ஜா. ராஜகோபாலன் எழுதி, 'எழுத்து 'வெளியீடாக வந்திருக்கும் 'தெய்வநல்லூர் கதைகள்' நாவல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் பாவண்ணன் தலைமை தாங்கினார். நூலை மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட கவிஞர் ரவிசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார்.
நூல் பற்றிய விமர்சன உரையை எழுத்தாளர்கள் இளம்பரிதி மற்றும் பார்கவி ஆற்றினார்கள் . நிகழ்ச்சியை எழுத்தாளர் அகர முதல்வன் தனது 'ஆகுதி' என்ற ஒன் மேன் ஆர்மி இலக்கிய அமைப்பின் மூலம் நடத்தியதுடன் தொகுத்தும் வழங்கினார். விழாவில் சிறப்புப் பிரதிகளை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் மற்றும் சண்முகம் பெற்றுக் கொண்டனர்.
தனது தலைமை உரையில் எழுத்தாளர் பாவண்ணன் பேசும் போது,
"கடந்த ஆண்டு ஒரு சிறுகதைத் தொகுப்பின் வழியாகச் சிறுகதை ஆசிரியராக அறியப்பட்டு, இந்த ஆண்டு நாவலாசிரியராகவும் வளர்ந்து இன்று தன்னுடைய முதல் நாவலை வெளியிட்டிருக்கிறார் நண்பர் ராஜகோபாலன்.
இந்த நாவல் எதைப் பற்றிப் பேசுகிறது? இந்த நாவலுடைய காலம் என்ன? இந்த நாவலுடைய கதைப் போக்கு என்ன? என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.குறைந்தது முக்கால் பகுதியாவது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
அதனால், நான் கதைக்குள் அதிகமாகப் போகவில்லை. கதைக்கு வெளியில் ஒரு சமூகம் இருக்கிறது.
இந்தக் கதை, மனிதர்கள், இந்தக் கதையில் இருக்கக்கூடிய சிறுவர்கள், இயங்கக்கூடிய சமூகம் சார்ந்த வெளிப்பாடுகளைப் பற்றி சில விஷயங்களை நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்தப் பால்யகால அனுபவங்கள் இந்த நாவல் முதலில் 18 அத்தியாயங்களில் 202 பக்கத்துக்கு உள்ளன. ஒரு ஆரம்பப் பள்ளி வகுப்பில் படிக்கக் கூடிய சிறுவர்களுடைய அனுபவங்கள் .ஒன்றாது வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்பு வரைக்கும் ஒரு ஊராட்சி ஒன்றியப் பள்ளில் படிக்கக் கூடிய மாணவர்கள் அவர்கள் எப்படி ஒரு அணியாக , ஒரு நட்புக் கூட்டமாக அவர்கள் தம்முடைய அன்பைப் பரிமாறிக் கொள்பவர்களாக ஒரு சந்தோஷமான ஒரு உலகத்தில் வாழக்கூடியவர்களாக அவர்கள் அந்த 18 அத்தியாயங்களில் இருக்கிறார்கள். அந்த 18 அத்தியாயங்களை நீங்கள் படிக்கும்போது நம்முடைய பால்ய காலத்தை நம்மால் நினைக்காமல் இருக்கவே முடியாது.
நம்முடைய பள்ளிக்கூட அனுபவங்களை நினைக்காமல் இருக்கவே முடியாது. நம்முடைய பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே நம்முடைய மனத்தில் வந்து போவார்கள். நண்பர்கள் நினைத்துக்கொண்டது போல் அவர்கள் நண்பர்களையும் நினைத்துக்கொள்வதற்கு ஏதுவான காலகட்டமாக அந்த முதல் 18 அத்தியாயங்கள் இருக்கின்றன .
ஒரு தும்பிப் பருவம் என்று சொல்லலாம் . அவ்வளவு அழகான பருவமாக அந்த 18 அத்தியாயங்கள் அமைந்திருக்கின்றன.
அடுத்து வரக்கூடிய 17 அத்தியாயங்கள் நம்மைப் படிப்பதற்கே ஒரு வருத்தமூட்டுகிற , ஒரு சங்கடமளிக்குக்கூடிய ஒரு காலகட்டமாக அது மாறிவிடுகிறது. எட்டாம் வகுப்பு வரையில் ஒன்றாகப் படித்த பிள்ளைகள் எல்லாருமே அடுத்து 9, 10, 11, 12 படிப்பதற்கே ஒரு மேல்நிலைப் பள்ளிக்குப் போகிறார்கள். அந்த மேல்நிலைப் பள்ளில் கிடைக்கக்கூடிய அனுபவங்கள் அந்த தொடக்கப் பள்ளில் கிடைத்த அனுபவங்களுக்கு நேர் மாறானதாக இருக்க்கிறது. எப்படி மாறுகிறது ஏன் மாறியது?
இந்த மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எப்படி அதை எதிர் கொள்கிறார்கள்? இந்த மாற்றத்தை உருவாக்கிக்கொள்ளும் ஆசிரியர்கள் ஏன் அதைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்? அவர்களுடைய மனத்தில் எது வேலை செய்கிறது? மாணவர்களுடைய கல்விக்கு அப்பால் யோசிக்கக்கூடிய ஆசிரியர்கள் ஏன் இப்படி இயங்குகிறார்கள்? இப்படி ஒரு கேள்வி இருக்கிறது. இந்த இரண்டு விதமான உலகங்கள் ஒன்று கொண்டாட்டமான ஒரு பால்யகாலம் , இன்னொன்று ஒரு வதை முகாம் போன்றது. அங்கே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் இப்படி நடந்துகொள்கிறார்களே அது ஏன்? இந்த இரண்டு உலகங்கள் இந்த அத்தியாயங்களில் வருகின்றன.
எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள், 'இந்த புள்ள பூச்சியைக் கொத்திக் கொத்திக் கொத்தி அதை குளவியாக்குவது' என்று சொல்வார்கள். பூச்சிக்கு ஒரு புழுப் பருவம் இருக்கிறது.
ஒரு புழுவாக இருக்கக்கூடியது அது, அடுத்த கட்டத்தில் குளவியாக மாறுகிறது. ஒரு நல்ல புழுவாக இருக்கிறது நல்ல பூச்சியாக இருக்கிறது கூட ஒரு குளவியாக மாறக்கூடிய ஒரு கட்டம். இந்த உரு மாற்றம் இருக்கிறது இல்லையா?
இந்த உருமாற்றம் ஒரு மனிதனுக்குள் எப்படி இயங்கு கிறது ?இவ்வளவு நல்லவனாக இருந்தவன் ஏன் இப்படி மாறினான்?மாறுவதற்கான சூழல் என்ன இருக்கிறது? எப்படி வந்தது?
இதைக் கடந்து போக முடியாதா? ஆனால் ஏன் கடக்க முடியாத அளவுக்கு நம்முடைய சமூகச் சூழல் அமர்ந்திருக்கிறது? இந்தச் சூழலை, ஏதாவது செய்து சரிப்படுத்த முடியாதா?அப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன. இந்தக் காலக்கட்டம் இரண்டு தலைமுறை மூன்று தலைமுறை எழுந்து வருவதாக உள்ளது.
அந்த நாற்பதுகள் ஐம்பதுகள் அறுபதுகளில் இருந்த ஆசிரியர்கள் சமூக மாணவர்களுடைய உறவு எப்படி இருந்தது.
எனக்குத் தெரிந்து நான் படித்த பள்ளியில் ஒரு நாள் வகுப்புக்கு போகவில்லை என்றால் கூட ஆசிரியர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். ஏன் பையன் ஸ்கூலுக்கு வரவில்லை என்று கேட்பார்கள்.அவர்கள் பாசமானவர்கள் தான் ஆனால் அடிக்கத் தயங்க மாட்டார்கள்.ரத்தம் வரும் அளவுக்கு அடிப்பவர்கள் .ஆனால் அந்த அடி வகுப்போடு முடிந்துவிடும்.வரவில்லை என்றால் வீட்டிற்கு வருவார்கள்.
ராமதாஸ் என்ற ஓர் ஆசிரியர் இருந்தார். மிகவும் கடுமையானவர்,மேசையில் பிரம்பு வைத்துக் கொண்டுதான் இருப்பார்.ஒரு நாள் ஒரு பையன் எங்கள் பக்கத்து வீட்டுப் பையன்,அவன் பள்ளிக்கூடம் வரவில்லை. ஏன் வரவில்லை என்று என்னிடம் கேட்டார் தெரியாது ஐயா என்றேன்.தெரியாது என்று சொல்வதற்கா நீ இருக்கிறாய்? உன் பக்கத்து வீட்டுப் பையன் பள்ளிக்கூடம் வரவில்லை என்றால் நீ கேட்க மாட்டாயா? என்று கடிந்து கொண்டார்.சரி நாளைக்கு கேட்டுவிட்டு வருகிறேன் என்றேன். அப்படி வீட்டுக்குப் போனால் அவன் இல்லை,மறுநாளும் அவன் இல்லை. தெரியவில்லை என்று இதை ஆசிரியரிடம் கூறிய போது அவர் என் மீது மிகவும் கோபமாக இருந்தார். மூன்றாம் நாள் தான் எனக்குத் தெரிகிறது.அவனது அம்மா அவன் சினிமா தியேட்டரில் முறுக்கு விற்கப் போய் இருக்கிறான் ,அவன் இனி வரமாட்டான் என்றார்.அதை நான் ஆசிரியரிடம் கூறிய போது அவர் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.மூன்றாம் நாள் எங்களுடன் அவன் வீட்டுக்கு வந்தார், அவன் அம்மாவிடம் கேட்டார் - அந்தம்மா அதே பதிலைக் கூறினார். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார். அதைக் கேட்டதும் அந்த ஆசிரியர் உடல் எல்லாம் நடுங்கி மிகவும் கலங்கிப் போய்விட்டார்.
அப்படி இருந்த ஆசிரியர்கள் அன்று இருந்தார்கள் , அந்த மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் உறவு அப்படி இருந்தது. ஆனால் எதாவது ஒரு கட்டத்தில் அது முறை தவறும்போது அது முறைகேட்டுக்கே உரிய குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது.அதனால் பாதிக்கப் படுபவர்கள் மாணவர்கள்தான். அதனால் அவர்கள் மனதில் பழிவாங்கக் கூடிய உணர்ச்சி வருகிறது.இதை வளர்க்கக் கூடாது என்று நாம் யாருமே சொல்ல முடியாது. ஏனென்றால் மனம் என்பது எந்த சூத்திரத்திற்கும் கட்டுப்படாத ஒரு பறவை.
அது எல்லா கோணங்களிலும் பறக்கக்கூடிய ஒரு பறவை. அந்த பறவை பழிவாங்க வேண்டும் என்றால் அதைப் போய் என்ன செய்ய முடியும்?அது ஏன் பழி வாங்குகிறது? பிள்ளைப் பூச்சியைக் கொத்திக் கொத்திக் குளவியாக்கி விட்டார்கள்.
இந்த 18 அத்தியாயங்களில் புழுவாகவும் பிள்ளைப்பூச்சியாவும் இருக்கக்கூடிய ஒரு பையன் அடுத்த 17 அத்தியாயங்களில் அவன் குளவியாக மாறுகிறான். ஒரு பூச்சி குளவியாக மாறுகின்ற கதைதான் தெய்வ நல்லூர் கதைகள்.
நான் என்ன முக்கியமாக நினைக்கிறேன் என்றால், இந்த பிள்ளைப் பூச்சி கதைளும் உண்மையானது தான், குளவியாக மாறும் கதைகளும் உண்மையானது தான்.இந்த உலகத்தில் எப்போது நடப்பது தான்.ஊழல் எங்கும் இருக்கும் சில இடங்களில் அதிகமாக இருக்கும் சில இடங்களில் குறைவாக இருக்கும்.இரண்டும் சேர்ந்த ஒன்றாகத்தான் இந்த சமுதாயம் இருந்து கொண்டிருக்கிறது.நடுவில் நடுநிலையான ஒரு பகுதி இருக்கும். அது மிகவும் முக்கியமான பகுதி.
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை 'என்கிற அந்தப் பகுதியால் தான் இந்த உலகம் சம நிலையாக நின்று கொண்டிருக்கிறது.அப்படி இதில் சில தெய்வங்கள் உள்ளன.ஒரு ஊரில் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக தன் மகனோடு சேர்ந்து படிக்கும் பிள்ளை ஒன்பதாம் வகுப்பு போக மாட்டேன் என்கிறான். காரணம் கேட்டால் அங்கே மதிய உணவு இல்லை என்கிறான்.அவனுக்குக் கிடைப்பது அந்த ஒருவேளை சாப்பாடு தான்.அதனால அவனது அம்மா அவனை பள்ளிக்கு அனுப்பவில்லை. பாதிரியார் சொல்கிறார் நான் பள்ளிக்கூடத்துக்குப் பணம் கட்டுகிறேன் ஆனால் சாப்பாட்டுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.
இதை அறிந்து கொண்ட நண்பனின் அம்மா தன் மகனோடு அவனுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்புகிறாள்.
அந்த அம்மாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்கள்?
"டேய் உனக்கு கட்டுற சாப்பாட்டுடன் இன்னொரு டப்பா போட்டுக் கொடுக்கிறேன் "என்று கொடுத்து அனுப்புகிறார்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒன்பதாவது பத்தாவது பதினொன்றாவது பன்னிரண்டாவது படிக்கும் வரை நான்காண்டுகள் இப்படிக் கொடுத்து அனுப்புகிறார்.
அப்படி ஒரு மகத்தான மனிதராக அந்த அம்மா இருந்திருப்பார். பள்ளி நாட்கள் இல்லாத நாட்களில் அந்த பாதிரியார் மூலம் சில வேலைகள் பார்த்து, காசு சம்பாதித்துச் சாப்பிடுகிறான்.அந்த அம்மா பாத்திரம் இந்த நாவலின் மிகச் சிறந்த பாத்திரம்.இந்த நாவலை முழுதும் படித்த பிறகு நான் எடுத்துக் கொண்டு செல்லும் பாத்திரம் அந்த அம்மாதான். அந்த ஆசிரியர் மாணவர் ஹீரோ வில்லன் என்று மோதிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்.அவர்களை நான் எடுத்துச் செல்வது கிடையாது.அது எனக்கு முக்கியமே கிடையாது.அவர்கள் இருவருக்கு நடுவில் ஒரு ஜோதி போல உள்ளிருக்கும் அந்த அம்மா பாத்திரம் அது மிக முக்கியமான ஒரு பாத்திரம் .அந்தப் பாத்திரம்தான் இந்த நாவலின் மிகச் சிறந்த பாத்திரம் . தெய்வநல்லூர் கதைகளில் அவர் விதவிதமான பாத்திரங்களை எல்லாம் உருவாக்கிக் காட்டிருக்கிறார். ஆனால் எல்லா பாத்திரங்களில் மிக முக்கியமான பாத்திரம் இந்த அம்மா பாத்திரம் என்றுதான் இந்த நாவல் மிகச் சிறந்த நாவலாகும். அதை எழுதியவர் மிகச் சிறந்த எழுத்தாளராகிறார்.
அதேபோல பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் உடன்படிக்கும் மாணவனைக் கண்டபடி இணைத்துச் சுவர்களில் எழுதி வைக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் அதைப்பற்றி ஒன்றும் கலங்காமல் அவன் என் ஃப்ரெண்டு என்று சொல்லும் இடம் இருக்கிறது.
அது எப்படி வருகிறது?அந்தப் பிள்ளை இயல்பாகச் சொல்வது ,அவனைப் பற்றி எந்த தப்பான எண்ணமும் கிடையாது அவன் என் ஃப்ரெண்டு என்று நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக ஆசிரியர்கள் விசாரணையின் போது கூறுகிறாள்.அவள் ஒரு முக்கியமான பாத்திரம்.எல்லாமே பெண் பாத்திரங்கள் தானா? ஆண் பாத்திரமே இல்லையா என்றால், ஒருவர் இருக்கிறார்.அந்த செண்பக விநாயகர் கோயில் சபேசக் குருக்கள்,வாசலில் நோன்புக் கஞ்சி வைத்து படைக்கிறார். என்னடா நண்டு, தேளு,வாலு எல்லாம் வந்து விட்டீர்களா என்று கேட்டு பல மத, ஜாதி என்று கூடியிருக்கும் அனைவருக்கும் திருநீறு பூசுகிறார்.
இந்த மாதிரி மனிதர்கள் தான் மகத்தான மனிதர்கள். தெய்வ நல்லூர் கதைகள் காட்டக்கூடிய மகத்தான மனிதர்களுடைய வரிசையில் இவர்கள்தான் முதன்மையானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த முதன்மையானவர்களைக் காட்டிய இந்த நாவலை எழுதிருக்கிற ஜா.ராஜகோபாலனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பேசினார்.