தம்பியும் அக்காவும் அவ்வளவாகப் பேசிக் கொள்வதில்லை. இருவரும் தனித்தனியாக டாக்டர் கோகுல்நாத்தை சந்தித்து விட்டுச் சென்றனர்.
தம்பி சொல்கிறான், "அப்பா கடைசி காலத்தில இப்படித்தான் இருந்தார். நான் சொல்ற மாதிரி செய்றதுதான் சரி."
அக்கா சொல்கிறாள், "அப்பா வெளிவேஷம்தான் மாத்திகிட்டார். உள்ளே குமுறிக்கிட்டுத்தான் இருந்தார். நான் சொல்ற மாதிரி செஞ்சாத்தான் அவர் ஆத்மா சாந்தி அடையும்."
இருவரின் உறவையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் இருந்தது மருத்துவருக்கு. முடிவில் யார் சார்பாக முடிவெடுத்தார்? ஒரு வருடம் முன்னோக்கிப் போவோம்.
........
வழக்கமான வார நாள். இதய மருத்துவரான டாக்டர் கோகுல்நாத்தின் வெளிநோயாளிப் பிரிவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
"அடுத்த பேஷண்ட உள்ள அனுப்புமா."
மேஜை மேல் இருந்த கோப்பில் சடையப்பன் என்று எழுதியிருந்தது. சட்டென்று மருத்துவருக்கு அந்த நபரின் முகம் மனதில் உருவெடுத்தது. சடைமுடிதான் இல்லையேயொழிய திருநீற்றுப்பட்டை, ருத்ராட்ச மாலை என்று சிவப்பழமாகத்தான் எப்பொழுதும் வருவார். சுமார் இருபது வருடங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து போராடி வென்றவர். ஆறு மாதங்கள் முன்பு வந்திருந்த பொழுது இதயத்துடிப்பு பலவீனமாகி இருந்ததை தெரியப்படுத்தி மாத்திரை மருந்துகளை சற்றே கூட்டியிருந்தார் மருத்துவர்.
"உள்ளே வரலாமா டாக்டர்?"
"வாங்க" என்று கூறிக் கொண்டே நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்து திடுக்கிட்டார் கோகுல்நாத். சோர்வான முகம். திருநீறோ சந்தனமோ இல்லை. பெயருக்கு சிறிதளவு குங்குமம் வைத்திருந்தார்.
"இருவது வருஷம் முன்னாடி நீங்க ஸ்டன்ட் வச்சதனால ஏதோ இந்த உடம்பு ஓடுது டாக்டர்."
"அப்படி இல்லை. நீங்க நல்லா இருக்கீங்கன்னா அது நீங்க செஞ்ச தர்மபலன்."
"........"
"சொல்லுங்கய்யா. இப்ப ஏதோ வேற பிரச்சினையில் இருக்கீங்க போலத் தெரியுதே."
சோகமான புன்னகை ஒன்றை உதிர்த்தார் சடையப்பன்.
"என் பையன் ரகு ஞாபகம் இருக்கா சார்?"
"ஓ. போன தடவ உங்க மகன், மகள் ரெண்டு பேரும் வந்திருந்தாங்களே, ஞாபகம் இருக்கு. நல்லாத்தானே சார் இருக்காங்க ரெண்டு பேரும்?"
"ஜானகிக்கு கல்யாணம் ஆகி மூணு வயசுல குழந்தை இருக்கு டாக்டர். எங்க வீட்டுக்கு நாலு தெரு தள்ளித்தான் இருக்கா. இப்ப பையனாலத்தான் பிரச்சனை."
"என்னது?"
"ஒரு பொண்ணக் காதலிக்கிறேன் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்னு சொல்றான்."
"அதுல என்ன தப்பு?"
"பொண்ணு வேற மதம் சார்."
இதை எதிர்பார்க்காத மருத்துவர் மேற்கொண்டு என்ன பேசுவது என்று சற்றுத் தயங்கினார்.
"பொண்ணு சைடுல ஏத்துக்கிட்டாங்களா?"
"ரொம்ப வசதியானவங்க சார். ஏத்துக்கிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன் சொல்றாங்க. மதம் மாறணுமாம்."
"..........…."
இதை யூகித்திருந்த மருத்துவர் அமைதி காத்தார்.
"பையன் சரின்னு சொல்லிட்டான்."
"அப்புறம் என்ன? சந்தோசமா வாழட்டுமே....."
"பிரச்சனை அது இல்ல. மதம் மாறணும்னு எதிர்பார்க்கிறாங்கன்னு சொன்னேனே, அது பையன் மட்டுமில்ல, அவனோட பேரன்ட்ஸ் நாங்களும் மாறணுமாம். அப்பதான் அவங்களுக்கு கௌரவமா இருக்குமாம்."
இதைக் கேட்டவுடன் சற்று அதிர்ந்து விட்டார் மருத்துவர். இந்த குண்டை உள்வாங்க சற்று நேரம் எடுத்தது. இப்பொழுது அதை ஏற்காமலும் மறுக்காமலும் அமைதி காப்பதே சரி என்று முடிவு எடுத்தார்.
"நானும் என் மனைவியும் மகனோட எதிர்காலத்த மனசுல வச்சு மதம் மாறலாம்னு முடிவு பண்ணிட்டோம்."
"ஓ.... அப்படின்னா பிரச்சனை தீர்ந்திருச்சு தானே?"
"இல்ல. ஜானகியால இத ஏத்துக்க முடியல. நானும் அவள சமாதானப்படுத்த நிறைய முயற்சி பண்ணினேன். ஆனா முடியல."
"........"
"ரெண்டு நாள் முன்ன வீட்டுக்கு வந்திருந்தா. நவராத்திரி மாதிரி எந்தப் பண்டிகை வந்தாலும் நம்ம காலனி கோவில்ல நீங்களும் நானும் சேர்ந்து தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாம் பாடுவோமேப்பா...... இந்த வருஷம் நீங்க வர மாட்டீங்க.. அப்படித்தானேப்பான்னு அழுதுகிட்டே அவ வீட்டுக்குப் போயிட்டா."
இதை சொல்லும் பொழுதே அவர் கண்கள் கலங்கிவிட்டன. தோளிலிருந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.
"தம்பி கிட்ட நிறைய தடவப் பேசினா. நீ மாறுவதில் அர்த்தம் இருக்கு. ஏன் நம்ம அப்பா அம்மா மாறணும்? அவங்க கிட்டப் பேசி இந்த கண்டிஷனை விடச் சொல்லுங்குறா.. அவன் பயப்படுறான். இதனால கல்யாணம் நின்னு போயிடுமோன்னு. இதை நீ தான் பெரிசு படுத்துறேன்னு அக்காகிட்ட சண்டை போடறான்."
அவரின் குனிந்த தலை நிமிரவே இல்லை. கண்களைத் துடைத்த வண்ணம் இருந்தார்.
"என் ரெண்டு குழந்தைகளும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி சார். இந்தப் பிரச்சனையினால அவங்க ரெண்டு பேரும் இப்ப பேசிக்கிறது இல்ல. ஆண்டவன் ஏன் தான் என்னை இப்படி சோதிக்கிறானோ?"
"கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தித் தருவார் ஐயா. வருத்தப்படாதீங்க. எது நடந்தாலும் அது அப்படியே ஏத்துக்கிறதுதான் உங்க இதயத்துக்கு நல்லது."
இதைத் தவிர மருத்துவரால் வேறு என்ன பேச முடியும்? அவருக்குரிய மாத்திரை மருந்துகளை எழுதிக் கொடுத்து அனுப்பினார். அடுத்த இரண்டு நாட்களில் அதை மறந்தே போய்விட்டார்.
மூன்று மாதம் கழித்து சடையப்பன் மீண்டும் வந்தார். முகம் ஓரளவு தெளிவாகவும் புன்னகையுடன் இருந்தாலும் அதில் ஒரு விரக்தியும் கலந்திருந்தது.
"பையன் பெயர் மாத்தியாச்சு. எங்க பேரும் மாத்தியாச்சு"
".........."
"பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு சார்."
"ஓ சந்தோசம்."
மேற்கொண்டு அவர் ஒன்றும் பேசவில்லை. அவரைப் பரிசோதித்து விட்டு, மருந்துகளை எழுதி, அவர் அறையை விட்டு வெளியேறும் நேரம் வரும் பொழுது அடக்க முடியாமல் கேட்டார் மருத்துவர்.
"உங்க பொண்ணு...."
உதட்டைப் பிதுக்கினார். எதிர்மறையாகத் தலையை அசைத்தார். ஆக, மகள் இதை ஏற்கவில்லை. ஒதுங்கி இருக்கிறாள் என்பது புரிந்து விட்டது.
"நான் மட்டும் இல்ல. எங்க குடும்பத்துல எல்லாருமே உங்கள எங்க சொந்தக்காரர் மாதிரிதான் பாக்குறோம் டாக்டர்."
"மிக்க நன்றிங்கய்யா" என்று கைகூப்பினார் மருத்துவர்.
தன் சட்டைப்பையிலிருந்து ஒரு உரையை வெளியே எடுத்து மேஜை மேல் வைத்தார் சடையப்பன்.
"என் பையனும் பொண்ணும் சேர்ந்திருக்கணும். அதுதான் எனக்கு சந்தோசத்தக் கொடுக்கும். இதுல ஒரு லெட்டர் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றப்போ நீங்க அவங்ககிட்ட கொடுக்கணும்."
"உயில் எழுதியிருக்கீங்களா? இப்பவே காப்பி எடுத்து அவங்களுக்கு குடுத்துருங்க. அது தான் நல்லது."
"இல்ல டாக்டர். உயில் எழுதுகிற அளவுக்கு என்கிட்ட சொத்துப்பத்து பெருசா இல்ல. வாயால சொல்றதைக் காட்டிலும் எழுத்துக்கு பவர் அதிகம். அதுவும் ஒருத்தர் இறந்த பின் அதுக்கு இன்னும் பவர் கூடிடும்."
"இப்படி எல்லாம் பேசாதீங்கய்யா"
"நான் பொதுவாத்தான் சொன்னேன் டாக்டர்."
சரி என்று வாங்கி வைத்துக் கொண்டார் மருத்துவர். நாட்கள் நகர்ந்தன. ஓரிரு மாதங்கள் கழித்து ரகு தனியே வந்து தன் அப்பாவின் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டுச் சென்றான். சொல்லி வைத்தது போல ஒரு வாரம் கழித்து ஜானகியும் வந்து விசாரித்து விட்டுச் சென்றாள்.
உடல் பலவீனமாக இருந்தாலும் மனம் அமைதியாகவும் திடமாகவும் இருப்பவர்கள் நலமாகத்தான் இருப்பார்கள். மனமும் பலவீனம் ஆகும் பொழுது உடல் சோர்ந்து விடுகிறது. சடையப்பன் பற்றிய என் கவலை உண்மையாயிற்று. ஒரு நாள் இரவு நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக்கருவியும் பற்பல மருந்துகளும் கொண்டு உயிரை இழுத்துப் பிடிக்க வேண்டி இருந்தது.
அடுத்த நாள் காலை ஜானகி வந்தாள். தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு சென்று அப்பாவை பார்த்துவிட்டு வந்திருக்கிறாள். அழுது வீங்கியிருந்தன அவள் கண்களும் முகமும்.
"அப்பா எப்படி இருக்கிறார் டாக்டர்?"
"சாரிமா. எல்லா முயற்சியும் பண்ணிக்கிட்டு இருக்கோம்."
"புரிஞ்சிருச்சு டாக்டர். என்னாலதான் அப்பா இப்படி ஆயிட்டார்," என்று கூறிக் கொண்டே விசும்பத்தொடங்கினாள்.
"இல்லம்மா. அழாத. அவர் ஏற்கனவே 20 வருஷமா ஹார்ட் பேஷன்ட். அதுதான் கொஞ்சம் கொஞ்சமா மோசமாயிருக்கு."
"எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுங்க டாக்டர். நாங்க வேற சில முடிவு எடுக்கணும்."
எந்த முடிவைப் பற்றி சொல்கிறாள் என்று மருத்துவரால் கணிக்க முடியவில்லை.
"செலவுக்கு கவலைப்படாத. நாம பாத்துக்கலாம்னு என் ஹஸ்பண்ட் சொல்லி இருக்கிறார் டாக்டர். ப்ளீஸ் டேக் கேர்." என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் காலை ரகு வந்தான். அவன் முகமும் சோகக் களையுடன் இருந்தது. மீண்டும் அதே கேள்விகள். அதே பதில்கள்.
"டாக்டர். நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா அப்பா இந்த தடவை பொழைச்சு வந்துருவார்னு தோணலை"
".........."
"அக்கா கிட்ட நீங்க கொஞ்சம் பேச முடியுமா?"
"எதப் பத்தி?"
"அப்பா இறந்தப்புறம் எங்க முறைப்படி புதைக்கிறது தானே சரி?"
"ஆமாம்."
"அக்கா ஒத்துக்க மாட்டேங்குறா. 70 வருஷமா அவர் சிவபக்தராத்தான் வாழ்ந்திருக்கிறார். அதனால குடும்ப வழக்கப்படி எரிக்கணுமாம். அப்பதான் அவர் ஆத்மா திருப்தி அடையுமாம்"
"........"
"ஏற்கனவே எங்களுக்குள்ள அவ்வளவா பேச்சு வார்த்தை இல்லை. இதனால எங்க உறவு மொத்தமும் முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு."
"நான் என்ன பேசுறதுன்னு தெரியலையேப்பா"
"ஜானகி கிட்டச் சொல்லி ஏத்துக்கிடச் சொல்லணும்."
"உன்கிட்ட பேசி உன்ன ஏத்துக்கிடச் சொல்லணும்னு என்கிட்ட வேண்டினா நான் என்ன செய்ய?"
"என்ன செய்றதுன்னு தெரியல டாக்டர். நான் அதுக்கு ஒத்துக்கிட்டா எங்க வீட்ல எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை..."
சென்றுவிட்டான்.
சடையப்பனுக்குக் அதி தீவிர சிகிச்சைகள் தொடர்ந்தன. அவை எல்லாவற்றையும் மீறி அவரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.
'இந்தப் பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? இரண்டு பக்கமும் நியாயம் இருக்கிறது. எப்படி யோசித்தும் யாரை நிர்பந்தித்து ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடையே கிடைக்கவில்லை.'
அப்பொழுதுதான் சடையப்பன் தன்னிடம் விட்டுச் சென்ற அந்த கடிதம் ஞாபகம் வந்தது மருத்துவருக்கு.
'அதைத் திறந்து படித்தால் என்ன?'
'இல்லை. அதை தன் பிள்ளைகளிடம்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.'
உடனே அலைபேசியில் அழைத்து இருவரையும் அடுத்த நாள் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார். அன்று இரவு அவர் தூங்கவே இல்லை.
......
இதோ ரகுவும் ஜானகியும் மருத்துவரின் முன் அமர்ந்திருக்கிறார்கள். தந்தையின் இறுதிச் செய்தியை எதிர்பார்த்து முகத்தை இருவரும் இறுக்கமாக வைத்திருந்தார்கள்.
"என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?"
இருவரும் பதில் பேசாமல் வேறு வேறு திசையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.
"உங்ககிட்ட குடுக்கச் சொல்லி அப்பா ஒரு லெட்டர் என்கிட்ட குடுத்திருக்கார்."
அதை எடுத்து மேஜை மேல் வைத்தார்.
"ரெண்டு பேர்ல யாராவது எடுத்துப் படிங்க."
இருவருமே தொடவில்லை.
"நீங்களே படிங்க." என்றாள் ஜானகி.
அந்த உறையை ஒரு ஓரமாகக் கிழித்து அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். படிக்க படிக்க அக்கா தம்பி இருவரின் கண்கள் குளமாவதை கவனித்தார் டாக்டர். பல சம்பவங்களை நினைவுகூர்ந்திருந்தார் சடையப்பன்.
"உனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து மோசமான நிலையில் இருந்த பொழுது தன் பரீட்சைப் பற்றி கவலைப்படாமல் உன்னை கவனித்துக் கொண்டு உன்னுடனே மருத்துவமனையில் இருந்த அக்காவை உன்னால் மறந்து விட முடியுமா என்ன? ஜானகி... சில சமயங்களில் நானும் அம்மாவும் சொல்வதைக் கேட்காமல் அடம் பிடிப்பாய். தம்பி ஒரு தடவை அதட்டினால் அடங்கி விடுவாய். அந்த நேரத்தில் உங்கள் இருவரின் பிணைப்பை நினைத்து நாங்கள் உள்ளுக்குள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோம் என்பதை விவரிக்க முடியாது. நீங்கள் இருவரும் வாழ்க்கைக்கும் இணக்கத்துடன் இருந்தால்தான் என் ஆத்மா சாந்தி அடையும்.."
"........"
சில வினாடிகள் மௌனமாகக் கழிந்தன.
"மேல படிங்க சார் . ."
தொண்டையடைத்து, குரல் வெளிவராமல், ஒரு முறை செருமிவிட்டுப் படித்தார் மருத்துவர்.
"கடைசியாக ஒரு வேண்டுகோள். நான் இறந்த பின் என் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக நம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொடுத்து விடவும்."
கடைசி வரியைப் படித்தவுடன் "அப்பா... " என்று அலறி அழ ஆரம்பித்து விட்டாள் ஜானகி. "அக்கா..." என்று அவளை அணைத்துத் தானும் அழுகிறான் தம்பி. சுவர் பக்கமாகத் திரும்பி தன் கைக்குட்டையை வெளியில் எடுத்தார் மருத்துவர்.
.....
ஒரு வாரம் கழித்து... மருத்துவரின் வீடு. அவர் மனைவி.
"ஏங்க உங்க டேபிள கிளீன் பண்ணினேன். இந்த பேப்பர்ல யாரோ இம்போசிஷன் மாதிரி திருப்பி திருப்பி எழுதிப் பார்த்திருக்காங்க. யாருன்னு தெரியலையே. உங்க டேபிளுக்கு எப்படி வந்தது?"
சடையப்பனின் கடிதத்தில் கடைசி ஒரு வரியை, அவரின் கையெழுத்தைப் போலவே எழுதுவதற்கு தான் இரண்டு மணி நேரம் எழுதிப் பழகிய அந்தக் காகிதத்தை வாங்கி "தெரியலையே.." என்றவாறு குப்பையில் போட்டார் டாக்டர் கோகுல்நாத்.
பி.ஆர்.ஜெ.கண்ணன்
மருத்துவரான பி.ஆர்.ஜே கண்ணன், மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் இதயவியல் துறை இயக்குநர்.
மருத்துவமனையில் அன்றாடம் சந்திக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இதயத்திலிருந்து, இதய பூக்கள் என்று இரு சிறுகதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.