ரவி பேலட்
இலக்கியம்

மண்

அறிவுமதி

"மகளிர்

பாசவல் முக்கித்

தண்புனல்

பாயும்"

- புறநானூறு-63

ஆடு மாடுகள்

மேய்க்கும் சிறுவர்கள்

மேய்ச்சலுக்குப்

போகையில்

துண்டின்

ஒரு

முனையில்

புழுங்கல் அரிசியைக்

கொஞ்சம்

அள்ளிப்போட்டு

முடிச்சிட்டு

ஈரம் செய்து

எடுத்துப் போவார்கள்.

விருப்பப்படுகிற போது

கொஞ்சம் அள்ளி

வாயில்

போட்டுக் கொண்டு

அரிசியை

மென்று விடாமல்

மெல்ல மெல்ல

அதக்கி

அதக்கி

அதில் ஊறுகிற

உமிழ்நீரை மட்டும்

சுவையாய்

விழுங்கி

விழுங்கிப்

பசியாறுவார்கள்.

இது

முப்பது ஆண்டுகளுக்கு

முன்பு வரையில்

கூட

நாம் கண்டதுதான்.

புறநானூற்றில்

ஒரு

காட்சி!

விதைப்புக் காலத்தில்

அவல்

இடிக்கும் பழக்கம்

வேளாண் குடிகளில்

விளங்கிய பழக்கம்.

அப்படி

அவல் இடித்த

பெண்கள்தாம்

கும்மாளமிட்டபடி

குளிக்கச்

செல்கிறார்கள்.

ஆற்றங்கரையோர

மரக்

கிளையில் ஏறி

மடுவில்

குதிக்கப் போகிறார்கள்.

சும்மா

குதிக்கவில்லை

வாய் நிறைய

அவலைக்

குமிக்கிக்கொண்டு

குதிக்கிறார்கள்!

அவலை

அதக்கி

அதக்கி

அதில் ஊறும் உமிழ்நீரை

விழுங்கி விழுங்கிக்

கிடைக்கிற

மகிழ்ச்சியோடு

குளிக்கிறார்கள்.

இப்படி

புழுங்கல் அரிசியை

அள்ளி

வாயில்

போட்டுக் கொள்ள…

அவலை

அள்ளி

வாயில்

போட்டுக் கொள்ள…

மீளவும்

ஒரு

காலம் வருமா

என்று

யாரிடம்

கேட்கலாம்?

உலக

உயிர்களின்

மீது

பரிவற்ற உலகத்

தலைமைகளிடமா?

உலக

அறிவியலின்

உச்ச

ஆற்றலாய்

அணு

ஆயுதங்கள்

கண்டவர்களிடமா?

இல்லை

இதோ

ஏதுமற்ற

ஏதிலியாய்

நின்று…

"இதனைத் தின்றா

நான்

பசியாறுவது"

என்று

வாய் நிறைய

மண்ணையள்ளி

அமுக்கிக்

கொண்டு அழுகிறானே

இந்தச்

சின்னஞ் சிறு

காசா சிறுவனிடமா!?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram