ஓவியம்: ரவி பேலட்
சிறுகதைகள்

நினைத்தாலே மரணம்!

ரஞ்சன்

ஒரு மளிகைக் கடைக்கும் செல்போன் கடைக்கும் இடையே பொருந்தாமல் சிவப்பு விளக்கு பலகையுடன் இருந்தது அந்த சைக்கியாட்ரிஸ்ட் கிளினிக்.

பெயரை மீண்டும் ஒரு முறை பார்த்தான் முத்துகிருஷ்ணன். வெள்ளைப் பலகையில் கருப்பு எழுத்துக்களில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. சத்தியமூர்த்தி, மனநல மருத்துவர், அடைப்புக்குள் சைக்கியாட்ரிஸ்ட், பார்வை நேரம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை. பெரம்பூரின் சந்தடியில் ரோட்டு கடை பிரியாணி வாசனைகளுக்கு இடையே அங்கே சைக்யாட்ரிஸ்ட் கிளினிக் ஓர் ஆச்சரியம்.

முத்துக்கிருஷ்ணன் உள்ளே நுழையும் போது மணி எட்டரை. இணைக்கப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகளில் இரண்டு பேர் இருந்தார்கள். பத்து மணி ஆகிவிடும் என்று நினைத்தான். ஆனால் இன்று கட்டாயம் அவரைப் பார்த்து விட வேண்டும். அவனது பிரச்சினை அப்படி. உயிர் சம்பந்தப்பட்டது. அதுவும் அடுத்தவர் உயிர்.

முத்துக்கிருஷ்ணனுக்கு வினோதப் பிரச்சினை. அவன் நினைக்கிறவர்கள் எல்லோரும் இறந்து போகிறார்கள். இந்த ஆறு மாதத்தில் அவன் நினைத்த மூன்று பேர் இறந்துவிட்டார்கள். பட்டியல் நீளுவதற்குள் மனநல மருத்துவரைப் பார்த்துவிட வேண்டும். வந்துவிட்டான்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ட்யூப் லைட்டுக்கு பின்னே பல்லி ஒளிந்திருந்து அவனை எட்டிப் பார்த்தது. டிவியில் விஜய் ரசிகர்கள் வேன் பின் ஓடிக் கொண்டிருந்தார்கள். உதவியாளன் சேனைலை சட்டென்று மாற்றினான். ஏசி அத்தனை குளுமையாக இல்லை. அவனுக்கு முன்னால் இருந்த மனிதர் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த பெருத்த மார்பு பெண்மணி இவனை முறைத்துக் கொண்டிருந்தாள். பார்வையை மாற்றி கதவு கண்ணாடி வெளியே சாலையைப் பார்த்தான். பெரம்பூர் ஓடிக் கொண்டிருந்தது. டாக்டர் எப்போது அழைப்பார்? தீர்வு சொல்வாரா? தீருமா?

டாக்டர் அறைக்குள் நுழைவதற்கு முன் முத்துக்கிருஷ்ணன் ஒரு மினி குறிப்பு: எம்.காம் முடித்திருக்கிறான். 28 வயது. பெண் தேடுகிறார்கள். ஒரே பையன். பெங்களூரு ஜியோவில் சேல்ஸில் இருக்கிறான். பேச்சிலர் வாழ்க்கை. வார இறுதிகளில் பியர் அடித்து, சினிமா பார்த்து, துணி துவைத்து, இன்ஸ்டா ஆண்ட்டிகள், ரீல்ஸ் அக்காக்களை

இரவெல்லாம் ரசித்து வாழும் சராசரி இளைஞன். ஆனால் அந்த சராசரி வாழ்க்கை இப்போது சாவுகளை தீர்மானிக்கும் வாழ்க்கையாக மாறிவிவிட்டது. மூன்று பேர் இறந்துவிட்டார்கள். மரண பட்டியல் நீளும் முன்…….

“சார், நீங்க உள்ள போங்க” உதவியாளன்.

முத்துக்கிருஷ்ணனின் மரண கதைகளை டாக்டர் அறையில் கேட்போம்.

சத்தியமூர்த்தி சைக்கியாட்ரிஸ்ட். மருத்துவக் கல்லூரி காலத்தில் விரும்பி எடுத்த படிப்பு. பெங்களூர் நிம்ஹான்ஸ், அமெரிக்க ஆராய்ச்சி, தாடியைத் தடவிக் கொண்டே ரோலிங் சேர் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் அதெல்லாம் வாய்க்கவில்லை. பெரம்பூர் மாதவரம் சாலைதான் கிடைத்தது. அரசு மருத்துவராகவும் இருப்பதால் வருமானத்துக்கு பிரச்சினை இல்லை. ஆறு மணிக்கு கிளினிக்கை திறப்பார். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் போல் கிடைக்கும். மாலை நேர பொழுதுபோக்கு. பத்து மணிக்கு கிளினிக்கை மூடிவிட்டு வேகன் ஆர்ரில் ஏறி வீடு போவார். சுவாரசியமில்லாத வாழ்க்கை.

அவருக்கு இன்று ஒரு சுவாரசியம். முத்துக்கிருஷ்ணன்.

“என்ன பிராப்ளம்?”

“டாக்டர், என் பேரு முத்துகிருஷ்ணன், ஷார்ட்டா முத்துனு கூப்பிடுவாங்க. எனக்கு ஒரு பெரிய பிரச்சினை. நான் யாரையாவது நினைச்சாலே அவங்க இறந்துடுறாங்க”

எதிரே அமர்ந்திருந்த இளைஞனின் முகத்தை உற்றுப் பார்த்தர் டாக்டர். கண்ணாடி அணிந்து தீவிர செஸ் விளையாட்டுக்காரன் போல் இருந்தான் முத்துகிருஷ்ணன். ஒல்லியான தேகம். முதுகில் லேப்டாப் பை. கண்களில் பதற்றம்.

“பையைக் கழட்டி அப்படி வச்சுடுங்க. ரிலாக்ஸா பேசுங்க… என்ன சொன்னிங்க?”

“நான் யாரையாவது நினைச்சாலே அவங்க இறந்திடுறாங்க டாக்டர்”

“நினைச்சாலே இறந்திடறாங்களா?” மனதில் எழுந்த ஆச்சரியத்தை முகத்தில் காட்டவில்லை.

இருபது வருடங்களாக மனநல மருத்துவராக இருக்கிறார். டிப்ரஷன், ஒசிடி, ஹைப்பர், ஏடிஎச்டி, ராத்திரி மனைவியுடன் படுக்கையில் மிஷின் வேலை செய்யவில்லை என்று மருந்து கொடுத்து வந்தவருக்கு இந்த மரணப் பிரச்சினை புதிது. ஹாலுசினேஷன்?

“உங்க கூட யாராவது வந்திருக்காங்களா?”

”இல்ல டாக்டர், நான் மட்டும்தான் தனியா வந்திருக்கேன்.வீட்டுல யாருக்கும் இந்தப் பிரச்சினை தெரியாது”

பெரம்பூர் சாலை சந்தடிகள் அடைப்புகளையும் மீறி அறைக்குள் மெலிதாய் கசிந்துக் கொண்டிருந்தது.

“சொல்லுங்க முத்துகிருஷ்ணன், என்ன நடந்தது?”

“உங்களுக்கு டெல்லி கணேஷ் தெரியும்தானே? நிறைய சினிமாவுல நடிச்சிருக்கார். போன நவம்பர் மாசம் அவர் இறந்திட்டார்”

“ஆமாம்” தலையசைத்தார் டாக்டர்.

“அவர்கிட்டருந்துதான் இந்தப் பிரச்சினை தொடங்கிச்சு. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நிறைய படம் பார்த்திருக்கிறேன். ஆனா நடுவுல கேப் ஆகிடுச்சு. பெங்களூர் போய்ட்டேன். வேலை கீலைனு அலைஞ்சதுல படம் பார்க்கிறது, டிவி பார்க்கிறது குறைஞ்சிடுச்சு. டெல்லி கணேஷை சுத்தமா மறந்துட்டேன். அவரைப் பத்தி நினைக்கிறதேயே விட்டுட்டேன்”

“நீங்க என்ன பண்றீங்க?”

“நான் பெங்களூர்ல ஒரு கம்பெனில சீனியர் சேல்ஸ்ல இருக்கேன்”

“பெங்களூரா?”

“சென்னைதான் எனக்கு. வேலைக்காக மூணு நாலு வருஷமா பெங்களூருல இருக்கேன். உங்கள பாக்கிறதுக்காக சென்னை வந்திருக்கேன். நாளைக்கு போய்டுவேன். இன்னும் கல்யாணம் ஆகல. அதுதானே அடுத்து கேப்பீங்க” அசந்தர்ப்பமாக சிரித்தான்.

டாக்டர் சிரிக்கவில்லை. “அப்புறம் சொல்லுங்க”

“டெல்லி கணேஷை மறந்திருந்தேன்னு சொன்னேன்ல. திடீர்னு ஒருநாள் பெங்களூர்ல ஒரு ஃப்ரெண்ட் ரூம் டிவில மைக்கேல் மதன காமராஜன் ஓடிக்கிட்டு இருந்தது. உடனே அவர் ஞாபகம் வந்திடுச்சு. அதுக்கப்புறம் அவரைப் பத்தியே நினைச்சிக்கிட்டு இருந்தேன். மறக்க முடியல. சென்னைல இருக்கிற என் ஃப்ரெண்டுக்கிட்ட போன்ல பேசும்போது அவரைப் பத்தி கேட்டேன். அவனுக்கே ஆச்சர்யம். என்னடா அவரைப் பத்தி திடீர்னு விசாரிக்கிறன்னு கேட்டான். அவனுக்கும் அவரைப் பத்தி தெரியல. நடிச்சிக்கிட்டுதான் இருக்கார்னான். டாக்டர், கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?”

முன்னறை உதவியாளனை அழைத்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னார் டாக்டர். குடித்தான். தொடர்ந்தான்.

“அதுக்கப்புறமும் ஒரு வாரம் அவர் நினைவாவே இருந்துச்சு. என்ன காரணம்னு எனக்கு தெரியல. எனக்கு எப்பவுமே அப்படி இருந்ததில்லை. யாரையுமே அப்படி தொடர்ந்து நினைச்சதில்லை. என்னடா இதுனு எனக்கே இருந்துச்சு”

“இதுக்கு முன்னாடி யாரையாவது பத்தி இப்படி தொடர்ந்து யோசிச்சிருக்கிங்களா?”

“நமக்கு நல்லா தெரிஞ்சவங்க. நமக்கு பழக்கமானவங்க பத்தி யோசிச்சிருக்கேன். அவங்க நினைப்புலாம் அடிக்கடி வரும். ஆனா இவரை எனக்கு முன்ன பின்ன தெரியாது. படம் பார்த்திருக்கேன். அவ்வளவுதான். மத்தபடி எனக்கும் அவருக்கும் தொடர்பே கிடையாது. எதுக்கு அவரோட நினைவுகள் எனக்கு வந்துக்கிட்டே இருந்ததுனு தெரியல..நின்னா.. உக்காந்தா.. பாத்ரூம் போனா.. ஆபீஸ் போனா.. பைக் ஓட்டுனா.. எங்க பார்த்தாலும் டெல்லி கணேஷ்தான்”

“அப்புறம் என்னாச்சு?”

”இப்படியே பத்து நாள் போய்க்கிட்டு இருந்தது. சென்னைக்குப் போய் அவரை நேர்ல பாத்துருணும்கிற அளவு எனக்கு அவர் நினைப்பு. திடீர்னு நியூஸ்ல பார்க்கிறேன் அவர் இறந்துட்டார்னு வருது. எனக்கு ஒண்ணும் புரியல. என்னடா இது நாம அவரை நினைச்சிக்கிட்டே இருந்தோம் திடீர்னு இறந்துட்டாரேனு ரொம்ப வருத்தமாயிடுச்சு”

“இது தற்செயலா நடந்த சம்பவமா இருக்கலாம்ல”

“நானும் அப்படிதான் நினைச்சேன் டாக்டர். ஆனா அதுக்கப்புறமும் இது தொடர்ந்துச்சு. அதுக்கப்புறம் நான் நினைச்ச ரெண்டு பேர் செத்துருக்காங்க”

“அடுத்தது யாரு?” டாக்டர் முகத்தில் சந்தேகம்.

”ஊர்ல எங்க டீச்சர். ரத்னா”

”டீச்சரா?”

“ஆமா...ரத்னா டீச்சர். எனக்கு எட்டாம் கிளாஸ் எடுத்தாங்க. ஒரு நாள் பெங்களூர்ல மெட்ரோல போய்கிட்டு இருக்கும்போது அவங்க ஞாபகம் திடீர்னு வந்தது. ஏன்னே தெரியல. அவங்க முகம் வந்து அப்படியே என் மனசுல ஒட்டிக்கிச்சு. அவங்களைப் பத்தி நிறைய நினைச்சேன்..நினைச்சுக்கிட்டே இருந்தேன். அவங்களுக்கு ஒரு மாஸ்டர் லவ் லெட்டர் கொடுத்தது, அந்த மாஸ்டரை இன்னொரு மாஸ்டர் அடிக்கப் போனது…பாத்ரூம்ல ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அசிங்க அசிங்கமா எழுதி இருந்தது…இப்படி அவங்களப் பத்தினது எல்லாம் என் மெமரில ஓடிக்கிட்டே இருந்தது. ஒருநாள் ஸ்டாஃப் ரூம்ல அவங்க புடவை அட்ஜஸ்ட் செய்யும்போது ஜன்னல் வழியா பாத்தது..இப்படி நான் ஸ்டாப்பா என் மனசுல அவங்க வந்துக்கிட்டே இருந்தாங்க…நிறுத்தவே முடியல..அவங்களைப் பார்க்கணும் போல ஆகிடுச்சு”

“அவங்களும் இறந்துட்டாங்களா?”

“ஆமாம் டாக்டர்…பத்து நாள் அவங்க நினைப்பு தாங்க முடியாம என் ஸ்கூல் ஃப்ரெண்டுக்கு போன் பண்ணி கேட்டேன். அவனுக்கு ஞாபகமே இல்லை. அப்புறம் அந்த மாஸ்டர் கதையெல்லாம் சொல்லி ஞாபகப்படுத்தினேன்….ரொம்ப போரடிக்கிறேனா டாக்டர்…?”

“இல்ல சொல்லுங்க…நீங்க பேசுனாதான் எனக்குத் தெரியும்”

“சரி டாக்டர். கிட்டத்தட்ட ஒரு மாசம் அவங்க நினைப்புதான். அவங்க பேரு போட்டு ஃபேஸ்புக்ல தேடுனேன். கூகுள்ல தேடுனேன்…கண்டுபிடிக்க முடியல. அந்த ஒரு மாசம் வாட்டி எடுத்துட்டாங்க. அப்புறம் ஒரு நாள் என் ஃப்ரெண்ட் போன் பண்ணி சொல்றான் அவங்க இறந்துட்டாங்கனு”

“எப்படி? என்னாச்சு?”

“ஆக்சிடெண்ட். 45 வயசுக்குள்ளதான் இருக்கும். பேப்பர்ல வந்திருந்ததுனு அந்த பேப்பர் கட்டிங்கையும் வொட்ஸப் பண்ணிருந்தான். அதுல அவங்க போட்டோ தெளிவா இருந்தது. இதுக்கு என்ன சொல்றீங்க டாக்டர். எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனா நான் நினைச்சதும் இறந்துட்டாங்க”

”இதுவும் தற்செயலா இருக்கலாம்ல. ரொம்ப மனசை போட்டு அலட்டிக்காதிங்க. ரிலாக்ஸா இருங்க…அப்புறம் வேற யார்?”

”ரிலாக்ஸா இருக்க முடியல டாக்டர். நீங்கதான் எனக்கு மருந்து கொடுக்கணும்”

”சரி பண்ணிடலாம் சொல்லுங்க.”

”டாக்டர், உங்க வீடு எங்க இருக்கு?”

“எதுக்கு கேக்குறீங்க?”

“இதுக்கு முன்னாடி நீங்க இருந்த வீட்டுக்கு எதிர் வீட்டுல இருந்தவர் உங்களுக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வருவாரா?”

“நல்லா பழகியிருந்தா வருவார்”

“நல்லா பழகலனா?”

“வர மாட்டார்”

“எனக்கு வந்தார் டாக்டர். நான் ஸ்கூல் படிக்கும்போது அரும்பாக்கத்துல இருந்தோம். அங்க எதிர்த்த வீட்டுல ஒருத்தர் இருந்தார். ரொம்ப பேச மாட்டார். ஒரு பஜாஜ் ச்செட்டாக் ஸ்கூட்ட வச்சிருந்தார். இதுதான் எனக்கு அவர் பத்தி இருந்த ஞாபகம். அவர் பேரு கூட எனக்குத் தெரியாது. அப்புறம் நாங்க காலி பண்ணிட்டு சூளை மேடு வந்துட்டோம். அவர் ஞாபகம் திடீர்னு வந்தது.”

“எப்படி வந்தது?”

“பெங்களூர்ல ஒரு மெக்கானிக் கடைல பழைய பஜாஜ் ச்சாட்டக் ஸ்கூட்டரைப் பாத்தேன். அழுக்கா ஒரு ஓரமா போட்டு வச்சிருந்தாங்க. உங்களுக்குதான் தெரியுமே டாக்டர் இப்ப ச்சாட்டக் ஸ்கூட்டரே கிடையாதுனு. உடனே அவர் ஞாபகம் வந்திருச்சு. அதே பிரச்சினை. நின்னா, உக்காந்தா, ஆபிஸ் போனா ஃப்ரெண்டோட பேசுனானு எப்ப பாத்தாலும் அவர் நினைப்புதான். முன்னாடி கொஞ்சம் சொட்டையா மீசை இல்லாம இருப்பார். அந்த மூஞ்சும் ஸ்கூட்டரும் என்னை விட்டு போகவே இல்லை டாக்டர். அவரைப் பத்தி யார்கிட்ட கேக்குறதுனும் தெரியல..சதா அவர் நினைப்புதான்”

“அப்புறம்..?” டாக்டர் ஆர்வம் அப்புறமில் தெரிந்தது.

”இப்படியே ஒரு பத்து பதினைஞ்சு நாள் போயிருக்கும். ஒருநாள் எங்கம்மா கிட்ட போன்ல பேசிக்கிட்டு இருக்கேன். அவங்க சொல்றாங்க. ஞாபகம் இருக்காடா முத்து, அரும்பாக்கத்துல நம்ம வீட்டுக்கு எதிர்ல ஒருத்தர் இருந்தாரே அவர் இறந்துட்டாராம். ஹார்ட் அட்டாக்காம். அப்பா ஃப்ரெண்டு சொன்னாருன்னாங்க. பக்குனு அடிச்சது. இனிமேயும் இதை விடக் கூடாதுனு வந்துட்டேன் டாக்டர்”

சத்தியமூர்த்தி இது போன்ற பிரச்சினையைப் பார்த்ததில்லை. அவர் படித்த அறிவியலில் இது இல்லை. முதலில் அவன் பதற்றத்தை குறைக்க வேண்டும்.

“நல்லா தூங்குறிங்களா?”

“தூக்கம் பிரச்சினைதான் டாக்டர். ராத்திரி கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு இருக்கேன். ரெண்டு மணி மூணு மணிக்கு தன்னாலே தூங்கிடுறேன்”

“அவ்வளவு நேரம் என்ன செய்வீங்க?”

“சொல்லலாமா டாக்டர்?”

“சொல்லுங்க”

“இண்டர்நெட்ல போர்னோகிராஃபி படங்கள் பார்ப்பேன். அது அடிக்‌ஷன் மாதிரி. டாக்டர் கிட்ட எதையும் மறைக்க கூடாதுனு சொல்வாங்க. அதனால சொல்றேன் டாக்டர். தப்பா எடுத்துக்காதிங்க.”

“ரொம்ப பார்க்காதிங்க. நல்லதில்லை. சேல்ஸ்ல இருக்கேன்னு சொல்றீங்க. அலைச்சல் இருக்குமே... அப்ப கூட தூக்கம் வரலையா?”

“ரொம்ப அலைச்சல் இல்ல டாக்டர். பெங்களூர் க்ளைமேட்ல அவ்வளவு டயர்ட் ஆகாது”

”உங்களுக்குள்ள ஏதாவது குரல் கேக்குதா...இதை செய் அதை செய்னு…?”

“இல்லை டாக்டர்”

“யாராவது உங்ககிட்ட பேசுற மாதிரி விஷூவலா ஏதாவது பார்க்கிறீங்களா?”

“இல்லை டாக்டர்…ஹாலுசினேஷன், டெலுஷன்னு நினைச்சுக்கிட்டு கேக்குறீங்க…அப்படிலாம் இல்ல டாக்டர்”

டாக்டர் அவனைப் பார்த்தார்.

“எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு பார்க்கிறீங்களா டாக்டர்...கூகுள்ல தேடுனேன்..இந்த சிம்ப்டம்ஸ் போட்டு... ஆனா எதுவும் என்னால கண்டுபிடிக்க முடியல”

ப்ரிஸ்கிரிப்ஷன் எழுத ஆரம்பித்தார்.

 “ஒரு மாசம் இதை சாப்பிடுங்க…நைட் நல்லா தூக்கம் வரும். ரொம்ப யோசிக்காதிங்க. படம் பாருங்க, பாட்டு கேளுங்க…ஃப்ரெண்ட்ஸோட அரட்டை அடிங்க. தனியா ரொம்ப இருக்காதிங்க. சீக்கிரம் படுத்துருங்க. சரியாகிடும்.”

“எனக்கு என்ன டாக்டர்?”

“ஒண்ணுமே இல்லை. தூக்கம்தான் உங்க பிரச்சினை. நல்லா தூங்குங்க. பெங்களூர்ல தனியா இருக்கிங்களா... அதுனால நிறைய யோசனைகள் வருது... இதை சாப்பிடுங்க.. சரியாகிடும்”

“ஃபீஸ் டாக்டர்”

“வெளில கொடுத்துடுங்க. அவர் கிட்டயே மருந்து வாங்கிக்கலாம்... ஒரு மாசம் கழிச்சு என்னை வந்து பாருங்க”

”ஒரு மாசம் கழிச்சா டாக்டர்…?” இழுத்தான்.

“ஏன் பெங்களூர்ல இருந்து வரணும்னு பார்க்கிறீங்களா”

“இல்லை டாக்டர்... நான் வேற ஏதோ யோசனை”

 “என்னது?”

 “ஒண்ணுமில்லை டாக்டர்”

“எதையும் யோசிக்க வேண்டாம்..அதுக்குதான் இந்த மருந்து. நல்லாயிடும்”

டாக்டர் எழுதிய சீட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

 “ஒரு நிமிஷம்…பெங்களூர் இருந்துட்டு பெரம்பூர்ல இருக்கிற என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?”

முத்துக்கிருஷ்ணன் சற்று தயங்கினான்.

“இங்க பக்கத்துல ஒரு கல்யாண மண்டபம் இருக்குல டாக்டர்”

“ஆமா”

“நாலஞ்சு வருஷம் முன்னால அங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். ரிசப்ஷன் முடிச்சுட்டு திரும்பும்போது சைக்கியாட்ரிஸ்ட்னு போர்டை பார்த்தேன். உங்க அசிஸ்டெண்ட் கதவை பூட்டிக்கிட்டு இருந்தார். நீங்க வெளில நின்னுக்கிட்டு இருந்திங்க. அப்போ உங்களைப் பார்த்தேன்”

“அப்படியா”

“ஆமா டாக்டர். அந்த முகம் இப்போ திடீர்னு ஞாபகத்துக்கு வந்துருச்சு. இந்தப் பிரச்சினைகளுக்கு அப்புறமா ஒரு மாசமா என் மனசு பூரா உங்க நினைப்புதான். என்னால உங்க நினைப்பை மாத்த முடியல டாக்டர். அதான் வந்துட்டேன் டாக்டர்”

லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு முத்துக்கிருஷ்ணன் கிளம்பினான்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram