திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. வீடு அமைதியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அமைதி சில நேரங்களில் சுவரிலிருந்து சுவருக்கு மோதிக் கொண்டு மனதிற்குள் சத்தமாக ஒலித்தது.
காலை நேரம். சமையலறையில் அடுப்பின் மீது பால் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் கரண்டியைக் கிளறிக் கொண்டே சாளரத்தின் வழியே வெளியே பார்த்தாள். எதிர் வீட்டில் ஒரு குழந்தை தன் பள்ளிப் பையை இழுத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதன் சிரிப்பு சிறு நொடியிலேயே அவள் காதில் விழுந்து,மனதில் ஏதோ ஒன்றை கிளறியது. அவள் சற்று ஆழ்ந்த மூச்சு விட்டாள்.
ஹாலில் அவன் டீ கப்பை இரு கைகளாலும் பிடித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கண்களில் தோன்றும் அந்த மென்மையான வெறுமையை அவன் பல நாட்களாக கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் வார்த்தைகள் எப்போதும் போல தொண்டையில் சிக்கிக்கொண்டே இருந்தன.
அவன் மெதுவாக சொன்னான் “இவ்வளவு அமைதியா இருக்குற வீடு…நல்லா இருக்கு… இல்லையா?”
அவன் சொன்ன விதம்,ஒரு வாக்கியமாக இல்லை. ஒரு கேள்வியாகவும் இல்லை. ஒரு பயமாகவே ஒலித்தது.
அவள் திரும்பிப் பார்த்தாள். சிரித்தாள், ஆனால் அந்த சிரிப்பில் ஒரு சிறு இடைவெளி இருந்தது.
“நல்லாதான் இருக்கு… ஆனா சில நேரம்…யாரோ ஓடுற சத்தம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்…”
அவள் சொல்லி முடித்தபோது அடுப்பிலிருந்த பால் மெதுவாக பொங்கத் தொடங்கியது. அவள் அதை இறக்க மறந்தாள்.
அவன் அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் மனதுக்குள் கேட்டுக்கொண்டான்.
‘யாரோ ஓடுற சத்தம்…’
அந்த ஒரு வாக்கியம் அவர்கள் பல மாதங்களாக பார்வைகளில் மறைத்து, மௌனங்களில் ஒளித்து, உள்ளுக்குள் வைத்திருந்த ஒரே எண்ணத்தை மெதுவாக வெளியில் இழுத்தது.
அவன் டீ கப்பை மேசையில் வைத்தான். அவள் அடுப்பை அணைத்தாள்.
வீடு இன்னும் அமைதியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அமைதி முன்புபோல் இல்லை.
அதில் ஒரு எதிர்பார்ப்பு மெல்ல முளைத்திருந்தது.
மறுநாள் டீ கடையில், " இப்போ இது அவசியம் தானா? உங்களுக்கு ஒன்னும் பெரிய வயசு ஆகல இன்னும் காலம் நிறைய இருக்கு, அதுமட்டும் இல்லாமல் இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு இதுக்கு நிறைய வழி இருக்கு " என்றான் நண்பன்.
நண்பன் சொன்ன வார்த்தைகள், அக்கறையோடு தான்.
ஆனால் அவை, அவன் மனதுக்கு பதில் சொல்லவில்லை.
"நீ சொல்வதெல்லாம் சரிதான்" அவன் மெதுவாக சொன்னான். "நான் நிறைய யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றான் அவன்.
"எனக்கு நீ இன்னும் கொஞ்சம் பொறுமையா முடிவெடுக்கலாம்னு தோணுது" என மீண்டும் கூறினான் நண்பன்.
லேசாக புன்முறுவல் செய்தவன், "இது நாங்கள் கல்யாணத்திற்கு முன்பாகவே பேசி வைத்த ஒன்று தான் ஆனா, எங்களுக்குன்னு ஒன்று வந்ததுக்கு அப்பறம் இதை செய்யலாம்னு இருந்தோம் இப்போ இதையே முதலில் செய்வோம் என்ற முடிவை எடுத்திருக்கேன். சொல்லப்போனோ அவளோட ஆசையே இதுதான்" என்றான்.
"சரிடா உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்" என விடைபெற்று சென்றான் நண்பன்.
அன்று அவன் அவளை அழைத்தான், "என்கூட வா, உனக்கு ஒன்று காட்ட வேண்டும்"
சமையலறையில் இருந்த அவளோ, "எதுக்கு இவ்வளவு அவசரம் கொஞ்சம் பொறுங்கள் சமையலை முடித்துவிட்டு வருகிறேன்" என்று பதில் கூறினாள்.
அந்த பதிலில் திருப்தி காணாத அவன், பாதி சமையலில் கொதித்துக் கொண்டிருந்த அடுப்பை அணைத்தான்.
அடுப்பு அணைந்ததும் அறைக்குள் பரவிய அமைதி அவர்கள் வாழ்க்கை போலவே வெளியில் அமைதி, உள்ளே கொதிப்பு.
அவள் என்ன பேசப் போகிறாள் என்று அவனுக்குத் தெரிந்தது. அவள் பேசாமல் இருப்பதற்கான காரணமும் தெரிந்தது.
அதனால்தான் அவன் அவளது கைகளைப் பிடித்தான். வலுக்கட்டாயமாக இல்லை. ஆனால், இப்போ அல்லது எப்போதும் இல்லை என்ற தீர்மானத்தின் வலிமையோடு.
அவளை அறைக்குள் இழுத்துச் சென்றான்.
மேசையின் மேல்முன்பு பலமுறை திறந்து மூடிய லேப்டாப். அதன் மூடியிலும் அவர்கள் வாழ்வின் மூன்று வருடங்களின் தூசி.
அவன் அதைத் திறந்தான்.
குழந்தை தத்தெடுக்கும் மையத்தின் இணையதளம். முன்பு பலமுறை பார்த்தது. பார்த்தும் பேசாமல் விட்டது. பார்த்தும் தள்ளிப் போட்டது.
இந்த முறை மட்டும் வேறு.
திரையில் மின்னியது படிவம்.
அந்த வார்த்தை அவளுக்குள்ஓர் இடியாய் இறங்கியது.
பெயர்.
வயது.
முகவரி.
தொழில்.
வெறும் தகவல்கள். ஆனால் அவளுக்குத் தெரியும் இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்குள் நுழைய அனுமதி கேட்கும் கேள்விகள்.
அவள் விழிகள் மேலும் பெரிதாக விரிந்தன.
அந்த விழிகளில் நான் தகுதியானவளா? என்ற கேள்வி மிதந்தது.
“தொடங்கலாமா?”அவன் கேட்டான்.
அவள் பதில் சொல்லவில்லை.
அவனது கைகளை இறுகப் பற்றினாள்.
அந்தப் பற்றுதல் அவனுக்கு பதிலாக இருந்தது.
மெதுவாகத் தலையை ஆட்டினாள்.
முதல் எழுத்து. கீபோர்டில் விழுந்ததும் அவளது கைகள் சிறிது நடுங்கின.
ஒவ்வொரு வரியும் நிரம்பும் போதும் மூன்று வருட நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் மேலே வந்தன.
மருத்துவமனை வாசல்கள். அமைதியான ஆலோசனைகள். “இன்னும் முயற்சி பண்ணலாம்” என்று சொல்லிய முகங்கள்.
அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. ஆனால் அவள் அழவில்லை.
ஏனெனில் இந்த நடுக்கம் தோல்வியின் நடுக்கமல்ல.
அது நம்பிக்கையின் நடுக்கம்.
அவன் அவள் அருகில் இருந்தான். ஒவ்வொரு வரியும் நிரம்பும் போது அவன் மூச்சு கூட அவளோடு ஒத்திசைந்தது.
படிவம் முடிந்தது.
அவள் ஆழமாக சுவாசித்தாள். அந்த மூச்சு மூன்று வருடங்கள் தடுக்கப்பட்டதைப் போல உள்ளிருந்து வெளியில் வந்தது.
திரையின் கீழே ஒரு பட்டன்.
“ரிசர்வ் சைல்டு ”
அந்த பட்டனைப் பார்த்த நொடி மூன்று வருட மௌனம், சொல்லப்படாத ஆசைகள், படுக்கை மூலையில் கண்ணீர் துடைத்த இரவுகள், எவரிடமும் சொல்லாத பிரார்த்தனைகள் எல்லாமே ஒரே நொடியில் அவளது கண்களில் திரண்டது.
உலகம் நின்றது.
அவள் விரல் மவுஸின் மேல் நின்றது.
அவன் அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் நாம் தோற்றாலும், ஒன்றாகவே தோற்போம் என்ற உறுதி இருந்தது.
கிளிக்.
அந்த ஓசை ஒரு பட்டனின் ஓசை அல்ல.
அது மூடப்பட்ட கதவின் பூட்டு திறக்கும் ஓசை.
அவள் கண்கள் ஈரமானது. அந்த கண்ணீரில் வலி இல்லை.
ஒரு விடுதலை.
அவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பு பல வருடங்கள் தள்ளிப் போன ஒரு கனவின் திரும்ப வருகை.
“இனி நாம்ம… அம்மா… அப்பா.”
வார்த்தைகள் நடுங்கின. ஆனால் உணர்வு உறுதியானது.
அந்த அணைப்பில் மகிழ்ச்சி மட்டும் இல்லை.
பயம் இருந்தது. பொறுப்பு இருந்தது. நாம் நல்ல பெற்றோராக இருப்போமா? என்ற கேள்வியும் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு உண்மை இனி அவர்கள் வெறும் கணவன்–மனைவி அல்ல.
ஒரு குழந்தைக்கான உலகம்.
அந்த இரவில் வீடு அதேபோலவே இருந்தது.
ஆனால் அந்த வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை மெதுவாக நடக்கத் தொடங்கியது.
அடுத்த நாட்கள், வீடு மெதுவாக மாறத் தொடங்கியது.
அந்த மாற்றம் சத்தமாக இல்லை. புதிதாக பூசப்பட்ட சுவரோ, மாற்றப்பட்ட பொருட்களோ அல்ல.
அது காலியாக இருந்த இடங்களில் எதிர்பார்ப்பு நிரம்பத் தொடங்கிய மாற்றம்.
ஒரு சிறிய கட்டில். அதை கொண்டு வந்து வைத்தபோது, அறை திடீரென சின்னதாக மாறியது.
அவள் அதைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அந்த கட்டிலில் இன்னும் யாரும் படுக்கவில்லை. ஆனால் அவளுக்குள் ஏற்கனவே ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
மென்மையான மெத்தை. அவள் விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்த்தாள். அந்த மென்மையில் உலகம் கடினமாக இருக்கக்கூடாது என்ற அவளது விருப்பம் ஒட்டியிருந்தது.
கையில் பிடித்தால் சிரிக்க வைக்கும் பொம்மைகள். ஒன்றை அழுத்தினாள். சின்ன ஓசை.
அந்த ஓசை அறை முழுக்க பரவியது. அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.
அந்த சிரிப்பு பல நாள்களுக்குப் பிறகு முழுமையாக வந்த சிரிப்பு.
“இந்த கலர் நல்லா இருக்கா?” அவள் கேட்டாள்.
அவன் தலைசாய்த்து பார்த்தான். “நல்லா இருக்கு…”பின் சிறிது தாமதித்து, “அவளுக்கு…”
அவள் அவனை பார்த்தாள். அவன் திருத்திக் கொள்ளவில்லை.
“இந்த சைஸ் சின்னதா இருக்குமோ?”அவள் கேட்டாள்.
அவன் பதில் சொல்லும் முன் அவளே மெதுவாகச் சொன்னாள், “இன்னும் வளருவாளே…”
“இது பிடிக்குமா அவனுக்கு… இல்ல அவளுக்கு?”
குழந்தை எப்படி இருக்கும் என்று தெரியாது. உயரமா? சின்னதா?மெளனமா? அல்லது சத்தமா?
ஆனால் அவர்கள் வாங்கியது எல்லாம் அன்பின் அளவுக்கு அதிகமாக இருந்தது.
அதிகமாக இருந்தாலும் அந்த அன்புக்கு ஒருபோதும் குறை வராது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது.
ஒரு ஜோடி செருப்பு வாங்கும் போது, அவள் அதை கையில் பிடித்து பார்த்தாள்.
அந்த செருப்புகள் மிகச் சின்னதாக இருந்தன. ஆனால் அவளது உள்ளத்தில் அவை ஒரு பெரிய உலகை சுமந்திருந்தன.
அவள் மெதுவாக சொன்னாள், “இதை அணிந்து நடக்கும்போது, நம்மை கூப்பிடுவாள் பாரு…”
அந்த வார்த்தையில் எதிர்காலம் முழுக்க நடந்து வந்தது.
ஆனால் அவளது குரல் நடு வழியில் உடைந்தது.
அவள் பேசுவதை நிறுத்தவில்லை. அழவும் இல்லை. ஆனால் அந்த மௌனத்தில் ஒரு கண்ணீர் விழுந்தது.
அவன் அந்த செருப்புகளை அவளது கையிலிருந்து மெதுவாக வாங்கினான்.
அவள் கண்களைப் பார்த்துக்கொள்ளாமல் மிக மெதுவாகச் சொன்னான்,
“நாம அவளை பார்த்துக்கலாம். அவள் நம்மை பார்த்துக்க வேண்டாம்.”
அந்த வார்த்தைகள் சாதாரணமாகச் சொன்னவை இல்லை.
அதில் பாதுகாப்பும், உறுதியும்,ஒரு பெற்றோரின் பொறுப்பும் இருந்தது.
அவள் அதை கவனிக்கவில்லை.
அல்ல கவனித்தாள். ஆனால் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
அவளுக்கு அந்த நிமிடம் குழந்தையின் நினைவே மனதில் இருந்தது. அவள் கூப்பிடும் குரல். அவள் ஓடும் ஓசை.
வீடு அந்த இரவுகளில் புதிய சத்தங்களை எதிர்பார்த்து அமைதியாக இருந்தது.
பொம்மைகள் காத்திருந்தன. கட்டில் காத்திருந்தது. அந்த செருப்புகள் ஒரு ஜோடி சிறு பாதங்களுக்காக காத்திருந்தது.
அவர்களுக்கு மட்டும் தெரியாமல், அந்த வீட்டில் இன்னொரு உண்மையும் மெதுவாகத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஆசிரமம் சென்ற நாள்.
அந்த கட்டிடம் பழையதாக இருந்தாலும், உள்ளே ஒரு விதமான அமைதி இருந்தது.
குழந்தைகளின் சிரிப்பு, ஓட்டம், அழைப்பு அந்த எல்லாவற்றுக்கும் நடுவில், அவர்களின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது.
“உங்களுக்கு உங்கள் குழந்தையை பார்க்க விருப்பம் தானே?”
அதிகாரி கேட்டார்.
அவர்கள் ஒரே நேரத்தில் தலையாட்டினார்கள்.
ஒரு சிறிய அறை.
அறையின் நடுவில், ஒரு குழந்தை.
சின்ன உடல்.
அமைதியான முகம்.
அவள் முதல் முதலில் பார்த்தது
அந்த குழந்தையின் சிரிப்பு.
அவன் பார்த்தது
அந்த சிரிப்பில் இருந்த நம்பிக்கை.
அவர்கள் மெதுவாக அருகில் சென்றார்கள்.
“ஹாய்…”
அவள் சொல்லியதும், குழந்தை சிரித்தது.
அவள் கையில் இருந்த பொம்மையை முன்னால் வைத்தாள்.
"உனக்கு இந்த பொம்மை வேண்டுமா?" என அவள் கேட்டாள்.
அதைக் கேட்டு குழந்தை கை நீட்டியது.
அவள் மார்புக்குள் ஏதோ உருகியது.
“நாம வாங்கினது… இதுக்காகத்தான்.”
அவள் கண்ணீருடன் சொன்னாள்.
அவன் குழந்தையின் சிறிய விரல்களைப் பிடித்தான்.
அந்த பிடிப்பு வாழ்நாள் முழுக்க விடாத பிடிப்பாக மாறும் என்று அவனுக்கு தெரிந்தது.
அதிகாரி மெதுவாக சொன்னார்,
“இந்த குழந்தை கொஞ்சம் சிறப்பானது”
அவள் உடனே கேட்டாள்,
“என்ன சிறப்பு?”
ஒரு நிமிடம் மௌனம்.
“இந்த குழந்தைக்கு பார்வை இல்லை.”
அந்த அறையில், சத்தமே இல்லை.
அவள் உடனே அவனை பார்த்தாள், அவன் ஆமாம் என்பது போல் கண் சிமிட்டினான்.
திருமணத்திற்கு முன்பே அவனிடம் சொல்லி இருந்தாள் "நாம் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் அதுவும் பார்வையற்ற பெண் குழந்தையாக இருக்கு வேண்டும்" எனக் கூறி இருந்தாள். மேலும், "நமக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் இந்த குழந்தையையே முதன்மையானதாய் வளர்க்க வேண்டும்" என்ற அவளின் ஆசையை அவன் நிறைவேற்றி இருந்தான்.
அவள் தன் நன்றியை பார்வையாலே அவனுக்கு தெரிவித்தாள்.
அவள் குழந்தையை பார்த்தாள்.
அவன் குழந்தையின் கைகளை பார்த்தான்.
அந்த சிறிய கைகள்
பார்க்காமல்,
ஆனால் உணர்ந்து உலகை அறிய முயலும் கைகள்.
அவன் மெதுவாக சொன்னான்,
“அதனால்தான்… அவள் நம்மை பார்த்துக்க வேண்டாம் சொன்னேன்.”
அவள் குழந்தையை தூக்கிக்கொண்டாள்.
குழந்தை அவள் தோளில் தலை சாய்த்தது.
“ஒளி கண்ணுல மட்டும் இல்ல.”
அவள் மெதுவாக சொன்னாள்.
“ஒளி இதுல இருக்கு.”
அவள் குழந்தையின் நெஞ்சில் கை வைத்தாள்.
அவன் அருகில் வந்து சொன்னான்,
“நாம அவளுக்கு கண்களா இருப்போம்.”
குழந்தை சிரித்தது.
அந்த சிரிப்பில்
பார்வை இல்லை.
ஆனால், உலகம் முழுக்க ஒளி இருந்தது.
ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்த பெயரான, "தன்வி" என்பதை ஒருமுறை உச்சரித்தாள்.
பின் அவனை பார்த்து, "இனி நாம 'தன்வி'யின் 'பல்லவி' மற்றும் 'இனியன்' என வாழ்வோம் என்று கூறினாள்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த அவள் கைகள், அன்றைக்கு கொஞ்சம் கனமாக இருந்தன.
அந்த கனத்தில் குழந்தையின் எடையில்லை. அதில் ஒரு வாழ்நாள் பொறுப்பு இருந்தது.
குழந்தை அவள் தோளில் சாய்ந்தபடி, அவள் சுவாசத்தின் ஒத்திசைவில் அமைதியாக இருந்தது. பார்க்காமல் தான்…ஆனால் பாதுகாப்பை உணர்ந்து.
அவன் அருகில் நின்றிருந்தான்.ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேசினால், அந்த நொடியின் புனிதம் உடைந்து போய்விடும் என்று நினைத்தான்.
அவனுக்குள் ஒரு பயம் இருந்தது. அதை அவன் மறுக்கவில்லை.
'நாம் சரியாக செய்ய முடியுமா?இந்த உலகம் அவளுக்கு கொடூரமா இருக்குமோ? நாம அவளுக்கு போதுமானவர்களா?' என அவனுக்குள் பல கேள்விகள்.
ஆனால் அந்த எல்லா கேள்விகளையும் விட, ஒரு பதில் வலிமையாக இருந்தது.
'நாம் முயற்சிப்போம்'
ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தபோது, மாலை வெளிச்சம் மெதுவாக சாய்ந்து கொண்டிருந்தது.
குழந்தை வெளிச்சத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் முகத்தில் அந்த மாலை நேர அமைதி இருந்தது.
“வெளியில சூரியன் மறையுது,”அவன் சொன்னான்.
அவள் சிரித்தாள். “அவளுக்கு அது தேவையில்லை, நம்ம குரல் போதும்”
குழந்தை, அவள் குரலின் ஒலியைக் கேட்டு,தலையைச் சற்றே திருப்பியது.
அந்த ஒரு அசைவு,அவளுக்குள் ஒரு தாயை முழுமையாக்கியது.
வீட்டிற்கு வந்த முதல் நாள்.
அந்த வீடு,மூன்று வருடங்களாக அமைதியாக இருந்த வீடு,அன்று சற்று வேறுபட்டிருந்தது.
குழந்தையின் சுவாச சத்தம், சின்ன அசைவுகள், தூக்கத்தில் வரும் சின்ன ஒலிகள் அவை எல்லாம், வீட்டின் சுவருக்குள் மெதுவாக ஊறிக் கொண்டிருந்தன.
அவள் குழந்தையை மெத்தையில் படுக்க வைத்தாள்.
“இது உன் இடம்” மெதுவாக சொன்னாள்.
குழந்தை பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் விரல்களை மெதுவாகத் தேடி, அவளின் சுட்டுவிரலைப் பிடித்தது.
அவள் கண்களில் கண்ணீர்.
“பார்க்காமலேயே…என்னை கண்டுபிடிச்சுட்டா"
அடுத்த நாட்கள், அவர்கள் வாழ்க்கை புதிதாக எழுதப்பட்டது.
காலை நேரங்களில், அவன் வேலைக்குப் போகும் முன், குழந்தையின் அருகில் நின்று பேசுவான்.
“நான் அப்பா! இது என் குரல், நீ எப்போ கேட்டாலும்… நான் இருக்கேன்”
குழந்தை அந்த குரலை மனதில் சேமித்துக் கொண்டது.
அவள், ஒவ்வொரு வேலை செய்யும் போதும்,சத்தமாக பேச ஆரம்பித்தாள்.
“இப்போ நான் சமையல் செய்றேன், இது கரண்டி சத்தம், இது அடுப்பு”
உலகத்தை,ஒலிகளால் அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.
ஒருநாள் அவள் கேட்டாள்.
“நம்ம குழந்தை…எப்போ அம்மான்னு கூப்பிடும்?”
அவன் சிரித்தான். “அம்மான்னு இல்லை எப்படி கூப்பிட்டாலும் பரவால அவள் குரல்ல நம்மை கூப்பிட்டா போதும்.”
அன்று இரவு,குழந்தை தூக்கத்தில் “ம்மா…” என்று ஒரு ஒலி எழுப்பியது.
அவள் உறைந்து போனாள்.
அந்த வார்த்தை தெளிவில்லை. ஆனால் அந்த உணர்வு தெளிவாக இருந்தது.
அவள் குழந்தையை இறுக அணைத்தாள்.
காலம் நகர்ந்தது.
குழந்தை நடக்க ஆரம்பித்தாள்.
சுவர், நாற்காலி, அவள் கைகள் எல்லாமே அவளுக்கான வழிகாட்டிகள்.
அவள் விழுந்தாள். அவள் எழுந்தாள்.
ஒவ்வொரு விழுதலிலும்,அவன் ஓடிவந்து தூக்கவில்லை.
“நீயே எழு,” மெதுவாக சொன்னான்.
அந்த வார்த்தை கொஞ்சம் கடினமாக இருந்தாலும்,அதில் எதிர்காலம் இருந்தது.
ஒருநாள் தன்வி கேட்டாள்.
“அம்மா! எல்லா குழந்தைகளும் கண்ணை வைத்து தான் உலகத்தை பார்க்கிறாங்களா?”
அவள் ஒரு நிமிடம் மௌனமானாள்.
பிறகு சொன்னாள், “இல்ல, சில குழந்தைகள்…இதயத்தை வைத்து பார்க்கிறாங்க”
அவள் அந்த நாளில்,தாயாக மட்டும் இல்லை. வழிகாட்டியாக மாறினாள்.
பள்ளி சேர்க்கும் நாள்.
அவளுக்கு பயம்.
அவனுக்கு கோபம்.
“நம்ம குழந்தையை யாரும் குறையா பார்க்கக் கூடாது”
அவன் சொன்னான்.
பள்ளி ஆசிரியர் மெதுவாக சொன்னார்,“பார்க்காத குழந்தைகள்,பல நேரம்…அதிகமாக உணருவார்கள்”
அவள் அந்த வார்த்தையை மனதில் பதித்துக் கொண்டாள்.
ஒருநாள்,குழந்தை கேட்டாள்.
“அம்மா…ஒளி என்ன?”
அவள் பதில் சொல்லவில்லை.
அவள் குழந்தையின் கைகளைஅவள் நெஞ்சில் வைத்தாள்.
“இது தான் ஒளி.”
குழந்தை சிரித்தாள்.
அன்று இரவு,அவன் சொன்னான்.
“நம்ம வீடு இனி அமைதியா இல்லை.”
அவள் பதில் சொன்னாள்.
“ஆனா இப்போ அந்த அமைதி…பயமில்லாதது”
அந்த வீடு, இப்போ ஒளியால் இல்லாமல் ஒலியால் நிரம்பியது..!