புதுக்கோட்டை கம்பன் கழகம் கம்பன் பெருவிழாவை ஆண்டுதோறும் பத்துநாட்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 18 முதல் 27 வரையான விழாவில் 22 ம் தேதி கம்பன் திரையரங்கம் என்ற நிகழ்ச்சியில் சிவகுமார் தன் கம்பராமாயணப் பயணம் குறித்து உரையாற்றிய பின் , அவரது கம்பராமாயண உரையின் ஒரு பகுதி திரையிடப்பட்டது.அதன் பின்னர் அவரோடு நாம் நடத்திய உரையாடல் அவரது கம்பராமாயண ஆய்வு மற்றும் கம்பராமாயணத்தின் பல்வேறு பதிப்புகள் குறித்த பல்வேறு சுவையான தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. பன்முகக் கலைஞர் சிவகுமார் தனது 85 - வயதை நிறைவு செய்து , 86 ஆம் வயதில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் அவரது கம்பராமாயண பயணம் குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.
1938 -ல் வடமொழி பண்பாட்டு ஆதிக்கம் தொடர்பாக ராமாயண எதிர்ப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் தொடங்கினார். அந்த சூழலில் தமிழின் மாபெரும் காப்பியமான கம்பராமாயணத்தைக் காக்கவும் , "பத்தாயிரம் கவிதையை முத்தாக அள்ளித் தந்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாகவில்லை என்று பாடு " என்று பிற்காலத்தில் கவியரசர் கண்ணதாசனால் வியக்கப்பட்ட கம்பனின் கவிநயத்தை காலம்தோறும் வரும் தமிழ் தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடும்
'கம்பனடிப்பொடி'சா. கணேசன் அவர்கள், 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சி தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார்.அதன் பிறகு கம்பன் கழகங்கள் தமிழர்கள் வாழும் பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இயங்கி, "எண்ணி எண்ணி திட்டம் போட்டு எழுதினானோ- எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டினானோ" என்று நாமக்கல் கவிஞரால் வியக்கப்பட்ட கம்பன் கவிநயம் மற்றும் தமிழ்ச் சுவையைப் பரப்பி வருகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் 22 அன்று புதுக்கோட்டைக் கம்பன் கழகத்தில் 51 - ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற ஓவியரும், நடிகரும் பேச்சாளருமான சிவகுமார் 42 கம்பராமாயணப் பாடல்களைக் கூறித் தனது கம்பராமாயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்த விழாவில் சிவகுமார் தான் வரைந்த சிறந்த ஓவியங்களில் ஒன்றாக பெரியார் ஓவியத்தைக் கட்டிய போது அதற்கு எழுந்த கரவொலி சிறந்த சுவைமுரண்.காலமெல்லாம் ராமாயணத்தை எதிர்த்த தந்தை பெரியாரை ரசித்து கைதட்டும் சுவைஞர்கள் கம்பன்கழக விழாவிலும் உண்டு என்பதுதான் தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்று.
தான் பள்ளியில் படித்த காலத்தில் குழு புகைப்படம் எடுக்க 5 ரூபாய் இல்லாமல் இருந்த நிலையில் அவர் 86 ஆம் வயதில் அடி எடுத்து வைக்கும் இந்த ஆண்டு அக்டோபருக்குள் அவரது முகம் சுமார் 5 கோடி பிரேம்களில் இருப்பதையும் நினைவு கூர்ந்தார்.
சிவகுமார் - 24 வயது வரை 140 -க்கும் அதிகமான ஓவியங்கள் தீட்டி, அதன் பின் 43 ஆண்டுகள் திரைத்துறையில் 192 படங்கள் 87 கதாநாயகிகளோடு நடித்து , சில ஆண்டுகள் சின்னத்திரையை சிறப்பித்த பின்னர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேச்சாளராகத் தன் பயணத்தைத் தொடங்கினார்.அவரது கம்பராமாயண உரை அவருக்கு புது வெளிச்சம் தந்ததோடு, சைவம் தழைத்தோங்கிய கொங்கு மண்டலத்தில் வைணவ மரபால் கொண்டாடப்படும் கம்பராமாயணத்தை அழுத்தமாகக் கொண்டு செல்ல உதவிற்று எனலாம்.
கம்பராமாயண உரைப் பயணத்தை நினைவு கூரும் போது 2007 ல் சாலமன் பாப்பையாவின் அன்புக்கட்டளையால் மதுரை கம்பன் கழகத்தில் தொடங்கி , பின்னர் சுதாங்கன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 50 கம்பராமாயணப் பாடல்கள் கொண்டு சென்னையில் 2008 ஆம் ஆண்டில் ஓர் உரை நிகழ்த்த- தொழில்நுட்ப உதவியால் அது கனடா வான்கோவர் வரை ஒலித்துள்ளது. அதன்பின் கம்பராமாயண உரையை விரிவாக்கி 96 பாடல்களுடன் சிங்கப்பூரில் வழங்கி உள்ளார். பின்னர் 100 பாடல்களுடன் ' கம்பன் என் காதலன் ' எனும் அவரது கம்பராமாயண பேருரை ஈரோட்டில் அவரது 67 ஆவது வயதில் அரங்கேறியுள்ளது.
தன் கம்பராமாயண உரையை ஒரு திரைக்கதை போல வடிவமைக்க அவர் செய்த ஆய்வும் வாசிப்பும் அவரது அர்ப்பணிப்புக்கும் அயராத உழைப்புக்கும் சான்று. அல்லையன்ஸ் பதிப்பாக வந்துள்ள சோ எழுதிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் ஆக இருந்ததால் அதைப் புரட்டி விட்டு, அடுத்து டிகேசியின் கம்பர் தரும் ராமாயணம் எனும் நூலை கையில் எடுத்துள்ளார். டிகேசியின் அணுகுமுறையில் சிவகுமாருக்கு உடன்பாடில்லை. பல பாடல்கள் கம்பர் எழுதியவை அல்ல இடைச் செருகல் என்று சொல்லி 10,580 பாடல்களும் 118 படலங்களும் கொண்ட கம்பராமாயணத்தை சுமார் 4000 பாடல்களில் 55 படலங்களில் சுருக்கி விடுகிறார் டி கே சி.இதை சிவகுமார் ஏற்கவில்லை, பல அறிஞர்களும் கம்பர் எழுதியவை என ஏற்றுக்கொண்ட பல பாடல்களை தன் ரசனையின் அடிப்படையில் டி கே சி இல்லை என்று கூறுவது சிவாஜி கணேசன் நடிப்பை இது நல்ல நடிப்பல்ல என்று சிவகுமார் கூறுவதைப் போல வேடிக்கையானது என்று சுய எள்ளலுடன் குறிப்பிடுகிறார்.
1976 ல் சென்னை கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்பு, வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியாரை ( வை.மு.கோ) பதிப்பாசிரியராகக் கொண்டு ஏழு தொகுதிகளில் உமா பதிப்பகம் வெளியிட்ட செம்பதிப்பு ஆகியவையே சிவகுமாரின் தயாரிப்புக்குப் பெரிதும் பயன்பட்டுள்ளன.
கம்பராமாயணத்தை ஓரங்க நாடகம் போல் 100 பாடல்களில் அரங்கேற்றிய நிகழ்வை மதிப்பிடும்போது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சிவகுமார் ஒரு சாதாரணப் பேச்சாளராக இல்லாமல் கலைஞராக இருந்ததால்தான் இது சாத்தியமாயிற்று என்கிறார். சற்று ஆழ்ந்து யோசித்தால் அது உண்மை என்பதை உணரலாம்.உணர்ச்சிக் கேற்ற நடை, முகபாவனைகள், அதீத நினைவாற்றலால் 100 கம்பராமாயணப் பாடல்கள் வழி அவற்றின் பொருளை உள்வாங்கி , வட்டார வழக்கில் நிகழ்கால உதாரணங்களையும் சேர்த்து மூலக்கதைக்கு பங்கம் வராமல் அமைகிறது சிவகுமாரின் கம்பன் திரையரங்கம்.
பட்டி மன்றம்,வழக்காடு மன்றம், உரையரங்கம்,கதை அரங்கம், கவியரங்கம், பேச்சரங்கம் வரிசையில் இப்போது கம்பன் திரையரங்கமும் சேர்ந்துள்ளது.
இளைய தலைமுறைக்கு கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் தனது கம்பராமாயண உரையை மாலினி சேஷாத்திரி மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.