ஓவியம்: ஜீவா
சிறுகதைகள்

குடைச்சல்

சிறப்புப் பரிசு பெறும் சிறுகதை

சு. வேணுகோபால்

14 E பேருந்து கல்லூரி வாசலில் நிறுத்தி இறக்கிவிட்டுச் செல்லும். அக்கா மகள் லாவண்யா வாட்சைப் பார்த்து “கொஞ்சம் வேகமா போ மாமா” என்றாள். “கால் மணி நேரத்துக்கு முன்னாலே நீ கிளம்பி நிக்கணும் பாப்பா. நீ வர்றன்னிக்கெல்லாம் இதே பொழப்புத்தான்” யமாகா வண்டியை ஓட்டிக்கொண்டு கோபம் வந்ததுபோல சொன்னாலும் அக்கா பிள்ளைகளையோ அத்தைமார்களையோ அக்கா மார்களையோ முறைப்பெண்களையோ பிறர்பார்க்க விடவேண்டிய இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிடுவதில் ஒரு மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கத்தான் செய்கிறது. ஓட்டுவதில் ஒரு லாவகமும் பூரிப்பும் தோன்றிவிடுகிறது.

காலோடை சிறுபாலம் வரவும் வேகத்தைக் குறைத்து மெல்ல வண்டியை வளைய ஓட்டினான். எதிரே இடது பக்கம் பால்கேனை கொடுத்துவிட்டு வந்த கணேசன் கையைத்தூக்கி சந்திரசேகரனை நிறுத்தும்படி காட்டினான். சற்றுத் தள்ளிப்போய் நிறுத்தி திரும்பி ‘பாப்பாவை விட்டுட்டு வந்துடறேன்’ என்றான். அதற்குள் வண்டியின் பக்கவாட்டு ஸ்டாண்டைப் போட்டு நிறுத்திவிட்டு வேகமாக வந்தான். “அட 14E யை பிடிக்கனும்” “அவன் இப்பத்தான் ஹைஸ்கூலவே தாண்டுவான். பிடுச்சிடலாம்” “என்ன” “டேய் தனலட்சுமிக்கு ஆக்சிடென்ட் ஆயிடிச்சாம்டா” “எப்ப” “மூணு நாள் ஆகுதன்னான்” “நிஜமாவா” “ஆமா” “உனக்கு யாரு சொன்னா” “நொட்டாங்கை சீனு” “எப்ப சொன்னான்” “இப்பதான்” “அவனுக்கு எப்படித் தெரியும்” “அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அவனுக்கு தெரியுமாம்” “மோசமான ஆக்சிடென்ட்டா. எங்க இருக்காங்க” “இடது கால் எலும்பு ஒடைஞ்சிட்டதா சொன்னான். பெரியாஸ்பத்திரிலதான் சேர்த்திருக்காங்களாம்” “என்னடா இப்படி சொல்ற காலங்காத்தால” “சரி பாப்பாவ விட்டுட்டு வா பேசிக்கலாம்” வண்டிக்கு நடந்தபடி சட்டையை வயிற்றுக்குமேல் ஏற்றி வேட்டியை தளர்த்தி மறுபடியும் இடவலம் டக்கு சொருகி இறுக்கிக் கட்டினான்.

வண்டியை நிதானமாக ஓட்டினான். “யாரு மாமா” “ஈஸ்வரி அத்த பொண்ணு” “நாட்ராயன் தாத்தா பேத்திதானே” “ஆமா உனக்கு தெரியுமா” “ஏன் மாமா திருவிழாவுக்கு வர்றப்பல்லாம் என் கையப்பிடிச்சு பேசுவாங்க. ரொம்ப மோசமான அடியா” “தெரியல கால் ஒடஞ்சுருச்சுன்னா பலமாதான் இருக்கணும்” “ச்சீ பாவம் நல்லா பேசும் அந்த அக்கா”

லாவண்யாவை ஏற்றிவிட்டு சந்திரசேகரன் வண்டியைத் திருப்பினான். முத்துசாமிச் செட்டியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை. காலையில் பத்து மணிக்கு போனால் போதும். இரவு ஒன்பது மணிவரை இருக்க வேண்டும். சில சமயம் ஒன்பது மணிக்கு மேல்கூட ஆகும். வெளியூர் பார்சல் என்றால் இருந்து பெட்டியில் பொருட்களைச் சரியாக அடுக்கிக் கட்டி ஆட்டோவிலோ காரிலோ ஏற்றிவிட்டுத்தான் போகமுடியும்.

ஒரு மாதத்திற்கு முன் ராஜாத்தி அக்கா வேப்பமரத்தடியில் தனலட்சுமி நின்றிருந்ததை கவனிக்காமல் சிவராஜ் அண்ணா வெங்காயப் பட்டறையை தாண்டும்போதுதான் சட்டென யோசனை வந்தது. வண்டியைச் சட்டென நிறுத்தி “ரகு இறங்கி நடந்து போயிட்டே இரு தனலட்சுமி நிக்குதுபோல இறக்கிவிட்டு வந்து கூட்டிப் போறேன்” “சரி, சரி”

திரும்பி வந்து வட்டமடித்து வேப்பமரம் அருகில் நிற்கும் தனலட்சுமி முன் நிறுத்தினான். “சட்டுனு கவனிக்கவில்லை” “எல்லாம் விட்டுட்டு போறவிகதானே. யாராவது வந்தா பேசிக்கிட்டே நடக்கலாமன்னிருந்தேன்”. “நெசமாளுமே கவனிக்கலப்பா” “இனி கவனிச்சு என்ன ஆகப்போகுது மாமா. காலம் ஓடிப் போச்சு. தாத்தா பாட்டி இருக்கத்தண்டிதான் வருவேன். அப்புறம் எனக்கு இங்க என்ன உறவு இருக்கு மாமா. அப்படி அப்படியே நின்னு போய்டும். நினைச்சா வருத்தமா இருக்கு” “ஏறிக்க பிள்ள” மிகுந்த மகிழ்ச்சியுடன் முந்தானையை மறுபக்கம் கொண்டுவந்து ஒரு பக்கமாக அமர்ந்து கம்பியை பிடித்துக்கொண்டாள். “நல்லா இருக்கியா மாமா” “நல்லா இருக்கேன்” “நீ நல்லா இருக்கியா புள்ள” “ம்ம் இருக்கேன் மாமா” “நல்லா இருக்கியான்னு கேட்டேன்” “நல்லா இல்லாம என்ன” “பிள்ளைக பிள்ள” “பெரியவ ஏழாம் வகுப்பு. சின்னவன் அஞ்சாம் வகுப்பு. மத்திப்பாளையம் ஸ்கூலுக்கு போறாங்க மாமா” நடந்து போய்க்கொண்டிருக்கும் ரகுப்பக்கம் திரும்பி “விட்டுட்டு வர்றேன்” வைகாட்டிவிட்டு ஓட்டினான்.

முதலில் சின்ன சங்கடம் இருந்தது தன்னைவிட உயரமாக இருப்பாளோ என்று. ஆனால், அன்றுதான் தெரிந்தது உயரம் ஒரே உயரம்தான் என்று. இருந்தால் ஒரு நூல் அளவு உயரமாக இருப்பாள். அது கூட நெருங்கி நடக்கத் தொடங்கியபின் சமமாக இருப்பதாகத் தெரிந்தது. பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் பி.காம் படித்தவள். மாநிறத்தைவிட நிறம். எண்ணெய் தேய்க்காது தலை குளித்த நாட்களில் முடி மினுமினுவென மின்னும். புருவம் சற்று அடர்த்தி கூட. எடுப்பான மூக்கு. அந்த ஜிமிக்கி, நெளுநெளு கடை கம்பெனி சேலையில், சடையின் அசைவு, பிடிப்பான தேகம் அவளுக்கு ஒரு தனியான லட்சணத்தை கொடுத்தது. அந்த லட்சணம் தொந்தரவு செய்ய ஆரம்பித்தபின் வண்டியைவிட்டு இறங்கியவுடன் ஓடிப்போய் கடக்கும்முன் பேச ஆரம்பித்தான்.

அவளுக்கு மெல்ல விருப்பம் உண்டான பின்பும் “பார்ப்போம் பார்ப்போம்” என்றாள். பத்து பதினைந்து நாட்கள் அவள் திடீரென வரவில்லை. அப்போது அவளிடம் கைப்பேசியும் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடைய தாத்தா வெற்றிலைப் பிரியர் என்பதை சொல்லும்போதுதான் சாந்தலிங்க முதலியார் என்றாள். சந்திரசேகரன் தன் தாத்தா பெயரை செங்காளியப்ப கவுண்டர் என்று தன் ஜாதியை குறிப்பால் வெளிப்படுத்திவிட்டான். அந்த வகையில் அவளுக்கு ஒரு வித தயக்கம் குறைந்துவிட்டது. பின் அவள் ஜவுளிக்கடையைவிட்டு வரும் நாளில் மடக்கிப்பிடித்து கௌரிசங்கர் கடைக்கு அழைத்துப்போய் சாம்பார்வடை, காப்பி வாங்கி தந்தான். நெருக்கம் கூடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அவள் பதினைந்து நாட்கள் வரவில்லை. ஜவுளிக்கடைக்குள் போய் அவள் இருந்த வரிசையில் உள்ள தோழிகளிடம் கேட்கவும் சங்கடமாக இருந்தது. இனி வரமாட்டாள் என்று மங்கத் தொடங்கியபோதுதான் மறுபடியும் வந்தாள்.

பேரூரிலேயே கூட்டம் எகிறிவிட்டது. அன்று திருமண விசேஷ நாள். எப்படியோ முண்டி ஏறினாள். படிகளில் ஏறி கம்பியை பிடித்தவள் ஹேண்ட் பேக்கை முன்னால் இருந்த அம்மாவிடம் தந்துவிட்டு பார்த்தாள். மெல்ல சிரித்தாள். துடிப்பு இல்லை வேர்வை முகப்பூச்சை காட்டியது. முந்தானையால் தொட்டு துடைத்துக் கொண்டாள். அங்கிருந்து பார்த்து சிரித்தால் காபி கடைக்கு மாலை அழைத்துப்போ என்று பாவனை காட்டுவாள். அவள் அப்படி சொல்லும்போது இருப்புக்கொள்ளாது. குஷி ஏற்பட்டுவிடும். சரி என்பான். அன்று அதிகம் திரும்பி பார்க்கவில்லை. பார்த்தபோதும் துள்ளாட்டம் இல்லை.

காந்திபுரத்தில் தொமுதொமுவென இறங்கினார்கள். அவள் இறங்கி பூக்கடை பக்கம் வந்தாள். கர்ச்சிப்பை எடுக்க ஹேண்ட்பேக் ஜிப்பை திறந்து பார்த்தாள். இல்லை. பக்கவாட்டு ஜிப்பைத் திறந்துப் பார்த்தாள் அதிலும் இல்லை. மறுபடி மேல் பெரிய ஜிப்பை திறந்து பார்த்தபோதுதான் வைத்திருந்த 750 ரூபாய் திருடு போனது தெரிந்தது. சந்திரசேகரன் இறங்கி ஓடி பிடிக்க வருவதைப் பார்த்து பேசாமல் நடக்கத் தொடங்கினாள். சாலையை குறுக்காக கடக்கும்போது “என்ன கிரிசி ஒரு மாதிரி இருக்க” என்றான். “750 ரூபாய் வச்சிருந்தேன். 700 ரூபாய் தாரணிக்குத் தரணும். யாரோ தூக்கிட்டாங்க. கூட்டம் இன்னைக்கு ரொம்ப ஜாஸ்தி. என்னால ஏறவே முடியல. கம்பியை பிடிச்சதும் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த அம்மாகிட்ட கொடுத்தேன்”. “அவங்க எங்க இறங்கினாங்க”. “பிரகாசத்திலேயே இறங்கிட்டாங்க. தெரிஞ்சவங்களா” “இல்ல” “கல்யாணத்துக்கு போறவங்களாட்டம் இருந்தாங்க பையையும் தொங்கப்போட முடியல கூட்டத்திலே எங்கெங்கோ இழுத்துட்டு போச்சு. வம்பா இழுத்துத்துத்தான் அந்த அம்மாகிட்ட கொடுத்தேன். என் கஷ்ட காலம்” முகம் சிவந்து கண்ணீர் திரை முட்டியது. “அக்கா இறந்து இன்னையோட பதினைந்து நாள். அக்காவ எழந்துட்டு வந்தா இங்க இப்படி. எதைத்தான் தாங்குறது” “என்னாச்சி” “எல்லாம் சொல்ற மாதிரியா இருக்கு” “நான் மதியம் ஆயிரம் ரூபாய் கொண்டுவந்து தர்றேன். அவர்களுக்கு கொடுத்திடு” “இல்ல இல்ல வேணாம். என் பாடு என்னோட இருக்கட்டும். போறதெல்லாம் போகட்டும். நான் என்ன செய்ய முடியும்” “இல்ல நீ ஏதும் நினைக்காத வாங்கிக்க” “இல்ல சந்திரா நாம இத்தோட பழகினது போதும். அந்த எண்ணத்தை விட்டுவிடுவோம். என்னாலையும் இனி வேற மாதிரி பழகமுடியாது. ஒரு ஆள் போனது போதும். என்னால முடியாதுப்பா”

மதியம் ஆயிரம் ரூபாய் கொண்டு சென்று கொடுத்ததற்கு வாங்க மறுத்து விட்டாள். அவளது அக்கா காதல் மணம் புரிந்து ஒன்பது மாதத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காரணத்தை மறுநாள் சொன்னாள். வயிற்றில் ஐந்து மாத சிசு. அப்பா அம்மா எதிர்ப்பை மீறித்தான் திருமணம் செய்தாள். கடைசியில் கஞ்சாவிற்கு அடிமையானவன் மட்டுமல்லாது கஞ்சா விற்பனையாளர்களோடும் சகவாசம் இருந்திருக்கிறது. அவ்வளவு பிடிவாதக்காரி. அவள் சண்டையிட்டும் அவன் கேட்கவில்லை. அங்கு சாகாமல் தாய் தந்தை வீட்டிலே வந்து முடித்துக்கொண்டாள். 

சந்திரசேகரன் ரொம்பவும் நெருக்கினால் நெருக்கம் குலைந்து போய்விடும் என்று பக்குவமாகத்தான் பேசினான். அடுத்து ஒரு வருஷமும் அவள் விருப்பத்திற்கு பிடிகொடுத்துப் பேசவே இல்லை.

தனலட்சுமியைக் காட்டி பெரியம்மா திருமணபேச்சை எடுத்த சமயம் கிருசாந்திக்கு இவன்மீது பிரியம் வந்திருந்தது. இவன் அப்படி வைத்திருப்பேன் இப்படி வைத்திருப்பேன் என்று அளக்கவும் தொடங்கியிருந்தான். அக்கா சம்பவத்திற்கு பின் கிருசாந்தி கடைசிவரை இறங்கி வரவேவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் கடைவேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போய்விட்டாள்.

கிருசியின் காதல் நொட்டாங்கை சீனு, கணேசனுக்குத் தெரியும். என்றாலும் அம்மாவும் பெரியம்மாவும் கணேசனிடம் “தம்பிகிட்ட எடுத்துச் சொல்லுப்பா. நல்ல பிள்ள. நல்ல சம்பந்தம். ஈஸ்வரி பிள்ளய கண்ணுகுட்டியாட்டம் வளர்த்திருக்கா. அவ காலடி தடத்தில மிதிச்சு வளர்ந்த புள்ளப்பா. தாத்தாவுக்கெல்லாம் பேத்தி நம்ம ஊருக்கு வரணும்னு நினைக்கிறாரு. இவன் சட்டுனு ஒரு நல்ல பதில் சொல்லாமல் நழுவுறான். கணேசா நீ சொல்லி அவனை வசத்துக்கு கொண்டுவாடா” என்றாள்

கிருசாந்தி காதல் தெரியும் என்றாலும் கணேசன், சீனு சந்திரசேகரனை காட்டுக் காளி கோயிலில் ஆலமரத்திற்கு அழைத்துப்போய் தனலட்சுமி இந்த ஊரிலேயே வாக்கப்பட்டு விடுவோம் என்ற மகிழ்வில் தோட்டத்துச் சாலையில் தாத்தா வீட்டிலிருந்து டெய்லர் வேலைக்கு போகப்போவதாக கணேசன் அக்காவிடம் சொல்லியிருப்பதையும் சொன்னார்கள். “டேய் இவ கிராமத்தில வளந்த  பிள்ள. உன்ன எப்படி வச்சுக்கணுமோ அப்படி சைஸ் பண்ணி கொண்டுபோய் விடுவா. அது என்னடா பெரிய ஜிமிக்கி முத்தம்மா. பவுடர் பொன்னம்மா. இவளுக்கு என்னடா குறை” சீனு நொட்டாங்கையை நீட்டி பேசினான். “இது சொந்தம்டா நாயி. ஒங்க வலசல் பூரா வந்தாலும் அவங்க வலசல் வந்தாலும் சந்தோஷமா ஜமாலிப்பா. அந்த கூந்தல் அழகிய கல்யாணம் பன்றன்னு வையி, நாங்கல்லாம் ஒருத்தன் வரமுடியுமாடா பன்னி. உங்க அம்மா அப்பாவை நல்லா வச்சிக்கிருவாளா. சின்ன சடவு வந்தா உன்னைய சேர்த்து கூட்டிப்போயி சிறைக்குள்ள போட்டது மாதிரி போட்டுருவா. அப்பறம் இந்த பக்கம் நீ தலகாட்ட முடியாது. இந்த பிள்ள அப்படியே தங்கத் தட்டுல வச்சு உன்ன தாங்கு தாங்குன்னு தாங்குவா, மயிறு. சொன்னா கேளு. ஏண்டா நீ மட்டுமா காதலிச்ச. நாங்க எல்லாம் காதலிக்கிலியா போடாங்…” சீனு திட்டித்தான் பார்த்தான் கேட்கவில்லை. கிருசியை எப்படியும் தன் விருப்பத்திற்கு சம்மதம் வாங்கிவிடலாம் என்று ஏமாந்துதான் போனான்.

ஒரு மொடா குடிகாரனிடம் வாக்கப்பட்டு தனலட்சுமி சின்ன வயதிலேயே நொறுங்கியதைக்கேட்டு சீனு சந்திரசேகரனுடன் பேசுவதைக்கூட தவிர்த்தான். பையனை கக்கத்தில் வைத்துக்கொண்டு பெண் பிள்ளைய நடையிலேயே இழுத்துக்கொண்டு பரமேஸ்வரன் தோட்டம் தாண்டி வந்துகொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமை மேட்சிற்கு டீயும் வடையும் கிருஷ்ணா பேக்கரியில் சொல்லிவிட்டு திரும்ப வந்த சீனு பார்த்தான். பழைய சீலை, மெலிந்த உருவம், கழுத்து எலும்பிற்கும் கீழ் வற்றல் கூடைக் காட்டும் தொழதொழச் சட்டை, மேனி பொருந்தாது சுற்றியிருக்கும் சேலை. குளித்துச் சீவி பொட்டிடாத முகத்தோடு பார்த்ததும் என்ன இந்த சின்ன பிள்ளை இப்படி ஆகிவிட்டாள் என்று நிறுத்தினான். நெஞ்சு கொதித்தது. “ஏறு பிள்ள” “இல்லண்ணா நீங்க போங்க. நான் போயிடுறேன்” “கொண்டாப்புள்ள கக்கத்தில் இருந்தவனை வாங்கி முன்னாள் அமரவைத்தான். நல்லா உக்காரு பிள்ளய மடியில் வச்சுக்கோ” “சரிண்ணா” “ஏம்புள்ள ஒரு மாதிரி இருக்க” “ஒன்னுமில்லண்ணா” “சாலை வீட்டுக்குத்தான பிள்ள” “வேற யாரிருக்கா அண்ணா எனக்கு” நா தழுதழுக்கிறது.

கடையைத் திறந்து வைத்திருந்தான் ஐயப்பன். முதலாளி பையன் பதினொன்றரைக்கு மேல்தான் வருவான். அலுவலக மேசையை துடைத்துவிட்டு நேற்றைய வாடியப் பூக்களை சுருட்டி பாலித்தீன் பையில் போட்டு வைத்திருந்தான். “அண்ணா சம்பங்கி வாங்கிவிட்டு வந்திடுறேன்” கொத்துச்சாவியை மேசையில் போட்டுவிட்டு இறங்கிப் போனான்.

சங்கடமாகவும் பதட்டமாகவும் இருந்தது. கைபேசியை எடுத்து சீனு எண்ணிற்கு தட்டினான். ரிங் போனது. “என்னடா” “சீனு..” “என்னடா” “சீனு தனலட்சுமிக்கு ஆக்சிடெண்டாமில்ல” “ஆமாடா எனக்கே காலையில்தான் தெரியும். குளிக்கலாமன்னு அங்க போனேன் நாட்ராயன் தாத்தா ஆலந்துறை ஈஸ்வரி அக்காவுக்கு போன்போட்டு தரச்சொன்னாரு. அவருக்கு இப்ப நம்பரு தெரியறதில்லை. வயசாயிடுச்சில்ல. எனக்கென்னமோ ஆக்சிடென்ட்டா இருக்காதுன்னு நினைக்கிறேன்டா. ஈஸ்வரி அக்காவும் சொல்ல மாட்டேங்குது. பெட்ரோல் பங்க் நேசகுமாரிட்ட கேட்டேன். கம்பியில அடிச்சு கால ஒடச்சாலும் ஒடச்சிருப்பான்டா. போய் பாத்தாத்தா தெரியுமன்னான்” “மூணு நாளாச்சாமேடா” “ஆமா நான் இங்க தோட்டத்து சாலைக்கு வரலயன்னா அதுவும் தெரியாது” “இப்ப நான் போறேன்டா” “அவன் அங்கத்தான் இருக்கானாம்” “இருக்கட்டும்”

ஐயப்பன் வேங்கடாஜலபதி சாமிப்படத்திற்கு மேசைமீது ஏறி சம்பங்கி மாலையைத் தொங்கச் சாத்தினான். கடைக்குவந்து சாமியை சந்திரசேகரன் கும்பிட்டதில்லை. ஐயப்பன் ஏதோ செய்வான். தலைதூக்கிப்பார்த்து கும்பிட்டான். பை ஜிப்பைத் திறந்து ஏடிஎம் கார்டை சட்டைப் பையில் வைத்துக்கொண்டான். பதினைந்தாயிரம் வரை சேமிப்பு இருந்தது. “ஐயப்பா பெரியாஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” வண்டியை திருப்பி ஏறி அமர்ந்து முடுக்கினான்.

சு. வேணுகோபால்

நவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பலபடைப்புகளைத் தந்திருக்கும் எழுத்தாளர் சு.வேணுகோபால். ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எழுதி இருக்கிறார். பாரதிய பாஷா பரிஷத் விருது, தன்னறம் இலக்கிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடித் தன்மைகொண்ட எதார்த்தவாதக் கதைகளுக்காக கவனம் பெற்றவர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram