மாணிக்கம் மாமாவுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி கண்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் செய்தி வந்ததும் உடனடியாகக் கிளம்பி வரச்சொல்லி வீட்டிலிருந்து உத்தரவு வந்துவிட, விடிந்தும் விடியாத அதிகாலையில் நண்பர் ஆனந்துடன் காரில் மதுரைக்குக் கிளம்பினேன்.
போதுமான உறக்கமில்லாத நாட்களில் சரிவர மலம் கழிக்க முடியாமல் போவது எனக்கிருக்கும் வினோதமான உடல் இயல்புகளில் ஒன்று. அது இயல்பா அல்லது எனது நம்பிக்கையா என்று தெரியவில்லை. உறங்கும்போதுதான் உடலில் செரிமானம் சீராக நடக்கும் என்று பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் கரும்பலகையில் விளக்கமாகப் படம் வரைந்து சொல்லிக் கொடுத்தபோது அதை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்ட மாணவன் நான். வாய், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் என்று உணவு கடந்து செல்லும் பாதையைக் கற்பனை செய்து பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும்.
ஏழுமணி நேரத்திற்கும் குறைவாக உறங்கியிருந்தால், மறுநாள் உடல் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். பெருங்குடல் சிறுகுடல் எல்லாம் சிடுக்கிட்டு முடிச்சுப் போட்டுக் கொண்டதுபோல் மலக்கட்டு ஏற்படும். முதலில் மலம் கழிப்பது தாமதமாகும். பிரச்சினை அதோடு நிற்பதில்லை. தேநீர் குடிக்கும் போதெல்லாம் திடீரென்று அடிவயிற்றில் மலம் முட்டிக்கொண்டு வெளியேறத் துடிப்பது போலிருக்கும். நாள் முழுவதும் அந்த அவஸ்தை தொடரும். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு மனம் அடிவயிற்றின் கலக்கத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும். நண்பர்கள், உறவினர்கள் என்று யார் பேசினாலும் அதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். மலத்தைப் பற்றிய எண்ணம்தான் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். ஆயுர்வேதா, சித்தா அலோபதி என எல்லா வகையான மருத்துவ முறைகளையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன். அத்தனையும் முயன்று பார்த்து தோற்றதுதான் மிச்சம்.
சினிமா துறையில் இருக்கும் ஒருவனுக்கு, உறக்கமும் ஓய்வும் எட்டாக் கனிகள் அல்லவா? கிடைத்த இடத்தில், கிடைத்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறங்கிக்கொள்ள வேண்டிய அவலம் என்னைப்போல் பலருக்கு இருந்தாலும், என்னுடைய வினோதமான பிரச்சினை அவர்களுக்கு இல்லையே.
அவுட்டோர் ஷூட், லொக்கேஷன் பார்ப்பது என்று நெடுந்தூர பயணங்கள் செல்ல வேண்டியிருந்தால் அவ்வளவுதான். மூளையைவிட வேகமாகக் குடலுக்குச் செய்தி போய்விடும்போல. நன்றாக உறங்கினால்தான், காலையில் நன்றாக மலம் கழித்துவிட்டு வேலைக்குப் போக முடியும். இல்லையென்றால் நாள் முழுதும் அவஸ்தைதான் என்று மனத்தின் அடியாழத்தில் ஒரு குரல் முணுமுணுக்கத் தொடங்கிவிடும்.
நீண்ட தூரப் பயணங்களில் நெடுஞ்சாலை உணவகக் கழிவறைகளைப் பயன்படுத்துவதும் வதை முகாமிற்குள் விரும்பி நுழைவதும் ஒன்றுதான். அதுபோன்ற நெடுஞ்சாலை வதை கூடங்களுக்குள் நான் பெரும்பாலும் நுழைவதில்லை என்றாலும் தூக்கம் இல்லா நாட்களில் மாறிப்போகும் காலைக்கடன் பிரச்சினையால் வேறு வழியின்றி தஞ்சமடைவதுண்டு.
நேரம் நண்பகலை நெருங்கியது. அதுவரை வயிற்றில் எந்த அறிகுறியும் இல்லை. பெரும்பலூர் தாண்டி திருச்சிக்குச் சற்று முன்பு, வண்டி நிறுத்திவிட்டு களைப்பு நீங்க ஒரு தேநீர் அருந்தலாமென்று இறங்கினேன். இருக்கையில் அமர்ந்திருந்தவரை இயல்பாக இருந்த வயிறு, கீழே இறங்கி கை கால்களை நீட்டி அசைத்ததும், தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.
கரித்துண்டால் ஆண் பெண் உருவங்கள் கோணல் மாணலாக வரையப்பட்ட கூரை வேய்ந்த கழிவறைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். சிறுநீர் – 5 ரூபாய், டாய்லட் - 10 ரூபாய் என்று கையால் எழுதப்பட்ட மரப்பலகை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகே நல்ல தமிழில் ‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு’ என்ற குறள் எழுதப்பட்டிருந்தது.
இங்கு ஏன் இதை எழுதி வைத்திருக்கிறார்கள் என்று குழம்பியபடியே கட்டணம் வசூலிக்க அமர்ந்திருந்தவரை பார்த்தேன். நான் கொடுத்த ஐம்பது ரூபாயை வாங்க மறுத்தவர், ‘என்கிட்ட சில்ற இல்ல, உங்கிட்ட இருந்தா குடுத்துட்டு உள்ள போ…’ என்று கடுகடுப்பாகக் கூறினார். பரிச்சயமான முகம்போல் தெரிந்தது. அடிக்கடி பார்த்துப் பழகிப்போன தோற்றம்போல் தெரிந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. அந்த முகத்தில் குடிகொண்டிருந்த எரிச்சல் அவரை நெருங்க விடாமல் தடுத்தது. நண்பரை அழைத்தேன். அவர் பையிலிருந்து தேடி எடுத்து காசைக் கொடுத்துவிட்டு அவசரமாகக் கழிவறைக்குள் சென்றுவிட்டேன். திரும்பி வந்தபோது அங்கு உட்கார்ந்திருந்தவரைக் காணவில்லை. நாற்பது வயதில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். விசு திரைப்படங்களில் வரும் சோகை பிடித்த பெண் கதாப்பாத்திரங்களை நினைவுபடுத்தும் தோற்றம். தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் துயர நிழல் படிந்த அந்த முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தால், அந்தத் துயரம் என்னையும் தொற்றிக்கொண்டு விடுமோ என்ற பயத்தில் வேகமாக அவ்விடத்திலிருந்து கிளம்பினேன்.
பகல்நேர வெக்கை காரின் குளிர்ச்சியையும் மீறி உடலில் இறங்க, தண்ணீரைக் குடித்துவிட்டு போத்தலை ஓரமாக வைத்தேன். கடைசி வாய் தண்ணீர் அருந்தியபோது ஏதோ பொறித் தட்டியதுபோல் கழிவறைக்குள் செல்லும்போது வாசலில் அமர்ந்திருவரின் முகமும் அவர் என்னிடம் எரிச்சலாகப் பேசியதும் நினைவுக்கு வந்தது. வாய் உப்பியிருந்ததைப் பார்த்த நண்பர், “ என்ன ஆச்சு” என்றார். “இல்லங்க, அங்க உக்காந்திருந்த ஆள எங்கியோ பாத்திருக்கேன், நல்லா பழகின ஆள் மாதிரி தெரியுது. ஆனா யாருன்னு சட்டுனு யாவகத்துக்கு வரல…” என்று குழப்பத்தைச் சொல்ல, ‘ஒருவேள முன்னயே அங்க போயிருப்பீங்களா இருக்கும்…?’ எனச் சிரித்தார்.
‘இல்லய்யா… இவன வேற எங்கியோ பாத்திருக்கேன். சட்டுனு நினைவுக்கு வரல, வந்ததும் சொல்றேன்.’ என்று சொல்லிவிட்டு கவனத்தை வேறுபக்கமாகத் திருப்பினேன்.
நான் பயந்ததைப் போல் மாணிக்கம் மாமாவுக்குப் பெரிய பிரச்சனையெதுவுமில்லை. நலமாக இருந்தாலும் இத்தனை பேர் பதறிப்போய் வந்திருக்கிறார்களே என்கிற மரியாதைக்காக ரொம்பவும் முடியாதவரைப்போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் முகத்தின் தசைகள் அசையாத அளவிற்கு மெலிதாய் சிரித்தவர் “வா மாப்ள…” என்றார். நான் அவரது வலது கையைப் பற்றிக் கொண்டபோது மெல்லியச் சூட்டை உணர்ந்தேன். அவரது மகனும் மகளும் அறைக்கு வெளியே இருந்தார்கள். அத்தை மட்டும் தனது அழுக்கு சேலையில் மூக்கைச் சிந்திவிட்டு, “நல்லா இருந்த மனுஷன் திடுதிப்புன்னு விழுந்ததும் எங்களுக்கு உசுரே இல்லாமப் போச்சு மருமகனே…” என்றாள். “எந்த சாமிப் புண்ணியமோ பயப்படற மாதிரி ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு…” என்று வானத்தையும் தன் தாலியையும் மாறி மாறி கும்பிட்டாள்.
“வி.ஆர்.எஸ். வாங்கிட்டு பேசாம ரெஸ்ட் எடு மாமா… அதான் பய வளந்துட்டான்ல… அவென்பாத்துக்குவான்...” என்று நானும் பொதுவான அக்கறையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டேன். பேசி முடிக்கும்வரை எனது கையை மாமா விடவில்லை.
பயணக் களைப்போடு பசியும் சேர்ந்துகொள்ள நண்பரும் நானும் சாப்பிடுவதற்காக அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்றோம். புளிப்பதற்குக் கொஞ்சம் முந்தைய நிலையிலிருந்த மாவில் சுடப்பட்ட தோசையைக் கடலைமாவு கலந்த சாம்பாரோடு வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நண்பர் சோளாபூரியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரையும் அவர் தட்டிலிருந்த சோளாபூரியையும் பார்க்காமல் தவிர்த்த என்னிடம் “ஐயா…. சோளாபூரி டாப்பா செஞ்சிருக்கான்… பேசாம தோசைய தூக்கிப் போட்டுட்டு இத சாப்பிடுங்க…” என்றார். “இல்லய்யா… எனக்கு அதெல்லாம் ஆகாது… வேணாம்…” என்று முகம் திருப்பிக்கொண்டேன். ‘இப்ப எதுக்குக் கோவப்படுறீங்க… ஒரு மனுஷனுக்கு சோளாப்பூரிமேல என்ன அப்பிடியொரு கடுப்பு… நீங்க ஒரு வித்தியாசமான ஆளுங்க…” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
“யோவ் ஆனந்து வெசத்தக் குடிக்கச் சொல்லி குடு… குடிக்கிறேன்… ஆனா இந்த சோளாபூரி கருமத்த மட்டும் தொடமாட்டேன்…” என்று சாமி வந்ததுபோல கத்தினேன். சூழலுக்குப் பொருந்தாத என் கோபத்தைக் கண்டு குழம்பிய ஆனந்த் “ஓ...அப்ப ஏதோ விசயம் இருக்கு. என்னன்னு சொல்லுங்க…” என்றார்.
நான் மேற்கொண்டு பேசாமல் அவசரமாகச் சாப்பிட்டு முடித்து கடையிலிருந்து வெளியே வந்தேன். சோளாபூரியும் கழிவறையின் வெளியே பார்த்த அந்த மனிதரின் முகமும் மாறி மாறி என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. உணவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு நண்பர் வந்தார். சிகரெட்டைப் பற்ற வைத்தவர், ஊடுருவும் பார்வையால் என்னைத் துளைத்தார். “சரி சரி...வண்டிய எடுங்க…பேசிட்டே போவோம்...” என்று பெருமூச்சுடன் சிரித்தேன்.
2
வருடம் 2000.
கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே பிரமாண்டமாகத் திறக்கப்படவிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சில மாதங்களாகவே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல போட்டிகளும் விழாக்களும் அரசு சார்பில் நடத்தப்பட்டன. திருக்குறளை மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டியும் அதில் அடக்கம்.
அதே காலகட்டத்தில் நாடறிந்த விஞ்ஞானி ஒருவர் ‘கனவு காணுங்கள், கனவுகளுக்குச் சிறகுகள் உண்டு’ என்ற தனது கூற்றால் பள்ளி மாணவர்கள் மனத்தில் நம்பிக்கையை விதைக்கும் அரும்பணியைச் செய்து கொண்டிருந்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் தவறாமல் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். திருக்குறள் என்ற கருவூலத்தில் மனிதனுக்குத் தேவையான எல்லா அறநெறிகளும் உள்ளன என்று அவர் அறிவுறுத்தியதால் திருக்குறள் நூல்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
பல லட்சம் மாணவர்களில் ஒருவனாக நானும் அந்த விஞ்ஞானியை நாயகனாகக் கொண்டு திருக்குறளை வெறி கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். துணைப்பாடத் தேர்வில் கிடைக்கும் ஐந்து மதிப்பெண்களுக்காக அல்லாமல் ஒவ்வொரு குறளின் பொருளையும் புரிந்து படித்தேன்.
கன்னியாகுமரியில் சிலை திறக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும் பிழையின்றி ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் பரிசும் கொடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய பெயர்கள் செய்தித்தாளிலும் வெளியிடப்படும் என்று எல்லா பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வந்தது. எங்கள் பள்ளியிலிருந்து நானும் ஆறுமுகம் என்ற மாணவனும் அந்தப் போட்டிக்குத் தேர்வாகியிருந்தோம்.
எங்களைப் போலவே ஊரின் மற்ற பள்ளிகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். எல்லோரும் கன்னியாகுமரிக்குப் பயணமானோம். எப்படியும் போட்டியில் வென்று மேடையில் பாராட்டு வாங்கிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் அம்மாவிடம் அடம்பிடித்து புது உடை வாங்கச் சொன்னேன். வீட்டிலிருந்த பித்தளை அண்டாவை அடகுவைத்து அந்தக் காசில் வாங்கிய புதுத்துணியை பெருமையாக பையில் வைத்துக்கொண்டு பேருந்து ஏறியவனுக்கு “நம்ம பள்ளியோடத்து சார்பா கலந்துக்கப் போறீங்க… யூனிஃபார்ம்தான் போடனும்…” என வாத்தியார் சொன்னதைக் கேட்டுச் சப்பென்றானது.
சூரியன் உதிக்கும் இடம் கன்னியாகுமரி என்று படித்த சமூகவியல் பாடப்புத்தகத்தில் சிவப்புப் பொட்டாக இருந்த சூரியன், புத்தகத்திலிருந்து வெளியேறி என்னுடன் பயணம் செய்து கன்னியாகுமரி வந்து அப்படியே வானத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டதுபோல் இருந்தது. உடலை ஆறத் தழுவிய அதிகாலை கடல் காற்றில் குமரி முனையில் சூரிய உதயத்தைப் பார்த்தபோது அவ்வளவு பரவசம். கடற்கரை கூட்டத்து முகங்களில் ஏனோ அம்மாவின் முகத்தைத் தேடியது மனம். அவள் வைக்கும் நெற்றிப் பொட்டின் சாயலில் இருந்தது அதிகாலை சூரியன்.
மற்ற மாணவர்கள் பரபரப்பாக திருக்குறளைப் பயிற்சி செய்து கொண்டிருக்கையில், நானோ அறையிலிருந்து கடல் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். “எலேய்… நீ மனப்பாடம் பண்றியா இல்லையா? சும்மா சுத்திப் பாக்க வந்தவனாட்டம் பராக்குப் பாத்துட்டு இருக்க…” என்று வாத்தியார் அதட்டினார். சடாரென ஒரு திருக்குறளைச் சொல்லி “மனசுக்குள்ளேயே சொல்லிப் பாத்துட்டு இருக்கேன் ஸார்...” என்று சமாளித்தேன்.
நன்றாக வெயில் ஏறியிருந்த காலை நேரத்தில் ஒரு சிறிய உணவகத்திற்குள் சாப்பிட அமர்ந்தபோது கடையிலிருக்கும் அத்தனை வகையான உணவுகளையும் சாப்பிட்டுவிடும் வெறி மனதில் எழுந்தது. தீபாவளி பொங்கலுக்கு மட்டுமே இட்லி தோசையைப் பார்த்துப் பழகியவனுக்கு வேறு எப்படி இருக்கும்? முதலில் இட்லி மட்டும் சொன்னேன். “நல்லா வாங்கி சாப்புடரா…. தெம்பா இருந்தாத்தான போட்டில ஜெயிக்க முடியும்...” என்று ஆசிரியர் கூறியதுதான் தாமதம், மாயாபஜார் படத்தில் வருவதுபோல் எல்லா உணவும் வரிசை கட்டிக்கொண்டு கண் முன் வந்தன. அடுத்ததாக ஒரு தோசையும் வடையும் சொல்லிச் சாப்பிட்டு முடித்தேன்.
அதற்குள் மற்ற மாணவர்களும் வாத்தியாரும் சாப்பிட்டு எழ, நான் கடை சுவரில் எழுதப்பட்டிருந்த சோளாபூரி என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு ‘எண்ணே அதில ஒன்னு குடுங்க’ என ஆர்வமாகக் கேட்டேன்… வாத்தியார் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தார். “எலேய் வயிறு தாங்குமா..?” என்று அவர் கேட்டதற்கு அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் “அதெல்லாம் தாங்கும் ஸார்…” என்று கூறிவிட்டு சோளாபூரிக்காகக் காத்திருந்தேன்.
“ம்ம்ம்..’’ என்ற பெருமூச்சுடன், ஒரு தேநீர் சொல்லிவிட்டு என் அருகில் அமர்ந்தார். பெரிய தட்டுபோல் இருந்த சோளாபூரியைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். “ம்ம்ம்...ஆகட்டும் சாப்ட்டு முடிடா” என்று அவர் குரலில் தொனித்த கடுமை சற்று பயமுறுத்தியது. மிச்சம் வைத்தால் மானக்கேடாக போய்விடுமென முக்கி முக்கித் சோளாபூரியைத் தின்று முடித்து எழுந்தபோது என் வயிறு சட்டைப் பொத்தான்களைப் பிய்த்துவிடுவதுபோல் பெருத்திருந்தது. ஒரு வழியாகப் போட்டி நடக்கும் அரசு பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்த மாணவர்களால் நிரம்பியிருந்த அந்தப் பள்ளிக்கூடமும் மொத்த கன்னியாகுமரியும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அந்தக் கூட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்த்து உடலில் புது ரத்தம் பாய்ந்ததுபோல் இருக்க ‘இன்னிக்கிப் பட்டயக் கெளப்பறோம்..’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பெயர் கொடுத்துவிட்டு வந்தபோது எனது காத்திருப்பு எண் நூற்றி நாற்பத்தி மூன்றாக இருந்தது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் நான்கைந்து மேசைகள், ஒவ்வொரு மேசைக்கும் இரண்டு ஆசிரியர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்க, மாணவர்கள் திருக்குறள் ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். நாற்பது நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பின் எனது பெயர் அழைக்கப்பட்டது.
பதற்றமெல்லாம் விலகி அழுத்தம் திருத்தமாக நான் திருக்குறளை ஒப்பித்ததைப் பக்கத்து மேசைக்காரர்களும் ஆர்வமாகப் பார்த்தார்கள். எனக்குப் பின்னால் கிருஷ்ணன் வாத்தியார் நின்று கொண்டிருந்ததால் நான் வேறு எவரையும் திரும்பிப் பார்க்காமல் நிதானமாக ஒப்பித்துக் கொண்டிருந்தேன். பிசிறே இல்லாத குரல், தெளிவான உச்சரிப்பு...பத்து, இருபது, முப்பது, நாற்பது என அதிகாரங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். அவ்வப்போது நிறுத்தி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அதே அழுத்தமான குரலில் சொல்லத் தொடங்கினேன். இடையில் ஒருமுறை தண்ணீர் குடித்தபோது கிருஷ்ணன் வாத்தியார் சந்தோசமாகத் தோளில் தட்டிக்கொடுத்தார். சரியாக எழுபத்து ஒன்றாவது அதிகாரத்தைத் தொடங்கியபோது வயிறு கடமுடவென அடித்துக் கொண்டது. ஒப்பிக்கும் வேகம் குறைந்தது. தலைசுற்ற ஆரம்பித்தது. உடனடியாகக் கழிப்பறைக்கு ஓடவேண்டும் போலிருந்தது. ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி நிறுத்தி ஒப்பித்தவனை எல்லோரும் குழப்பமாகப் பார்த்தனர்.
‘குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்’
என்ற குறளைச் சொல்லத் துவங்கி பாதியிலேயே வேகமாக வாசலை நோக்கி ஓடினேன். என்ன ஏதென்று புரியாமல் கிருஷ்ணன் வாத்தியாரும் பின்னாலேயே ஓடிவர… ஓடும் வழியில் கால்சட்டையைப் பிடித்துக்கொண்டு நான் ஓடியதைப் பார்த்து அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சிரித்தார்கள். கழிவறைக்குள் ஓடி மறைந்த என்னைத் தூரத்திலிருந்து கிருஷ்ணன் வாத்தியார் முறைத்துக் கொண்டிருந்தார்.
கழிவறையிலிருந்து திரும்பியபோது சோர்ந்து போயிருந்தேன்… முகம் வாடிப்போனது…. தயக்கத்தோடு வாத்தியாரை நெருங்கி “ஸார் என்னால முடியல ஸார்… எல்லாம் மறந்துருச்சு ஸார்…” என்று கிட்டத்தட்ட அழுதுவிட்டேன். “அவர் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சரி போயி மரத்தடில உக்காரு…. நம்ம பயக வந்ததும் போவோம்…” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். மரத்தடியில் அமர்ந்திருந்த என்னை எல்லோரும் கேலியாகப் பார்ப்பதுபோல் தோன்றவே அவமானத்தில் எனக்கு உடல் கூசியது. முழங்காலில் முகம் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டேன். அரைமணி நேரத்திற்குப்பின் வாத்தியாரும் என்னோடு வந்த மாணவர்களும் அமைதியாகத் திரும்பி வந்ததிலிருந்து அவர்களும் முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது புரிந்தது. வாத்தியார் எங்களோடு அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
மாலை சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்ப பேருந்து ஏறினோம். சூரியன் அதே சிவப்பு நிறத்தில்தான் இருந்தது. ஆனால் காலையில் பார்த்த சிவப்பு அல்ல அது. இது வேறு சிவப்பு. சன்னலோர இருக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன். காவல் கிணறு தாண்டி பேருந்து விரைந்தபோது நன்கு இருட்டியிருந்தது. பேருந்தில் ஒலித்த பாடலுக்கு ஏற்றபடி நான் தலையாட்டிக் கொண்டிருக்க, பொளேரென பொடனியில் ஒரு அறை விழுந்தது… நான் மிரண்டு திரும்பிப் பார்க்க “சோளாபூரி கேக்குது… சோளாபூரி… கொஞ்சமா திண்ணுருந்தா இன்னிக்கி ஜெயிச்சிருந்திருக்கலாமேடா… ம்ம்ம்… தின்னிமாடு..’ என மீண்டும் ஒரு அடி பொறி கலங்கிப்போன நான் அமைதியாக தலையைக் குனிந்து கொண்டேன்.
என்னோடு வந்த மாணவர்கள் வேறு இருக்கையில் அமர்ந்திருந்ததோடு சோளாப்பூரியும் சாப்பிடாததால் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. பொங்கியெழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு சன்னல் பக்கமாகச் சாலையை வெறித்தேன். அரை மணி நேரம் கழிந்திருக்கும் “சோளாபூரி கேக்குது… சோளாபூரி…” என மீண்டும் இரண்டு அறை விழ எதிர் இருக்கையிலிருந்த பெரியவர் ‘அட விடுங்க ஸார்… சின்னப்பயலப் போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க..” என்று அமைதிபடுத்தினார். என் மீதிருந்த ஆத்திரத்தில் வாத்தியார் எழுந்து வேறு இருக்கையில் சென்று அமர்ந்துகொள்ள அவமானத்தில் நான் அழத் தொடங்கினேன். அதன்பிறகு சோளாப்பூரி என்பது எனக்கு பள்ளியில் பட்டப்பெயராக மாறிப்போனது.
3
மொத்தக் கதையையும் சொல்லி முடித்தபோது ஆனந்தால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஆனா திருவள்ளுவரு ஒன் வாழ்க்கையில் இப்பிடி வெளாண்டுருக்கக் கூடாதுய்யா…” என்றவரிடம் “யோவ் ஆனந்து என் வேதன ஒனக்கு சிரிப்பா இருக்கா… பேசாம இத்தோட நிறுத்திக்கோ… இல்லன்னா வண்டில இருந்து குதிச்சிருவேன்…” என்றேன். சிரிப்பை அடக்க முடியாமல் சாலையோரத்திலிருந்த ஒரு தேநீர்க்கடையின் வாசலில் வண்டியை நிறுத்தினார். இருவரும் தேநீர் அருந்தினோம். கடை பரபரப்பாக இருந்தது. தேநீர் அருந்திவிட்டு நானும் ஆனந்தும் சிறுநீர் கழிக்க அங்கிருந்த கழிப்பறைக்குச் சென்றோம். காசைக் கொடுத்தபோது காலையில் பெரம்பலூர் கடையில் பார்த்தவனின் நினைவு வர அவனது முகம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத் தொடங்கியது. சிறுநீர் கழித்தபடியே நான் சத்தமாகச் சிரிக்க, கழிவறையிலிருந்த எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர். “என்னய்யா சம்பந்தமில்லாம சிரிக்கிறீங்க…?” என ஆனந்த் கேட்க… சிரிப்பை நிறுத்த முடியாமல் , ‘ஒன்னுமில்ல ஆனந்து… காலைல பாத்தமே அவன் நியாவகம் வந்துடுச்சு…’ நான் மீண்டும் சிரிக்க, யாரெனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு ஆனந்தும் பார்த்தார். கையைக் கழுவிக்கொண்டு நாங்கள் வெளியே வந்தபோது ‘அன்னிக்கி நடந்த போட்டியில எங்க ஊர்ல இருந்து போனதுல ரெண்டு பேரு மட்டுந்தான் எல்லாக் குறளையும் ஒப்பிச்சு ஜெயிச்சாங்க… ரெண்டு பேர்ல ஒருத்தந்தான் காலைல நாம பாத்த ஆளு….’ என நான் சொல்ல அவரும் சிரித்துவிட்டார்.