"சேர்… இன்று மாலை நான் உங்களைச் சந்திக்கலாமா?”
“ஹாய் சியாவோ… எப்பொழுது சீனாவிலிருந்து வந்தாய்?”
“நேற்றுத்தான்…”
“படிப்பு, ஆராய்ச்சி எல்லாம் எப்படி இருந்தது?”
“நல்லபடியாய் முடிந்துவிட்டது சேர்… உங்களுடன் கதைப்பதற்கு நிறைய இருக்கின்றன. தனியாகக் கதைக்க வேண்டும். குறிப்பாக இரண்டு முக்கிய விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.”
“சரி… இன்று மாலை ஐந்து மணிக்கு பிறிம்பாங் லைபிறறிக்கு வர முடியுமா?”
“ஓகே… சேர்.”
`தனியாகக் கதைக்க வேண்டும்’ என்கின்றாள். என்னவாக இருக்கும்? மனம் அலை பாய்ந்தது.
•
சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள், உள்ளூர்ப் பேப்பரில் வந்த கட்டிங் ஒன்றை நீட்டிய அம்மா, அதைப் பார்க்கும்படி சொன்னார்.
உருவ நேர்த்தியும் அழகும் கொண்ட பதின்ம வயதுப் பெண்ணொருத்தி, கையில் பாட்மிண்டனுடனும் முகத்தில் புன்னகையுடன் அந்தப் பத்திரிகையில் காட்சி தந்தாள். செதுக்கி வைத்த அந்தச் சிற்பத்தின் ஒரு கையில் ஷட்டில்காக்கும் மறுகையில் ராக்கெட்டும் இருந்தன.
அவள் சியாவோ சென், ஒரு சீனத்துப்பெண். பள்ளிப் பெண்ணான அவளின் திறமைகளை வியப்பூட்டும் வகையில் விவரித்திருந்தது அந்தப் பத்திரிகை. படிப்பில், விளையாட்டில், இசைக்கருவிகளை மீட்டுவதில், ஓவியம் வரைவதில் எனப் பல திறமைகள் கொண்டிருந்தாள் அவள். அம்மாவிடம் அதைத் திருப்பி நீட்டியபடியே, அம்மாவை வியப்புடன் பார்த்தேன்.
“சியாவோ என்னுடன் வேலை செய்யும் நண்பியின் மகள். அவளுக்கு சில பாடங்களில், நீ ரியூசன் சொல்லிக் குடுக்க வேண்டும்.” அந்தப் பத்திரிகை நறுக்கை வாங்காமலே பதில் தந்தார் அம்மா.
“அவளின் திறமைகளைத்தானே பத்திரிகையில் வாசித்து விட்டேனே! இனியும் அவளுக்கு ஏன் ரியூசன்?”
“சியாவோவிற்கு பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைகள் நெருங்கி வருவதால், அவளின் தாயார் அவளின் கல்வியை இன்னும் மேம்படுத்த விரும்புகின்றார். அதுதான்…”
அப்பொழுது நான் `மொனாஷ்’ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனது பொக்கற்மணிக்காக சில மாணவர்களுக்கு பகுதி நேரமாக ரியூசன் குடுத்துக்கொண்டு இருந்தேன். சியாவோவிற்கும் படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு உடன்பட்டேன்.
சியாவோ, வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமை அதிகாலையும் படிப்பதற்காக எனது வீட்டிற்கு வந்துவிடுவாள். அவளின் அப்பா அவளைக் காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டு, படிப்பு முடிந்ததும் கூட்டிச் செல்வார்.
நான் அவளுக்குக் கணிதமும் பெளதிகமும் சொல்லிக் குடுத்தேன். சியாவோ அனைத்துப் பாடங்களிலும் திறமைசாலியாக இருந்தாள். போகப்போக அவளின் அசாத்திய திறமைகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்த நூற்றாண்டின் விஞ்ஞானம் பெற்ற ஒரு குழந்தையாக, அவளின் மரபணுக்களில் புத்திக்கூர்மையான டி.என்.ஏ மூலக்கூறுகள் கலந்திருக்கின்றன என்பதை உணர்ந்தேன்.
என்னுடன் நெருங்கி ஒட்டியிருந்தபடி பாடத்தில் மிகவும் கவனமாக இருப்பாள். அவளின் நெருங்குகையில் ஒரு தங்கையின் பாசத்தை நான் உணர்ந்தேன். அழகழகான ஆடைகள் அணிந்து வரும் அவளின் கொள்ளை அழகும், நறுமணமும் என்னைக் கவர்ந்து கொள்ளும். பளிங்கென வாரிவிடப்பட்ட கூந்தலின் பிடிக்குள் தப்பிய மயிர்க்கற்றைகள், சிலவேளைகளில் என் கழுத்துப்பகுதியை உரசிக் கூச்சம் காட்டும். கழுத்தைச் சற்றே திருப்பி வைத்திருந்தால், குனிந்து என் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். புத்தகத்தையோ வீடியோ விவரணங்களையோ ஒருதடவை பார்த்தால் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. மற்றவர்களைப் போல மாய்ந்து மாய்ந்து மனப்பாடம் செய்யவேண்டிய தேவை எல்லாம் அவளுக்கு இருக்கவில்லை. அழகும் அறிவும் கொண்ட அதிசயப்பிறவி அவள்.
ஒருநாள் அவளின் இன்னொரு திறமையைக் கண்டு நான் ஆச்சர்யம் கொண்டேன். கணிதத்தில் கேள்விகளுக்கான தீர்வு காணும்போது, இரண்டு மூன்று படிமுறைகளைத் தாண்டி, ஜம்ப் செய்து முடிவுகளைக் கண்டுபிடித்திருந்தாள் அவள். அந்தப் படிமுறைகளை மனதால் எப்படி உய்த்துணர முடிந்தது என்பதில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்படி சில படிமுறைகளைத் தவிர்த்து விடை எழுதுவதால், படிமுறைகளுக்கான புள்ளிகளைத் தான் சிலவேளைகளில் இழந்து விடுவதாக கவலை கொண்டாள்.
அவளின் குட்டித் தலைக்குள் இருக்கும் மூளை எப்படி வேலை செய்கின்றதென ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன்.
“சியாவோ, நீ வருங்காலத்தில் என்ன படிப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றாய்?”
“இன்னமும் முடிவெடுக்கவில்லை சேர்... தீர்மானம் செய்யக் கஸ்டமாக இருக்கின்றது சேர்.”
“முதலில் என்னை சேர் போட்டுக் கதைப்பதை நிறுத்திவிடு, சியாவோ.”
சியாவோ சிரித்தாள். தான் நிறுத்தமாட்டேன் என அவள் கண்கள் நாலாபுறமும் சுழன்று சொல்லின.
என்னைவிட நான்கு வயதுகள் குறைவான அவள், என்னை `சேர்’ போட்டுக் கதைப்பது மனதை என்னவோ செய்தது. அவள் தனது தெரிவை மேற்கொள்வதில் சிக்கலடைந்திருக்கின்றாள் என்பதைப் புரிந்து கொண்டேன். உண்மையில் அவள் எந்தக் கற்கை நெறிக்குள் புகுந்தாலும் பிரகாசிக்கும் தன்மை கொண்டவளாக அப்பொழுது இருந்தாள்.
“சியாவோ… உங்கள் பரம்பரையில் யாராவது டாக்டரோ இஞ்சினியரோ சட்டத்தரணியோ இருக்கின்றார்களா?”
“இல்லை சேர்… பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர்கள் உங்களைப் போலத்தான் கேட்கின்றார்கள். என்னுடைய அப்பா ஒரு சாதாரண பிளம்பர். அம்மா ஒரு தொழிற்சாலையில் புறோசஸ் வேலை செய்கின்றார். அப்படியிருக்க எப்படி நான் புத்திசாலி ஆனேன் என்று பாடசாலையில் ஆசிரியர்கள் வியப்படைகின்றார்கள். இதனால் எனக்கு சிலவேளைகளில் கவலையும் வருவதுண்டு.” சொல்லிவிட்டு மெளனமாக எதையோ சிந்தித்தபடி இருந்தாள் அவள்.
“அப்படியில்லை… உனது பரம்பரையில் எங்கோ ஒரு அடி ஆழத்தில் பெரும் புத்திசாலிகள் இருந்திருக்கின்றார்கள். அவர்களின் மரபணுக்கள் கடத்தப்பட்டு உன்னிடம் வந்திருக்கின்றன. எமது இந்த உடல் அழிந்து போனாலும், மரபணுக்கள் தொடர்ந்து வாழ்கின்றன” என நான் சொல்லி முடிப்பதற்குள், “அப்படி எமது பரம்பரையில் ஒருவரும் இருந்திருக்கவில்லை என்று எனது அப்பாவும் அம்மாவும் சொல்கின்றார்கள்” என்றாள் அவள். அவளுக்கு மரபணுக்கள் பற்றி பெரிதாக ஒன்றும் அறிவு இருக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டேன்.
முதல்நாள் படிப்பு முடிந்து சியாவோ வீட்டிற்குப் போனதும், அம்மா அவளைப்பற்றி பற்றி என்னிடம் துளைத்தெடுத்தார்.
“சியாவோ, உன்னைப் போலவே அவர்களின் பெற்றோருக்கு ஒரேயொரு செல்லப் பிள்ளை” என்று சொன்ன அம்மா, அவளைப் பற்றியதொரு இரகசியத்தையும் எனக்குச் சொல்லி வைத்தார்.
“சியாவோவின் பெற்றோருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் பிறக்கவில்லை. அவளின் அம்மாவுக்கு ஏழுதடவைகள் கருச்சிதைவு நடந்திருக்கு. அதன் பின்னர் அவர்கள் சீனா சென்று, ஒரு வருடம் அங்கே தங்கியிருந்து சியாவோவைப் பெற்றெடுத்துக் கொண்டு இங்கே வந்தார்கள்.” அம்மா சொன்ன அந்த இரகசியம் என் மனதில் பத்திரமாக உறைந்து போய் கிடந்தது.
அதற்கடுத்த தடவை சியாவோவைச் சந்தித்தபோது, அவள் என்னிடம் ஒரு சிக்கலான கணக்கைத் தந்தாள். என்னால் அந்தக் கணக்கை தீர்த்து வைக்க முடியாமல் இருந்ததால், மறுநாள் சொல்லித் தருவதாகச் சொன்னேன். அன்று இரவு முழுவதும் அந்தக் கணக்குடன் என் நேரம் செலவழிந்தது. எவ்வளவுதான் முயன்றும் என்னால் அதற்கு விடை காண முடியாமல் இருந்தது. மறுநாள் காலை சியாவோ எனக்குப் போன் செய்து, விடையை, தான் கண்டுபிடித்து விட்டதாகச் சொன்னாள். படுக்கைக்குப் போகும்போது விடை தெரியாத கேள்விக்கு, விடியலின் உறக்கத்தில் பதில் கிடைத்தது என்றாள் சியாவோ. அவள் சில கேள்விகளுக்கு உறக்க நிலையிலேயே பதிலைப் பெற்றுக் கொள்கின்றாள் என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருமுறை சியாவோ தனது அம்மாவின் படத்தைக் காட்டி, “நான் எனது அம்மாவின் வயிற்றுக்குள் இருந்தபோது, சீனாவின் ஷென்யாங் பிரதேசத்தில் எடுத்த படம் இது” என்று சொன்னாள். அதில் நிறைமாத கர்ப்பிணிக் கோலத்தில் அவளது அம்மாவும், அப்பாவும் சிரித்தபடி கை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
“உனது அப்பா இப்பொழுதும் வேலை செய்கின்றாரா?”
“அப்பாவிற்கு இப்பொழுதுதான் நாற்பத்தைந்து வயது ஆகின்றது” சொல்லிவிட்டுச் சிரித்தாள் சியாவோ.
அன்று அவள் தனது படிப்பிற்குப் புறம்பாக, மரபணு மாற்றம், குளோனிங் பிரதி செய்வது பற்றியெல்லாம் என்னிடம் விடுத்து விடுத்துக் கேட்டாள். என்னிடம் அதற்கான தெளிவான விளக்கங்கள் இல்லாதபடியால், “நீ வருங்காலத்தில் மருத்துவம் பயின்றால் இவற்றையெல்லாம் அறிந்து கொள்வாய்” என்று சொல்லி வைத்தேன். அப்போது அவள் தன் பிறப்பைப் பற்றிய மயக்கத்தில், தனக்குள்ளே கேள்வி பதில்களால் நிரம்பியிருந்தாள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
சியாவோ, IVF முறையில் பிறந்தவள் என்றுதான் என் அம்மா சொல்லியிருக்கின்றார். சிலவேளைகளில் அவள் தத்தெடுக்கப்பட்ட பிள்ளையாகவும் இருக்கக்கூடும்.
வரவர சியாவோவின் மூளை கூர்மையடைந்து வருவதையும், தனக்குள் நடக்கும் விந்தைகளைத் தேடியலைந்து, காரணங்களைக் கண்டறியாமல் சோர்வடைந்து கொள்வதையும் அவதானித்தேன்.
அவளின் சிந்தனையை எப்படி மாற்றலாம் என யோசித்தேன். எனது அறைக்குள் சென்று, என்றோ ஒருநாள் அம்மா தந்த அந்தப் பத்திரிகை நறுக்கை எடுத்து வந்து சியாவோவின் முன்னால் வைத்தேன். அவள் முகம் சிவக்க வெட்கத்தில் சிரித்தபடியே என்னைப் பார்த்தாள். உடனே எல்லாவற்றையும் மறந்துவிட்டு இறகுப்பந்து விளையாட்டைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். பாட்மிண்டன் விளையாட்டு உருவாகிய வரலாற்றையும் அதில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டையும் மெய்மறந்து சொல்லியபடி இருந்தாள்.
பரீட்சை நெருங்கி வருவதால், இனி பாடங்கள் குறித்து மிகுந்த கவனம் எடுக்கவேண்டும் என்று புத்திமதி சொன்னேன்.
சியாவோ பள்ளிப் படிப்புகள் முடித்து, மருத்துவம் படிப்பதற்கு தெரிவாகி இருந்தபோது எனக்கொரு பரிசுப்பொருள் தருவதற்காக வீட்டிற்கு வந்திருந்தாள்.
அதன் பின்னர் நான்கு வருடங்கள் கழித்து ஒருநாள், சியாவோ எனக்கு ரெலிபோன் செய்தாள்.
“மருத்துவம் படித்து முடித்துவிட்டேன் சேர். சீனா சென்று, செயற்கை நுண்ணறிவால் சத்திரசிகிச்சைக்கு எப்படி உதவ முடியும் என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய எனக்கொரு ஸ்கொலஷிப் கிடைத்திருக்கின்றது. வருகின்ற தை மாதம் ஷென்யாங் பிரதேசத்திற்குச் செல்கின்றேன்.”
“ஓ… அப்படியா? நல்ல செய்தி. உனது மருத்துவ ஆராய்ச்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் கேள்.”
“நிச்சயமாக…”
“சியாவோ… செயற்கை நுண்ணறிவும் மருத்துவமும்’ பயில்வதற்கு சீனாதான் செல்லவேண்டுமா? அவுஸ்திரேலியாவில் படிக்க முடியாதா ?”
“இல்லை. சீனா அவுஸ்திரேலியாவைவிட பலவற்றில் முன்னிலையில் இருக்கின்றது. மருத்துவத்தில் பல மடங்குகள் முன்னேறிவிட்டது.”
“எத்தனை வருடங்கள் அங்கு படிக்க வேண்டும்?”
“ஆறு மாதங்கள் தான். ஆனால் மேலும் சில வாரங்கள் தங்கியிருந்து எனது தாய் நாட்டையும் பார்த்து வரலாம் என்றிருக்கின்றேன்.”
அன்று கதைத்தபோது, நாலு வருடத்துப் புதினங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தாள். அவளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தேன்.
•
இன்று ஆறு மாதங்கள் படிப்பை முடித்துக் கொண்ட சியாவோ, அவுஸ்திரேலியா திரும்பிவிட்டாள். அவளைச் சந்திப்பதற்காக பிறிம்பாங் லைபிறறி நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தேன்.
ஐந்து மணிக்குப் பத்து நிமிடங்கள் முன்பதாக, பிறிம்பாங் லைபிறறிக்குச் சென்றுவிட்டேன். நூலகத்தின் முன்னால் இருந்த பெஞ்ச் ஒன்றில் நிலத்தைக் குனிந்து பார்த்தபடி இருந்தாள் சியாவோ. முன்னர் இருந்த தோற்றத்தைவிட சற்றே குண்டாகவும், நெடுத்தும் வளர்ந்திருந்த அவளை நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கின்றேன்.
“சியாவோ…”
என் குரல் கேட்டதும், உதட்டுக்குள் ஒளித்து வைத்திருந்த சிரிப்பை மெல்ல உதிர்த்துவிட்டு, துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வந்தாள்.
“வா… இருவரும் அந்த பெஞ்சில் இருந்தே கதைப்போம்.”
சீனாவிலிருந்து வாங்கி வந்ததாக, பட்டிலாலான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பரிசுப்பொருளைத் தந்துவிட்டு, என்னை நெருக்கியபடியே அமர்ந்தாள் சியாவோ. நான் அவளுக்கு `AI & Medical Research’ என்ற புத்தகத்தை அன்பளிப்புச் செய்தேன்.
“சரி சொல்லும்… உன் ரகசியங்களை…”
“நான் சீனாவில் இருந்தபோது, இரகசியமாக அமைந்திருக்கும் ஒரு காட்டுப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்தேன். பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்ட அங்கே குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட பல புதுப்புது உயிரினங்களைப் பார்த்தேன். உள்ளே எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை.”
“இதை நான் முன்னரும் கேள்விப்பட்டிருந்தேன் சியாவோ. தென் கொரியாவும் சீனாவும் குளோனிங் தொழில்நுட்பத்தில் மிகவும் கவனம் செலுத்துகின்றன. இப்போது நீ அதை உறுதி செய்துவிட்டாய்” என்றேன் நான்.
“பூமியின் சுழற்சி வேகத்தைக் கட்டுப்படுத்தும் த்ரீ கோர்ஜஸ் அணைக்கட்டைப் பார்த்தேன். சீனப் பெருஞ்சுவர் பார்த்தேன்” என ஒவ்வொன்றாக, வாயைச் சுழித்து ஒரு சின்னப் பிள்ளையொன்று அதிசயித்துச் சொல்வது போல் சொல்லிவந்த சியாவோ, சிறிது தயக்கத்தின் பின்னர் பெரியதொரு வெடிகுண்டை உருட்டிப் போட்டாள்.
“நான் அங்கு தங்கியிருந்த காலத்தில், நான் பிறந்த ஹொஸ்பிட்டலுக்குச் சென்றிருந்தேன். நான் என் அம்மாவின் கர்ப்பப்பையில், எனது பிறப்புக்குக் காரணமான டாக்டர் ஜி என்பவரின் உயிரணு மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை அங்கு கண்டறிந்தேன். ஆனால் அது என் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குத் தெரியாமலே நடந்திருக்கின்றது என்று அறிந்தபோது மிகவும் கவலையாக இருந்தது.” இதைச் சொல்லும்போது சியாவோவின் குரல் அடைத்து அவளின் கண்களில் நீர் முட்டியது.
இதைப் போன்ற பல விடயங்கள் டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் மூலம், உலகின் பல பாகங்களிலும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய புதிய பிறப்புகளுடன் போட்டியிட்டு, வாழ்க்கையில் முன்னேற இனி சாதாரண மக்களின் பிள்ளைகளால் முடியாமல் இருக்கபோகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாக இருந்தது. அந்த ஏக்கத்தில், நான் அவளின் பேச்சுக்கு பதில் கூறாமல், என் மெளனத்தை சற்றே நீட்டி வைத்திருந்தேன்.
“பெரும்பாலான வங்கிகள் நாற்பது வயதுக்குள் உள்ள ஆண்களிடமிருந்துதான் விந்தணுவைத் தானமாகப் பெறுகின்றன. அப்படியிருக்க அந்த விஞ்ஞானி தனது எழுபதாவது வயதிலேயே, என்னைப் போன்ற பல திறமைசாலிகளை உருவாக்கியிருக்கின்றார். உண்மையில் நான் எனது உயிரியல் தந்தை மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக நான் அங்கிருந்து தப்பி வருவதற்கான வழியைத்தான் தேட வேண்டியிருந்தது.”
அவள் அதைச் சொன்னபோது, அவளது முகத்தில் இன்னமும் அந்தப் பயக்கலக்கம் இருந்தது தெரிந்தது. அவளை மெதுவாக அணைத்துத் தட்டித் தேற்றினேன். அவள் தன் தலையைக் குனிந்து என் மார்பினில் முகம் புதைத்து குலுங்கி அழுதாள்.
“எனது அப்பாவிற்கு இப்பொழுது 96 வயதாகின்றது. 96 வயது முதியவருக்கு, 26 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இன்று டாக்டர் ஜி, உற்சாகமாக தனது ஆராய்ச்சி நிலையத்தை நிர்வகித்து வருகின்றார். அவரைச் சந்தித்தும் கதைக்க முடியாமல் போனது மனதுக்கு வருத்தமாக இருக்கின்றது.” சுரத்தையின்றிச் சொல்லிவிட்டுக் கவலை கொண்டாள் சியாவோ.
சிறிது நேரம் மெளனமாக இருந்த அவள், தன் கண்களைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஆடைகளைச் சரிசெய்து கொண்டாள்.
“நான் எனது கல்வியை நல்ல முறையில்தான் பயன்படுத்துவேன்.” சொல்லியபடியே இருக்கையை விட்டு எழுந்து நிற்கின்றாள் சியாவோ.
“உனது வருங்காலத் திட்டங்களுக்கெல்லாம் உதவிசெய்ய நான் காத்திருக்கின்றேன்.”
சியாவோ தைரியமானவள். அவளுக்கு ஒரு அண்ணனாக கையை நீட்டுகின்றேன். அவள் என் கை விரல்களை இறுகப் பற்றுகின்றாள்.
கே.எஸ்.சுதாகர்
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் வசிக்கின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் இதுவரை `எங்கே போகின்றோம்’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’, `பால்வண்ணம்’ என்ற மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், `வளர் காதல் இன்பம்’ என்ற குறுநாவலையும் வெளியிட்டிருக்கின்றார்.