சிறுகதைகள்

பறவையின் பாடல்

இளையராஜா இசையில் நனைந்த கதைகள் வரிசை -1

நெய்வேலி பாரதிக்குமார்

பரம்பிக்குளம் வனப்பகுதி.

சிறு மழைத்தூறலுக்குப் பிறகு, தலைத் துவட்டாத குழந்தை போல மரங்கள், பசுமை மாறா அழகுடன் காட்சி அளித்தன. சொட் சொட் என தேன் துளிகள் போல விழுந்து கொண்டிருந்த நீர்த்துளிகளை கையில் ஏந்தினான் பாலா. தனிமையிலிருக்கும் காட்டின் தலையை, மழை வருடிக்கொடுத்தது போல இருந்தது. சாலைகளே இல்லாத வனத்தில், பாதங்கள் உருவாக்கும் ஒற்றையடிப் பாதை பாலாவுக்கு ஒருவகையில் பேரானந்தத்தை அளிக்கும்.

“காட்டுக்குன்னு ஒரு வாசனை இருக்கு அதை உன்னால உணரமுடியுதா முகுந்தா?”

“ஆமாம் மழை நேரத்து காட்டுக்கு இன்னும் வாசனை அதிகம்”

“இரு .. இரு க்விட்..... க்விட் சத்தம் கேக்குதா?”

“ஆமாம் பாலா இது எந்தக் குருவியோட சத்தம்?”

“எல்லா பறவையையும் குருவின்னு சொல்லிட வேண்டியதா? இது மழைக் காடையோட குரல். பார்த்து காலை வெச்சு வா.. மழைக்காடை தன்னோட முட்டையை மண்ணுக்குள்ள, புதர்களுக்குள்ள மறைச்சு வைக்கும்”

பாலா இப்படிச் சொன்ன பிறகு தரையில் கால் வைக்கவே அச்சமாக இருந்தது.

“இது ஒரு மாதிரியான இன்விடேஷன். பெண் பறவைகளை அழைப்பதற்கு கூட இருக்கலாம்.” சொல்லிக்கொண்டே வந்த பாலா ஓரிடத்தில் சட்டென்று நின்றான். அருகிருந்த மரம் ஒன்றில் அமர்ந்து மெல்ல குரல் கொடுத்துக்கொண்டிருந்தது பாலா சொன்ன மழைக்காடை.

“பார்க்க, சாம்பல் காடை மாதிரிதானே இருக்கு?”

“இல்லை .... அதோட மார்பு பகுதியைப் பாரு ஒரு பிரஷால பெயின்ட் அடிச்ச மாதிரி கறுப்பு தீற்றல் இருக்கும்”

“அட ஆமாம்..”

“அப்படி இருந்தா அது ஆண் மழைக்காடை” என்றவன் தனது ஜோல்னா பையில் இருந்து ஒரு காகிதத்துண்டை எடுத்து, தான் வைத்திருந்த அட்டையில் 622 என்று எழுதி முகுந்தன் கையால் அதனைப் பிடிக்கச் சொன்னான். அதன் பிறகு அந்த அட்டையும், மழைக்காடையும் ஒரே ஃபிரேமில் தெரியும்படி புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

  “இது Breeding call ஆக இருக்கலாம், காலைல அப்புறம் சாயந்திரத்துல  தொடர்ந்து திருப்பித் திருப்பி  ராத்திரியிலேயும் கூப்பிடும் 'க்விட்-க்விட் நாட்ஸ்' அப்படின்னும் சொல்வாங்க... இது பொதுவான சாம்பல் காடையின் அழைப்பிலிருந்து ரொம்பவும் வித்தியாசமா இருக்கும்” என்று பாலா விளக்கமாகச் சொன்னான்.

:நீ சொன்னபிறகு வித்தியாசம் தெரியுது. ஆனா மறுபடி கேட்டா என்னால கரெக்டா ஐடன்டிஃபை பண்ண முடியுமான்னு தெரியலை”

“அங்க பாரு நத்தையை குறி வெச்சுகிட்டு ஒரு பறவை உக்காந்திருக்கே.. அதோட அலகைப் பாரு ஏதாவது வித்தியாசமா தெரியுதா?”

“அலகின்  நிறம் பழுப்பு வண்ணத்துல இருக்கு. தொடங்கற நிறம் கறுப்பா இருக்கு”

“நான் அதை சொல்லலை அதோட அமைப்பைப் பாரு”

“எனக்கு ஒண்ணும் வித்தியாசமாத் தெரியலையே?”

“நல்லா பாரு முகுந்தா.. மேல் அலகு வளைஞ்சு இருக்கும். அதுக்கு கீழ் அலகும் வளைஞ்சு இருக்கும். இடையில ஒரு துளை இருக்கா?”

“யெஸ் .. யெஸ் கரெக்ட் கட்டிங் பிளையர்ல கழுத்துப்பக்கம் இருக்குமே.... அது போல இருக்கு”

“அதையே கொஞ்ச நேரம் பார்த்துகிட்டு இரு”  அந்தப் பறவை மிகப் பொறுமையாக ஆனால் கவனமாக நத்தை நகர்வதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் சட்டென அந்த அலகின் துளைப்பகுதியில் சிக்கும்படி அந்த நத்தையைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு ஜிவ்வென பறந்தது.

“அடடா கிளாசிக் பாலா செம.. என்ன ஒரு பெர்ஃபெக்ஷன். என்னா ஸ்பீட்..  மிஸ் பண்ணியாச்சு வீடியோ எடுத்திருக்கலாம்.”

“அதோட பேரு நத்தைக் கொத்தி நாரை”

“சரியான பேரு. அட்டையில நம்பர் எழுதட்டுமா?”

“ஏற்கனவே எடுத்தாச்சு.. ஒவ்வொரு புதுப்பறவையை நான் பார்க்கும்போது மட்டும் நம்பர் போட்டு எடுத்துக்குவேன்.”

பாலா தன்னுடைய முதுகுப் பையிலிருந்து தண்ணீர் சீசாவை எடுத்து நீரை அருந்தினான். முகுந்தனிடமும் தந்தான்

“பாலா அந்த மரம் பிரம்மாண்டமா இருக்கே. அங்க கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போகலாமே.. நீ சொன்னியே கன்னிமர தேக்கு அதுவா இது?”

“இல்லை அதுக்கு இன்னும் உள்ளே போகணும். சஃபாரி போனா பாக்கலாம் . ஆனா சஃபாரி போறதுல என்ன பிரச்சினைன்னா நம்ம இஷ்டத்துக்கு நின்னு நிதானமா பார்த்துட்டு போக முடியாது. ஃபாரஸ்ட் ஆளுங்க வண்டி போற தடத்துல பறவைகள் அதிகமா இருக்காதுங்க”

 இருவரும் அந்த மர நிழலில் அமர்ந்தார்கள். உடனே கைகள் பரபரத்தன. பையில் இருந்த தின்பண்டங்களைத் துழாவின. பாலா இலைகளின் மீது சலசலப்பு ஒலி வராமல் மெல்ல நடந்து பூச்சிகளை குறிப்பாக அழகழகான வண்ணத்துப் பூச்சிகளை படம்பிடித்தான்.

“வர்ற பூச்சி போற பூச்சி எல்லாத்தையும் படம் பிடிக்கிற... ஆனா நீ ஏதோ பறவை பேரு சொன்னியே சட்டுன்னு ஞாபகத்துக்கு வரலை” நெற்றியைத் தட்டினான் முகுந்தன்.

“மலபார் விசிலிங் த்ரஷ்.... மலபார் விசிலடிச்சான்”

“ஆங் அதேதான் அது இன்னும் கண்ணுல படலையே”

“ரெண்டு வருஷமா.. ஏழெட்டு தடவை வந்திருக்கேன் என் கண்ணிலேயே இன்னும் படலை. இன்னிக்கு வந்துட்டு, உடனே கண்ணுலபடலைன்னு ஐயா சொல்றாரு”

“உண்மையிலேயே அந்தப் பறவை இங்க இருக்கா?”

“நிச்சயமா.. பேர்ட் வாட்சர்ஸ் இங்க பார்த்திருக்காங்க ஆனா என் கண்ணுல இன்னும் மாட்டலை.”

“அது பாக்கறதுக்கு எப்படி இருக்கும்?”

“உடம்பு முழுக்க மயில் வண்ண நீலம். கால் மட்டும் கறுப்பா இருக்கும்: ஆனா அதோட குரல் இருக்கே. இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது முகுந்தா. என்ன ஒரு ஸ்வீட்னஸ் தெரியுமா?”

“இன்னிக்கு நான் வந்திருக்கேன்ல நிச்சயம் பார்த்துடலாம்” என்று புன்னகையுடன் சொன்னான் முகுந்தன்.

“சரி பாலா உன்னால அந்த குரலை அடையாளம் கண்டுக்க முடியுமா?”

“ஷ்யூர். அதை ஒரு தரம் கேட்டாலே போதும். நீ கூட மறக்க மாட்டே..”

இருவரும் உணவு அருந்தியபின், மடக்கும் வசதி கொண்ட கேம்பிங் டென்டை பிரித்து அது அசையாதவாறு கம்பிகளை தரையில் ஊன்றி கயிறால் கட்டினார்கள். இருவரும் உள்ளே அமர்ந்துகொண்டார்கள். காற்று சற்றே மிதமாக டென்டின் பாலியேஸ்டர் துணியை படபடக்க வைத்தது. மதியம் ஒன்றுதான் ஆகியிருந்தது, ஆனாலும் காற்று லேசாக குளிர்வது போலிருந்தது.

“நீ இந்த பறவைகளோட சவுண்டை எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னியே அதை கேக்கலாமா?

“நோ.. பறவைகளின் ஒலி வெறும் சவுண்ட் இல்லை. அது அவைகளின் மொழி. அதோட அர்த்தம் அதனதன் இனத்துக்குத்தான் புரியும். அததுக்கு நேரம் காலம் இருக்கு. அந்த நேரத்துலதான் அப்படி அதுங்க குரல் கொடுக்கும். மத்த நேரத்துல நாம இப்படி ஆர்ட்டிஃபீஷியலா ப்ளே பண்ணுனா, மிஸ்கைடு பண்ற மாதிரி”

“அப்ப பாட்டு போடலாமா?”

“போட்டுக்க.. ஆனா சவுண்ட் கம்மியா வெச்சுக்க.”  

முகுந்தன் அலைபேசியின் வழியாக பாடலை ஒலிக்க வைத்தான்.

“பச்சைப்புல் மெத்தைவிரிக்கும்

அங்கே இளம் தத்தைகள் தத்தி குதிக்கும்

பட்டுப்பூ மொட்டு விரிக்கும் செந்தேன் பெற

பொன்வண்டு வட்டம் அடிக்கும்

சுற்றிலும் மூங்கில் காடுகள்

தென்றலும் தூங்கும் வீடுகள்

உச்சியின் மேலே பார்க்கிறேன்

பட்சிகள் வாழும் கூடுகள்

மண்ணின் ஆடைபோல வெள்ளம் ஓடுதே

அங்கே நாரைக் கூட்டம் செம்மீன் தேடுதே இந்நேரம்...

இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்

அட அங்கே பார் மஞ்சள் வான்வெளி கையால் நாம் தொடலாம்....”

யேசுதாஸ் தன் தேன் குரலில் காட்டை சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தார்.

“எப்பூடி பொருத்தமான பாட்டை போட்டேன்ல”

“நீ செஞ்சதுலேயே உருப்படியான காரியம் இதுதான்.. இன்னொரு ராஜா பாட்டு இருக்கு முகுந்தா.. மொத வரி தொண்டையிலேயே நிக்குது வர மாட்டேங்குது”

“கக்கிடு”

“அதான் முடியலையே.. எஸ்.ஜானகி பாடுனது. ரொம்ப ரேரான சாங்..” மறுபடியும் நெற்றியைத் தட்டினான் பாலா.

“ட்யூன் ஞாபகம் இருக்கா? ஹம் பண்ணி காமியேன்”

“அவ்வளவு பெரிய ஹம்மிங் பேர்ட் இல்லைடா நானு... அந்தப் பாட்டுல பறவைகளோட குரலை, சிறகசைப்பை எல்லாம் இசையில கொண்டு வந்திருப்பார்டா”

“அது சரி ஐயாயிரம் பாட்டு போட்டிருக்காரு.. அதுல மூவாயிரம் பாட்டாவது ஜானகி பாடி இருப்பாங்க... எங்கேர்ந்து தேடறது.... யார் நடிச்சது?”

“கார்த்திக் நடிச்சது.. கூட நடிச்ச ஹீரோயின் கண்ணு கூட அழகா இருக்குமே”

“இந்த ஹிண்ட் எல்லாம் வச்சிக்கிட்டு தேடனும்னா அரசன் அண்ணன்கிட்டதான் கேக்கனும்.. அவருதான் இதுல கிங்” என்றபடி முகுந்தன் அரசனுக்கு அழைப்பு விடுத்தான்.

“சொல்லு முகுந்தா”

“அண்ணே ஒரே கேள்வி ஒரே பதில். இளையராஜா மியூசிக், கார்த்திக், நடிச்ச படம் பறவைகள் ஒலியெல்லாம் வருமாம். அது என்ன பாட்டு?”

“இதே ஹிண்ட் வெச்சி கூகுள் பண்ணுனா கிடைச்சிடுமே”

“நீங்கதான் என்னோட கூகுள்......  சொல்லுங்க”

“பாட்டு ...முதல் வரி மறந்துட்டேன்.. படம் பாடும் பறவைகள்.. இப்ப தேடுங்க பாட்டைப் புடிச்சிடலாம்..”

“இது போதும்ணே  நான் புடிச்சிடுவேன்.. நன்றிண்ணே” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு கூகுளில் தேடினான்.

“இளமை உள்ளம் இசையில் துள்ளும்” என்கிற வரிகள் ஈர்க்க அதனை க்ளிக் செய்தான். தொடக்கத்திலேயே பறவைகளின் சிறகடிப்பு இனிமை சொட்டும் பறவைகளின் குரல்.. எனத் தொடங்க வேறொரு வனத்தில் நுழைந்தது போல இருந்தது. பாட்டு ஒலிக்கும்போது சம்மந்தமே இல்லாமல் வேறொரு பறவையின் குரல் இடைபுகுந்து ஒலித்தது. சட்டென எழுந்த பாலா “நைஸா  பாட்டை நிறுத்து” என்று மெதுவாகச் சொன்னான். இப்பொழுது டெண்டுக்கு வெளியிலிருந்து புதிதாக ஒரு பறவையின் குரல் ஒலித்தது.

கோகில கீதம்

தும்பியின் ராகம்

சலசலவென்றே சில கானம்

குளிக்கின்ற பறவை இசை பாடும்

அப்படியே செவிகளை கூர்மையாக்கி பாலா மெல்ல அடியெடுத்து வெளியே வர முயற்சித்தான். அப்பொழுது மயில் கழுத்து நீலத்தின் நிறம் அவன் கண்களில் நுழைந்து இதயத்தை நிறைத்தது போல இருந்தது. ஒரு கணம் இதயம் துடிப்பதை நிறுத்தி மீண்டும் இயங்கியது. அதுவேதான்... அதேதான்..... என்று அவனையறியாமல் அவனது வாய் சப்தமிட்டது. முகுந்தன் பக்கம் திரும்பி “டேய் அதே பாட்டை முதல்லேர்ந்து வை” என்று கத்தினான். முகுந்தன் சற்று பயந்து பின் நிதானித்து பாட்டை மறுபடி ஒலிக்கச்செய்தான். மீண்டும் அதே பறவையின் குரல் இணையாக ஒலித்தது.

வானம் பாடும் ராக பாஷை

மேலும் கேட்க நெஞ்சில் ஆசை

அன்பே மைனா

நீயே .. நானா

சுர வரம் தரும் பறவைகள் இவை

மடிதனில் வருமோ

“டேய் மலபார் விசிலிங் த்ரஷ்... தாண்டா.. அதேதான்..” வெளியே வந்து அதைப் பார்த்ததும் உற்சாகமாகி சத்தமாகச் சொல்லி பிறகு குரலை அடக்கினான்.

பக்கத்திலிருந்த மரத்தின் கிளையில் அடர் நீலப்பட்டின் அழகில் மின்னியது மலபார் விசிலிங் பறவை அதன் குரல் ரம்யமான விசிலின் ஒலியை உமிழ்ந்தது.

முகுந்தனும் உற்சாகமாகி” “ஆமாண்டா.. என்ன ஒரு ஆச்சர்யம். செம இல்லை?” என்றான். கூடாரத்துக்குள் வந்த பாலா அவசரம், அவசரமாக ஒரு அட்டையை எடுத்து 623 என்று எழுதினான். திரும்ப வெளியே வந்து அந்த அட்டையைக் கொடுத்து நிற்கச் சொன்னான். பின்னர் மலபார் விசிலிங் பறவைக்கு முன்னால் பிடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

“நாந்தான் சொன்னேன்ல.. மொதமொதல்ல நான் வந்திருக்கேன்.  இன்னிக்கு நிச்சயம் விசிலிங் பேர்ட் ஐ கண்டுபிடிச்சிடலாம்னு.....”

“தேங்க்ஸ்”

“எதுக்குடா, இதுக்கெல்லாம் தேங்க்ஸ்”

“தேங்க்ஸ் உனக்கு இல்லை.. ராஜா சாருக்கு”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram