சிறுகதைகள்

கயல்: சிறுகதை

இளையராஜா இசையில் நனைந்த கதைகள்

நெய்வேலி பாரதிக்குமார்

கயல் மீண்டும் கடற்கரைக்கே சென்று தன் கைகளை நெற்றியின் மீது வைத்துக்கொண்டு, கண்களைச் சுருக்கியபடி பார்த்தாள். எப்படிப்பார்த்தாலும் கடலின் மீது மிதக்கும் கானல் நீரைத்தவிர வேறெதுவும் இந்த வெயிலில் புலப்படவே இல்லை.

செம்பையன் வருவதாகச் சொல்லி இருந்த நாள் இன்றுதான். ஆனாலும் அவர்கள் சென்ற மோட்டார் படகு திரும்புவதற்கான அறிகுறியே தென்படவே இல்லை.

இது அடிக்கடி நடப்பதுதான். அவனும் அவனது குழுவும் மீன் பிடிக்கச் சென்றுவிட்டால், சொன்ன தேதிக்குத் திரும்பியதாக வரலாறே இல்லை.

சென்ற முறை இப்படி சொன்ன நாள் தாண்டி நான்கு நாட்கள் கழித்துதான் கரைக்கு படகு வந்து சேர்ந்தது.

“என்ன பண்ண சொல்றே? வெட்டுப்பனையான் மீன் அந்தப்பக்கம் நம்ம ஊர் ஈ மாதிரி கொசகொசன்னு மெதமிஞ்சி கெடக்கு.. ஒரு மழ பேஞ்சா போதும் கரையேறி ஊருக்குள்ள போவுதாம்..

தண்ணியில வாழ வேண்டிய மீனு மண்ணு மேல தவ்விக்கிட்டுப் போனா என்ன ஆவும்? துடிச்சு செத்துப் போவும்... வலை போட்டு புடிச்சா வயித்துப் பசிக்காவுது ஆவும்.”

“அதுக்குன்னு எம்மாந்தூரம் போவ.. எத்தினி நாளாவுது வண்டி ஏறி?”

“ஒனக்குன்னு ஸ்பெஷல் அயிட்டம் எல்லாம் புடிச்சிட்டு வந்திருக்கேன்.. தனி ஓலைப்பெட்டியில் வெச்சிருக்கேன். சாலமன், கெழங்கான், வவ்வா, மொரலு எல்லாம்...... கொழந்தை உண்டானா அம்புட்டும் சத்தாம்.. நீ மட்டும் நாள் தள்ளிச்சுன்னு சொல்லு.. அப்படியே படகு நெறைய அள்ளிப்போட்டுட்டு வந்துடறேன்.”

பதில் எதுவும் சொல்லாமல் அடுப்படி சென்று பானையிலிருந்து ஒரு லோட்டா தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தாள் கயல். கண்களிலிருந்து குடித்த தண்ணீர் அத்தனையும் பொங்கி வழிவது போல கன்னத்தின் மீது பொல, பொலவென உருண்டோடியது.

அவளருகில் மெல்ல வந்து பின்னிருந்து அணைத்துக்கொண்ட செம்பையன் “அய்யே இப்ப நாம என்ன கெழவன், கெழவியாவா ஆயிட்டோம் இப்படி கொட்டுது….? நாளு முழுக்க தண்ணியைப் பாத்து, பாத்து கண்ணு அவுஞ்சிப்போச்சு.. மேல தொட்டுப்பாரு கரகாட்டக்காரவங்க மொகத்துல உள்ள பவுடர் கணக்கா உப்பு... இங்கயும் அழுவாச்சியா?’

“ஒன்னோட ஆத்தாக்காரி.. செருவாடு காசு ஏதாச்சும் இருந்தா குடேன் அப்படின்னு நேத்து கேட்டுச்சு.. ஒரு வாரமா, தெனம் நூறு அம்பதுன்னு கெளப்பிட்டு போயிட்டா.. நேத்தி சுத்தம்பற காசு இல்லைன்னு சொன்னதுதான்.. ஒனக்கு சுருக்குப் பையிலேயும் ஒண்ணும் கெடையாது.. வயித்துப்பையிலேயும் ஒண்ணும் கெடையாதுன்னு பொறணி பேசறா.. வடிச்சு கொட்டறதை நிறுத்துனா வாயளப்பு நிக்கும்னு பாக்குறேன்.. மனசு கேக்க மாட்டேங்குது...”

“ஆறும் கடலும் சேர்ற எடத்துலதான் அதிகம் கொடுவா மீனு கெடைக்கும் அப்படின்னு எங்க அய்யா சொல்லுவாங்க.. கொடுவா மீனு வலையில சிக்கிறது அபூர்வம். கையில வெச்சிக்கறது ஆவத்து. அசந்தா கண்ணை கடிச்சுப்புடும். வயசு போயி உடம்பும், வாயும் முத்துனா கொடுவா மீனு மாதிரிதா... சொம்மா இருக்காது.... ஆத்தாவை இன்னிக்கு நேத்தா பாக்குறே வுட்டுத்தள்ளு”

“வாயைத் தொறந்தா போதும் புள்ளை இல்லை .. மலடி.... வேற வசவே அவ நாக்குல வர்றது இல்லை”

திடீரென்று “கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன் ஆளான நான்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்” என்று சொர்ணலதாவின் குரல் காதருகே கேட்க ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது கயலுக்கு..

“அப்படியே சொர சொரன்னு ஆயிடுச்சு.. நவுர்றா.. முட்டாப் பயலே இப்படியாடா கிட்ட வந்து பயமுறுத்துவ” என்று கத்தினாள். செம்பையன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வாய் கொள்ளாமல் சிரித்தான்.

சொர்ணலதா இருவரின் கூத்து எதையும் கண்டுகொள்ளாமல்

அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

என்று வரிகளுக்கும் வலிக்காமல் பாடிக்கொண்டிருந்தார்.

செம்பையன் தனது தலைப்பாக்கட்டிலிருந்து அழகான சிறிய ரேடியோ ஒன்றை எடுத்தான். கைக்கு அடக்கமாக பார்க்கும்போதே கைகளில் தூக்கிக்கொள்ள ஆசையைத் தூண்டும் குழந்தையைப்போல அவளை ஈர்த்தது. “இதை எப்பய்யா வாங்குனே?”

“யாருக்காவ வாங்குனேன்னு கேளு.. நம்ம ராசாத்திக்குத்தான்”

“வாங்குனது வாங்குனே நம்ம இஷ்டத்துக்கு கேக்குற மாதிரி கேசட் போடுற பொட்டி மாதிரி வாங்கக் கூடாது?”

“நம்ம இஷ்டத்துக்கு கேக்குற பாட்டு எல்லாம் கொஞ்ச நாள்ல அலுத்துடும்.. இப்ப கேட்டில்லே அது மாதிரி.. அது வாட்டத்துக்கு வுட்டுறனும் அப்பதான் டிசைன், டிசைனா பாட்டு கேக்கலாம்.. அதுவுமில்லாம மழ வரப் போவுது.. புயல் வரப்போவுதுன்னு இதுலதான் அப்பப்ப சொல்லுவாங்க”

கயல் அந்த ரேடியோவை வாங்கி ஒரு கோழிக்குஞ்சை கன்னத்துக்கு அருகே வைத்து செல்லம் கொஞ்சுவதைப்போல கொஞ்சினாள். அதிலிருந்து வந்த வசீகரமான குரல் அவளைப் புளகாங்கிதப்பட வைத்தது.

தேவனாம்பட்டினம் கடற்கரை மாலை நான்கு மணிக்கு மேல்தான் பலூன்காரர்கள், ஐஸ்கிரீம் வண்டி, நூடுல்ஸ், சுண்டல், அன்னாசிப் பழத்துண்டுகள், வறுத்த மீன் விற்பவர்கள் என்று களைகட்டும். காலையிலிருந்து நான்கு மணி வரை கைவிடப்பட்ட அநாதை போல தனித்துக் கிடக்கும்.

அதிகாலையில் மீன் பிடித்து வரும் படகுகளில் ஆட்களின் சலசலப்பு இருக்கும் அதன் பிறகு அலைகளின் துயரக்குரல் மட்டுமே கேட்கும்.

செம்பையன் மீன் பிடிக்கச் சென்றுவிட்டால் கயலுக்கு பேச்சுத்துணைக்கு என்று ஆட்கள் இல்லை. கோடியக்கரையைவிட்டு இங்கு வந்து சில மாதங்களே ஆகி இருந்தன.

திருமணம் செய்யும்போது மாமியார்க்காரி தேனாட்டம்தான் பேசினாள். கல்யாணம் முடிந்த அடுத்த நாள் முதல் குத்தல், கேலி பேச்சுகள் ஆரம்பித்துவிட்டன. ஒரு வருடம் கூட ஆகவில்லை எதுக்கும் இருக்கட்டும் என்று இன்னும் உண்டாகவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை முன்னதாகவே அடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

வீடுகள் சிறியதோ பெரியதோ அது பிரச்சினை இல்லை. ஆனால் எந்த நேரத்தில் எந்த சொல் அம்பு பாயுமோ என்று ஒவ்வொரு நொடியையும் கடப்பது தொண்டைக்குள் சிக்கிய மீன்முள் அருவுவது போல் எத்தனைத் துயரமானது?

கோடியக்கரை அப்பாவின் வீடு இப்பொழுது இருக்கும கல்வீட்டை விட சிறியதுதான் ஒலைக்குடிசைதான். ஆனாலும் எத்தனை அன்புமிக்கது?

ஒரு புயல்காற்றில் மேல்கூரை பெரும்பகுதியும் பறந்து போய்விடும் ஆனால் அப்பாவுடனும், அண்ணனுடனும் வாயடித்துக்கொண்டு, பாட்டுப்பாடிக்கொண்டு, திரும்பத் திரும்ப கூரை வேய்வது எத்தனை ஆனந்தமானது?

செம்பையன் கெட்டிக்காரன், மீன்களை பணமாக்கும் வித்தை அவனுக்கு அத்துப்படி. ஆசைப்பட்டு என்ன கேட்டாலும் அடுத்த நாள் கயல் கைக்கு வந்துவிடும். ஒருமுறை கடலுக்கு சென்று வந்துவிட்டால் அப்புறம் நான்கு ஐந்து நாட்களுக்கு அவன் திரும்பச் செல்லமாட்டான். எங்கெங்கு புது சினிமா, திருவிழா, சர்க்கஸ் என்று எது நடந்தாலும் அழைத்துச் சென்றுவிடுவான்.

ஆனால் கடலுக்குச் சென்றுவிட்டால் அப்புறம் அவன் வருவதுதான் நாள்.

அரசன் எப்பொழுதும் போல காலை நேரத்தில் வந்துவிட்டார். கூட்டம் கசகசக்கும் மாலைவேளை கடற்கரை அவருக்குப் பிடிக்காது. அவர் கையிலும் ஒரு சிறிய வானொலி இருக்கும். அவர் வந்துவிட்டால் ஏதேனும் ஒரு பாடல் ஒலிக்கும். அந்தப் பாடல் கயலோடு உரையாடுவது போல இருக்கும்.

சில சமயம் ஆறுதல் சொல்லுவது போல இருக்கும். பாடல் சத்தம் கேட்டால், நரகத்திலிருந்து மீட்க வந்த தேவதூதர்களின் அழைப்பு போல அவளுக்குத் தோன்றும்.

“என்ன தாத்தா சாப்பிட்டாச்சா?” என்று சகஜமாகப் பேச்சைத் தொடங்கினாள் கயல். அரசன்தான் அவளுக்கு பாடுபவர்களின் பெயர்களை எல்லாம் சொல்லி அறிமுகப்படுத்தியவர். யாருடைய இசை, யார் எழுதியது என எல்லாவற்றையும் சொல்லுவார். அவர் ஒரு சினிமா பாடல் களஞ்சியம் என்று நினைத்துக்கொள்வாள் கயல்.

“எஸ். ஜானகி குரலில் ஒரு கிறக்கம் இருக்கும். கேட்கறவங்க மயங்காம இருக்க முடியாது. சுசீலா குரலில் தெய்வீகம் ஒளிரும். வாணி ஜெயராம் குறும்புக்கார அடாவடி பெண்ணின் எள்ளலைப் பார்க்கலாம்.

ஜென்சி அதிர்ஷ்டக்காரி. பாடுனது கொஞ்சம்னாலும் அத்தனையும் பவளம். சித்ரா குரல் தேன். எப்படி பாடினாலும் தித்திக்கும். ஆனா இந்த சொர்ணலதா இருக்கு பாரு.. அந்தக்குரலை எதோட ஒப்பிடறது? ஒண்ணும் புரியலைப்பா...” ஒவ்வொரு குரலுக்கும் அழகான ஒப்புமை சொல்லுவார் அரசன்.

ஆனால் சொர்ணலதா குரலை அவரால் எதற்கும் ஒப்பிடத்தெரியாது.

“ஆட்டமா தேரோட்டமா கேளேன் உடம்பு அதிரும்.. போவோமா ஊர்கோலம் நம்மளை இழுத்துக்கிட்டுத் தெருத்தெருவா அலைய வைக்கும்” என்று சிலாகிப்பார்.

“தனிமையில மனம் துயரத்துல இருக்கும் போது சொர்ணலதா பாடுன பாட்டை கேட்டா.. அப்படியே நம்மை கையைப் பிடிச்சுக்கிட்டு ஆறுதல் சொல்ற மாதிரி இருக்கும்.”

கயலுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இப்படி எல்லாமா பாடல்களை கேட்பார்கள்? என்பதை நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தது.

ஆனால் அரசனுடன் பேசிய பிறகு பாடல்களைக் கேட்கையில் அவளையறியாமல் அரசனின் குரல் காதருகே ஒலித்தது. அப்புறம் அது உண்மைதான் என்று தோன்றியது.

ஒவ்வொரு பாட்டைக் கேட்கும்போதும் பாடுபவர்களின் குரலை உற்றுக் கவனித்தாள்.

ஆமாம் ஆளாளுக்கு ஒரு பாணி இருக்கிறது. அவர்கள் தங்கள் குரலால் தங்கத்தை இழைத்து இழைத்து நகை செய்யும் கொல்லர்கள் போல மெருகேற்றுகிறார்கள் என்பது புரிந்தபின் பாடல்களை கேட்பதே பேரானந்தமாக இருந்தது.

கேட்பது வெறும் ஒலி அல்ல உன்னதம் என்பது தெரிந்தது.

சொர்ணலதாவின் குரலை எதற்கு ஒப்பிடுவாய் என்று ஒருநாள் அரசன் கேட்டதற்கு சட்டென பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், அதன் பிறகு சொர்ணலதாவின் பாடல்களைத் தேடிதேடி கேட்க ஆரம்பித்தாள். காற்றெல்லாம் அந்தக் குரலாகவே இருந்தது.

ஊரெல்லாம் உன் பாட்டுதான்
உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான்
இன்பத்தைக் கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது
நீயெனைச் சேரும் நாளெது? ஓ...

என்று பாடும்போது செம்பையனின் முகமும் தோள்களும் நினைவுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தவனின் தோள்களில் முகம் புதைத்தபோது கன்னங்கள் சிவந்தன.

“சொர்ணலதா குரல் உனக்கு பிடிக்குமா செம்பை”

“நான் எதைக் கண்டேன்? யார் பாடுனதுன்னு கண்டேன்? உனக்கு புடிச்ச குரலா? அப்படின்னா எனக்கும் புடிக்கும். அவ்வளவுதான்” என்றான் செம்பையன்.

செம்பையன் கடலுக்குப் போய் இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. வழக்கம்போல கரையில் நின்றுகொண்டு கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள். நேற்று வந்திருந்த அரசன் சொன்னார் சொர்ணலதா இறந்து போய்விட்டதாக…. பார்த்திராத, பழகியிராத ஒருவருக்காக அன்றுதான் கயல் அடக்கமாட்டாமல் அழுதாள்.

சின்னக்கோட்டுக்குப் பக்கத்தில் பெரிய கோடு போட்டால், சின்னகோட்டின் பிம்பம் பெரிதாகத் தெரியாது என்பார்களே. அது போல செம்பையன் வராத துக்கத்துக்கு பக்கத்தில் சொர்ணலதாவின் மரணச்செய்தி பெருந்துயராகத் தெரிந்தது

மிகப்பொருத்தமாக் கையிலிருந்த வானொலியிலிருந்து அந்தப் பாடல் ஒலித்தது.

கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடிவந்து
கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

என்று ஒலித்த குரல் அப்படியே ஆன்மாவிலிருந்து பீறிட்டு எழுந்தது போல இருந்தது.

“இளையராஜா எப்படி இந்தப் பாட்டுக்கு இந்தக்குரலைத் தேர்வு செய்தார்.? இந்தப் பாடலை யாருக்காக இப்படி இழைத்து இழைத்து இசையமைத்தார்? செம்பையனைக் காணாமல் வாடும் எனக்காகவா?

இல்லை ஒரு குரலால் உடலில் உள்ள நரம்புகளை எல்லாம் மீட்டிவிட முடியும் என்று நிரூபித்த சொர்ணலதாவுக்கா?

இல்லை தனிமையின் துயரில் வாடும் எல்லா ஆன்மாவுக்குமா?” என்று கயல் அங்கிருந்த அரசனிடம் கேட்டாள்.

அரசன் அவளருகே வந்து “ராஜா ஒரு சில பாடல்களை வரம் மாதிரி சிலருக்கு பாட கொடுப்பார். இந்தப் பாட்டு சொர்ணலதாவுக்கு கிடைச்ச வரம். நாம் செய்த தவம்” என்றார்.

“நீங்க கேட்டீங்க இல்லே சொர்ணலதாவின் குரலை எதோடு ஒப்பிடலாம்னு?”

“ஆமாம்”

“எதோடும் ஒப்பிட முடியாது அது ஆன்மாவின் குரல் தாத்தா” என்றாள் கயல் குரல் கம்ம..

ஆமாம் என்று அலைகள் அவள் கால்களைத் தொட்டு சொல்லிவிட்டுச் சென்றன... பாடலின் பல்லவி அந்த அலை மீது ஏறி அமர்ந்து அலையின் போக்குக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக வந்து ஆடியது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச...

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram