செம்மண் புழுதி பறக்க வந்த ஒரு ஜீப் எங்கள் ஜீப்பை ஒட்டிச் சேர்ந்து கொண்டது. பனி முடி கொண்ட கிளிமஞ்சாரோ அடிவாரத்தில் இரண்டு முரட்டு வண்டிகள் புழுதிக் கோடிட்டு செல்லும் காட்சி திரையில் சிறப்பாக இருக்கும் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.
ஓட்டுனர் மைக் உற்சாகமான குரலில் “சொன்ன நேரத்துக்கு ஜார்ஜ் வந்து விட்டார்” என்று அறிவித்து, பக்கத்து ஜீப்பை வளைத்து ஓட்டி வந்த ஜார்ஜை நோக்கிக் கையசைத்தார். ஜார்ஜும், மைக்கைப் போலவே செம்பழுப்பு முடியுடன், வெயிலில் வாடிய ரோஸ் முகத்தில் அடர்ந்த தாடியோடு, அவரது ஒன்று விட்ட சகோதரர் போல இருந்தார்.
புது ஜீப்பின் பின்னால் அமர்ந்து இருந்த ஒரு மொட்டைத் தலைப்பையன் கழுத்தெங்கும் பாசி மணியுடன் குலுங்கிய படியே என்னை விரிந்த கண்களால் பார்த்தான். அவனது ஒரு வயதுத் தங்கை சுருள் தலைமுடியோடு இன்னும் பலமடங்கு பாசி மணி அணிந்திருந்த தாயிடம் பாலருந்திய படி தூங்கிக் கொண்டு இருந்தாள். குறைந்தது ஆறு ஏழு பெரியவர்கள் பின்னிருக்கைகளில் கோக் குடித்தபடி சுவாகிலியில் பேசிக் கொண்டு இருந்தனர்.
முன்னிருக்கையிலிருந்த அவர்கள் குடும்பத் தலைவன், என்னைப் பார்த்து நட்புடன், “ப்ரொட்யூசர் சாப். நமஸ்தே. எனக்குத் தெரிந்த ஹிந்தி அவ்வளவுதான்” என்று ஆங்கிலத்தில் கூவினான்.
“எனக்கும் அவ்வளவுதான் தெரியும்” என்று நான் சொன்னதும், “இவர் தென்னிந்தியர், ஸ்டீஃபன். ஹிந்தி பேச மாட்டாராம்” என்று ஓங்கிய குரலில் மைக் அறிவித்தான். புரிந்தும் புரியாமலும் ஸ்டீஃபன் தலையாட்டினான்.
மசாய் இனம் முழுவதையும் கிறிஸ்துவர்களாக மாற்ற மிஷனரிகளுக்கு எவ்வளவு காலம் ஆயிற்று என்று இரண்டு நாள் முன்பு நான் கேட்ட ஆர்வக் கோளாறான கேள்வியைக் ரசிக்காததால், ஆப்பிரிக்கப் பழங்குடிக்காரன் ஸ்டீஃபனாக இருப்பதன் தாத்பரியத்தைப் பற்றிக் கேள்வி கேட்காமல் புன்னகையுடன் இந்த அறிமுகத்தை முடித்துக் கொண்டேன்.
ஆறு பெரிய வரிக்குதிரைகள் நான்கைந்து குட்டிகளுடன் எந்தச் சஞ்சலமும் இல்லாமல் எங்கள் குறுக்காகப் போயின. ஃபோனில் படமெடுத்த படியே புன் சிரிப்புடன் மைக்கைப் பார்த்தேன். “நீங்கள் இது ஒரு ஸீப்ரா க்ராசிங் என்று ஜோக் அடிக்க நினைத்தால் தயவு செய்து வேண்டாம். வாரத்துக்குப் பத்து தடவையாவது இதே ஜோக்கைக் கேட்டுப் பொய்ச் சிரிப்பு சிரிக்கிறேன்” என்றான். “ஒப்புக் கொள்கிறேன். ரொம்ப சுமாரான ஜோக்தான். ஆனால் மனதில் தோன்றி விட்டது. வீடியோவுடன் சேர்த்து எங்கள் டீமுக்கு அனுப்புகிறேன். போனால் போகிறதென்று யாராவது ரசிப்பார்கள்” என்றேன்.
“இந்தச் சமவேளி, பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான சதுர மைல்களுக்கு விரிந்து பரந்திருந்த ஒரு பெரிய ஏரி. கிளிமஞ்சாரோ எரிமலை தொடர்ந்து ஒரு லட்சம் ஆண்டுகளுக்குக் கக்கிய லாவாவால் மூடப் பட்டு, இப்போது அம்போசெல்லி சரணாலயமாக இருக்கிறது.” என்றான் மைக்.
தூரத்திலிருந்த கரும் புள்ளிகளைக் காட்டி, “யானைகள். கிட்டத்தட்ட ஆயிரம் இருக்கும். உங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டான். விருட்டென்று காமெராவை எடுத்ததும் “பக்கத்தில் அழைத்துப் போகிறேன். நிறையப் படமெடுக்கலாம். உங்கள் படப்பிடிப்பில் டிரோன் காமெரா மட்டும் வேண்டாம். புது வகைப் பறவை என்று நினைத்து யானைகள் மிரண்டு விடும்” என்றான்.
“மைக்” என்று பக்கத்து ஜீப்பிலிருந்து சத்தமாக அழைத்த ஜார்ஜ் வலது புறம் சுட்டிக் காட்டினான். யானைகளுக்கு முன்னால், அரை மைல் தூரத்திலேயே அந்த நீல நிறக்கார் கண்ணில் பட்டது. “கேட்-டும் வந்து விட்டாள்” என்று சந்தோஷமாக அறிவித்த மைக் வண்டியை முடுக்கினான்.
———
கேட் வெயிலில் பழுத்த ஆப்பிள் போல இருந்தார். “ஆப்பிரிக்காவுக்கு நல்வரவு” என்று சிரித்த படி கை கொடுத்தார்.
“ஓ! யாருடா அது இங்க வந்தது...” என்ற கொஞ்சலுடன் மொட்டைத்தலைப் பையனை அணைத்துக் கொண்டு, “இளவரசிக்குப் பேச்சு வந்தாச்சா?” என்று ஆர்வமுடன் கைக்குழந்தையை ஏந்திக் கொண்டார். பாசிமணி சரசரக்கக் குழந்தையைக் கைமாற்றிய ஸ்டீஃபனின் மனைவி, பளபளப் பல் தெரிய பெரிய உதடால் சிரித்தாள்.
என்னிடம் சிநேகபாவமாக வந்த ஸ்டீஃபன் சுருட்டு வாசத்துடன் “உங்கள் காட்சிக்கு ஏற்ற இடம் இன்னும் மூன்று மைலில் இருந்தே கிடைக்கலாம்” என்றான்.
தண்ணீர்க் குடுவைகளும், தின் பண்டங்களும் ஒரு வண்டியிருந்து இன்னோரு வண்டிக்கு மாற்றப் பட்டவுடன், மீண்டும் கிளம்பத் தயாரானோம்.
“ஸ்டீஃபன் குடும்பத்தினர் நெருக்கியடித்துக் கொண்டு வர வேண்டாம். சிலர் நம் வண்டிக்கு வரட்டும். நான் கேட் வண்டிக்கு மாறிக் கொள்கிறேன்” என்றேன். சம்பிரதாயமாக ஆட்சேபித்த எல்லாரும், வாக்குவாதம் செய்யக் கூடாது என்ற மைக்கின் அதட்டலை மதித்து வண்டி மாறி அமர்ந்தனர்.
“கொஞ்சம் கச்சடாவாக இருக்கும். மன்னிக்கணும்” என்று சிரித்தபடியே சொன்ன கேட் நான் உட்காருவதற்கு அரைக்கணம் முன்னால் இருக்கையில் இருந்த தன் உள்ளாடையை எடுத்துப் பின்னால் எறிந்து, “சீட் பெல்ட் அணியாவிட்டால் பரவாயில்லை” என்றார்.
கேட்டின் கார் சுத்தம் செய்யப் பட்டு சில மாதங்கள் ஆகியிருக்கலாம். அடியில் சிதறிக்கிடந்த சிப்ஸ் துண்டங்கள் ஷூவை நரநரவென உரசின. அட்டைக் கோப்பையின் அடியில் பாதிக் குடித்திருந்த காபியின் மிச்சத்தில் சிகரட் சாம்பலும், ஃபில்டரும் மிதந்து கொண்டிருந்தது. பின்னிருக்கையில் துவைக்காத துணிகளுக்கும், சில மின்னணு உபகரணங்களுக்கும் நடுவில் தூக்க மருந்து சுடும் துப்பாக்கி நீட்டிக் கொண்டிருந்தது.
நான்காவது முயற்சியில் உருமியபடியே வண்டி கிளம்பியதும் பெருமூச்சு விட்ட கேட் “உங்கள் அப்பா அம்மா காலத்துடப்பாக் கார்கள் நினைவுக்கு வருகிறதா?” என்றார். “அப்பா அம்மா முதல் முதலில் காரில் ஏறும் போது 60 வயதாகியிருக்கும். என் பிள்ளைப் பிராயமெல்லாம் சைக்கிள்தான்.” என்றேன். “ஆண்டவனுக்கு நன்றி. அப்ப என்னைப் பற்றி மோசமாக நினைக்க மாட்டீர்கள்” என்றார்.
1000 அடி உயரத்தில் சிறிய விமானத்திலிருந்து பார்த்த போது பொட்டல் காடாகத் தெரிந்த நிலம், 15 நிமிட ஜீப் பயணத்தில் புதர்களும், மரங்களும், புல் வெளிகளும், குளங்களும் பரவிய காடாக விரியத் தொடங்கியது.
சில கழுதைப்புலிகளும், பபூன் குரங்குகளும் இறந்து கிடந்த வில்டர் பீஸ்டைப் போட்டிபோட்டுப் பிய்த்துத் தின்று கொண்டு இருந்தன.
“எத்தனை வருடமா இங்க இருக்கிறீர்கள், கேட்?”
“ம்ம்… இருபத்தி… மூணு… இருபத்தி நாலு வருஷம். ஆன் ஆர்பரில் சூழலியல் மேல் படிப்பு முடித்தவுடன் வந்தேன். ஒரு மாத விடுமுறைக்குப் பின் திரும்பும் திட்டம். இங்கு வந்து விலங்கு மருத்துவம் கூடக் கற்றுக் கொண்டு விட்டேன். இன்னும் போகவில்லை” என்று புகையிலைக் கறை தெரியாத பல் தெரியச் சிரித்தார். “ஆப்பிரிக்கா ஒரு போதை. ஒரு முறை நம்மைப் பிடித்து விட்டால் திரும்பத் திரும்ப இழுத்து விடும்”
“எல்லா மனிதர்களும் இங்கிருந்து வந்தவர்கள் தானே! அந்த நினைவு நம் டி.என்.ஏ வில் இருக்கலாம்”
செடி கொடிகள் அடர்ந்த புதர்ப் பகுதியைத்தாண்டும் போது இலைகளுக்கு மேலிருந்து ஒட்டகச் சிவிங்கி முகங்கள் எங்கள் காரை அசை போட்ட படி பார்த்தன.
கேட்டின் வண்டியில் இருந்த ஜிபிஎஸ் கிணுகிணுத்தது.
“ஓ… ஸ்டேசி இங்குதான் எங்கோ இருக்கிறாள்” என்று சிலாகித்த கேட், “ஸ்டேசி 5 வயதுப் பெண் சிங்கம்… 4 பிள்ளை பெற்றவள். அவள் கழுத்தில் இருப்பிடம் காட்டும் பெல்ட் கட்டியிருக்கிறோம். அவள் வசதிக்காக” என்றார்.
“கொஞ்ச நேரம் இருந்து கண்ணில் படுகிறதா என்று பார்க்கலாமா”
“வேண்டாமே… இது லஞ்ச் நேரம்”
“பரவாயில்லை. எனக்குப் பசியில்லை” என்றேன்.
“உங்களுக்கில்லை… ஸ்டேசிக்கு லஞ்ச் நேரம்” என்று சொல்லி சிரித்தார்.
“அப்ப வண்டிய அழுத்துங்க. பிளீஸ். ரொம்ப மெதுவாக ஊர்கிறது” என்றேன்.
புதர் தாண்டிய பின் மீண்டும் பொட்டல் வெளி. மீண்டும் கிளிமஞ்சாரோ. மீண்டும் யானைகள், கொஞ்சம் பெரிய புள்ளிகளாக.
கைக்கட்டும் தூரத்தில் ஒரு நெருப்புக் கோழிக்குடும்பம் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.
குட்டையில் முங்கியிருந்த நீர்யானையின் தலையில் வெயில் பளபளத்தது.
“சொர்க்க பூமி” என்றேன். “உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது கேட். இதுதான் உங்கள் தினசரி வாழ்க்கை என்றால் உங்களைப் போல அதிருஷ்டசாலி யாருமில்லை”
“நீங்கள் சினிமாப் படமெடுப்பவர். எத்தனை இடங்கள் பார்ப்பீர்கள். எத்தனை அனுபவங்கள் கிடைக்கும்”.
“இத்தனை அழகான இடத்திற்கு அடிக்கடி வரும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதே. அது யாருக்கும் கிடைக்காது.”
“அடிக்கடி வருவதென்ன! என் வீடு இங்குதான் இருக்கிறது. அதோ அந்தக் குன்றுக்குப் பின் தான்” என்றார்”
“ஆஹா! இன்னும் சிறப்பு. சொர்க்கத்திலேயே இருக்கிறீர்கள்”
“வீட்டுக்கு வருகிறீர்களா? நான்கு நாட்களுக்கு முன் தான் எலுமிச்சைப் பழ வோட்கா செய்தேன்”
“உங்களுக்கு சிரமமில்லை என்றால் வருகிறேன்” என்றேன்.
எந்த முன்னறிவிப்புமின்றி வண்டியை வீடு நோக்கித் திருப்பினார். “விலங்குகளுக்குப் பயம் வரும். அதனால் நாங்கள் யாரும் ஹாரன் அடிப்பதில்லை”
எங்கள் முன்னாலிருந்த ஜீப்புகளும் கொஞ்சத் தொலைவு சென்று, நின்று, எங்களைப் பார்த்துத் தானாகவே திரும்பி வந்தன.
———
கேட்டின் வீடு மரத்தாலும் மண்ணாலும் கட்டப் பட்டு இருந்தது. விதவிதமான மண் குடுவைகள் கண்ணாடிக் கூரை வழியாக வீசிய வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன. சாய்வு நாற்காலிகளின் மேலிருந்த தலையணைகள் நீலமும் சிவப்புமாக ஆப்பிரிக்க நிறங்களிலே இருந்தன.
சுவர்களில் பரவியிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் மரத்தின் மேல் படுத்திருக்கும் பெண் சிங்கம், சுழல் நதியில் தாவிப் போகும் நூற்றுக் கணக்கான விலங்குகள், ஏரிக்கரையில் நிறைந்து கிடக்கும் ரோஸ் நிறப் பறவைகள், ஒரு கையில் தொங்கிக் கொண்டிருக்கும் குரங்கு.
“பியூட்டிஃபுல். என்ன ஒரு அழகு” என்றேன்
“உங்களுக்கு சைமனின் படங்கள் பற்றித் தெரியாதா என்ன?” என்றபடியே ஒரு கண்ணாடிக் குடுவையில் எலுமிச்சம் பழ வாசனை தூக்கலாக ஒரு திரவத்தைத் தந்தார்.
“எந்த சைமன்?” என்றேன்
“என் கணவர் சைமன் கோம்ப்ஸ். அவரது படங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. கலைஞரான உங்களுக்குத் தெரிந்திருக்குமே”
நான் கலைஞனா, கணக்குப் பிள்ளையா என்ற குழப்பத்தை அவரிடம் சொல்லாமல், “அவரைப் பற்றித் தெரியாதது என் இழப்புதான்” என்று ஒப்புக் கொண்டேன்.
ஜீப்புகளில் இருந்து இறங்கியவர்கள் உள்ளே வராமல் தோட்டத்தில் இருந்த மேசையைச் சுற்றியமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
சமையலறை தட்டிக் கயிற்றை இழுத்து உயர்த்திய கேட், கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்த புல்வெளி சரிவாக உயரும் ஒரு இடத்தை காட்டி…
“அதுதான் சைமனும் நானும் தினமும் மாலை வேளையில் தேநீர் குடிக்கும் இடம்” என்றார்.
“சொன்னேனே. சொர்க்கத்தில் இருப்பவர் நீங்கள். வாழ்த்துகள்”
சமையலறை சுவரில் இருந்த பிரம்மாண்டமான படத்தில் குளிக்கப் போகும் யானைக்குடும்பம் மின்னியது.
“அடடா! என்ன அழகு!!” என்றேன்
வலது பக்க ஓரக் குட்டியானையின் துதிக்கை இன்னமும் பென்சில் தீற்றலாக இருந்தது.
“படத்தில் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு போலருக்கு” என்றேன்.
“போன வருடம் டிசம்பர் மாதம் சைமன் இந்தப் படத்தை வரைந்து கொண்டிருந்தார். சூரிய அஸ்தமனம் பார்க்க வாருங்கள் என்று எங்கள் மேட்டுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஃபிளாஸ்க்கிலிருந்து தேனீர் ஊற்றும் நேரம் ஒரு காட்டெருமை வந்து சைமனின் வயிற்றில் குத்தித் தூக்கி எறிந்து விட்டது”
“ஓ நோ”
“அவர் தரையில் விழுந்த உடனே எருது ஒதுங்கி விட்டது. ஒரே குத்துதான்; ஆனால் நெஞ்சுக்குக் கீழே. குடம் குடமாக ரத்தம் போக ஆரம்பித்து விட்டது. எனக்கு முழங்காலில் பிரச்சினை. வேகமாக ஓட முடியாது. என்னால் முடிந்த வேகத்தில் வீட்டுக்கு வந்து ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்து விட்டுத் திரும்ப ஓடினேன்.”
“நான் மிகவும் வருந்துகிறேன்”
“பரவாயில்லை. சைமனுக்குச் சொல்ல முடியாத வலி. ஆனால் நினைவிருந்தது. என் மடியில் தலையை எடுத்து வைத்துக் கொண்டு அவருக்கு தைரியம் கொடுத்தேன். நைரோபியில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வந்து சேரும்போது இங்கு கும்மிருட்டு. மூன்று பேராகக் கஷ்டப்பட்டு அவர் உடலை ஏற்றிப் போனார்கள்.”
நான் கேட்டை நோக்கி அடி எடுத்து வைத்தேன். மெதுவாக என்னை நெருங்கி என் தோளில் சாய்ந்து கொண்டார்.
“அவருக்கு நினைவிருக்கும் வரை விடாது பேசிக்கொண்டோம். என்னோடு வாழ்ந்தது அவருக்கு எத்தனை பெரிய அதிர்ஷ்டம் என்றார். அவரது மிகப் பெரிய ரசிகை நான். கோம்ப்ஸ் என்ற தலை சிறந்த ஓவியருக்கு நிகரானவர் சைமன் என்ற மனிதர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு குழந்தை. அந்த இரண்டு மணி நேரமும் அவருக்குப் பேச்சு இருந்த வரை அந்த எருதைப் பற்றிக் கோபமாக ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. நானும் அதைப் பற்றிப் பேசவில்லை. எங்களுக்கு எங்கள் காதலைப் பற்றிப் பேசத்தான் நேரமிருந்தது.”
“மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது கேட்”
“அவர் பிரிட்டிஷ் காரர். நான் அமெரிக்காக் காரி. இப்போது ஒரு இந்தியரிடம் இதை ஏன் சொல்கிறேனென்று தெரியவில்லை” என்றார்
உள்ளே வந்த மைக் “போகலாமா?” என்றான்.
அன்பாக என் முதுகைத் தட்டிக் கொடுத்து விலகினார் கேட்.
———
இரண்டு ஜீப்புகளுக்கும் வழிகாட்டியபடி கேட்டின் கார் முன்னோக்கிப் போனது.
பாதி மண்ணில் புதைந்திருந்த ஒரு யானையின் ராட்சத எலும்புக் கூட்டின் மீது பறவைகள் அமர்ந்திருந்தன. சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டே, எலும்புக் கூட்டின் மீது ஜீப்பை ஏற்றாமல் ஒதுக்கி ஓட்டிய கேட் “ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போது, இந்தச் சமவெளியில் பூக்கள் பூக்கும். ஆறடிக்கு மேல் புல் வளரும். தான்சானியாவிலிருந்து பறவைகள் ஆயிரக் கணக்கில் வரும். வில்டர் பீஸ்ட், வரிக்குதிரைக் குட்டிகள் ஏராளமாகப் பிறக்கும். புல்வெளியெங்கும் துள்ளி விளையாடும்”.
சிகரெட் சாம்பலை அட்டைக் குவளையில் தட்டி, “ஸ்” சத்தம் வராமல் நீளமாகப் புகைவிட்ட படியே கேட் தொடர்ந்தார்.
“மூன்று மாதத்திற்கு மழை விடாது. அதில் புல்வெளி வெள்ளக் காடாகும். அந்த வெள்ளத்தில் யானைகளும் வரிக்குதிரைகளும் மாட்டிக் கொள்ளும். கோடையில் மெதுவாகத் தண்ணீர் வற்றி, நிலம் வறண்டு போகும்போது, வெள்ளத்தில் மாட்டிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் ஒவ்வொன்றாக மேலே வரும். பின் இரண்டு மாதத்துக்கு வறட்சி. திடீரெனக் கோடை முடிந்து மழை பெய்ய ஆரம்பிக்கும். திரும்பவும் பூக்கள். காடெங்கும் பிள்ளைப் பிறப்பு. சிறு குட்டிகளின் துள்ளல். மறுபடி மழை… வெள்ளம்… நாம் எல்லாருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்பது உண்மைதான்” என்றபடியே துண்டு சிகரெட்டை எஞ்சிய காபியில் எறிந்தார்.