ஓவியம்: ரவி பேலட்
சிறுகதைகள்

வெள்ளாப்பு

அந்திமழை இளங்கோவன் சிறுகதைப் போட்டி 2025-இல் ஊக்கப்பரிசு

ரம்யா அருண் ராயன்

பின்மதியத்தின் வெயிற்கற்றையொன்றை தன்னூடே ஊடுருவ அனுமதித்திருந்த அந்த அடர்ந்த வேப்பமரம், தன் தாழ்ந்த கிளையில் சற்று பெரியகுமிழாய் சுரந்திருந்த பிசின் மீது அக்கற்றையை வீழ்த்தியிருந்தது. உருகிவழியக் காத்திருக்கிற ஒரு  தங்கச்சொட்டு போன்று அது ஐசக்கின் கண்களுக்குத் தெரிந்தது. அங்கிருந்து ஆரம்பித்த அவனது பார்வை, பரபரவென அந்தக் கிளை முழுவதும் ஊர்ந்து, ஏராளமாய் சுரந்திருந்த பிசின் கண்டு உற்சாகமாகியது.

அரைக்காற்சட்டையின் பைக்குள் மூடியிட்டு பத்திரமாய் இருந்த பசைக்குப்பியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான் ஐசக். ‘ஏறலாமா...வேணாமா...’ என யோசித்தவனுக்கு, ‘அந்த குப்பம்மா மரத்துக்கு பக்கத்துல மட்டும் போய்ராத’ என எப்போதும்போல இன்று காலையிலும் எச்சரித்த அம்மாவின் குரல் மனதுக்குள் ஒலித்தது. உதட்டை அலட்சியமாய்ச் சுழித்துவிட்டு மரத்தில் ஏறத்துவங்கினான்.

 அம்மா சிசிலி நல்லவள்தான், ஆனால் அவளிடம் கேட்காமல் உண்டியலுடைத்து பணம் எடுத்து மூங்கில் பட்டம் செய்வதற்குத் தேவையான பொருட்களை வாங்கியதற்காக தன்னை மன்னிக்குமளவு இன்னும்கொஞ்சம் அவள் நல்லவளாக இருந்திருக்கலாமென எண்ணிக்கொண்டான்.

‘ஒரே பிடிவாதமாய் பட்டம் செய்ய பசை கிண்டித் தரமாட்டேனென்று விட்டாளே... அப்றம் நான் பிசின் எடுக்க மரம் மரமாய் ஏறத்தான் செய்வேன்...' கருவிக்கொண்டிருந்த மனது கூடுதலாய் உந்திய வேகத்துடன் மரத்தின் அந்தக்கிளைநோக்கிப் போய்கொண்டிருந்தான்.

 எதனால் அந்த மரத்திற்கு ‘குப்பம்மா மரம்' என்று பெயர் வந்ததென்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமில்லை அவனுக்கு, ஆனால் அது அவனுக்கு மிகப்பிடித்த மரம். அதன் சற்றே சாய்ந்த அடிமரத்தின் சிறிதுதூரம்வரை ஆட்டுக்குட்டிகள்கூட துள்ளி ஏறி விளையாடும். தடிமனென்றால் தடிமன், ஐசக் மாதிரி பன்னிரெண்டு வயதுடைய சிறுவர்கள் இருவர் சேர்ந்து மரத்தின் இருபுறமுமிருந்து கட்டிப்பிடித்தாலும் கரங்கள் கோர்க்கமுடியாதளவு தடிமன், மூவர் இணைந்து கரங்களைப் கோர்த்தால் தாராளமாய் உடலில் மரம் சிராய்க்காமல் சுற்றி வரலாம். ஆனால் அடிமரத்தின் சாய்விற்கேற்ப குனிந்து நிமிர்ந்து சுற்றவேண்டியிருக்கும்.

அந்தக்கிளையை அடைந்துவிட்டான் ஐசக். அம்மா பிசைந்த நீச்சத்தண்ணீரை குடித்ததும், குளிர்ந்த ஒரு நிறைவு வயிற்றுக்குள் வருமே... அவ்விடத்தில் அதுபோன்றதொரு நிறைவை உடல் மொத்தத்திலும் உணர்ந்தான். மேற்கிளையில் கூடுகட்டத் தொடங்கியிருந்த காகங்கள் இரண்டு சந்தேகமாய் தலையைச்சரித்து இவனைப் பார்த்து இரண்டொரு சத்தம் எழுப்பிவிட்டு, பிறகு அதனதன் வேலையைத் தொடர்ந்தன. இளவேனிற்காலத்திற்கேயுரிய வேம்பு மகரந்தவாசனை. மூச்சிழுத்து முகர்ந்தால் அந்த வாசத்தின் அடியாழத்தில், நள்ளிரவுநேரத்து அம்மா வாசனை தட்டுப்பட்டது. மரத்தினடியில் காய்ந்த வேப்பம்பூக்களின் படுகை. அம்மாவின் புடவையை எடுத்து வந்திருந்தால் இதிலேயே தொட்டில் கட்டி ஆடியிருக்கலாம் போல, அவ்வளவு சுகமாய் இருந்தது அந்த இடம்.

அங்கிருந்து பார்க்க அடுத்த தெருவிலுள்ள அவனது வீடு கொஞ்சமாய்த் தெரிந்தது. வீட்டு வாசற்படியிலமர்ந்து அம்மா ஏதோ வேலையாய் இருந்தாள். ஒவ்வொரு தொடுதலுக்கும் பூவுதிர்க்குமளவு கொப்பெங்கும் பூத்திருந்த வேப்பம்பூக்களின் ஊடான சிறு இடைவெளியில் தெரிகிற அம்மா, பகல் வானத்தில் நட்சத்திரம் பூக்கிற கனவொன்றில் வருகிற தேவதைபோல தெரிந்தாள்.

  பசைக்குப்பியைத் திறந்து, எடுத்த பிசினைத் திணித்தான். இன்னும் இரண்டடி தள்ளி மற்றொரு பிசின் சுரப்பு தெரிய மெதுவாய் அதைநோக்கி நகர்ந்தான்.

காற்சட்டையை மரத்தின் எதுவோ இழுத்தது.தடவிப்பார்த்தால் ஏதோ ஆணி போன்று தட்டுபட்டது. விடுவிக்க இயலவில்லை. வலுவாக இழுத்தான், காற்சட்டை கிழிகிற ஓசை கேட்டது. கிழிந்தாலும் பரவாயில்லை, ஆணியிடமிருந்து விடுபட்டால் போதுமென்றிருந்தது. சற்று தீவிரமாக முயன்றவனுக்கு பயமும் பதட்டமுமாய் உள்ளங்கால்கள் நசநசவென வியர்த்தது. பிடிமானத்தை விட்டுவிடுவோமே என்று நினைத்த நிமிடத்திலேயே பிடிமானத்தை விட்டிருந்தான். விழுகின்ற கணத்தில், அனிச்சையாய் அவன் கண்கள் அம்மா இருந்த திசைக்குத்திரும்பித் தேடி, அவளைக் கண்டடைவதற்குள் தொப்பென கீழே விழுந்தேவிட்டான்.

அந்தத் தெருவின் பங்குராசு தாத்தாதான், அலறலுடன் அவன் விழுந்ததை முதலில் பார்த்து, கெட்டவார்த்தை வசவுடன் ஓடிவந்தார். தூக்கி நிறுத்த முயன்றபோது, அவன் காலைத் தரையூன்றாமல் அழுவது கண்டு, தொட்டுத்தொட்டுப் பார்த்துவிட்டு, ‘நல்லவேளை சின்ன பெசகுதான், எலும்பு முறிவுலாம் இல்ல' என்றார். அதற்குள் ஐசக், வலியிலும் பதைப்பிலும் எழுப்பிய கூக்குரலில் கூட்டம் கூடிவிட்டது. கிளையில் அறையப்பட்டிருந்த துருவேறிய ஆணி அவனது காற்சட்டையோடு சிக்கிக்கொண்டு வந்திருந்ததும் காற்சட்டை கிழிபட்டிருந்ததும் சேர்த்தே சிசிலிக்குத் தகவல் போனது.

அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக்கொண்டு சிசிலி ஓடிவந்து சேர்ந்த நேரத்தில், ஐசக்கின் அப்பா சேசுப்பாண்டியனும், சிசிலியின் பெரியம்மாவான ரோசம்மாப்பாட்டியும் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினர்.

தாய் தகப்பனைப் பார்த்ததும் ஐசக்கின் அழுகை அதிகமானது. அவனது அழுகைக்குரலையும் மீறி, அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

“ய்யே...ய்... அங்க பாருங்கலேய்... குப்பம்மா மரத்துலருந்து பாலு வழியுது”

கூட்டம் மொத்தமும் ஐசக்கை விட்டுவிட்டு மரம்நோக்கி கவனத்தைத் திருப்பியது. ஆனாலும் மரத்திற்கு ரொம்பப் பக்கத்தில் போவதற்கு, கூட்டத்தில் யாரும் துணியவில்லை.

திடீரென அந்த வேப்பமரத்தைச் சுற்றி ஒரு இனிமைக்குள் கசப்பு பொதிந்த நறுமணம் பரவியது. போதைக்கு ஏக்கமுறவைக்கிற நாவறட்சியைத் தூண்டிவிடச்சொல்லி, மூளைக்கு கட்டளையிடுகிற மொத்த வலிமையும் கொண்ட நறுமணம் அது.

“அது பால் இல்ல, கள்ளு... வேப்பங்கள்ளு” என்றாள் ரோசம்மா.

ஐசக்கின் அரைக்காற்சட்டையோடு ஆணி பிடுங்கிக்கொண்டு வந்த  அந்தக்கிளையின் ஒற்றைப்புள்ளியிலிருந்து புறப்பட்டிருந்த கள், பால்கொதித்துக் குமிழியிட்டுப் பொங்கிவழிவதுபோல்,  கிளையிலிருந்து அடிமரத்தை எட்டி, நிலத்திலும் வழியத்தொடங்கி இருந்தது.

கோபமாய் சிலரும், பரிதாபமாய் சிலரும், கேலியாய் சிலரும், அக்கறையாய் சிலருமென ஐசக்கைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கைகாட்டி பேசாதோரே இல்லை அக்கூட்டத்தில்.

“குப்பம்மாக்கிட்ட மன்னிப்பு கேளு ஐசக்கு! இனி இப்டி செய்யமாட்டேன்னு...” என்றபடி இவர்களை நோக்கிவந்த தோமாஸ் சிய்யானை ரோசம்மா முறைத்தாள்.

“சின்னப்பைய மரத்துமேல ஏறி வெளாடுறதுலாம் ஒரு தப்பாங்குறே தோமாஸு? சின்னப்புள்ளையள்ல நீ ஆடாத ஆட்டமா? மரம்மரமா ஏறி காக்கா முட்டையெடுத்து மத்தியான ஒறக்கத்துல இருக்கவக வீட்டு வாசப்படியில ஒடச்சு வச்சுட்டு, கதவத்தட்டிட்டு ஓடுவியே... அந்தக்கதையெல்லாம் மறந்துட்டோ?” என்றாள். தோமாஸ் சிய்யான் முகத்தில் ஒரு கணம் குழந்தைமை படர்ந்து மறைந்தது.

“நீ அந்தக்காலத்துலயே நாத்திகம் பேசுறவ... உங்கிட்ட யாரால பேச முடியும் ரோசக்கா?” என்றார் அடங்கிய குரலில்.

“இது நல்ல மருந்துடே... வேற ஊர்க்காரனுவளா இருந்தா இத எடுத்துக் குடிக்கிறதோட மட்டுமில்லாம, மரத்தையும் சூடங்காட்டிக் கும்பிட ஆரம்பிருச்சிருப்பானுக... இங்க என்னன்னா குப்பம்மா சுப்பம்மான்னு ஒதுங்கிக் கெடக்குறீங்க” என்ற ரோசம்மா “தெளிவாக்கேட்டுக்கங்க, உங்க முட்டாள்  தனத்துக்கெல்லாம் ‘ஊம்’ கொட்டி, மன்னிப்புக்கேட்டுட்டுக் கெடக்கமுடியாது. இந்த மரம் நான் சின்ன புள்ளையா இருக்கும்போதே அத்தாம்பெரிய மரம்... குப்பம்மா கதய இந்த மரத்துக்கமேல எங்க தாத்தன் காலத்துலயே கட்டியிருக்காக... அந்தக் கதைக்கும் வேப்பங்கள்ளுக்கும் என்னடே சம்மந்தம்? மரத்துல கள்ளு வடியிறதுலாம் ஊரு உலகத்துல நடக்குறதுதான், அது சும்மா மரத்துக்கு எங்கயோ காயம் பட்டிருக்கும்... அவ்ளதான். அதுனாலெல்லாம் உங்க கொலங்கோத்திரம் ஒன்னும் அழிஞ்சிறாது, மிஞ்சிப்போனா அந்தக்கெளையோ அல்லது அந்த மரமோகூட பட்டுப்போலாம் அல்லது ஒன்னும் ஆவாம மறுபடி அதும்பாட்டுக்கு அது தளதளன்னு நிக்கலாம்” என்றாள்.

தன்னால் குப்பம்மா மரம் பட்டுப்போக-விருக்கிறதா என்ற குற்றவுணர்வுடன் ஐசக் நிமிர்ந்து தானேறிய கிளையைப் பார்த்தான்.

 அதற்குள் ஆயிரமாயிரம் ஈக்கள் வேப்பங்கள் வாசனையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்திருந்தன, கள்ளை மொய்ப்பதும் பறப்பதுமாக அவை தங்கள் சிறகுகள் தந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டாடிக்கொண்டிருந்தன.

கள் வழிந்த தடத்தின் விரிவும் குறுக்கமும், புடைப்புகளும், அடிமரத்தின் சாய்வும் சேர்ந்து ஒரு பெண்ணின் அங்கவளைவுகளை அந்த மரத்திற்கு வழங்கியிருந்தது. வற்றிய வயிறுடன் பெண்ணொருத்தி, தலைமேல் கரங்கள் தூக்கி, தலைமட்டும் நிலம் நோக்கியபடி அரைமண்டியிட்டு அமர்ந்திருந்ததைப் போன்ற அந்தத் தோற்றம், பார்ப்பதற்கே ஒரு மிரட்சியைக் கொடுத்தது.

ஊர்க்காரர்களில் எவர் திரும்பி முறைத்தாலும் ஐசக்கின் தலையில் குட்டு அல்லது முதுகில் அடி அல்லது ஒரு காதுத்திருகல் என ஏதாவது ஒன்றை நிகழ்த்தத் தொடங்கியிருந்தாள் சிசிலி. முறைப்புகளின் வீரியத்தைப் பொறுத்து அந்த அடிகளின் வகைமையும் வலிமையும் இருந்தது. அவ்வளவு அடிகளை வாங்கியிருந்தாலும், ஐசக்கின் இரு கைகளும் அவனது அடிவாங்குகிற இடத்தைநோக்கி நகராமல், அவனது புட்டத்துப் பக்க காற்சட்டைக் கிழிவை இறுக்கி மறைத்துக்கொண்டிருந்தன.

  பொறுக்கமுடியாத ரோசம்மா குனிந்து ஐசக்கிடம், “கிறுக்குப்பயலே! உன் நொப்பன்கிட்ட ஒனக்குப்போயி ஐசக்குனு பேர் வைக்கச் சொன்னேன் பாரு... உன் நொம்மா அடிச்சா நின்னு அடி வாங்கிட்டே இருப்பியாக்கும்... மயங்கிவுழுறமாதிரி உழுந்துத்தொலயேம்ல... ப்ளாச்சுனு வீட்டுக்குத் தூக்கிட்டு போய்டுறோம்” என்றாள். ஐசக்கிற்கு அழுகையைப் பொத்துக்கொண்டு சிரிப்புவந்தது. அடுத்த அடிகொடுக்க அம்மா கையோங்கும்போதே மயங்கிக்கீழே சரிவதுபோல் சரியாய் நடித்துவிட்டான்.

ஐசக் கண்விழித்து, ரோசம்மா கவலையாக தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டபோதுதான் தான் நிஜமாகவே மயங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தான். பொழுது நன்கு சாய்ந்து இரவாகியிருந்தது.

“ரொம்ப அடிச்சுட்டனா மக்களே! அம்மாவ மன்னிச்சுக்கய்யா...” என்றாள் சிசிலி கண்கள் பளபளக்க.

ஐசக் பதில் சொல்லும்முன் ரோசம்மா முந்திக்கொண்டு “இவன் தட்டுமறிக்கியதே சரியில்லனு அன்னிக்கே சொன்னம்லா... அப்பதயே அவன் வாய்ல கொச்சிக்காய வச்சு தேய்ச்சு கண்டிச்சிருந்தா வால சுருட்டிட்டுக் கெடந்திருப்பாம்ல்லா...?” என்றாள். தாயும் மகனும் ஒரேசமயத்தில் முறைத்தனர் அவளை.

 சிசிலி எடுத்துவந்த வேறொரு காற்சட்டையை சேசுப்பாண்டியன் ஐசக்கிற்கு அணிவிப்பதற்காக, “மக்கா! அப்பாவப் புடிச்சி சமாளிச்சு எந்தி! கால ஊனாத... நாலுநாள் ரோசம்மா உருவிவிட்டா பிசகு சரியாவிரும்” என்றான். ஐசக்கும் ஒத்துழைத்தான். பின்பக்கம் காற்றோட்டமாய் இருப்பதையுணர்ந்து புட்டத்தைத் தடவிப்பார்த்து, “யப்போ! இந்த கல்சமும் கிழிஞ்சிருக்கு” என்றான்.

“ஏ ச்சிசேலி! ஒழுங்கா பாத்து எடுத்தார மாட்டியா? போ! வேற கல்சம் எடுத்துட்டு வா!” என்றான் சேசுப்பாண்டியன்.

சிசிலி இன்னொரு அரைக்காற்சட்டையை உருட்டிப் புரட்டிச் சரிபார்த்துக் கொண்டுவர, ஐசக்கின் இடுப்பிலேறும் முன்னமே அதுவும் புட்டத்தில் கிழிந்தது. “குப்பம்மா வேலையக் காட்டுதாளா?” என்றாள் சிசிலி கண்ணீருடன்.

  “ம்க்கும், இவனுக்கு அருவாமனைக்குண்டி” என்று பொக்கைவாய் விரிய சிரித்து சூழ்நிலையை சமாதானமாக்க முயன்ற ரோசம்மா “அவன்பாட்டுக்கு காத்தோட்டமா கெடக்கட்டும் வுடுங்களா! ச்சிசேலி! புள்ள பசியோட இருப்பான்ல்ல, மொதல்ல சோத்த ஊட்டு! அப்றம் எண்ணெய காய்ச்சி எடுத்துவா! சுளுக்கு நீவிட்டு ஊட்டுக்குப்போறேன், கொள்ள சோலி கெடக்கு” என்றாள் ஐசக்கின் தலையை வருடியபடியே.

சிசிலி கிண்ணத்தில் காய்ச்சி எடுத்துவந்த எண்ணெய்யை, ஐசக்கின் காலில் இட்டு ரோசம்மா நீவ நீவ, சேசுப்பாண்டியனின் மடியில் தலை வைத்திருந்த ஐசக் அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.

ரோசம்மாவோ ஒரு கையால் நீவினாலும் மறுகையால்  எண்ணெய்க்கிண்ணத்தை உருட்டி உருட்டி தன் வயதேறிய கண்களை இடுக்கி பார்வையைக் கூர்செய்து பார்த்தாள்.

“ரொம்ப பாக்காதிய பெருத்தா! உங்கவூட்டுக் கிண்ணிதான் அது. நேத்து மைனி கொழம்பு தந்தாக” என்றாள் சிசிலி.

  “அத ஏம்ளா அடுப்புல வச்ச? அண்டா குண்டாவுலருந்து லோட்டா வரைக்கும் எல்லா ஏனத்தையும் அடுப்புல ஏத்திருத” என்றாள் ரோசம்மா.

  சிசிலிக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது.

“நானே புள்ளயப்பார்த்து அழுதுட்டுக் கெடக்குதேன், இவ்வளவு ஆதாளியிலயும் ஒம்மளுக்கு ஏனம்தான் முக்கியமா பெருத்தா!”

“ஆமா போ... சீமேல இல்லாத புள்ளைய பெத்துட்டா...! ஏளா ச்சிசேலி... இந்தக் கிண்ணியில என்ன வருசம் எழுதிருக்கு பாரு?” என்றாள் ரோசம்மா. பார்த்த சிசிலி பதில் சொல்லும் முன்னமே ரோசம்மா “நம்ம சுதந்திரம் வாங்குன வருசம், அந்த வருசம் என் கல்யாணத்துக்கு பரிசா என் பெரிய சிய்யான்வூட்லருந்து வந்த ஏனத்துல ஒன்னுளா இது” என்றாள்.

“ப்ச்...” என்றாள் சிசிலி.

“என்னளா சலிச்சுக்குற? என் கல்யாணம் ஆவுனப்பவே எங்க பெரிய சிய்யானுக்கு  எம்பது வயசு இருக்கும். அவரு சின்ன பையனா இருக்கப்ப நடந்த சம்பவந்தான் அந்த குப்பம்மா கதைன்னுவாரு” என்றாள் ரோசம்மா.

 “அப்ப அது நெசமாவே நடந்த கதையா பெருத்தா?” சிசிலி வாய்விட்டுக்கேட்ட அதே கேள்வியை, மூடிய கண்ணிமைகளுக்குள் உறக்கமற்று உலவிக்கொண்டிருந்த ஐசக்கின் மருண்ட உணர்வுகளும் கேட்டன.

“ஆமாட்டி! இப்ப அந்த மரத்துக்கிட்ட பெருசா ஒரு தெடலு இருக்கு பாரு... இந்தப் பயலுவ மட்டப்பந்தும், றெக்கப்பந்தும் விளையாடுதானுவல்ல அந்த எடத்துலதான் அந்த பெரிய பங்களா இருந்திருக்கு. அறுங்கோண வடிவத்து மதில்சுவருக்குள்ள, அதே வடிவத்துல, வெள்ளவெளேருனு பிரமாண்டமா இருக்குமாம் அந்த பங்களா. அத சுத்திலயும் செக்கச்சிவீருனு... வட்ட வட்டமா... அஞ்சடுக்குல... அகலஅகலமான... படிக்கட்டு இருக்குமாம்... வாசலுக்கு முன்னுக்க மட்டும் படிக்கட்டுக்குக் குறுக்கால ஆனைத்தந்தம் மாதிரி வளைஞ்ச கைப்பிடிச்சுவரு இருக்குமாம். அந்த பங்களாவயும் படியையும் பார்த்தா அதுல வசிச்ச வெள்ளைக்காரன் தாமஸ் மூரோட பொஞ்சாதி டோரத்தி போட்டுக்கிற கவுன் மாதிரியே அடுக்கடுக்கா இருக்கும்னுவாரு எங்க சிய்யான்”

“வீட்டச்சுத்தி வட்டப்படிக்கட்டு என்னத்துக்கு? வாசலுக்கு முன்னுக்க படி இருந்தா போதாதா?” என்றாள் சிசிலி

“அது பங்க்காக்காரனுக்கு...”

“அப்டின்னா?”

“பங்க்கா அப்டின்றது மூங்கிலு அல்லது ஏதாச்சும் ஒரு மரச்சட்டத்துல தெரைச்சீலை மாதிரி மடிப்பு மடிப்பா கிட்டத்தட்ட மூணடி ஒசரத்துக்கு கெட்டித்துணி தொங்கப்போட்ட ஒரு அமைப்பு. இப்போ வீடுங்கள்ல சீலிங்ஃபேன் மாட்டுதம்லா... அது மாதிரி, அப்போ காலகட்டத்துல வசதியான வீடுங்கள்ல இந்த பங்க்கா மாட்டி வச்சிருப்பாங்களாம்.

அந்த பங்களாவோட ஒவ்வொரு அறைலயும் சன்னலுக்கு நேர்மேலே, உச்சாணி சுவத்துல இன்னொரு சின்ன சன்னல்திறப்பும் இருக்குமாம். அதுலயிருந்து ஒவ்வொரு கயிறும் தொங்குமாம். அந்த வட்டப்படியில எப்பவும் காத்துக்கிட்டு இருக்க  பங்க்காக்காரன், மணிச்சத்த கட்டளை எந்த அறைலருந்து வருதோ அதோட சன்னல் கயிறப் பிடிச்சு மேலயும் கீழயுமா இழுப்பான். கயிறோட மறுமுனை அறை உச்சியிலவுள்ள பங்க்கா சட்டத்துக்கூட கட்டியிருக்கும்ங்கதால, இவங்க அசைக்க அசைக்க உள்ள சும்மா ஜம்முனு காத்து வீசுமுல்லா...”

“ஈஸியான வேலைதான் போலுக்கே பெருத்தா! ஒக்கார்ந்த எடத்துலயே ஒக்காந்துக்கலாம்” என்றாள் சிசிலி.

“அது எப்டி? ராத்திரியில எம்புட்டுநேரம் அடுத்தவன தூங்கவிட்டுட்டு தூங்காம கொள்ளாம பங்க்கா இழுக்கமுடியும்? பகல்ல வெயிலு ஏற ஏற கல் தரையில உட்கார்ந்தோ நின்னோ பாரு தெரியும்! வெறுந்தரையிலகூட வேணாம், ஒரு வாங்கு போட்டு கொடபுடிச்சுட்டும்கூட ரெண்டு மணிநேரம் வெறும் கைய மட்டும் ஆட்டிக்கிட்டு அப்டி உட்கார்ந்து பாரு... தெரியும்...”

“கஷ்டந்தான்...”

“மழ தூத்துனாலும் அதான் கதி, வெள்ளக்காரனுக்கு வெக்கையில எப்டி இருக்க முடியாதோ அப்டிதான் மழகாலத்துல நம்ம நாட்டோட ஈக்கடி கொசுக்கடியிலயும் இருக்கமுடியாது. அதனால  எல்லா சீதோஷ்ணத்துலயும் பங்க்கா போட்டுட்டுதான் இருந்திருக்காங்க”

“அப்ப பங்க்காகாரங்க எப்போ சாப்டுறது? தூங்குறது...?”

“அதுக்குத்தான் ரெண்டு பங்க்காகாரங்க இருந்திருக்காங்க... மாத்தி மாத்தி வேலையப் பாத்துக்கிட்டாங்க... அதுல ஒருத்தன் உள்ளூர்க்காரன்... அவனுக்குப் பொறவியிலேயே காது கேக்காது, வாய்பேச வராதுனு ஊருக்கே தெரியும். இன்னொருத்தன் ரங்கன். அவனும் செவிட்டு ஊமைனு பொய் சொல்லிதான் வேலைக்குச் சேர்ந்திருக்கான். அவன் அசலூர்க்காரன்... பஞ்சம் பொழைக்க பொஞ்சாதி குப்பம்மாவோட வந்தவன்...”

“அதான் இந்த வேப்பமரத்துக் குப்பம்மாவா?”

“ம்... குப்பம்மா மாநெறமும் கடைஞ்செடுத்தாப்ல ஒடம்புவாகுமா இருப்பாளாம்... ரெண்டுபேத்துக்கும் புள்ளக்குட்டி இல்லன்னாலும், அம்புட்டு சந்தோசமா இருந்திருக்காங்க. பங்களா முன்னாடி இருந்த குடிசைங்கல்ல ஒன்னுதான் அவங்க தங்குற குடிச... ரங்கனுக்குக் குப்பம்மா மேல கொள்ள பிரியம்...  வெள்ளக்காரனுக்கு இழுக்குற கயிற ஒனக்கு இழுக்க மாட்டனான்னுட்டு, குடிச முன்னாட்டியிருந்த வேப்பமரத்துல கண்டாங்கிச்சேலையில குழுவந்தொட்டிலு கட்டி பொஞ்சாதிய வச்சு தூரி ஆட்டுவானாம்...”

தன்னை அர்த்தமாய்ப்பார்த்த சிசிலியிடம் சேசுப்பாண்டி, “அவ தொட்டில் தாங்குற அளவு ஒல்லியா இருந்திருக்கா...” என்றதும் சிசிலி முறைத்தாள்.

அந்த ஊடலில் தலையிட முடியாத அளவு ரோசம்மா குப்பம்மாவின் கதைக்குள் மூழ்கியிருந்தாள், “அப்போ நம்ம நாட்டுல ரொம்பத்தீவிரமான சுதந்திரப்போராட்ட காலம். அதனால வெள்ளையனுக்கு வேலையாளுங்கள தேர்ந்தெடுக்குறது ரொம்ப சவாலான விசயமா இருந்துச்சு. புரட்சிக்காரங்களவிட உளவாளிங்க மேலதான் ஜாக்கிரதையா இருக்கவேண்டியிருந்துச்சு அவங்களுக்கு. பங்க்காக்காரனா இருக்கவன் எப்பவும் சன்னல் பக்கத்துலயே இருக்கறவன்றதால, அறைக்குள்ள நடக்கிற முக்கிய கூட்ட விவாதம், முடிவு எல்லாமே அவனை எட்டுறதுக்கான வாய்ப்பு ஜாஸ்தி. அதனால, காதுகேக்காத, வாய்பேசாத, படிப்பறிவே சுத்தமா இல்லாத ஆளுகளா இருக்கமாதிரிப் பாத்துதான் பங்க்காக்காரனுங்களா வச்சுக்கிட்டாங்க வெள்ளக்காரங்க. ஆறு காவலாளிங்க எப்பவும்  மதில்சுவரோட ஆறு பக்க வாசக்கதவுக்கும்  காவல் இருப்பாங்க. அவங்கதான் பங்க்காக்காரனுக்கு கட்டளை மணிச்சத்தத்த சொல்லுவாங்க...

 பத்து வருசமா புள்ளைக்காக ஏங்குன குப்பம்மா, அன்னிக்கு வயித்துல புள்ள தணிச்சிருக்குனு சந்தோசமா சொல்ல வந்த நேரத்துல ரங்கன் சோர்ந்துபோயி கெடக்குறதப் பார்த்து ‘ஏன்யா இப்டியிருக்க'ன்னுக் கேட்டிருக்கா... அதுக்கு ரங்கன்

 ‘என் மேல பங்களாவுல சந்தேகம் வந்துருச்சு புள்ள... நான் உளவாளியா இருப்பனோனு நெனைக்காங்க போல இருக்கு'ன்னிருக்கான். குப்பம்மா பதறிப்போய் என்னாச்சு ஏதாச்சுனு கேக்க...

‘போன வாரம் ராத்திரியில தாமஸ் மூர் தொரைக்கும் அன்னிக்கு பங்களாவுக்கு வந்த இன்னோரு தொரைக்கும் பங்களாவுக்குள்ள சத்தமா என்னவோ இங்கிலிசு சண்டை நடந்துச்சுனு சொன்னேனுல்ல... தொரசானியம்மா சத்தம்கூட பலமாத்தான் இருந்துச்சு  அந்தன்னிக்கு... அப்ப அவங்க பேசுன ஏதோ முக்கியமான விசயம் வெளிய போய்ருச்சாம். அந்தன்னிக்கு நான்தான் பங்கா போட்டேன். அதான் என்னய சந்தேகப்படுறாங்கனு காவக்கார இன்னாசிமுத்து சொன்னான் புள்ள... எதாச்சும் பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்கு...'ன்னு புலம்பிருக்கான் ரங்கன்.

  அவன ஒருவழியா சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பிவச்ச குப்பம்பாவுக்கு, ராவு ரெண்டாஞ்சாமத்துல குடலப்பொரட்டிக்கிட்டு ஒரே வாந்தி. எப்படா விடியும்... ரங்கன் எப்படா வருவான், விசயத்தச்சொல்லலாம்னு காத்துக்கிட்டு இருந்திருக்கா. வீட்டுக்குள்ள இருக்கஇருக்க வாந்தி ஓங்கரிச்சுக்கிட்டே இருந்திருக்கு, அதனால குடிசைக்கும் வேப்பமரத்து கண்டாங்கித் தூளிக்குமா அலபாய்ஞ்சுட்டு இருந்திருக்கா. அப்ப பாத்து வெள்ளக்காரத்தொரையும் அவனோட பிரச்சனையில தூக்கமில்லாம அல்லாடிட்டு இருந்தவன் எதேச்சையா  முன்ஜன்னல் வழியா எட்டிப்பார்க்க, அங்க நடமாடுற குப்பம்மா கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கா... பின்னாடி அறை ஜன்னல்லருந்து பார்த்தா தூங்கி வழிஞ்சிட்டே பங்க்கா போடுற ரங்கனும் தெரிஞ்சிருக்கான். ரங்கனுக்கு காது கேக்குமோன்னு வந்த சந்தேகத்த அப்பவே நிவர்த்தி பண்ண குரூரமா ஒரு வழி யோசிச்சான். முன்காவலாளிகள கையத்தட்டிக் கூப்ட்டு குப்பம்மாவ வாயப்பொத்தி கையக்காலக்கட்டித் தூக்கிட்டு வர வச்சான். அறைக்குள்ள வந்து கட்ட அவுக்கவும், குப்பம்மா அலறுன அலறல் ரங்கனுக்குக் கேட்டுச்சு. இப்போ அசஞ்சு கொடுத்தாக்கூட காது கேக்கும்னு தெரிஞ்சு சுட்டுத்தள்ளிருவாம்னு தெரியும், அதுனால காது கேக்காத மாதிரியே பங்க்கா போட்டுட்டு இருந்தான். ‘ரங்கையா...' ‘ரங்கையா...'னு குப்பம்மா அலற ஒரு கட்டத்துல ரங்கனால தாளமாட்டாம எழுந்து ‘ஐயா... வுட்ருங்கய்யா'னு அலறியிருக்கான், கத்தவும் சரியா அவன் பின்னங்கழுத்துக்கே குறிபாத்து காவக்கார இன்னாசிமுத்துகிட்டருந்து தோட்டா பாய்ஞ்சு வந்துச்சு. குப்பம்மாவோட அலறல்ல அந்த பிரதேசமே கண்விழிச்சாலும் கள்ளமௌனத்தில் ஆழ்ந்திருந்திச்சு.

  முழுக்க சீரழிஞ்சு, பலவந்தத்துல வயித்துல இருந்த சின்ன உசிரும் கருவழிஞ்சு... அலங்கோலமா வெளில வந்த வேகத்துல குப்பம்மா அந்த வேப்பமரத்துக் கண்டாங்கித் தூளியிலயே  தூக்குப்போட்டுக்கிட்டா...” பெருமூச்சுடன் கதையை முடித்திருந்த ரோசம்மா எழுந்து வீட்டுக்குச் சென்றபிறகும், சிசிலியும் சேசுப்பாண்டியனும் ஐசக்கை பாய்க்கு நகர்த்திப் படுக்கவைத்து ஆளுக்கொரு பக்கமாய் உறங்கிப்போய் நள்ளிரவாகிவிட்ட பிறகும், மூடிய கண்ணிமைகளுக்குள் உறங்காத ஐசக் மரக்கிளையிலிருந்து மீண்டும் மீண்டும் தொப்பென உணர்வால் விழுந்து வியர்த்துக்கொண்டிருந்தான்.

 எழுந்து காலை ஊன்றிப்பார்த்தவனுக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது.  வாசலை அடைந்தவன் ஏதோவொரு உள்ளுணர்வு உந்த விறுவிறுவென விந்திவிந்தி நடந்து குப்பம்மா மரத்தை அடைந்துவிட்டான்.

ஈக்கள் பறப்பது ஓய்ந்து, இரவுப்பூச்சிகளின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்த மரத்தில் பால் வழிவது மட்டும் ஓயவேயில்லை. அவ்வளவு இரவிலும் சுறுசுறுப்பாய் வகைவகையான எறும்புகள் மேலுங்கீழுமாய் ஓடிக்கொண்டிருந்தன.  மரத்தின்மீது சாய்ந்து பால் வாசத்தை உடல் முழுக்க பிசுபிசுப்பாய்ப் பரப்பினான். அடிமரத்தின் சாய்ந்த பகுதியின்மீது உடல் சாய்த்துப் படுத்துக்கொண்டு, மேல்நோக்கி மரத்தைப் பார்த்தான்.

“அம்ம்மோவ்...” என்றான் கிசுகிசுப்பாய்.

மரம் மென்காற்றில் ஒவ்வொரு கொப்பு கொப்பாய் சிலிர்த்தது. பூவுதிர்வு, அந்த மரத்தை நின்றுநிதானமாய்ப் பெய்கிற ஒரு கனத்த கார்மேகமோ என்று எண்ணச்செய்தது. வேப்பம்பாலின் நறுமணம் அவனது உள்ளும் புறமும் பேதமற்று வியாபித்தது. சாய்ந்த அடிமரத்தின் மறுபக்க உள்வாங்கிய பகுதிக்குச்சென்று, மரப்பட்டையின்மேல் உதடுகள் அழுத்திச்சுவைத்தான். மறுபடியும் “அம்ம்மோவ்...” என்று சற்று உரக்க அழைத்தவன், அங்கேயே உடலைக்குறுக்கிப் படுத்துக்கொண்டான். எவ்வளவுநேரம், எவ்வளவு எறும்பு தன்னுடல்மேல் ஊர அப்படியே கிடந்தானோ தெரியவில்லை. மின் கைவிளக்கின் ஒளிவட்டம் அவன்மேல் வீழ்ந்து, செவ்வெளிச்சமாய் இமைகளுக்குள் பரவியதும் சிரமப்பட்டுக் கண்விழித்தவன் அங்கு நின்றிருந்த அப்பா சேசுப்பாண்டியனைப் பார்த்தான். அவனும் எதுவும் கேட்கவில்லை, இவனும் எதுவும் சொல்லவில்லை, எழுந்து தகப்பனுடன் வீட்டுக்குச் சென்றான்.

மறுநாள், மரத்தில் வேப்பங்கள் வழிவது நின்றுபோயிருந்தது. ரோசாம்மா சொன்னதுபோலவே அந்தக்கிளை பட்டுப்போவதற்கு அறிகுறியாய் இலைகளெல்லாம் சோர்ந்துபோய் உதிரத்தொடங்கியிருந்தது. அன்று ஐசக் எடுத்து அணிந்துகொண்ட காற்சட்டையின் பின்புறம் தடவிப்பார்த்தான், கிழிசலே இல்லை.

ரம்யா அருண் ராயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக கோவையில் பணிபுரிகிறார்.  இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பான “கழி ஓதம்” 2024ம் ஆண்டு வெளியானது. கடந்த வருட ‘அந்திமழை’ பரிசுப்போட்டியிலும், ‘கானல் அமீரகம்’ பரிசுப்போட்டியிலும் பரிசுகளை வென்றுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram