சுப்புக்குட்டியை அவன் சாதியிலிருந்து நிரந்தரமாக நீக்கியதாக அறிந்த போது தன் வாழ்வே முடிந்தது போல் இருந்தது அவனுக்கு. இதுவரை பெரிதாகத் தன் சாதியைப் பற்றிய பெருமிதங்களோ, சாதியின் மீதான பிடித்தமோ அவனிடம் இருந்ததில்லை. ஆனால் ஏதோ உப்பு சப்பில்லாத காரணத்தைச் சொல்லி சாதிச் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் அந்த அறுவர் அணி இவனைத் திடீரென்று நீக்கிய போது அவனுக்குள் ஏதோ ஒன்று உடைவது போலவும், ஏதோ ஒன்று சீண்டி விடப்பட்டது போலவும் உணர்ந்தான்.
இரவும் பகலும் அதே நினைவாக இருந்தது. தூக்கமே வரவில்லை. அப்படி மீறி தூக்கம் வந்தால் எழுந்திருக்கும் பொழுது, ஐயோ இந்த பொல்லாத உலகைச் சந்திக்க வேண்டுமே என்று மிகுந்த மன உளைச்சலுடன் எழுந்தான். சதா சர்வ காலமும் யாருக்காவது ஃபோன் போட்டபடியே இருந்தான். சொந்தக்காரர்கள், நண்பர்கள், வக்கீல்கள் என்று பலரிடமும், இப்படி சாதியில் இருந்து ஒருவனை நீக்க முடியுமா? அதற்கு சங்கத்துக்காரர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்டான்.
ஒரு வாரம், பத்து நாள் அவனுக்கு அனைவரும் பொறுமையாக பதில் சொன்னார்கள். அதன்பின் கடுப்பானார்கள். அவன் மனைவி தேனுவுக்கு ஒவ்வொருவராக அழைத்து, “உன் புருஷனை எதுவும் டாக்டர்கிட்ட போய் காமிக்க வேண்டியது தானே?” என்று கேட்க ஆரம்பித்தனர். தேனுவின் பெரிய அண்ணன் நேரடியாகவே வீட்டுக்கு வந்து, “மாப்ள! வாங்க டாக்டர பாத்துட்டு வருவோம்” என்ற போது தேனு பொங்கிப் பொங்கி அழுதாள்.
“அண்ணே! என் கெரகம் எப்பம்ணே தீரும்? ஒழுங்கா வேலைக்குப் போகாம இருந்தாரு, பொம்பள பிள்ளைக கூட போன்ல பேசுறது வைக்கிறதுன்னு இருந்தாரு, சீட்டு விளையாடப் போனாரு, அந்தா இந்தான்னு எனக்கும் இப்ப மூணு பிள்ளைகள் ஆகிப்போச்சு.. இப்ப இப்படி ஆயிட்டாரே ண்ணே?” என்று மூக்கைச் சிந்தினாள். “மாப்ள! பாஸ்போர்ட் இருக்குல்ல? சிங்கப்பூர்ல உங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்” என்றார் தேனுவின் அண்ணன்.
அவர் முழுமூச்சாக சுப்புக்குட்டியின் வெளிநாட்டுப் பயணத்திற்கான முனைப்பில் இருக்க, சுப்புக்குட்டி தன் சாதியைப் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக ஆராய ஆரம்பித்தான். சாதிப் பெயரைச் சொல்லி இருக்கும் முகநூல் குழுக்களில் இணைந்து கொண்டான். யாரோ ஒருவர் ஏதோ ஒரு பதிவில், ‘லைப்ரில போய் வரலாற்று புக்கை எடுத்துத் தேடிப் பார்த்தால் நம்ம ஜாதியோட பாரம்பரியம் தெரியும்’ என்று ஏதோ ஒரு பதிவில் கமெண்ட் போட்டதைப் பார்த்துவிட்டு வாழ்வில் முதன்முறையாக நூலகத்திற்குச் சென்றான். யாரும் இதுவரை தொட்டுப் பார்த்திராத புத்தகங்களை எல்லாம் தேடிப் பிடித்து தூசி தட்டி எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். சில நாட்களுக்கு தும்மிக் கொண்டே இருந்தான்.
பெரிய மச்சான் சிங்கப்பூர் வேலைக்கான ஆணையையும் விசாவையும் வாங்கி விட்டார். அவரே கைக்காசு போட்டு டிக்கெட் எடுத்தார், கடைக்கு கூட்டிக்கொண்டு போய் ட்ராலி பேக், உடைகள் வாங்கிக் கொடுத்தார், அதற்கு முன்பு சாதி சம்பந்தமான புத்தகங்கள் பல இணையதளங்களில் ஆர்டர் போடப்பட்டு சுப்புக்குட்டி வீட்டுக்கு வந்து இறங்கிய வண்ணம் இருந்தன. மூன்று பிள்ளைகளும் சேர்ந்து பரீட்சைக்குப் படித்த நேரம் மொத்தத்தையும் விட சுப்புக்குட்டி அந்த புத்தகங்களில் மூழ்கிப் போன நேரம் அதிகமாக இருந்தது.
தேனுவுக்கு நிம்மதி ஒரு பக்கம், வருத்தம் ஒரு பக்கமாக இருந்தது. ஒரு வழியாக சிங்கப்பூருக்கு கிளம்பி போனான் சுப்புக்குட்டி. இருந்த கொஞ்சம் காசைத் தேனுவின் கையில் திணித்துவிட்டு பிள்ளைகளிடம் ‘நல்லா படிங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். விமான நிலையத்தில் போய் இறக்கி விட்ட பெரிய மச்சான் ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி விட்டு வந்தார். விமானத்துக்கு இரண்டு மணி நேரம் இருந்தது. சமூக ஊடகக் கணக்குகளை எடுத்து பார்த்தான். சுப்புக்குட்டி என்று இருந்த பெயரை சிங்கப்பூர் சுப்புக்குட்டி என்று மாற்றிக் கொண்டான். விமான நிலையத்தில் இருப்பது போன்று ஒரு செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தான். தான் அங்கம் வகிக்கும் அத்தனை சமூக ஊடகங்களிலும் பதிவேற்றினான். புதிதாகச் சேர்ந்திருந்த நண்பர்கள் பலரும் லைக் போட்டார்கள். சிலர் நானும் சிங்கப்பூரில் தான் இருக்கிறேன், வாருங்கள் சந்திப்போம் என்று கமென்ட்டினார்கள். உள்பெட்டியில் போய் அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான்.
அதில் ஒருவர், “நீங்கள் இந்த சாதி தானா?” என்று நேரிடையாகவே கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்த உரையாடல்களில் சாதிப் பெருமையைப் பேசினார். சுப்புக்குட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் போய் வேலையில் சேர்ந்தானோ இல்லையோ, அங்கு இருந்த நண்பர்களை எல்லாம் தொடர்பு கொண்டான். அவர்களது வாட்ஸ் அப் குழுவில் இவனும் இணைந்து கொண்டான். அந்தக் குழு ரொம்ப நாளைக்கு எதுவும் பதிவுகள் இல்லாமல் கொஞ்சம் அமைதியாகவே இருந்து வந்தது. விமானத்தில் இருந்த எடைக் கட்டுப்பாடு காரணமாக அவன் வாங்கிய புத்தகங்களை சுப்புக்குட்டி எடுத்து வந்திருக்கவில்லை. பாதி படித்து வீட்டில் விட்டிருந்த நூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்தான்.
அதில் சாதியின் பெருமை கூறிய ஒரு பத்தியை புகைப்படம் எடுத்து புதிதாக இணைந்த வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டான். அன்றைய தினம் வரை, கிணற்றில் போட்ட கல்லாக இருந்த வாட்ஸ் அப் குழு, வெடி வைத்துத் தகர்த்த கிணறு போல் பரபரப்பாக ஆனது. பலர் சுப்புக்குட்டியின் பதிவைப் பாராட்டினார்கள். ஒருவர் அதை எடுத்து ஒரு முகநூல் குழுவில் போட, அந்தச் சாதியில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அது சென்று சேர்ந்தது. சுப்புக்குட்டியை விட இளையவனான துபாயில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் அதை ரீல்ஸாக எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டான். அதுவும் பல ஆயிரம் லைக்குகளை அள்ளியது.
சுப்புக்குட்டி அந்த இளைஞனைத் தொடர்பு கொண்டு நண்பன் ஆகிக்கொண்டான். இன்னும் தன் கைவசம் அது போல் நிறைய செய்திகள் இருப்பதாகவும் அதை எல்லாம் இப்படி ரீல்ஸாகப் போடலாமா என்றும் கேட்டான். அவனுக்கும் வேலை வெட்டி அதிகமாக இல்லாமல் இருந்ததால் இருவருமாகச் சேர்ந்து நிறைய ரீல்ஸ் போட்டார்கள். சிங்கப்பூர் சுப்புக்குட்டி என்ற பெயர் அவர்கள் சாதியில் பிரபலமாகத் துவங்கியது. மத்த அனைவரும் அவனின் பதிவுகளை ஸ்டேட்டஸ்களாக வைக்கவும், பகிரவும், மேடைகளில் பேசவுமாக இருந்தார்கள்.
அவனுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு போடவில்லை என்றால் கை கால் நடுங்கியது. புதிது புதிதாக செய்திகளைத் தேடிப் போட்டான். செய்திகள் கிடைக்காத நேரத்தில் பிற சாதி குழுக்களில் போய் பார்த்தான். அதில் வந்த பெருமை பேசும் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து அந்த சாதியின் பெயர் இருந்த இடத்தை நீக்கிவிட்டு தன்னுடைய சாதியின் பெயரைப் போட்டு அதையும் பகிர்ந்தான். அவனது சாதிக்காரர்களுக்கே இவ்வளவு பெருமை மிக்கதா நம் சாதி என்று ஆகிவிட்டது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு மன்னனின் படைத்தளபதி ஒருவனைப் பற்றிய சிறிய துணுக்கு கிடைத்த தருணத்தை சுப்புக்குட்டியின் வாழ்வின் திருப்புமுனை எனலாம். அவன் சாதியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரைத் தேடிப் பிடித்து அந்தத் துணுக்கை மையமாகக் கொண்டு கதை எழுதச் சொன்னான். அவரும் அந்த சிறிய துணுக்கை வைத்துக் கொண்டு மிகப்பெரிய கதை ஒன்றை எழுதினார்.
ஹஜ் அந்தக் கதையை பகிர்வதை மட்டுமே முழு வேலையாக இரண்டு நாள் வைத்திருந்தான் சுப்பு குட்டி. இப்போது அவனே ரீல்ஸ், வீடியோ எல்லாம் போடக் கற்றுக் கொண்டு விட்டான். அறிவுசார் சமூகத்தைக் கையில் வைத்திருப்பது தான் சாதியையும் பிரபலமாக்கி, தானும் பிரபலமாக ஒரே வழி என்பது அவனுக்கு ஒரு புள்ளியில் தோன்ற, அவனது சாதியில் உள்ள எழுத்தாளர்கள் எல்லாரையும் பெருமைப்படுத்த ஆரம்பித்தான். எழுத்தாளர்களில் ஆரம்பித்த பயணம் அரசியல்வாதிகள், திரைக் கலைஞர்கள், தொழிலதிபர்கள் என்று வந்து நின்றது. இந்தச் சாதியின் பெயரைப் போலவே பெயர் கொண்ட வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களை நிர்தாட்சணியமாக மறுத்தான்.
அந்தா இந்தாவென்று சுப்புக்குட்டி சிங்கப்பூருக்கு வந்து ஒரு வருடம் ஓடிவிட்டது. சிங்கப்பூர் நண்பர் ஒருவர் நல்ல காசு புழங்கும் காண்ட்ராக்ட் ஒன்றைத் தான் செய்து வந்ததாகவும், இனிமேல் அதைத் தன்னால் தொடர முடியாததால் சுப்புக்குட்டியால் தொடர முடியுமா என்றும் கேட்ட போது யோசிக்காமல் சம்மதித்தான். நினைத்தற்கு மாறாக காசு கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மாதச் சம்பள வேலையை விட்டுவிட்டு காண்ட்ராக்டையே முழு நேரமாக பார்த்தான். வழக்கமாகத் தான் வாங்கிய மாதச் சம்பளத்தை மட்டும் தன் வீட்டுக்கென்று வைத்துவிட்டு அந்த மொத்த காசையும் வேறு வழியில் செலவழிக்கத் திட்டமிட்டான்.
இங்கே ஒப்பந்தங்களைப் பார்க்க ஆட்களை நியமித்துவிட்டு ஊருக்குச் சென்றான். எப்போதும் போனால் போதும் என்று பெரிய மச்சான் மட்டும் வந்து நிற்பார், இப்போதோ விமான நிலையத்தில் சுப்புக்குட்டியை வரவேற்கவே நாலைந்து பேர் வந்திருந்தார்கள். வீட்டிற்கு வந்தவுடன் கோவிலுக்கு நன்கொடை வேண்டும் என்று கேட்டு ஒரு குழு வந்தது. ஆயிரமோ இரண்டாயிரமோ எதிர்பார்த்து அவர்கள் வந்திருக்க, ஒரு லட்சத்தைத் தூக்கிக் கொடுத்தான் சுப்புக்குட்டி. தேனு முறைத்தாள். “அடுத்த வாரம் கும்பாபிஷேகம். செலவுக்கு என்ன செய்யன்னு நினைச்சோம், மனசு வச்சுட்டீங்க” என்ற அவர்கள் அந்த ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை அவனுக்கு பேனர் வைப்பதிலேயே செலவழித்தார்கள்.
‘குடும்பத்தோட வந்து கலந்துக்கிடனும்’ என்று அவர்கள் சொன்னதை நினைவு வைத்து சுப்புக்குட்டி மனைவியை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றான். மொத்தமாக பத்தாயிரம் ரூபாய் செலவழித்து அவள் தோற்றத்தை மாற்றினான். ஒரு ஹேர் பின், பொட்டு கூட வாங்கித் தராதவன் இவ்வளவு செலவழிப்பதைப் பார்த்த தேனுவுக்கு ஏற்பதா மறுப்பதா என்று குழப்பம். மௌனமாக இருந்து கொண்டாள். அடுத்து ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டார்கள், ஒரு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார்கள், ஒரு டீக்கடை திறந்து வைக்க அழைத்தார்கள். கூப்பிடாத கல்யாண வீடுகளுக்கும் கூட சென்று நிறைய மொய் செய்தான் சுப்புக்குட்டி.
தேனுவின் தங்கை வீட்டில் காதுகுத்து வைத்திருந்தார்கள். பிள்ளைக்கு பெரிய தங்கச் செயினாக ஒன்று செய்து கொண்டு போய் போட்டான். எப்பொழுதும் அக்காவைக் குத்திக் காட்டும் குணம் உள்ள தங்கை, “பாத்துக்கோ அத்தான் கை மீறி செலவழிக்கிறாரு. எதுலயும் வில்லங்கத்தில் மாட்டிக்கிடாம” என்று அந்த நகையை பத்திரப்படுத்திய படியே கூறினாள். தன் வீட்டு விசேஷத்திற்கு இருநூறு ரூபாய் கொண்ட மொய் கவர் மட்டுமே வந்திருந்த காட்சியை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த தேனுவின் அக்கா, “இரண்டு பேரும் ஒத்துமையாத் தானே இருக்கீங்க? கைக்குள்ள வச்சுக்கோ. ஏற்கனவே கொழுந்தனாருக்கு அலைபாயிற மனசு, வெளிநாட்டுல வேற இருக்காரு” என்று தேனுவின் மனதில் பூகம்பத்தைக் கிளப்பினாள்.
அவனிடம் காலையில் பணம் வாங்கிவிட்டு, மதியம் வெளியில் போய், “இதெல்லாம் என்ன உழைச்சு சம்பாதிச்ச காசாவா இருக்கும்? அங்கே கள்ளக் கடத்தல் எதுவும் பண்ணுவானோ?” என்று பேசினார்கள். கள்ளக் கடத்தல் என்பது தங்கம் கடத்தல், சிலைக் கடத்தல், கஞ்சா கடத்தல் என்று குறிப்பிட்ட பெயர்களால் பின்பு அழைக்கப்பட்டது. தேனுவின் காதுக்கு இவையெல்லாம் வந்த போது முதலில் பதட்டம் அடைந்தாலும் பின்னால் நிதானமாக யோசித்தாள். “ஊருக்கு செய்றது தப்பில்ல.. ஊருக்கு எவ்வளவு செய்றீங்களோ அதுக்கு இணையா நமக்கும் செய்யணும்” என்று கூற, சுப்புக்குட்டி அவளுக்கும் நிறைய பணம் அனுப்பினான்.
தேனு கிடைத்த இடங்களை எல்லாம் வாங்கி போட்டாள். ரியல் எஸ்டேட்காரர்கள் எங்கே நிலம், வீடு விற்பதானாலும் வந்து சுப்புக்குட்டியிடம் கேட்டுவிட்டு அவன் வேண்டாம் என்று சொன்னால் தான் அடுத்த இடத்திற்குப் போனார்கள். ஊருக்குள் இவனால் நிலத்தின் விலை எகிடுதகிடாக ஏறிக் கிடப்பதாக மற்றவர்கள், குறிப்பாக நிலம் வாங்க முயற்சித்து வந்த எதிர் வீட்டுக்காரன் உட்பட, பலர் முணுமுணுத்தார்கள். அதுவும் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு சுப்புக்குட்டி பெரிதாகக் கட்டிய போது எதிர் வீட்டுக்காரன் பொறாமையில் பொசுங்கி பத்து நாட்கள் தூங்கவில்லை.
‘இதுக்கு மேல உங்க குடும்பத்துல யார் பேர்லயும் சொத்து பதிய முடியாதும்மா’ என்று ரிஜிஸ்டர் ஆபீஸில் கூறி விட, தேனு தங்கள் சாதியைச் சேர்ந்த எளியவர்களாக, நல்லவர்களாகத் தேடிப் பிடித்தாள். அவர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அவர்கள் பெயரில் நிலங்கள் பதிவு செய்தாள். குலதெய்வக் கோயிலின் புகைப்படம் ஒன்றைத் தங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து, அதன் முன் அவர்களை நிறுத்தி, ‘கேட்கும் போது மறுபடியும் உங்களுக்கே இந்த சொத்தை எழுதி தந்து விடுவேன்’ என்று அவர்களிடம் சூடத்தில் அடித்து சத்தியம் வாங்கி விட்டு, அவர்களுக்குப் பேசிய பணத்தைக் கொடுத்து விட்டு பத்திரங்களை தானே வைத்துக் கொண்டாள்.
இப்படியாக நான்கைந்து வருடங்கள் சென்றன. சுப்புக்குட்டி இப்போது வரும் நேரமெல்லாம் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்து சாதித்தவர்களுக்கு விருது, கல்வி உதவித் தொகை, தையல் இயந்திரம் வழங்கினான். அவனை முதலில் சங்கத்திலிருந்து நீக்கிய அறுவர் அணி, சங்கப் பொறுப்பில் ஏழாவதாக அவனையும் சேர்த்துக் கொண்டு எழுவர் அணியாக மாறிக் கொள்ளலாம் என்று ஒரு மனதாகத் தீர்மானித்தது. அவன் பெயரைப் போட்டு ஒரு கோவில் கொடை விழாவிற்கு அழைப்பிதழ் அடித்து சுப்புக்குட்டியிடம் அவர்கள் கொடுக்க வந்த போது, சுப்புக்குட்டிக்குப் பழைய கோபதாபங்கள் எதுவுமே நினைவில் இல்லை. பிரபலத்திற்காக என்று ஆரம்பித்த சாதி அபிமானம் இப்போது அவனே அறியாமல் அவனுக்குள் வேரூன்றி இருந்தது. தன் பதிவுகளை, தனக்குக் கிடைத்த பெருமைகளை, தான் செல்லும் கூட்டங்களில் பேசப்படும் சொற்களை உண்மையென உளமாற நம்ப ஆரம்பித்திருந்தான். அவர்கள் வந்து விட்டுப் போன பின்னர், தான் போடும் போஸ்ட்களில் அவர்கள் ஆறு பேரையும் டேக் செய்ய அவன் மறக்கவில்லை.
எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த நேரம் இவன் சப் கான்ட்ராக்ட் கொடுத்த ஒருவர் ஏமாற்றி விட அங்கே பெருத்த நஷ்டமாகிவிட்டது. அந்த ஆண்டு ஒப்பந்தம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்கு வந்து வீடு கட்டும் பணியின் இறுதி கட்டத்தைப் பார்ப்போம் என்று இருந்தான். அப்போதும் அவனுடைய பொதுப் பணிகள் தொடர்ந்தன.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இணையத்தில் பதிவு போடுவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை. வாரத்திற்கு ஒரு பதிவாவது வைரல் ஆகாத நாட்களில் அவனுக்கு மறுபடியும் தூக்கம் தொலைந்தது. அவர்கள் இனத்தில் வந்த மன்னர் ஒருவர் ஓவியம் ஒருமுறை சுப்புக்குட்டிக்குக் கிடைக்க, அந்த மன்னர் நெற்றியில் குங்குமத்தையும் விபூதியையும் பட்டையாகவும் வைக்காமல், நாமம் போலவும் வைக்காமல் கீழ் நோக்கிச் சுருண்டு கிடக்கும் புழு போல வைத்திருந்தார். அது அவனை ஈர்த்தது. அந்த மன்னனின் ஆயிரமாவது பிறந்தநாளோ என்னவோ வந்த போது சுப்புக்குட்டி ஒரு ட்ரெண்டிங் வீடியோவைப் போட்டான். அந்த மன்னரைப் போலவே நெற்றியில் திலகமிட்டு அனைவரும் செல்ஃபி போட வேண்டும் என்று சொல்லி, அப்படியே செய்து காட்ட, அடுத்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான ‘புழு பொட்டு வைத்த’ செல்ஃபிக்கள் இணையத்தில் வலம் வந்தன.
பொட்டே வைக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த மகள், ஆற அமர கண்ணாடி பார்த்து புழு போல போட்டு வைப்பதைப் பார்த்து எதிர் வீட்டுக்காரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சுப்புக்குட்டி சாதியைப் பற்றி ஆராய்ச்சி செய்திருந்த அளவிற்கு அவன் சுப்புக்குட்டியைப் பற்றி ஆராய்ச்சி செய்து வைத்திருந்தான். அமலாக்கத்துரை, வருமானவரித்துறை, அந்த துறை, இந்தத் துறை என்று ஏழெட்டு துறைகளுக்கு எழுதிப் போட்டான் எதிர்வீட்டுக்காரன். நாலைந்து தடவை மாவட்டத் தலைநகருக்கும் சென்று வந்தான்.
இன்னொரு வைரல் வீடியோவைப் போட சுப்புக்குட்டி முயற்சி செய்து வந்த ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த இந்தத் துறை அதிகாரிகள் ஏழெட்டு பேர் சேர்ந்து திமுதிமுவென்று உள்ளே வந்தனர். கட்டுக் கட்டாக ஆதாரங்களைக் காட்டினர். வீட்டிற்குள் எல்லாம் சோதனை நடத்தத் தேவையே இல்லை என்பது போல சுப்புக்குட்டி வங்கிப் பரிவர்த்தனைகள், நகைப் புழக்கம், நிலம் வாங்கிப் போடுதல் என்று ஆதாரங்களைப் பொதுவெளியில் கடைபரப்பியே வைத்திருந்தான். அதை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, ‘உங்களைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்றார்கள். சுப்புக் குட்டிக்கு கிறுகிறுவென்று வந்தது. காலையில் சாப்பிடக் கூட இல்லாததால் கண்ணை கட்டியது. அப்படியே சோஃபாவில் சரியப் போனான். செய்தியறிந்த அறுவர் அணி சுப்புக்குட்டியை எங்கள் சாதியிலிருந்து நீக்கி விட்டோம் என்று முன்பு போட்ட பொதுக்குழு தீர்மானத்தை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் போட்டார்கள். பெரிய மச்சான் மட்டும் பரபரப்பாகி வீட்டிற்கு வெளியே வந்து நின்றார்.
தேனுவுக்குக் கணவன் மயங்கிச் சரிவது தெரியவில்லை. அவள் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டு, சாமி முன்நின்று சத்தியம் வாங்கிக் கொண்டிருந்தாள். அதற்குள் யாரோ முகத்தில் நீர் தெளித்து, குடிக்க தண்ணீரை எடுத்துக் கொடுத்திருக்க, சுப்புக்குட்டி மடக் மடக்கென்று குடித்தான். தன் அரசியல் வாழ்க்கை, சாதி வாழ்க்கை எல்லாம் மீண்டும் முடிந்து விட்டதா என்று நினைத்தபடியே அந்த அதிகாரிகளின் முகங்களைப் பார்த்தான்.
“போகலாமா?” என்று அவர்கள் கேட்க, “நீங்க சொன்னா வரேன் சார்” என்று ஒருவரைக் காட்டி சுப்புக்குட்டி சொன்னான். அவர் நெற்றியில் குப்புறக் கிடக்கும் புழு போன்ற பொட்டினை வைத்திருந்தார்.
***