஒரு சங்கடம் வெளகுச்சு… அதுக்குப் பொறவு மிஸ்கின் தெருவுக்கு யார் ஊட்டுல இருந்து நேத்திக் கடன் சோறு வந்தாலும் தயக்கம் இல்லாம கைநீட்டி வேங்கிகிடுச்சு… இருந்தாலும் குச்சிப்பாளையத்து சனங்களுக்கு நன்றிக் கடனா ஒருநாளைக்கு தான்ஊட்டு சார்புல விருந்து வச்சு சோறும் கறியும் குடுக்கனும்ண்டு எண்ணம் இருந்துச்சு..

புகாரி மையவாடிய சீர்பண்ணிட்டு தானா முன்வந்து பள்ளிவாசக் குளத்தை சுத்தப் படுத்துறது சின்ன சின்ன மராமத்து வேலைகளை பாக்க ஆரம்பிச்சுடுச்சு.மனசுக்குள்ளார ஒரு சந்தோஷம் ஈரம் தேங்கி இருந்துச்சு.. மிஸ்கின் தெருவுல சின்ன குடிசையில இருந்தாலும் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு.. ஃபரிதாவோட முகமும் இப்ப நல்லா மலந்து இருந்துச்சு..இதுக்கெல்லாம் காரணம் ஃபரிதா சொன்னதுப் போல பழசையெல்லாம் மறந்ததாலத்தான் இருக்கும்ண்டு தோணுச்சு…

கொஞ்சக் காலத்துக்குப் பொறவு ஃபரிதா ஆம்பளைப் புள்ளைய பூமிக்கு கொண்ணாந்துச்சு...ஒதுங்கறதுக்கு நெழலு... மடியில ஆம்பள புள்ளைண்டு புகாரிக்கு மனசு சந்தோஷத்துல குபுக்குண்டு  பொங்குச்சு… படைச்சவனுக்கு நன்றி சொல்லனும் புள்ளைக்கு அகீகா(குழந்தைப் பிறப்புக்கான விருந்து) வைக்கனும். குச்சிப் பாளையத்து காரவுங்களுக்கு அகீகா சோறு குடுக்கனும். இஸ்மாயில் ராவுத்தன் ஊட்டக் காலிப் பண்ணித்தா மேக்கொண்டு ஏதாச்சும் காசு தாறேண்டு சொல்லிருந்துச்சு.

புகாரி .ஃபரிதாவுக்கு ஒடம்புத்தேறி உக்காந்ததும் பொறந்த மண்ணுக்கு போயி இஸ்மாயில் ராவுத்தனை பாக்குற எண்ணத்தோட கெளம்புச்சு... மவ சுலைக்கா அப்பா ஊருக்குத் தானே போறே... நம்ம பழைய ஊட்டை தூர நின்னாச்சும் பாக்கனும் போல இருக்குபா நானும்  கூட வாரேண்டு அழுதுச்சு. புகாரிக்கும் ஃபரிதாவுக்கும்  நெஞ்சை புரட்டிகிட்டு அழுகை வந்துச்சு.. மவள நெஞ்சோடு அணைச்சிகிட்டு அழுத்துச்சுங்க… மவ சுலைக்காவை தேத்தி உக்காரவச்சுட்டு புகாரி கெளம்பிருச்சு..இஸ்மாயில் ராவுத்தனை பாத்து பேசிட்டு திரும்பிடுச்சு...தான் வாழ்ந்த ஆதம் சாய்பு தோல்மண்டி வீட்டை எட்டிப் பாக்க மனசுல தைரியம் வரல…

வாரக்கிழமையில பணம் தோது பண்ணித் தாரதா வாக்கு குடுத்தபடி இஸ்மாயில் ராவுத்தன் பத்தாயிரம் பணமும் பிள்ளைகளுக்கு சட்டைத்துணி எடுத்துக்க ஆயிரம் ரூவாவையும் கொண்ணாந்து குடுத்துட்டு புகாரி கைகளை புடிச்சுகிட்டு தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுடு புகாரிண்டு சொல்லி கண்கலங்கிட்டுப் போயிருச்சு... தப்பு செஞ்சிட்டாலும். நேரம் வந்தாக்க அதை உணந்து பாக்குறவன்தான் மனுஷன்.

பர்கத்அலி கிட்ட அகிகா விருந்து குடுக்குறதைப் பத்தி ஆலோசனை கேட்டப்போ...தயங்குச்சு.. வந்த காசுல ஏதாவது பொழைப்பை தேடிக்குங்க நாநா, நெலமை சீரானதும் சிறப்பா செய்யலாம்டு சொல்லுச்சு…

ஒண்ணா நின்னு தோள்குடுக்க ஒடம்பிறப்பா உன்னையும்  ஒதுங்கறதுக்கு குடிசை நிழலும் சந்தோஷப் பட்டுக்கிட புள்ளையும் குடுத்த ஆண்டவனுக்கு நம்ம சந்தோஷத்தையும் நன்றியையும் செய்ய வேணாமா அலி?  அதுக்குத்தானே நம்மளுக்கு புள்ளைப் பிறந்தா அகிகாக் குடுக்குறதை கடமை ஆக்கி வச்சிருக்கு…அந்தக் கடனை ஒடனே முடிச்சுடனும் என்னோடு  போவட்டும் எம்புள்ளை கடன் சுமையோடு வளரவேண்டாம்.

பர்கத்அலியால மேக்கொண்டு எதையும் பேச இயலல. இஸ்மாயில் ராவுத்தன் கொண்ணாந்து குடுத்த காச பர்கத்அலி கிட்ட  குடுத்துட்டு..பர்கத்அலியோட ஊட்டம்மா நகையை திருப்பி கிட்டு  மிச்சப்படுற காசுல காரியத்தை சிறப்ப செஞ்சிகுடு அலி... எனக்கு உன்னைய விட்டா ஒறவு யாரு இருக்காண்டு சொல்லி கண்ணு கலங்குச்சு. 

மொதல்ல பிள்ளையோட விஷேஷத்தை இறைவன் நாட்டப்படி நல்ல விதமா முடிச்சுப்புடலாம்... ஜமீலாவோட நகையை பொறவு  பாத்துக்கிடலாம் நான் கடனா எதையும் செ்ய்யல உங்களுக்குச் செய்ய வேண்டிய  நேத்திக்கடனதான் செஞ்சி இருக்கேன் நாநா...

புகாரி ஏத்துக்கல புடிவாதமா இருந்துடுச்சு.

பர்கத்அலி குச்சிப்பாளையத்துல ரொம்ப பழவுனவுங்களுக்கு ஜும்மாஹ் தொழுவைக்குப் பொறவு என்னோட நாநா புகாரியோட புள்ளைக்கு அகீகா விருந்து வச்சிருக்கோம் வந்துடுங்கன்னு அழைப்பு கொடுத்துச்சு.

செலவுங்க ஆண்டவணோட நாட்டம்ண்டங்க...செலவுங்க என்னது குச்சிப் பாளயத்துக் காரவுங்களுக்கு மிஸ்கின் தெருவுல தாவத்தா..குதுரத்து(ஏற்கமுடியாத)தான்ண்டு இளக்காரமா பேசிபுட்டுப் போனாக....

மிஸ்கின் தெருவுல இருக்குறவக எல்லாத்துக்கும் நெய்சோறும் கறியாணமும் நெறைவா பங்கிட்டாச்சு... நெய்சோறு, கறியாணத்தோட வாசம் மிஸ்கின் தெரு முச்சூடும் சூழ்ந்து  புகைமாதிரி சுத்திகிடுச்சு.  

ஜும்மா தொழுவைக்கு பொறவு பெருமைக்கார குச்சிப் பாளையத்து சனம் யாரும் தாவத்துகுக்கு மிஸ்கின் தெருவுக்கு வரமாட்டாகன்னு பர்கத் அலியோட மனசுல பட்டுச்சு.  முறையா நாம அவுக ஊட்டுக்கு சோறுகொண்டுபோய் குடுக்குறதுதான் மரியாதைண்டு தோனுச்சு..வாடகைக்கு வேங்கி வச்சிருந்த பாதியவுல நெய் சோறும் கிண்ணியில கறியாணமும் வச்சு பெரிய மரவையில(பெரியதட்டு) வச்சு குச்சிப்பாளயத்து ஊடுங்களுக்கு கொண்டுபோச்சு.. 

 நெறைய ஊட்டுல ஆம்பளைக இல்லண்டு சொல்லி கதவை திறக்கல. பர்கத்அலி கொண்டு போன அகீகாஹ் சோத்தை தின்னையில வச்சுட்டு ஏத்துகிட்டா அவுகளுக்கு ஹலால்(அனுமதிக்கப்பட்டது) இல்லண்டா ஹாரா(தடைசெய்யப்பட்டது)முண்டு மனசுல நெனைச்சிகிட்டு வந்துடுச்சு. 

பாக்கி நிக்கிறது கப்பக்கார செய்யது மரைக்காயரு ஊடு... புகாரிக்கும் பர்கத்அலிக்கும் தயக்கமா இருந்துச்சு.

ஆண்டவன் நாட்டம்ண்டு நெனைச்சு பர்கத்அலி இரண்டு பெரிய மரவையில பெரியகுடும்பத்துக்கு நெறப்பமா  நெய்சோத்தையும், பக்கட்டுல கறியாணத்தையும்..ஊத்தி வாழை இலை போட்டு முச்சூடுமா மூடி... புகாரியும் பர்கத்அலியும் கொண்டு போனாக... 

வழக்கம் போல யாராச்சும் உள்ளே இருந்து வருவாகண்டு காத்து கெடந்துச்சுங்க…சௌகத் வந்து பாத்துட்டு சேதிகேட்டுகிட்டு  உள்ளே போயிட்டு திரும்பி வந்து கொல்லைப்பக்கத்து வழியா பெரியவுக உங்களை உள்ள வரச்சொன்னாங்கண்டு சொல்லிட்டுப் போயிருச்சு...

பர்கத்அலியும் புகாரியும் சோத்தை சுமந்துகிட்டு கொள்ளைப் பக்கம் போனாக…செய்யது மரைக்காயரு முகம் நெருப்பு புடிச்சு எரியிறாப்போல செவந்து இருந்துச்சு…

ஏண்டா… மருவாதை கெட்ட மூதிகலா  யார் வூட்டுக்கு மிஸ்கின் தெருவுல இருந்து சோத்தை கொண்ணாந்தீக…செய்யது மரைக்காயரு மிஸ்கின் தெரு சோத்தை திண்டாண்ணு ஊரு பொறம் பேசுறதுக்கா...

ஆத்திரத்தோடு நெய்சோத்தையும் கறியாணத்தையும் அங்க கெடந்த குழியில கொட்டி மண்ணை அள்ளிப் போட்டு மூடிட்டு உள்ளப் போயிட்டாரு...

பர்கத்அலிக்கு புகாரிக்கும் மனசுக் குமுறி அழுவ வந்துச்சு... இதெல்லாம் நடந்து கொஞ்ச காலமாயிட்டு…

இன்னிக்கு காலையில பெரிய ஊட்டுலயிருந்து சேதி வந்துச்சே...அது சைய்யது மரைக்காயரோட  மரண சேதிதான்…

சையது மரைக்காயர் நெறைய பேரு மனசுல இது போல பாறாங்கல்லை தூக்கிப் போட்டு செதைச்சி இருந்தாலும்… பாத்துக்கிடுங்க..சையதுமரைக்காயர் பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு ஜனாஸாத் (இறுதிசடங்கு)தொழுவையில பர்கத்அலி ஆண்டவன் கிட்ட துவா(பிரார்த்தனை) செய்யும் போது ஊருசனம் ஒண்ணாக்கூடி... எல்லாதையும் மறந்துட்டு ஆமீன்ண்டு சத்தமா சொல்லுச்சுங்க…

மௌத்(மரணம்)ங்குறது மனுஷனுக்கு தண்டனை இல்ல... தன்னால பாதிக்கப் பட்டவக கிட்ட இருந்து பாவமன்னிப்பு கேக்குறதுண்டு உங்களுக்கு நல்லா வெளங்கி இருக்கும்…

ரிஸ்வான்

சென்னையில் வாழும் எழுத்தாளரும் கவிஞருமான ரிஸ்வானின் இயற் பெயர் த. அன்சாரி.  பூமாக்கிழவி எனும் ராக்காச்சி  என்ற கிராமிய நாவல் வெளியாகி உள்ளது. பல சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், அரபி, இந்தி, மலையாளம் ஆகிவ மொழிகளை அறிந்துள்ள இவர்பல நாவல்கள், கவிதைத் தொகுப்புகளை எழுதி உள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram