ஓவியம்: பி ஆர் ராஜன்
சிறுகதைகள்

பூப்படைந்த ஒளி

களந்தை பீர்முகம்மது

சரோஜா அக்காவைப் பற்றிச் சொல்வதற்கு விசேசமாக ஒன்றுமில்லை. அவள் வீடு எல்லா வீடுகளையும்போலத் தெருவைப் பார்க்கிற மாதிரியில்லை. முடுக்கு தாண்டிப்போய் வாசலைத் தொட வேண்டும். ஏனோ அவளுடைய தாத்தா அப்படிக் கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அதற்கு சரோஜாவின் அம்மாவோ சரோஜாவோ என்ன செய்ய முடியும்?

அக்கா வீட்டின் அடுப்படி தெருவையொட்டி இருந்தது. பார்க்கப்போனால் இதுதான் நல்ல வசதியென்று சொல்ல வேண்டும். இப்படி வீடு அமைந்துவிட்டதனால் சரோஜா அக்காவின் குணாம்சமும் அடிக்கடி வெட்கப்படுகிற சீமாட்டியானாள் என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். யார் சொல்லியிருப்பாரென்று நினைவிலிருந்து சொல்ல முடியவில்லை. தெருவில் நடமாடக்கூடியவரின் கால் ஒலிகள், பேச்சொலிகளெல்லாம் துல்லியம் மாறாமல் இந்த அடுப்படியில் வந்து விழுந்தன. இங்கிருந்து தெருவின் நடமாட்டத்தைச் சிறப்பாகப் பார்க்க முடிந்தது. தென்னந்தோப்புகளைப் பார்க்க முடிந்தது; வயல்களைப் பார்க்க முடிந்தது; தூரத்திலுள்ள குடிதாங்கிக் குளத்தின் கரையில் நடமாடுபவர்களைப் பார்க்க முடிந்தது; குளக் கரையிலிருந்து ஒன்றுக்கு அடிப்பவர்கள், கொல்லைக்குப் போய்க்கொண்டிருக்கிறவர்கள் என அத்தனைபேரும் தெரிந்தார்கள். இன்னின்னார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் குளம் தூரமாய் அமைந்துவிட்டது நல்ல வேளையாக. சரோஜா அக்காவின் கண்கள் போகும் தூரத்தளவுக்கே போகும். அதற்கு மேற்பட்ட எல்லையைத் தாண்டாது.

சரோஜா அக்காவின் அப்பா இல்லை; அம்மா இருந்தார்கள். அக்காவுக்கு உடன்பிறப்பு யாரும் இல்லை. சரோஜா அக்கா வயிற்றில் இருக்கும்போதே ஒரு அண்ணன் இறந்துபோயிருக்கிறான். இப்போதைய மாணவர்கள், இளைஞர்களில் யாரும் சரோஜாவின் அப்பாவைப் பார்க்க முடியாமல் போனதைப் போலவே அவளும் தன் அப்பாவைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

சரோஜா அக்காவுக்கு மாப்பிள்ளை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அவளுக்குத் தெருவின் கிழக்கே கடைசிவீட்டில் இருக்கிற பாலு அண்ணன்தான் முறைமாப்பிள்ளை. பாலு அண்ணனின் வீட்டுக்குக் கிழக்கே வயல்கள். சகல போக்குவரவுகளுக்கும் மேற்கே பார்த்துத்தான் வந்தாக வேண்டும். பாலு அண்ணனுக்குக் கொஞ்சம் நிலபுலன்கள் உண்டு. பள்ளிக்கூடம் போய்விட்டு வந்ததும் வயல்களைப் பார்க்கப் போய்வருவார். சரோஜா அக்காவைப் போலவே பாலு அண்ணனும் பொறுப்பான ஆள்தான். சரோஜா அக்காவின் வெட்கம் பாலு அண்ணனின் வெட்கத்திற்கு நிகரானது.

பாலு அண்ணன் இப்படிப் போய்வருவதை சரோஜாவை ஒரு பார்வை பார்க்கத்தான் என்று சிலர் சொல்லுவார்கள். அது நம்பும்படியான செய்தியில்லை. சரோஜா அக்கா சதா சர்வகாலமும் அடுப்படியிலேயே நிற்க முடியுமா? பாலு அண்ணனுக்கு சரோஜா அக்காவிடம் காதல் வசனம் பேசும் ஆசை இருந்ததென்று யாராலும் சொல்ல முடியாது. வாகான வாசல் இருந்திருந்தால் கதை வேறுமாதிரி போயிருக்குமா? அப்படியும் சொல்ல முடியவில்லை. சரோஜா அக்காதான் அவ்வப்போது பாலு அண்ணனின் நடமாட்டத்தைப் பார்க்க முடியும். தப்பித் தவறி அடுப்படிக்குப் போகும்போது பாலு அண்ணன் தெருவில் போவதை அவளால் பார்க்க முடிந்தது. சரோஜா தன்னைப் பார்ப்பதை அந்தக் கண நேரத் தாண்டுதலில் பாலு அண்ணனால் கண்டுபிடிக்க முடியாது. சரோஜா அக்கா இருட்டில் அல்லவா இருப்பாள்? வெளிச்சமில்லாத அடுப்படி.

சரோஜா அக்காவை விடுமுறை நாட்களில் கபீர் சென்று பார்ப்பான்; சபீரும் சென்று பார்ப்பான்; இருவரும் தனித்தனியாகச் செல்வதைப் போலவே சேர்ந்தும் செல்வார்கள். இருவருடனும் சளசளவென்று பேச்சு வளர்ப்பாள். சரோஜா அக்கா ஏதாவது சினிமா பார்த்திருக்கிறாளா என்று கேட்டால், அவளுக்கு சினிமா தியேட்டர் இருக்குமிடம் தெரியாது. களக்காட்டில் பாக்கியலெட்சுமி தியேட்டர் இருக்குமிடமே தெரியாத ஒரேயொருத்தி இவள்தான். அவளைக் கட்டுப்படுத்தும் ஆளாகக் குடும்பத்தில் யாரும் இல்லை; அவளின் அம்மா ஒரு வெள்ளந்தியான மனுஷி. சரோஜாவாகத்தான் தன்னைக் கட்டிப் போட்டிருக்கிறாள். இப்படிப்பட்டவளுக்கு ஊரில் என்ன படம் நடக்கிறது, அதை கபீரும் சபீரும் சேர்ந்துபோய்ப் பார்த்திருப்பார்களா மாட்டார்களா என்றெல்லாம் சரியாக யூகம் செய்துவிடும் ஞானம் இருந்தது. அந்தக் கதைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்பாள். கதையை எப்படித்தான் நேர்க்கோட்டில் சொன்னாலும் இடையிடையே வக்கீல்கள் மாதிரி கேள்விகளைப் போட்டுத் தாறுமாறாகச் சிதைப்பாள். அதைப்பற்றி கபீரோ சபீரோ வருத்தப்படப் போவதில்லை. ஏதோ கதை சொன்னோம் என்கிற பேருக்குத்தான் கதைகள் போகுமே தவிர அதொன்றும் சினிமாவில் பார்த்த கதையாக இருக்காது. அதைக் குலைக்கிற பெருமை அக்காவுக்கு உண்டு. அதனால் சக்கையாக என்ன கதை கிடைக்கிறதோ அதிலே அவளும் சாந்தியாகிவிடுவாள். ‘இவனுங்ககிட்ட கதை கேட்டுத்தானா எல்லாம் ஆகப் போகுது,’ என்று அவள் நினைத்திருந்தாளோ என்னவோ?

எம்ஜிஆர் படம் பார்த்துவிட்டு வந்த ஜோருக்குக் கதை சொன்னால், அதில் வரும் பாட்டுக்கு எம்ஜிஆர் என்ன மாதிரி ஆடிக்காட்டியிருப்பாரோ அந்த ஆட்டத்தை ஆடும்படி கபீரிடம் கேட்டுக்கொள்வாள். உடன் அவனும் ஆடிப் பாடிக் காட்டுவான். “ஏல, இது என்னல ஆட்டம்? எம்ஜிஆரு இப்படியால ஆடுனாரு,” என்று நக்கலடிக்கிற மாதிரி கேட்பாள். கபீரும் சாமி சத்தியமாக இப்படித்தான் எம்ஜிஆரு ஆடினாரு என்று சொல்லுவான். நேரம் விசாலமாக இருந்தால் மற்ற பாட்டுக்களையும் பாடச் சொல்லி ஆடச் சொல்லிக் கேட்பாள். அவள் கோரிக்கையை கபீர் தட்டிக் கழிப்பதில்லை.

ஒரு நாள் கபீருக்கு ஏதோ பொறிதட்டியது. ” அது என்ன எப்பப் பாத்தாலும் தன்னை மட்டுமே ஆடச் சொல்லுறா? சபீரும் பக்கத்தில்தானே இருக்கிறான், அவனை ஏன் ஆடச் சொல்வதில்லை? தான் அந்த அளவுக்குக் கேவலமாகிவிட்டோமோ,” என்று மனம் உழலலானான். வகுப்பில் பாடம் நடக்கும்போதே இந்தப் பொறிதட்டியது கபீருக்கு. இதை அவளிடம் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பைக்கட்டைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு அவளின் வீட்டுக்குப் பாய்ந்தான். அந்த வேகத்துக்கு ஏற்றபடி அவன் கேள்வி அமைந்தது. “ எக்கா, நானென்ன கோமாளியா, என்னையவே எப்பவும் ஆடச் சொல்லுத? சபீர என்னைக்காவது ஆடச் சொல்லிக் கேட்டிருக்கியா நீயி?”

“ இத கேக்குறதுக்கா நாயி மாதிரி ஓடிவந்திருக்க மூதி? ஆடத் தெரிஞ்சவங்களத்தான ஆடச் சொல்ல முடியும்?”

“ சபீர நீ என்னைக்கு ஆடச் சொல்லிப் பாத்திருக்க? சொல்லு பாப்போம். “

“ அவனவன் மூஞ்சியப் பாத்துத் தெரிஞ்சிக்க வேணாமல? ஒன் மூஞ்சியப் பாத்தாத்தான எம்ஜிஆரு மூஞ்சி மாதிரியிருக்கு?”

கபீர் வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிரிசிரியென்று சிரித்தான். உடன் வீட்டுக்குள் நுழைந்து அந்தக் கண்ணாடியில் நன்றாகப் பார்த்தான் தன் மூஞ்சியை. அக்கா சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். தன் முகம் அசப்பில் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறது. எவ்வளவு பெரிய விசயத்தை வைத்து அக்கா தன்னைக் கௌரவித்திருக்கிறாள், இது தெரியாமல் அவள் மேல் கோபம் வந்துவிட்டதே என்று கபீர் உள்ளபடியே ரொம்பவும் வருந்தினான். அந்தச் சீப்பை எடுத்து ஒருமுறைக்கு இருமுறையாகத் தலையைச் சீவினான். அதன்பின் சபீர் வந்தான். அவனை எகத்தாளத்தோடு பார்த்தான் கபீர்.

“பேச்சியம்மா மவளே,” என்ற சத்தம் கேட்டது. சத்தத்தை வைத்து அது ஆமர் மாமாதான் என்று தெரிந்துகொண்டார்கள். “ என்னன்னு சொல்லுங்க,” என்று பதில் குரல் கொடுத்தாள். “ எம்மா, வீட்டுக்கு விருந்தாளுங்க வந்திருக்காங்க. கொஞ்சம் பாலு வேணும்,” என்றார். “ பாத்திரம் கொண்டாங்க, தர்றேன்.” சரோஜாவின் ஆதி அந்தம் தெரிந்தவர்களுக்குத் தெரியும், அவளுக்கு இவ்வளவு நீளமான பேச்சு இவ்வளவுக்குத்தான் இருக்குமென்று ! கபீரை எழுந்து சென்று பாத்திரத்தை வாங்கச் சொன்னாள். ஆமர் மாமா சுவருக்கு அந்தப் புறமாய் நின்றார். பெரியவர்கள் யார் வந்தாலும் அந்த இடத்தோடு நின்றுவிடுவார்கள். வீட்டு வாசல் முன் வருவதில்லை. முகம் பார்த்து உரையாட முடியாது. தெருவிலிருந்து அக்கா வீட்டிற்குள் வருவதாயிருந்தால், அந்த முடுக்கின் வழியாகத்தான் வர வேண்டும். சரோஜா அக்காவின் அம்மா பேச்சியம்மாள் வீட்டில் எப்பவும் இருக்க மாட்டார். அவர் பல ஜோலிக்காரர். எருமைகளை அவிழ்த்துக்கொண்டு அவர்தான் ஆற்றங்கரைப் பக்கமாக மேய்க்கக் கொண்டுபோவார்; இல்லையென்றால் நந்தவனம் பக்கம் போவார். வெயில் குளிர்ந்தாற்போல இருந்தால், ஆற்றங்கரையையும் தாண்டி அம்மன் கோவில் பக்கம்வரைகூட போவதுண்டு. கடைகண்ணிகளுக்குப் போவார். சாபமோ வரமோ, அவரின் கால்கள் வீட்டில் தரிக்கக் கூடியதாக இருப்பதில்லை. சரோஜா அக்கா தன் வெட்கத்திற்கு நியாயம் செய்பவள். அநியாயத்திற்கும் வெட்கப்படுகிறவள்; அவ்வளவு இலகுவாக எவரிடமும் பேசிவிட மாட்டாள்; பிறர் முகம் பார்க்க மாட்டாள். வீட்டுக்குள் அடைந்துகிடந்து அடைந்துகிடந்து மற்ற எல்லோரின் கண்களுக்கும் அவளொரு மாயப்பொருளானாள். அது அவளுக்கான மரியாதைபோலவும் இருக்கும், அவமரியாதைபோலவும் இருக்கும். பிறரைப் பார்க்க வெட்கப்படுகிற ஒருத்தி முன் நாம் ஏன் போய் நிற்க வேண்டும் என்ற பொதுப்புத்தி கொண்ட ஊர்.

அக்காவிடம் உள்ள இன்னும் சில விசயங்களைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதைக் கேட்க அதிசயமாகத்தான் இருக்கும். அக்காவின் நெற்றியில் குங்குமம் இருக்கிறது, கூந்தலில் பூ மணக்கிறது, தினமும் அவள் பூசை செய்கிறாள். சில சமயங்களில் அவள் பூசைசெய்கிற அழகை கபீரும் சபீரும் பார்த்திருக்கிறார்கள். பக்திமயமான பெண். அப்படியானால் அவள் என்ன செய்ய வேண்டும்? தேரோட்டம், தெப்பம், கோவில் திருவிழா என்றால் கோவில்களுக்கு ஓடோடிச் செல்ல வேண்டுமல்லவா? ( ஓடோடிச் செல்லுமளவில் அவள் துடிப்பான பெண்ணில்லை என்கிற விவரத்தைச் சொல்லிவிட வேண்டும். அவள் அசமந்தமான பெண். எதிலும் சுறுசுறுப்பு கிடையாது. மெதுவாகச் சென்று மெதுவாகச் சாப்பிடுகிற பெண். கடவுளிடம் மென்மையாகக் கோரிக்கை வைக்கிற பெண். இந்த மாதிரி அவள் இருப்பதை கபீரும் சபீரும் கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். அதைப் பொருட்படுத்தியிருந்தால் இந்நேரம் அவள் ஒன்னாம் நம்பர் ஓட்டக்காரப் பெண்ணாக மாறியிருப்பாள். ஏனோ அவளுக்கு அது வரவில்லை. ) ஆனால் பேச்சியம்மாள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாள்? மகளிடமிருந்த சுறுசுறுப்பையெல்லாம் பேச்சியம்மாள் வாரிவழித்துக் கொண்டிருப்பாள். சதாவும் வெளியிலே புழங்கிக்கொண்டிருக்கிறதால் பேச்சியம்மாளுக்கு அது வரம்போல அமைந்திருக்கிறது.

சரோஜாக்கா எப்பவும் எந்தக் கோவிலுக்கும் போக மாட்டாள். பேச்சியம்மாள் வலிந்து அழைத்தாலும் அதற்கு உடன்படமாட்டாள். கபீரும் சபீரும்கூட அவளைத் தேர்த்திருவிழாவிற்கும் தெப்பத்திருவிழாவிற்கும் அழைத்துத்தான் இருக்கிறார்கள்; மசிய மாட்டாள். தெருவிலுள்ள கோவிலில் கொடைவிழா. அதற்கே அவள் வருகிறாளில்லையே! கபீரும் சபீரும்கூட எல்லோருடனும் கூடிநின்றிருக்கிறார்கள். அவள் ஆஜராவதில்லை. ஆனால் கோவிலில் நேற்று என்னவெல்லாம் நடந்ததென்று விலாவாரியாகத் துளைத்துத் துளைத்துக் கேட்பாள்; அதற்கொன்றும் குறைச்சல் இருக்காது. இப்படி ஒரு போக்கு.

பாலு அண்ணன் வெட்கக்காரர் என்றாலும் தான் நெருங்கியிருப்பவர்களிடம் எப்போதும் கலகலப்பும் ஜாலியுமாக இருப்பார். ஒவ்வொருவரும் எப்படியெப்படிப் பேசுகிறார்கள், நடந்து போகிறார்கள் என்றெல்லாம் நாடகமாக நடித்துக்காட்டக் கூடிய ஒரு கலைஞர். விடுமுறை நாட்களென்றால், பாலு அண்ணனின் குரல் தெருவில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வயல்களில் ஆடுமாடுகள் விழுந்து பயிரை மேய்ந்துவிடக் கூடாதென்று மண்ணைக் குழைத்துச் சின்னச் சுவரை எழுப்பியிருப்பார்கள். அதில் குத்தவைத்துக்கொண்டு பலபேரும் பாலு அண்ணனின் நடிப்பை ரசிப்பார்கள். அது தவிர்த்த மற்ற நேரங்களில் பிறரோடு அவர் உரையாடுவது அபூர்வமாகத்தான் இருக்கும். பாலு அண்ணன் வீடு சூழவும் மாமரங்களும் வேப்ப மரமும் இருக்கின்றன. அவரின் வீடே நிழலுக்குள் பம்மிக்கிடப்பதுதான். நிழலுக்கு நிழல், காற்றுக்குக் காற்று. அதை அனுபவிக்காத வாழ்க்கை என்ன வாழ்க்கை? சும்மாவாச்சும் வந்து உட்கார்ந்துவிட்டுப் போகிறவர்கள் அநேகம்பேர். வருகிறவர்கள் வாய்களை மூடிக்கொண்டிருப்ப தில்லை. அதனால் சதா சர்வகாலமும் அந்த இடம் கலகலப்பாக இருக்கும். ஊர்க் கதைகள், உலகக் கதைகளை அந்தப் பேச்சுக்களின் ஊடாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பாலு அண்ணன் வீட்டிலும் சரோஜாக்கா வீட்டிலும் கபீரும் சபீரும் சமபங்காக நேரத்தைப் பிரித்துக் கையாண்டிருக்கிறார்கள். ஆனாலும் பாலு அண்ணனைப் பற்றி சரோஜாக்காவோ, சரோஜாக்காவைப் பற்றி பாலு அண்ணனோ ஒரு வார்த்தைகூடக் கேட்டுக்கொள்வதில்லை. பாலு அண்ணன் சிவாஜி ரசிகர். சினிமாவுக்குப் போனால் ஓரிருவராகப் போவது கிடையாது. தெருவில் பாதிப்பேர் ஒரு படையணி மாதிரி திரண்டுதான் போய்வருவார்கள். தீபாவளி, பொங்கல் படங்களுக்கு இருபது பேருக்கும் குறையாமல் போய்வருவார்கள். அப்படியும் சரோஜாவுக்கு அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நாலு சினிமாக்களைப் பார்த்துவருவோமென்று கொஞ்சம்கூட ஆசை எழும்பியதில்லை.

அலிபாத்து பெரியம்மாவுக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இதற்குக் காரணமாக என்ன சொல்வார்களென்றால், பெரியம்மாவுக்குப் பெரியப்பாவைப் பார்த்தாலே வெட்கம் வெட்கமாக வருமாம். முகம்பார்த்து நாலு வார்த்தைகூடப் பெரியம்மாவால் பேச முடியாதாம். பிறகு எப்படி குழந்தை பிறக்கும்? பேசாமல் இருப்பதற்கும் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கும் என்ன தொடர்பு என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. அந்த ரகசிய விவரத்தை ஒருநாள் சபீர்தான் சொன்னான். அவன் இந்த விசயத்தில் ஞானவானாய் இருந்ததை இப்போது எண்ணினாலும் சங்கடமாக இருக்கும். இதுக்குப் பெயர்தான் கல்யாண வாழ்க்கையா என்று பலநாட்களாகக் குறுகுறுத்த மனத்தோடு கபீர் யோசித்திருக்கிறான். எப்போதும் தன்னோடே இருக்கும் சபீருக்குத் தன்னையறியாமல் இந்தச் செய்தியை யார் சொல்லியிருப்பார்கள் என்கிற செய்தி கபீருக்கு இந்நாள்வரை பிடிபடாமல் இருக்கிறது.

அலிபாத்து பெரியம்மா போலத்தான் சரோஜாக்காவும் இருக்கிறாள். இவர்களுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை சபீர் ஒருநாள் எழுப்பினான். நந்தவனத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது தான் சபீர் மேற்படி கேள்வியை எழுப்பி அவனே அதன் விவரத்தையும் அறியத் தந்தான். அவ்வளவு படபடப்பாக இருந்தது அந்தச் செய்தி. என்ன இது உலகம் இப்படி இருக்கிறது என்று நண்பர்கள் மலைத்துப்போனார்கள். அப்படியானால் பாலு அண்ணனும் சரோஜா அக்காவும் என்ன செய்யப் போகிறார்கள்? குலை நடுக்கமாய் இருந்தது.

பாலு அண்ணனுக்கும் சரோஜாக்காவுக்கும் திருமண நாளைக் குறித்திருந்தார்கள். இதைப் பலரிடமும் சொல்லும்போது, “ பொல்லாமுருவத்து மாடனுவளா, அதெப்படில்ல அண்ணனும் அக்காவுமா கல்யாணம் பண்ணுவாங்க… வாய மூடுங்கல போக்கத்தவனுவளா,” என்று அவர்களை அடிக்காத குறையாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் அந்த விசயத்தை எப்படித்தான் சொல்லுவதென்று இருவருக்கும் பெரும் பிரச்சினையாகிவிட்டது.

இருவரின் திருமண நாளன்று யார் அதிகமாக வெட்கப்படுகிறார்கள் என்று பார்த்தறிவதற்காகவே பலபேரும் வேலைமெனக்கெட்டு வந்து நின்றார்கள். சொல்லப்போனால் சரிசமமான வெட்கமென்றுதான் எல்லோரும் சொல்லிச் சென்றார்கள். இருவரும் தங்களின் திருமணச் சமாச்சாரத்தைத் தங்களின் மனத்துக்குள் தேக்கிவைத்திருப்பார்களா? வெட்கத்திலிருந்து விலகிநின்றால்தான் அது சாத்தியமாகும். இவர்கள் எப்படி வருங்காலத்தில் தங்களின் திருமண நாளைக் கொண்டாடுவார்களோ என்று வயதில் பெரிய செய்யது வாத்தியார் கேலியும் கிண்டலுமாகச் சபையறிய சொன்னார். எல்லோரும் சிரிசிரியென்று சிரித்தார்கள். அப்போதும் பாலு அண்ணனும் சரோஜாக்காவும் எந்திரங்கள் மாதிரிதான் சடங்குகளைச் செய்தார்கள்.

கல்யாணம் முடிந்த சில வாரங்களில் சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம் வந்தது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தேரோட்டம் நடந்தபோது பள்ளிக்கூடத்துப் பையன் ஒருவன் தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறந்துவிட்டான். அதன்பின் தேரோட்டம் நடக்கவில்லை. இப்போது ஏதோ பரிகாரம்செய்திருப்பதாகத் தெரிய வந்தது. அதனால் இந்த வருசம் தேரோட்டம் மீண்டும் தொடங்கப்போகிறது. ஊரே பரபரப்பாயிருந்தது.

கபீருக்கும் சபீருக்கும் ஒருநாள் சிறு வாக்குவாதம்; கவலையென்று சொன்னாலும் சரியாக இருக்கும். சரோஜாக்கா இந்த வருசமாவது தேரோட்டம் பார்க்க வருவாளா? பாலு அண்ணன் கூட்டிவருவாரா?

தேரோட்டம் பார்க்கத் தோதாகச் சீக்கிரமாகப் பள்ளிக்கூடம் விட்டிருந்தார்கள். அன்று பாலு அண்ணன் முன்னால் போகக் கொஞ்ச தூரம் பின்னாடி சரோஜாக்கா பின் தொடர்ந்தாள். இருவரும் வேக நடையில்லாதவர்களாக ஊர்ந்தார்கள். கபீரும் சபீரும் அக்காவின் கைகளை ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்துக்கொண்டார்கள். சேது பிள்ளை விநோதமாகப் பார்த்தார். “ஏல என்ன, அங்க தேரோட்டம் நடக்குறதுக்கு முன்னால நீங்க ரெண்டுபேரும் இவளத் தேரு இழுத்துட்டுப் போற மாதிரி போறியோ…” தெருவில் நின்றுகொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள்.

இடையிலே மகராஜன் பயல் வேறு. அவன் எல்லோருக்கும் பின்னாலேயே வந்துகொண்டிருந்தான். மகராஜனுக்கு பாலு அண்ணன் சித்தப்பா முறை வரும். “ எங்கள்ளோட வாயேன்,” என்று மகராஜனை அழைத்தாலும் அவன் இணைந்துவராமல் பின்னாடியே வருகிறான். சரோஜாக்காவின் அழகை ரசித்துக்கொண்டு வருகிறானாம். அதை வாயால் சொல்லாமல் கண்ணால் சொல்லிக் காட்டுகிறான். படுக்காளிப் பையனை ஓங்கியடிக்கலாம்போல இருந்தது.

தேரோட்டம் வரும் வழியில் நிற்க ஆரம்பித்ததும் பாலு அண்ணனும் சரோஜாக்காவும் கொஞ்சம் பக்கம் பக்கமாய் நின்றாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல்தான் நின்றிருந்தார்கள். இருவரும் பேசி மகிழ்வதைப் பார்க்கலாமென்றால், அப்படி ஏதும் நடக்கிறதாக இல்லை. கல்யாணம் ஆன பிறகும் இப்படி உம்மணா மூஞ்சியாக சரோஜாக்கா இருக்கிறாளே என்கிற வருத்தம். அப்போது மகராஜன் சொல்கிறான் சரோஜாக்காவிடம். “மைனி இப்படி என் பக்கமா வந்து நில்லுங்க,” என்று. சரோஜாக்கா சிரித்தபடியே அவனை நெருங்கி நகர்ந்தாள். “ ஏல, சித்தப்பா பொண்டாட்டி சித்திதானல வரும், நீ எப்படி மைனீங்குற,” என்று சபீர் கேட்டதும் அவன் சொன்னான், ”எனக்கு எங்க அம்ம முறையில இவ மைனி முறைதான. நான் சொன்னவுடனெ பக்கத்துல வந்து நிக்கிறாளா இல்லையா,” என்று அவன் சொல்ல, சரோஜாக்கா அதற்கும் சிரித்துவைத்தாள். அந்த வருஷம் அத்தனை ஆண்கள் மத்தியிலே சரோஜாக்கா தேரோட்டம் பார்க்கும்போது கொஞ்ச நேரம் மகராஜனின் பக்கமும்தான் நிற்கட்டுமே, அதிலென்ன சங்கடம் வந்துவிடப் போகிறது என்று கபீரும் சபீரும் பெருந்தன்மையோடு அனுமதித்துவிட்டார்கள்.

கல்யாணமாகி இத்தனை நாட்களாகியும் பாலு அண்ணனும் சரோஜாக்காவும் வீட்டுக்கு வெளியே ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக்கொள்வதைப் பார்க்கப் பலராலும் முடிந்ததில்லை. கபீருக்கு அலிபாத்து பெரியம்மா ஞாபகம் வந்தது. கடைசிநாள் வரை அவர் தன் கணவனோடு பேச ரொம்பவும் கூச்சப்பட்டுக் கூச்சப்பட்டுக் கடைசியில் பிள்ளைப் பாக்கியமே இல்லாமல் போய்விட்டார். அதே மாதிரி பாலு அண்ணனுக்கும் சரோஜாக்காவுக்கும் ஆகிவிட்டால் என்னாவது என்கிற கவலை சுற்றிச் சுற்றி வந்தது.

இப்போது ஒரு பழங்கதையாக இது ஆயிற்று என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மக்களைப் பெற்ற மகராசியாக சரோஜா ஊரில் பேர் வாங்கியிருக்கிறாள். மங்கல விழாக்களில் சரோஜாவைக் குறுக்கே நடக்கவிட்டால் எல்லா காரியமும் ஜெயம் என்று முத்திரை பதித்தாயிற்று. பாலு அண்ணனுக்கும் சரோஜாக்காவுக்கும் ஐந்து ஆண்மக்களும் ஒரு பெண் மகவுமாக இருக்கிறார்கள். இந்த ஒரு பெண் குழந்தையை எதிர்பார்த்து எதிர்பார்த்துத்தான் இதர ஐந்து ஆண்குழந்தைகளையும் அண்ணனும் அக்காவுமாகச் சேர்ந்து பெற்றுப் போட்டிருக்கிறார்கள் என்று ஊரில் எல்லோரும் பல்லாண்டு காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram