வெக்கையிலிருந்து விடுபட்ட உணர்வுடன் சலிப்புற்ற மனதுக்கு கொஞ்சம் ஆறுதலைக் கண்டடைந்தவளாக வாசலில் நின்றிருந்தாள் பர்வீன்.
வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன் வீட்டினுள் நுழைந்ததை கண்டுகொள்ளவே இல்லை.! அக்கம் பக்கத்து குழந்தைகள் எல்லாம் வீதியில் குழுமி மகிழ்ச்சி பொங்க குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. கவலைகளையெல்லாம் மறந்து நேரம் போவது தெரியாமல் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே நிற்பதில் ஒரு ஆத்ம சுகம் அவளுக்கு. தெருவின் கடைசியில் இருந்த மேஃபிளவர் மரத்தில் கூடு திரும்பிய பறவைகளின் கீச் கீச் ஒலி தெரு முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது. குளுமையான மாலைக் காற்று இதமாக இருந்தது. பர்வீனின் கண்களும் மனமும் குழந்தைகளின் விளையாட்டிலேயே குவிந்திருந்தது..
சலீம் மனைவியுடன் இங்கு தனிக்குடித்தனம் குடி வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. இன்னும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாருடனும் பழக்கம் ஏற்படவில்லை என்பதால் இப்படி வாசலில் நின்று சிறுவர் சிறுமிகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நிற்பாள் பர்வீன். தன்னை மறந்து இப்படி நிற்பதில் அவளுக்கு ஒரு ஆனந்தம். மனதில் உள்ள இறுக்கமும் கொஞ்சம் போல குறையும்.
தான் வருவதைப் பார்த்தும் பர்வீன் அசையாமல் கண்டு கொள்ளாமல் நிற்பது சலீமுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. அவளை முறைத்தவாறே வீட்டினுள் சென்றவன் அங்கிருந்தபடியே “நா வந்ததக் கூடப் பாக்கமா அங்க என்ன வேடிக்க ஒனக்கு ? எவ்வளவு சொன்னாலும் நீ கேட்கமாட்டியா...? எவனப் பாக்குறதுக்கு இப்பிடி தெனமும் .வாசல்ல...வந்து நிக்கிறே..?” என்றான் பக்கத்து வீட்டுக்கு கேட்கும் வகையில் சத்தமாக.! இப்படியான வார்த்தைகளை சற்றும் பர்வீன் எதிர் பார்க்கவில்லை! கோபம் உச்சிக்கு ஏற திகு திகுவென கொதிப்படைந்தது அவள் தேகம். திரும்பி அவனை எரித்து விடுபவளைப் போல பார்த்தாள்.
”என்னடி மொறைக்குறே.....?” சலீமின் ஆத்திரம் இன்னும் கூடியிருந்தது..!
“நம்ம வூட்டு வாசல்ல வந்து நிக்குறதுக்குப் போயி என்னங்க இப்பிடி அசிங்கமப் பேசுறீங்க...ச்சை...!” என்றாள் வெறுப்புடன். அவன் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
“வாசல்ல வந்து இப்பிடி நிக்காதேனு நா எத்தன தடவதா சொல்லுறது..? மனுஷன் வர்றது கூடவா உங்கண்ணுக்கு தெரில !?”
“நம்ம வூட்டு வாசல்லதாங்க நிக்கிறே......?”
“அங்கென்ன....வீதீல அவுத்துப் போட்டா ஆடுறாங்க....?”
“நா என்ன அவுத்துப் போட்டுட்டா நிக்கிறேன்....?”
அவன் இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ! “என்னடி எகத்தாளாமா...? ஏத்தம் ஜாஸ்த்தியாயிடிச்சிடி உனக்கு..!.” என்றான்.
“எனக்கல்ல உங்குளுக்கு..!.இனி ஊட்டுக்குள்ளயே பர்தா போடச் சொல்லுவீங்க போல!” என்றாள் கோபம் கொப்பளிக்க. ஏற்கனவே தண்ணீ பிடிக்கப் போகும்போது, வண்டிக்காரங்க கிட்ட காய்கறி வாங்கும்போது எல்லாம் பர்தா போட்டுத்தான் போகணும்னு உத்தரவு போட்டிருக்கிறான் சலீம். எல்லாம் உன்னோட நன்மைக்காத்தான் என்கிற பீடிகையில். இப்போது வாசலிலும் வந்து நிற்க கூடாதாம்.! இது என்ன கொடுமை...! அவளுக்கு கொதிப்பு அடங்கவே இல்லை..நினைக்க நினைக்க கோபம் தலைக்கேறியது. இரவு உணவு சாப்பிடாமலேயே நேரமாகப் போய் படுத்துக்கொண்டாள்.
கொஞ்ச நாட்களாகவே சலீமிடம் நிறைய மாற்றங்கள். ‘ஏன் ..என்னாகி விட்டது இவருக்கு..!‘ கொஞ்சம் குழம்பிப் போனாலும் காரணம் புரிந்தது. சலீமின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது ! இன்னும் என்னென்ன கொடுமைகள் இருக்கோ... அதுக்காக இப்படியெல்லாமா கட்டின பொண்டாட்டிய படுத்துவாங்க..!? பணம் நகைய கழற்றிக் கொடுத்து கொஞ்ச நாளுதானே ஆச்சு ! அதற்குள் மறுபடி பணம் வேணும்னா என்ன அர்த்தம் ? தேடிக் கண்டுபிடித்து “நல்ல ஆளுங்களா இரிக்காங்க “ என்று வாப்பாதான் சான்று கொடுத்து பர்வீனை சலீமுக்கு நிக்காஹ் செய்து கொடுத்தார். உம்மா அவ்வளவு சொல்லியும் வாப்பா கேட்கவே இல்லை !
அவர்கள் பக்கமும் சீர் செனத்தி என்ற பெயரில் நகையோ பணமோ எதையும் எதிர் பார்க்கவில்லை ! இதுவே ‘அவுங்க நல்லவங்களா இரிக்காங்க’ என்று வாப்பாவுக்கு தோன்ற முதல் காரணம்.
“உங்க பொண்ணுக்கு நீங்க செய்யிறத செய்யிங்க...”’ என்றனர் பெருந்தன்மையுடன்! இந்தக் காலத்துல இப்படியொரு மாப்பிள ஊட்டுக்காரங்களா..! வாயெல்லாம் பல்லாக இப்றாகீம் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனார்! கதீஜாவுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் சந்தேகம் ! “என்னங்க எதுக்கும் கொஞ்சம் நல்ல விசாரிச்சுப் பாருங்க..” என்றாள். .
“ஏளா.....?”
“அது வேணும்.....இது வேணும்னு கேக்குற காலத்துல இவுங்க இப்பிடிச் சொல்றாங்களே....அதா சந்தேகமாயிரிக்குது ஒண்ணு கெடக்க, ஒண்ணாயிரப் போவுது..! அதா கொஞ்சம் விசாரிக்கச் சொல்றேன்...”
“பொண்ணு ஊட்டுலருந்து எதையும் வாங்கக்கூடாதுங்குற கொள்கை உள்ளவங்களா இரிக்குமா !.” சிரித்துக் கொண்டே சொன்னான் இளைய மகன் காஜாஉசேன். உம்மா அவனை ஆச்சரியமாக பார்த்து, “அப்ப கொஞ்சம் நல்ல விசாரிக்கத்தா வேணும் மொவனே!.” என்றது.
ஒரு பெரிய பாரம் குறைந்து விட்டதை போல் உணர்ந்திருந்த இப்ராகிம், . “குறஞ்சது இருபதைந்து பவுன் நகையும், சிறுதன பணம் இவ்வளவுனும் அது போக கட்டில், மெத்தை, பீரோ என ஆகிப்போன இந்தக் காலத்துல ‘உங்க இஷ்டம்னு ‘ மாப்பிளை வீட்டார் சொல்றது அவ்வளவு லேசுப்பட்ட காரியமாளா ! ‘பத்து பவுன் நகைக்கு சாதாரண வேலையுள்ள ஒரு மாப்பிளை கிடைக்காததாலத்தானே பர்வீனை இன்னும் கரை சேர்க்க முடியல ! ஆண்டவனாப்பாத்து நம்ம தகுதிக்குத் தக்கனமாரி ஒரு எடத்த நமக்கு சாத்திரையாக்கியிரிக்கான்....நீ என்னனா இன்னும் நல்ல விசாரிங்கணு ஈசியா சொல்ற...எப்படியும் இத முடிக்கப் பாக்கணும்லா!”.என்றார்.
“நல்ல விசாரிக்கச் சொல்றதுல என்னங்க தப்பு ? இந்தக் காலத்துல யாரயும் நம்ப முடியாதுங்க ஆமா ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா நமல்ல அவதிப்படுறது.?” மனைவியின் கூற்றை ஆமோத்திக்கும் வண்ணம் தலையாட்டிக்கொண்டாலும் இந்த இடத்தை விடக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டார் இப்றாகீம்.
டீ கடையில் எங்கே ஓய்வு கிடைக்கும். காலையில் கடையில் நின்றால் இரவு எட்டு மணி வரைக்கும் ஓய்வு ஒழிச்சலே இருக்காது. அதன்பிறகு போய் கொஞ்சம் அலைஞ்சு திரிந்து விசாரிக்க ஆரம்பித்தார் இப்றாகீம். மாப்பிளை வீட்டார் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள் என்பதும் மாப்பிளை சலீம் சின்னதாய் ஒரு ஏவாரம் செய்கிறார். என்பதும் அப்பப்ப கோஷம் போட்டு அரசியல் நடத்தும் ஒரு இயக்கத்தில் இருக்கிறார். மற்றபடி குறை சொல்லும்படியாக ஒண்ணும் இல்லை என்பதும் தெரிய வந்தது. திருப்தியானார் இப்றாகீம். கதீஜாதான் “வாடக ஊட்டுலதா குடியிரிக்காங்களா ?” என்று முகம் சுழித்தாள்.
“ஆமா நீ பெரிய பிரம்மானி ! பங்களாவுலயே பொறந்து வளந்தவ ! போலா வேலயப்பாத்துட்டு...!” கோபத்துடன் எரிந்து விழுந்தார்.
“ஏங்க ! கோவப்படுறீங்க நம்ம பொண்ணு நல்லாரிக்க வேண்டாமாக்கும்.?”
“பின்ன, நாம இரிக்கிற சிபத்துக்கு சொந்த ஊட்டுக்காரனா வருவான் ?”
“பொண்ணு கேட்டு நம்ம ஊட்டுக்கு வந்ததே பெரிய அதிசயம். இதுல கொறய கண்டுபுடிக்க வந்துட்டே!”
“நா என்ன சொல்ல வர்றேனே ஒங்களுக்கு புரியல “
“நீ ஒன்னும் சொல்லண்டாம்...கிட்டியா! எல்லாம் எனக்கு தெரியும் ”
அதன் பிறகு கதீஜா கணவனிடம் எதுவும் பேசவில்லை.
“கல்யாணத்துக்கு எங்க தரப்புலருந்து ஒரு முன்னூறு நாநூறு பேத்துக்கு பொண்ணு ஊட்டு சாப்பாடு போடணும்.” மாப்பிளை வீட்டாரின் இந்த கண்டிஷன் இப்றாகீமை கொஞ்சம் திடுக்கிட செய்தது. கதீஜாவின் முகமும் மாறியது. ’இதுக்குத்தா நா அப்பவே பின்னயும் பின்னயும் நல்ல விசாரிக்கச் சொன்னேன்.’ என்றது கதீஜாவின் பார்வை. புரிந்துகொண்டார் இப்றாகீம். பொண்ணு வீட்டு சார்பாக வந்திருந்த பெரியவர்கள் சிலர் மாப்பிளை வீட்டாரிடம் ரொம்ப நேரம் மன்றாடினார்கள்.
“சிறுதனம் வாங்குறவங்களே இப்படி ஐநூறு பேருக்கு ஆயிரம் பேருக்கு பொண்ணு ஊட்டு சாப்பாடு கேக்குறது வழமதான ? நாங்க சிறுதனமே கேக்கல நீங்க கல்யாண சாப்பாடு போட இப்பிடி சலிச்சா எப்புடியாக்கும் ?” மாப்பிளை வீட்டார் தரப்பிலிருந்து முக்கியஸ்தர் ஒருவர் முன்மொழிந்தார். .
“இப்றாகீ ! ஒத்துக்கலாம் உடு....கல்யாண சாப்பாடு போடுறது பொண்ணுட்டு வழமதான. .நாம நேந்து கலந்து போலாம்..” என்று இப்றாகிமிடம் சொல்லிவிட்டு, “சரிங்க ஒங்க விருப்பபடி சாப்பாடு போட்டுருறோம் அல்ஹம்ந்துலில்லாஹ்..” என்று உறவுக்கார பெரியவர் இப்றாகிமின் நிலைமையை உணராமல் அவர்பாட்டுக்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் தெரிவித்தார். நாநூறு பேத்துக்கு சாப்பாடு போடுறதுனா லேசுப்பட்ட காரியமா என்ன அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது..? இப்றாகீமுக்கு இருட்டிக்கொண்டு வந்தது. மனம் உடைந்து போனார். .
வீடு வந்ததும் கணவனிடம் ஒரு சாட்டம் சாடிய கதீஜா, “நம்ம நெலம தெரிஞ்சும் நாநூறு பேத்துக்கு சாப்பாடு கேக்குறாங்களே..! பின்னாடி அது வேணும் இது வேணும்னு கேட்டா என்னங்க பண்றது? நா அதுக்குத்தா அப்பவே சொன்னேன். நீங்கதா கேக்கவே இல்ல. இப்டியொரு மாப்பிள்ள கெடைக்காதுணு புடிவாதம் புடிச்சீங்க. இப்பப் பாத்தீங்கல்ல அவுங்க சீத்துவத்த ! எனக்கு உள்ளுக்குள்ள கருக்கருக்னு இருக்குதுங்க!”.என்றாள் குத்தலாகவும் வருத்தத்துடனும். இப்றாகீம் எதுவும் பேசவில்லை. அவரின் கணிப்பு பொய்யாகி விட்டதில் மனம் வெதும்பிப் போயிருந்தார். அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது என்ற சிந்தனையே அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ‘நாநூறு பேத்துக்கெல்லாம் சாப்பாடு குடுக்க முடியாதுனு கட்டன் ரைட்டா சொல்லியிரிக்கலாமோ ?.’ எங்கிட்ட ஒருவார்த்த கேக்காம சின்னாப்பா பாட்டுக்கு சம்மதம் சொல்லிட்டாரே ! மனுசனோட நெலமய யோசிக்க வேண்டாமாக்கும் ? ச்சை! இதுக்கா சம்மதம் பேசறதுக்கு பெரியவங்கள கூட்டிக்கிட்டுப் போறோம் ? பணத்துக்கு என்ன பண்ணுவேன்னு யோசிக்காம..ச்சே.! அவருடைய சின்னாப்பா மீது இப்றாகீமுக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது.
சாயக்கடையில வேலை செய்கிறவருக்கு யாரு அவ்வளவு பெரிய தொகையைக் கடனா கொடுப்பாங்க..? கையேந்தும் குறையாக மிக நெருக்கமான உறவுக்காரர்களிடமெல்லாம் நிலைமையைச் சொல்லி புலம்பினார் இப்றாகீம். பெரிய மனதுபண்ணி சிலர் கொஞ்சம் உதவினார்கள். இப்படியாக சிறுகச் சிறுக பணத்தை சேர்த்து கல்யாணச் சாப்பாட்டுக்கு ஒருவழியாக ஒப்பேத்தினார்.
கல்யாணம் ஆகி சில மாதங்களுக்குள்ளாகவே அவர்களை தனி குடித்தனம் போகச்சொல்லி விட்டார்கள் சலீமின் பெற்றோர்கள். தனிக்குடித்தனத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சம்மதிக்காத ஒரு சமுதாயத்தில் இது ஆச்சரியமாகவும் கொஞ்சம் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.! காரணம் புரியவில்லை! நச்சரிக்கும் மாமியாரிடமிருந்து விடுதலை கிடைக்கிறதே என்று பர்வீன் சந்தோஷபட்டாள். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் மூத்த பெண்ணின் குடும்ப வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருந்ததில் சந்தோஷப் பட்டவராக ,அடுத்த பொண்ணுக்காக தன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தார் இப்றாகீம்.
ஆரம்பத்தில் சலீமிடம் எந்த குறையும் காண முடியாமல் இல்லற வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது அவன் இருக்கும் இயக்கத்தைப் பற்றி பெருமை பொங்க மனைவியின் காதில் போட்டு வைத்ததோடு நில்லாமல் அவ்வப்போது தலைவர் புராணத்தையும் பேசுவான் சலீம். அடிக்கடி இயக்க வேலைகள் என்று கணவன் அலைவதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை அவளுக்கு துளியும் இஷ்டம் இல்லை !
திடுமென ஒருநாள், “ஒங்க வாப்பாட்டயிருந்து கொஞ்சம் பணம் கிடைக்குமா பர்வீ..? கேட்டுப்பாரேன்.” என்றான் சலீம். அதிர்ச்சியுடன் கணவனை ஏறிட்டாள் பர்வீன். அவளுக்குள் ஏதோ வெடித்துச் சிதறியதுபோல ஒரு உணர்வு எழுந்தது. வாப்பாவின் நிலைமை தெரிந்திருந்தும் திடும்னு இப்பிடி பணம் கேக்குறாரே..! .கணவர் மீது வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
‘‘என்ன பர்வீ ! இப்பிடிப் பாக்குறே..?”
“சாயா கடைல வேல செய்யிற எங்க வாப்பாகிட்டப் போயி பணம் கேக்கச் சொல்றீங்களே ? அதா பாக்குறேன்..”
“சாயா கடைல வேல செஞ்சா கஷ்டம் வரும்போது மருமொவனுக்கு பணம் கொடுக்கக்கூடாதா என்ன ?” கணவனின் கேள்வியில் சூடு இருந்ததை உணர்ந்த பர்வீன், “ஏவாரம் செய்ற உங்கனாலயே ஒரு அவசரத்துக்கு பணம் புரட்ட முடியல! தினக் கூலிக்கு வேலைக்குப் போற எங்க வாப்பாகிட்ட எப்பிடிங்க பணம் இரிக்கும் ?” அவளும் சூடாகவே பதில் சொன்னாள்.
“ஒங்க வாப்பா குடுத்தாக் கூட நீ வேண்டாம்னு சொல்லிருவே போல.?”
“இருந்தாத்தாங்க குடுக்குறதுக்கு.? எங் கல்யாணத்துக்கு எங்க வாப்பா பட்ட கஷ்டம் எனக்குத்தா தெரியும்.” கோபமாக சொல்லிக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள் பர்வீன்.
சலீமின் கோபம் படர்ந்து பரவியது..சாப்பாட்டு மேசை மீதிருந்த டம்ளரை தூக்கி வீசினான். அவனுக்கிருக்கும் கோபத்தில் அடித்தாலும் அடித்துவிடுவான் என்பதை உணர்ந்துகொண்ட பர்வீன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
அவனுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது. சப் சப்பென்று ஓங்கி நாலு அறை கொடுக்க கை பரபரத்தது. இரவு சாப்பிடாமல் உம்மென்றே இருந்தான். சலீம். ‘இருந்துட்டுப் போ’ என விடத்தான் நினைத்தாள். பிரச்சனையை வெறுப்பை அது மேலும் கடினமாக்கும் என்று கெஞ்சி கூத்தாடி கணவனை சாப்பிட வைத்தாள் பர்வீன். சாப்பிட்டு முடியும் வரை ஏதேதோ சொல்லி அவளை திட்டிக்கொண்டே இருந்தான் சலீம். பட்டினி போட்டு பேசாமல் போய் படுத்திருக்கலாம் என்று இப்போது தோன்ற வெறுப்பின் எல்லைக்கே சென்றுவிட்ட பர்வீன் அதை மீட்டு பழைய நிலைக்கு வர நள்ளிரவானது.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் இருவரும் இயல்பு நிலைக்கு கொஞ்சம் திரும்பினார்கள். அதன் பிறகுதான் நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என அவனுக்கு பர்வீன் மீது காட்டம் அதிகமானது.
அன்று சுவரைப் பார்த்தபடி படுக்கையில் திரும்பிப் படுத்திருந்தாள் பர்வீன்.
“என்ன பர்வீன் ! அதுக்குள்ள தூங்கிட்டியா ?” என்றபடி படுக்கையில் வந்து உட்கார்ந்தான் சலீம். மூன்று நாட்களுக்கு முன் திட்டியதையெல்லாம் அதற்குள் மறந்தவனாக என்ன ஒரு நாடகம் ! எரிச்சலாக உணர்ந்தாள் பர்வீன்.
“பர்வீன் !” என்று அவளைத் தொட்டு உலுக்கினான். சுவரில் அவன் நிழல் கரிய பிம்பமாக பயகரமாக காட்சியளித்தது. சலிப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“பணம் வேணும்னு சொல்லியிருந்தனே..?” மிக இயல்பாக. கேட்டான் சலீம்.
“எங்க வாப்பாகிட்ட பணம் ஒன்னும் இல்லைங்க என்னால கேக்க முடியாதுணு அன்னிக்கே சொல்லிடேனே..” என்றாள் எரிச்சலுடன். புரியாத மனுசனா இரிக்கீங்களே..’ என்று உணர்த்திய அவளின் பார்வையை அவன் உணர்ந்ததாகத் தெரியவில்லை!.
‘‘அப்ப நீயி இன்னும் அதே முடிவுலதா இரிக்கே இல்ல ?” பாம்பின் சீற்றத்துடன் கேட்டான்.
“வாப்பாகிட்ட பணமிருந்தாத்தாங்க நா போயி கேக்க முடியும்..? எங் கல்யாணத்துக்கு வாங்குன கடனயே கட்ட முடியாம தவிச்சிட்டிருக்காரு..அவருகிட்டப் போயி பணம் கேக்கச் சொல்றீங்களே எப்பிடீங்க நா போயி கேப்பேன்..?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது பர்வீ.! நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் வேணும்..?” அவளுக்கு அப்படியொரு ஆத்திரம் எழுந்து அடங்கியது. ச்சை ! எவ்வளவு சொன்னாலும் புரியாத என்ன மனுஷன் இந்தாளு...?
பர்வீனுக்கு ஒருவழியும் புலப்படாத நிலையில் கணவனின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் வேறு வழியில்லாமல் வாப்பா போட்ட ஏழு பவுன் நகையில் மூணு பவுன் நகையை கழற்றிக் கொடுத்தாள். அடகு வைக்கலாம் என்ற போது “வட்டி கொடுக்கணுமல்ல. இஸ்லாத்துல வட்டி ஹராம்னு தெரியுமல்ல..?” என்று மறுத்து விட்டான். எவ்வளவு சொல்லியும் சலீம் கேட்கவில்லை. நகையை விற்பதிலேயே குறியாக இருந்தான். பர்வீன் மிக சங்கடப்பட்டாள். இந்த ஏழு பவுன் நகைக்கு வாப்பா பட்ட கஷ்டம் அவளுக்கும் அந்த றப்பு ஒருவனுக்கு மட்டும்தானே தெரியும்.
“ஏவாரத்துல லாபம் வரும்போது நகைய வாங்கித் தருறேன்..” என்றான். அவள் வீட்டுக்கு இது தெரியாது. இதை இன்னும் அவள் சொல்லவே இல்லை. இன்னும் நகை வாங்கித் தருவது பற்றி ஒருபேச்சையும் காணோம்.
********************
இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் பணம் தேவையாக இருக்கு என்று பர்வீனிடம் சொல்லியிருந்தான் சலீம். கோபம் தலைக்கேற கண்டபடி திட்டிவிட்டாள் பர்வீன். அதன் எதிரொலிதான் இன்று சாயங்காலம் “எவனப் பாக்க வாசல்ல நிக்கிறே.?’ என்ற கேள்வி.
அப்போது அவளுக்குள் பற்றிய கடுப்பு இன்னும் கொதித்துக்கொண்டே இருந்தது. ‘என்ன இப்பிடியொரு பாழுங் குழில தள்ளிட்டாரே வாப்பா..’
“என்ன பர்வீ ! அதுக்குள்ள படுத்துட்டே நீ சாப்பிடலயாக்கும்..?” கணவனின் இந்த திடீர் கரிசனம் அவளுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்கு இந்த திடீர் கொஞ்சல்! சாயங்காலம் அப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டு இப்படி கொஞ்சிக்கொண்டு வர்றானே...! அவள் பதிலேதும் பேசவில்லை.
“என்ன பர்வீன் ! இன்னும் கோபம் தீரலயாக்கும்...கோவத்துல ஏதோ சொல்லிட்டேன் விடு..கொஞ்சம் பணம் வேணும்னு சொல்லியிருந்தனே.. என்ன முடிவு பண்ணியிரிக்கே ?” ..
அசையாமல் அப்படியே படுத்திருந்தாள் பர்வீன்.
“கடனா வாங்கிக் குடு....பர்வீ !” சலீமிடமிருந்து கட்டளையாக வந்தது குரல். .
எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இப்பிடி திரும்பத் திரும்ப கூசாம பணம் கேக்குறார் மனுஷன். ச்சை ! வாப்பாகிட்ட பணம் ஒன்னும் இல்லேன்னு எவ்வளவு சொன்னாலும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறார் ? அதுவரைக்கும் வராத பண கஷ்டமெல்லாம் கல்யாணம் ஆனதும் இந்த ஆம்பிளைங்களுக்கு வந்துருமா?.
“என்னங்க நீங்க! கொஞ்சமாச்சும் மனச்சாட்சி இரிக்கா ஒங்குளுக்கு? என்ன மனுஷன் நீங்க? என் நகைய கழட்டிக் குடுத்து நாலஞ்சு மாசம்தாங்க ஆச்சு அதுக்குள்ள மறுபடியும் பணம் கேக்குறீங்களே வெட்கமா இல்ல ? எங்க ஊட்டுல பணம் என்ன மரத்துலயா காய்க்குது...?” ஆத்திரத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி கத்தினாள் பர்வீன். .
“என்னடி பேசுறே..நிய்யீ ? இத எங்கும்மாட்ட சொன்னேனு வச்சுக்க... உங்கள நாறடிச்சுரும்...ஆமா” மிக வெகுண்டவனாக சொன்னான் சலீம்.
“பின்ன......! ஏற்கனவே நகய வித்து வாங்குன பணத்த என்ன பண்ணுனீங்க.? இப்ப மறுக்கவும் பணம் கேக்குறீங்களே....உங்குளுக்கே இது நியாயமாப்படுதா..? உங்கும்மா வந்து நாறடிக்குறதுக்கு நாங்க அப்பிடியென்ன தப்பு செஞ்சோம்...? எங்கே வந்து நாறடிக்கச் சொல்லுங்க பாக்கலாம் ”
“என்னமோ உங்க வாப்பா அள்ளி அள்ளி குடுத்துட்ட மாதிரி பேசுறே..?”,
“நீங்க கேக்குறப்பவெல்லாம் அள்ளிக் குடுக்குறதுக்கு எங்கூட்டுல என்ன பணம் மரத்துலயா காய்க்குது ?என்று கத்தி விட்டு, உள்ளுக்குள் ஏதோ முணுமுணுத்தாள் பர்வீன்.
“என்னடி முணுமுணுக்குறே....?” அவன் கேள்விக்கு பர்வீன் மறுபடிபதில் எதுவும் சொல்லவில்லை.
.வீடு முழுக்க மௌனம் கனமாக உலாவிக் கொண்டிருந்தது. சுவரின் மூலையில் ஒட்டியிருந்த பல்லியை இந்தப் பக்கமிருந்து வந்த பெரிய பல்லியொன்று தாக்குவது போல வேகமாக ஊர்ந்து வர, அந்தப் பல்லி சட்டென்று ஓடி மறைந்ததை பார்த்தாள் பர்வீன்.
சலீம் எதுவும் பேசாமல் இருந்தது அவளுக்குள் பலவித எண்ணங்களை உருவாக்கியது. இது சரியாகாது என்று உணர்ந்த பர்வீன் மௌனத்தை உடைக்கும் விதமாக, ”என்ன, எங்க ஊட்டுல கொண்டுபோய் உடுங்க..! வேண்டாம்.... நா இப்பவே கெளம்பறேன். எங்க வாப்பாகிட்டருந்து எப்ப பணம் கிடைக்குமோ அப்ப நா வாங்கிட்டு இங்க வர்றன். அதுவரைக்கும் எங்கூட்டுலயே நா இரிக்கிறன்.” என்று சொல்லிக்கொண்டே பீரோவிலிருந்து அவளின் துணிமணிகளை எடுத்து சிறிய பேக்கில் அடுக்க ஆரம்பித்தாள்.
என்னையே மிரட்டிப் பார்க்கிறாளா....! இப்பிடியே விடக்கூடாது. அவனுக்கு கோபம் விர்ரென்று தலைக்கு ஏறியது. ”என்னளா ! நீபாட்டுக்கு கெளம்பிட்டிரிக்கே..! அவ்வளவு திமிராயிருச்சா உனக்கு.?” வீடே அதிரும்படி கர்ஜித்தான் சலீம்.
கணவனை திரும்பிக்கூட பார்க்காமல் “ஆமா, திமிர்தா.!.” என்றபடி விறுவிறுவென்று வெளியேறிப் போன மனைவியை பார்த்தவாறு நம்ப முடியாமல் மிரட்சியுடன் பிரமித்துப் போனவனாக அப்படியே நின்றிருந்தான் சலீம்.