“புருசனுக்கு கோவம் வருந்தான்.. அதுக்குன்னு இப்படியா போட்டு பிள்ளையை அடிக்குறது.”
“யேய் அவன் என்ன வேலை செஞ்சுட்டு வந்து நிக்காந்தெரியுமா, தெரிஞ்சா நீயே அவங்கைகால முறிக்கச் சொல்லுவ..”
“ஆமா ! தவமிருந்து பெத்த புள்ளைய கையகால முறிப்பாவலாம்ல கையகால, அப்படி என்ன பொல்லாதத செஞ்சு கிழிச்சுட்டான்.”
“ராம் தியேட்டர் டீக்கடை பக்கத்தில நின்னுகிட்டு அங்கிட்டு தச்சநல்லூர்பக்கம் போற பிள்ளைய கிட்ட வம்பு இழுத்துட்டு கெடக்காண்டீ... நேத்து அதுல பாலபாக்கிய நகர்காரப் பயல்வ இவன புடிச்சு அடிக்கபோயிருக்கானுவ. அவன்ல ஒருத்தன் தங்கச்சிக்கி லவ்லெட்டர் கொடுத்துருக்காரு தொர... லவ் லெட்டர்.. என்னப்பார்த்தா அண்ணேன்ற வார்த்தைக்கு மறுவார்த்த பேசா தவன் டீக்கடைக்காரன். இன்னைக்கு என்ன பிள்ள வளக்கியன்னு பஜார்ல கேக்கான். எல அவ உங்கூடப் பொறந்தவதானல, அவளையும் பாக்குறல்லா... வீட்டுல இருக்க எடம் தெரியுதா.. நாளைக்கி வெளிய தெருவுல அவகிட்ட எவனாச்சும் பொறுக்கித்தனம் பண்ணா எந்த மூஞ்சிய வச்சிட்டுல போய் கேப்பேன். இங்க பாரு வக்கிறத தின்னுட்டு காலேஜுக்குப் போனமா வந்தமான்னு இருந்தா இரு. இல்ல எங்கிட்டாவது பெட்டிய தூக்கிட்டு கௌம்பிரு சவம் ஒழிஞ்சதுன்னு தலைய முழுகிடுவேன்.”
“நல்ல நாளுங்கிழமையுமா என்ன பேச்சி இது. நா அவன கேக்கேன்.. சொசைட்டில வொரம் வந்து கெடக்குன்னு பால்பாண்டி வந்து சொல் லிட்டுபோறான். நீங்க அதையப் போய் கவனிங்க.”
“இப்படியே என்னைய வெரட்டு.. அவன எதுங்கேட்டுறாத... நாங்கேட்டாலும் ஏவ்வாய அடைச்சிரு. ஏம்மா சுனிதா.”
“என்னப்பா”
“அந்த ஸ்கூட்டர் சாவிய எடுத்துத்தாம்மா.. அப்படியே அப்பாவோட துண்டு கட்டில்ல கெடந்தா கொண்டா.”
“இந்தாங்கப்பா”
துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, முன் வாசல் அறையில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை படிக்கட்டு சாய்தளத்தில் இறங்கி செண்டர் ஸ்டாண்டு போட்டு தூசையைத் தட்டத் தொடங்கினார் அருணாச்சலம்.
வீட்டுக்குள்ளே அம்மாவுக்கும் மகனுக்குமிடையே பேச்சுச் சத்தம் கேட்கத் தொடங்கியது. “ஏம்ல அவருதாம் கூறுகெட்ட மனுசன் அடிக்க வாராருல்ல தெறிச்சுட்டு கத்த வேண்டியது தான. இல்ல நாலெட்டு தள்ளி தப்பிக்க வேண்டியதுதான்.. இப்படியா முதுகு வீங்குத மாதி அடிப்பாரு.. கூறுகெட்ட மனுசன். ஏட்டி சுனிதா அந்த அமுருதாஞ்சனத்த எடுட்டி வீங்கிடப்போவுது புள்ளைக்கி.”
“ஆ வலிக்கிம்மா.”
“ஏ! ராசா எந்த சிறுக்கிக்கி கடுதாசி கொடுத்தன்னு இந்த குதி குதிக்காரு உங்க ஐய்யன்.”
“ம்க்கும் பால்குடிமறக்காத பச்சப்புள்ள. நல்லா மடில வச்சி கொஞ்சு. இவன் உருப்புடாம போறதுக்கு நீதாம்மா காரணம் இந்தா அமிர்தாஞ்சன்.”
“இவ நாலு கண்டா போடி. அய்யனும் மவளும் எம்புள்ளய கரிச்சு கரிச்சே மெலிஞ்சி போய் கெடக் கான். எலா இந்த சிம்மு வச்சி நடத்துதாம்லா அல்போன்ஸு அவம் சொல்லுத பொடி கிடி எதையோ வாங்கி கலந்து குடிக்கக்கூடாது. உடம்புமாதியால வச்சிருக்க.. குச்சுபோல..”.
“உடும்மா போதும் வலிக்குது. எம்மா அப்பா இன்னும் போவல போல இருக்கு வண்டிச்சத்தத்தையே காணும்.”
“எலா ஆமால.... இரு ஒரு எட்டு பாக்கேம்.. யேலெ எந்திரி எந்திரி இங்கதாம் வாராரு....... ”
அந்த மனுசன் அவ்வளோ திட்டுத மாதியால நடந்துப்ப உனக்கு கூறு இருக்கா.. கண்ட சிறுக்கி பின்னால சுத்திட்டு இனி இந்த வாச நடை ஏறாத சொல்லிட்டேன்.. என்று மகனைத் திட்டுவது பாசாங்கைத் தொடங்கினாள் சிவகாமி.
“என்ன கௌம்பலயா சொசைட் டிக்கி..”
“போதும்ட்டீ அம்மையும் மவனும் கூத்தடிச்சது. எம்மா சுனிதா.”
“ஆங் அப்பா இந்தா வரேன்.”
“அந்த ஸ்க்ரூ ட்ரைவர் இருந்தா எடும்மா.. எளவு வண்டி காலங்காத்தால சாட்டாயி தொலையமாட்டுது.. ஏ எரும அதை கொண்டுபோய் ஒடையார்பட்டி மெக்கானிக்குட்ட காட்டிச் சரிபண்ணச் சொன்னம்லா அன்னைக்கே அதச்செஞ்சியால? ஊரு புள்ளா அவலாதி. போய் அது என்னன்னு பாரு.. அடியே! நாம் சௌந்தரபாண்டிகூட ஒன்னா சொசைட்டி போயிட்டு அப்படியே வயல பார்த்துட்டு கோட்டூர்வரைக்கும் போரேன்.. நம்ம ஜவுளி யாவாரி அம்மைய எறந்துட்டாவளாம் வெயில் தாள போய் துட்டி கேட்டுட்டு வந்துரு.”
“துட்டிகேக்க நடந்தா போவாவ காருக்கு காசு எடுத்துவைச்சிட்டு போங்க.”
“பிள்ளையிட்ட கொடுத்து வச்சிருக்கேன் வாங்கிக்க”
“என்ன புதுபழக்கம் பொம்பளப்புள்ளகிட்ட காசு பொழங்க கொடுக்கது.”
“உம்மவன் மவராசம்ட்ட கொடுக்கவா, பெலுட்ட கழட்டி பிள்ளைட்ட கொடுத்திருக்கம்ட்டீ அதில இருக்கும் எடுத்துக்க.”
“என்ன மாப்ள உங்கப்பா வண்டிய தள்ளிட்டு வந்திருக்க காலைலயே.”
“அத விடு எட்டு சீனி தச்சநல்லூர்க்காரி போய்ட்டாலால.”
“அட எளவுபுடிச்சவனே நேத்துத்தானளே அவங்கண்ணன் செவுள்ல உட்டான் நீ இன்னுந் திருந்தலையா.”
“அப்படில்லாம் திருந்தனுன்னா எங்கைய்யா நாலாப்புல அடிக்கும் போதே திருந்திருக்கனும். சீப்பு எங்க வைச்சிருக்கல.. தலைவார இங்க ஒரு கண்ணாடித்துண்டு வச்சிருந்தேனே எங்க மொபட்டு.”
“இது மெக்கானிக் பட்டறையா சலூன் கடையான்னே தெரியாம ஆக்கீட்டீங்கல.. அந்த ஆயில்கேன்பின்னால இருக்கும் பாரு.. எங்க உன் செவலப்பாடிய காணும்.”
“யாருக்கு யார்ல சகலப்பாடி? ஒதவாங்கப்போற.”
“ஒரே பொண்ணுக்கு ரெண்டுவேரும் ரூட்டப்போட்டா பின்ன செவலப்பாடின்னு தானடே சொல்லனும். காரியத்திலயும் அவந்தான் அந்தபுள்ளைய ஆளு. நாளைக்கி பஞ்சாயத்தானாலும் காதுங்காதும் வச்சாமாரி அவனுக்கே கட்டிவச்சிருவாகலாம் கேட்டியா”
“இங்கேரு மொபட்டு... உம்பட்டறையில உன்னயும் மெக்கானிக்கா மதிச்சு வண்டி ரிப்பேர் கொடுக்கச் சொல்லி இருக்காரு எங்கைய்யா. எங்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு காலையிலே கடைய மூடிட்டு ஆஸ்பத்திரிக்கி போய்டாத.”
“ஏல்..யார ..யாரல மெக்கானிக்கில்லங்க.. ஓண்டா கம்பெனில போய் கேட்டு பாரு எஞ்சின் சத்தத்த வச்சே எந்த வயரு விட்டுருக்குன்னு கரெக்டா அடிப்பம்ல. தொழில்காரன்னுதான் அத்தன ஊர்க்காரனும் வண்டிக்கு ஒன்னுன்னா எங்கிட்ட வராங்க”.
“ஆமா போவே ஒங்கைய்யா சைக்கிள் கடையில இருந்த நாலு ஸ்பேனர சுட்டுட்டு கடைய ஆரம்பிச்சுட்டு எங்ககிட்டேவா. சரி சரி யேஆளு வந்துட்டு இருக்கா.. ஓன்சவுண்ட கொறச்சுட்டு பாட்ட சத்தத்த கூட்டு.”
...அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே.. யே... யே...
“ஏ சுனிதா ரெண்டு மஞ்ச துண்டுல எடுடி சிலுவர்டப்பால இருந்து.. இந்த அம்மிய கொத்த வாரவன் வாரேன் வாரேங்கான் எங்க போய் தொலைஞ்சானோ. அடுப்பில ஒல கொதிக்கான்னுபார்த்து தட்டெடுத்து மூடு.. மீன கழுவிட்டியா என்ன..”
“வாரேன் வாரேன் ஏன் பறக்க.”
“பிள்ள பசியோட வருவாம்லட்டீ.. வெயில் வரும் முன்ன பொங்கிவச்சுட்டு துட்டிவீட்டுக்கு போய்ட்டு பொழுது
சாய வந்துரலாம் பாரு.. நீ வரியா கெடக்கியா.”
“நாம்லாம் வரல... அங்க ஒரே ஆளுவளா இருப்பாவ”
“ஆமட்டி ஆளுவளக் கண்டா ஆவாது, கூட்டத்தக் கண்டா ஆவாது, நாளைக்கு உங்கல்யாணத்துக்கு யாருதான் வருவாவன்னு பாக்கேன்.”
“ஏம்மா அண்ணன் இந்த சேட்ட பண்ணுது... அப்பா இந்த திட்டு திட்டுது நீமட்டும் ஏம்மா அவன
கண்டிக்க மாட்டுக்க.. அப்பா சொன்ன அந்த புள்ள யாரு தெரியும்லா.. நம்ம காம்பவுண்டுல குடியிருந்தார்ல போலீஸ்காரர் அவர் பேத்தி.. எங்க ஸ்கூல்லதான் படிச்சா.. சாராடக்கர்ல படிக்கா. அவளத் தான் அண்ணன் கைய புடிச்சி இழுத்து லவ் லெட்டர் கொடுத்துருக்கான்.”
“என்னட்டீ சொல்லுத அந்த புள்ளைக்கா கொடுத் தான்.”
“அப்பாதான் சொன்னிச்சில்ல யெந்த புள்ளைன்னு ..பின்னென்ன.”
“அவம் அடிபட்டத தாங்காம நின்னேனா கவனிக்கல..கெரகம் எங்க கொண்டுபோயி நிக்கி பாரு.. எலா உங்கைய்யன கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வரும் போது எனக்கு ஓவ்வயச விட ரெண்டுவயசுதான் ஜாஸ்தி. கல்யாணமாகி மால காயும் முன்னே எம்மாமியா, அதாங் ஒங்காச்சிக்காரி தங்கத்த கொண்டுவாரல.. வைரத்த கொண்டு வாரலன்னு வாசிக்க ஆரம்பிச்சவதான். உங்கண்ணன் பொறக்கும் வரைக்கும் வாய நிப்பாட்டல, நாலு வருசமா புள்ள இல்லாம கோயில்கோயிலா அலைஞ்சி பொறந்தான் உங்கண்ணன். அப்பமட்டும் நீ பொட்டபுள்ளையா பொறந்திருந்தேன்னு வையி ஒங்காச்சிகாரி என்ன கரிச்சே தின்னுருப்பா.”
“அதான் அண்ணம் மேல அம்புட்டு பாசமா ஒனக்கு. அதுசரி ஆனாலும் அப்பா திட்டுதமாதி அவனும் நடந்துக்கத்தான செய்தான். இவனும் போலீஸ் வேலைக்கி எழுதிப் போட்டிருந்தா நம்ம முனீஸ் அண்ணம்மாதிரி இவனும் இன்னேரம் போலீசா கிருப்பான்ல..”
“ஏட்டி ஏம்புள்ள ஏம்ட்டீ வெயில்லயும் மழையிலயும் கெடந்து வேக்கனும். அழகுபோல அவம்லாம் கலெக்டருக்கே படிப்பாம் பாரு.”
“கிழிச்சான். அவம் பைய எடுத்துபாரு ஒரே ஆர்ட்டின்ல அம்பு வுடுத படமா வரைசுகிட்டு திரியுதான்.. அப்பா மட்டும் இல்லன்னா அவன் உந்தலைல மொளகா அரச்சிருவான்.”
“உங்கப்பா மட்டும் எளவயசுல பஞ்சாயத்து போடு பிரெசிடெண்டாவா இருந்தாரு. எம்மாமனாரு பார்த்த பார்வை என்னைய கட்டி வச்சாவ. இல்லையின்னா உங்கைய்யாவும் இப்படித்தான் சுத்திகிட்டு திரிஞ்சிருப்பாரு.”
“என்னம்மா சொல்லுத நம்மப்பாவா.”
“பின்ன எங்கப்பாவா? உனக்கு சுனிதான்னு பேரு வச்சாரே அது யாரு பேரு தெரியும்லா. அந்த போலீஸ்காரம் மவா இருக்கால அவபேருதாம். இன்னைக்கு அவ மவள எம்மவன் கையபுடிச்சு இழுத்தான்னு குதிக்காரு.”
“யம்மா நெசமாவா.”
“அடி நான் என்ன பொய்யா சொல்லுதன் அங்கபாரு அந்த சன்னலுக்கு பக்கத்தால ஒரு ஆணி நீட்டிக்கிட்டு நிக்கா”
“ஆமா”.
“அங்கதான் நம்ம வீட்டு பெரிய கண்ணாடி தொங்கிட்டு இருந்தது நான் வாக்கப்பட்டு வந்த நாலுமாசம் வரைக்கும்.”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.”
“பொறு சொல்லுதன்.. அந்த ஊதாங்கொழல எடு... கட்டையில போறவன் வெறகு.. மழத்தண்ணிக்குள்ள ஊறவச்சி கொண்டாந்தாம் போல.. மண்ணெண்னைய ஊத்தி ஊத்தி எரிக்கவேண்டியதா இருக்கு.”
“சொல்லும்மா கண்ணாடில என்ன இருந்துச்சி.”
“கண்ணாடில ஒரு மண்ணும் இல்ல. அந்த சன்னலுக்கு பொறத்தால தெரியுதுல்ல அந்த வீட்டுலத்தாம் போலீஸ்காரரு அவரு குடும்பம் இருந்ததுவோ. அவரு மவளத்தான் உங்கைய்யா இங்க இருந்து சைக காட்டி சைக காட்டி மயக்கிருக்காரு. அப்பமுல்லாம் உங்கைய்யா தொடைய இருக்கி தொங்க தொங்க பேண்டும் கண்ணாடியும் போட்டுக்கிட்டு பரட்டத்தலைய பங்கு வளத்து ரஜினிகாந்து மீசை வச்சிட்டு திரிவாராம். ”
“ட்ரங்கு பெட்டில இருக்குமே ஒரு போட்டா அதுமாதியாவா.”
“அதே மொகரக்கட்ட தான். அந்த புள்ளையும் மயங்கிருக்கா, ஊருக்குள்ள வெசயம் தெரிஞ்சிப்போயி சண்டையாயிப்போச்சு. அவுக கள்ளாண்டன கும்புடுதவக.. எம்மாமனாரு அம்மங்கோயில் சாமிகொண்டாடி. எப்படி சேரும். இது சரிவராதுன்னு உங்கைய்யாவ கல்லிடக்குறிச்சிக்கு அனுப்பி வச்சிருக்காவ. அப்பயும் அடங்குனாரா உங்கைய்யன்..பஸ்ஸ புடிச்சு வந்து அந்த புள்ள வீட்டுக்குள்ள ஓட்டப்பிரிச்சி எறங்கி இருக்காரு. போலீஸ்காரம் வீட்டு ஓட்டப்பிரிக்க என்ன தைரியம் வேணும். சச்சரவு ஆகி அவர பம்பாய்க்கு அனுப்பிட்டு அடுத்தமாசமே என்னைய பொண்ணுபாக்க கௌம்பி வந்தாங்க உந்தாத்தன்.”
“அப்போ அப்பா உன்ன பாக்காமத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்குச்சா.”
“நாந்தான் ஒங்கைய்யாவ பாக்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உங்க தாத்தன், கெழவி சித்தப்பங்க ரெண்டியரும் சொக்காரவுகளோட பொண்ணுபாக்க வந்தாவ.. எடையில ஒரு மாசம் பம்பாய் போய் வந்தாவளா நல்லா ரவிக்க துணிமாதிரி சிலுக்குச் சட்டையும் பிலுட்டும் போட்டுக்கிட்டு உங்க சித்தப்பனுங்களும் மினுக்கா வந்து ஒக்கார்ந்துருக்கானுவ. அடையாளம் தெரியாம யாரு மாப்புளன்னு கொளம்பிக்கிட்டு கெடந்தோம். அந்த கரிப்பிடி துணிய எடு.”
“இந்தா அப்புறம் என்னாச்சி.”
“எந்தங்கச்சிய ரெண்டியரும் ஒஞ்சித்தப்பாக்கிட்ட கேக்க மாப்ள பம்பாய்ல இருக்காக இது அவுக தம்பி. மாப்புள பாக்க இப்படித்தான் இருப்பாகன்னு கைய காட்டினாவ. எதுக்கும் இருக்கட்டும்ன்னு உங்கையா போட்டோ கேட்டு விட்டாரு எங்கைய்யா அப்ப எடுத்ததுதான் அந்த ட்ரங்குபெட்டில இருக்குற போட்டோ.”
“அப்பாவ ஒனக்கு புடிச்சிருந்துச்சா பார்த்ததும்.”
“அவருக்கென்ன நல்லா முடிவெட்டுற படத்துல வர்ர ரஜினிமாதிரிதான் இருந்தாவ. புடிச்சுருக்கா புடிக்கலையான்னு கேட்டா அந்த காலத்தில் கல்யாணம்லாம் பண்ணி வைச்சாவ.. மூணு வாரத்தில் கல்யாணம்ன்னு பேசி முடிஞ்சது. அறுப்பு நேரம் ஆரம்பிக்கும் முன்னே கல்யாணத்த எப்படி வைக்கன்னு எங்கைய்யாவுக்கு சங்கடம். பெரச்சனை சூட்டோட போலீஸ்காரம் பொண்ணுக்கு கல்யாணம் ஆனதும் அது வாழப்போற பொண்ணு இவருக்கும் ஒரு கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டு ஊரு பேச்சி அடங்குமே எங்க மாமனாரு உந்தாத்தன்கிட்ட பேசி சம்மதிக்க வச்சாரு. சவம் எம்மாமியாகாரி வாய்க்கு தோதா போச்சி.. அத கொண்டு வரல இதக்கொண்டு வரலன்னு எவளக்கண்டாலும் ஆவலாதி.. நாலு வருசம் ஆயி புள்ள பொறக்கும் வரைக்கும் வீடே மயானக்கெட தான். இதுல உப்பு பாரு.. அண்ணம் வர நேரமாச்சி.. நாம் போய் குளிச்சுட்டு வாரேம். துட்டி வீட்டுக்கு போவனும். மணி என்ன ஆச்சி.”
“எம்மா மீதியும் சொல்லிட்டு போம்மா.”
“பொறகென்னடி... உங்கைய்யனுக்கு அந்த பொண்ணு நியாவத்துல என்னைய பாக்கவே இல்லாம கல்யாணம் பண்ணாரு. நா வேற அப்போ கம்பும் தும்புமா தின்னு கொஞ்சம் கனத்த ஒடம்பா இருந்தனா, உங்க சித்தப்பனுவ பொண்ணு குண்டா இருக்குன்னு சொல்லி இருக்கானுவ. நிச்சயத்துக்கு பட்டுக்கு அளவு ஜாக்கெட் கொடுத்துவிட்டா அதை எடுத்து வச்சிக்கிட்டு இங்கபாரு என்ன விட குண்டா இருக்கு பொண்ணு பாக்கச் சொன்னா.. குட்டியானைய பாத்து வச்சிருக்கன்னு அவங்கைம்மைக்கிட்ட எனக்கிந்த பொண்ணு வேணாம்ன்னு சண்டைய ஆரம்பிச்சிருக்காரு. உங்க தாத்தாதான் பொண்ணு நல்ல பொண்ணுடா... கூறு உள்ளவ வீட்டுக்கு ஏத்த புள்ளன்னு ரெண்டு சத்தம் போட்டு கல்யாணம் நடந்துச்சி.”
“அதுக்கெதுக்கு கண்ணாடி எடம் மாறிச்சி”
“அதாம் உங்கைய்யன் அந்த கண்ணாடில நின்னு தலை சீவும் போது சைக காட்டி அந்த புள்ளைய ரசிச்சத எங்கிட்டயே பெருமையா சொன்னாரு. நானும் வந்த புதுசுல வௌக்கெண்ண மாதிரி கேட்டுக்கிட்டு திரிஞ்சேன். நாலுமாசம் ஆன ஒடனே கொத்துச் சாவி கைக்கு வரவும்... இடுப்புல கொசுவத்தச் சொறுவிட்டு மொத வேலையா கண்ணாடிய கழட்டி நடு அறையில போட்டேன். அன்னைக்கு வாயை மூடின மனுசந்தான். சவரம் பண்ணக்கூட ஜன்னல் பக்கம் போமாட்டாருல்ல. அந்த பீரோவுல சேலை,பாவாடைய எடுத்து வையி.”
“வச்சாச்சி வச்சாச்சி.. பின்ன எனக்கெப்படி அந்தக்கா பேரு வைக்க உட்ட.”
“என்னதாம் இருந்தாலும் எம்புருசன்டீ.. அவரு மனச விரும்புன புள்ளையில்லா... சரி இருந்துட்டு போவுதுன்னு நீ பொறக்கும் முன்னே ஒருநாள் உம்பேர வைக்கலாமுன்னேன். அன்னையில இருந்து நீ பொறக்கும் நாலு வரைக்கும் மனுசன் காலு தரையில் படலய. அதான் உன்ன தங்கமா வச்சி தாங்குதாரு. அதுவும் நீ அவைய பொறந்த அதே தேதி நச்சத்தெரத்தோட பொறந்தியா உங்கைய்யனுக்கு சந்தோசங்கொள்ளல. நீ பொறந்ததுக்கப்புறம் தான் தாத்தாவோட வயலு வாசல்லாம் நமக்குன்னு பங்கு வந்துச்சி. உன்னைய தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடுதாருன்னா சும்மாயா.. ஏட்டீ அண்ணன் வந்தாம்னா கொழம்பு மீனு மட்டும் வைக்காம பொரிச்ச துண்டுல எடுத்து வையி.. நாம் காருக்குப்போய் துட்டி கேட்டுட்டு காலம்பர வாந்துருரேன். அப்பா வந்தாருன்னா மறக்காம வெறகுக்காரங்கிட்ட கட்டைய பொளந்துபோட ஆள் வரச்சொல்லி நியாவப்படுத்து.. உள்ள பூட்டி கொண்டி வச்சிக்க.. டீவியப்போட்டுட்டு தூங்கிராத.. என்ன.”
“ஆட்டும் ஆட்டும் நீ பாத்துப் போ.”
சிவகாமி கிளம்பியதும் வீட்டின் பின்கட்டு ஓட்டை யாருடைய கைகளோ நகர்த்திக் கொண்டிருந்தன.
சுனிதா சுனிதா என்ற குரல் கிசுகிசுப்பாய் அழைத்தது.
சுனிதா டீ.வி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு பின்கட்டுக்குள் நுழைந்து அந்தப் பையனுக்கு இறங்குவதற்கு உதவி செய்தாள்.
ஜூலை, 2015.