முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் சாகித்ய அகாடமியும் ஜே.என்.யுவின் தமிழ் ஆய்வுகளுக்கான சிறப்பு மையமும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டினை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளது. இந்த நிலையில், சாகித்ய அகாடமியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் ஆய்வுகளுக்கான சிறப்பு மையமும் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்பில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகள் கருத்தரங்கினை ஒருங்கிணைத்துள்ளன.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் முதல் நாள் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பேசுகின்றனர்.
பின்னர் கலைவாணர் மினி ஹாலில் நடைபெறும் முதல் அமர்வில் எழுத்தாளர் இமையம், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. முபின் சாதிகா ஆகியோர் கலைஞர் கருணாநிதியின் கவிதையில் உள்ள அழகியலையும் அரசியலையும் பேசுகின்றனர்
உணவு இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இரண்டாம் அமர்வில் நடராச பிள்ளை, பாரதி பாலன், ரமேஷ் ஆகியோர் கலைஞர் கருணாநிதியின் நாவல்களில் உள்ள தத்துவம், சமூக சமத்துவம், வணிக உறவுகள் குறித்து உரையாற்றுகின்றனர்.
மாலை 3 மணிக்கு மேல் நடைபெறும் மூன்றாம் அமர்வில், கலைஞரின் சங்க இலக்கிய பங்களிப்பு குறித்து மறைமலை இலக்குவனார், ரவிக்குமார், ஜெயராமன், மோகன்ராஜ் ஆகியோர் பேசுகிறனர்.
இரண்டாம் நாள் (28 ஜூன்) நிகழ்வின் நான்காவது அமர்வில் கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள் குறித்து முருகேச பாண்டியன், ரவிசுப்ரமணியன், ராமராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
11:45 மணிக்கு நடைபெறும் ஐந்தாவது அமர்வில் கலைஞர் கருணாநிதியின் திரைப்பட வசனங்கள் குறித்து சுப்பிரமணி, சந்திரசேகரன் ஆகியோர் பேசுகின்றனர்.
உணவு இடைவெளிக்குப் பிறகு நடக்கும் ஆறாவது அமர்வில் கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதங்கள் குறித்து ராமமூர்த்தி, பழ. அதியமான். சங்கர சரவணன் ஆகியோர் பேசுகின்றனர்.
நிகழ்வின் இறுதி அமர்வாக கனிமொழி எம்பி, தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் பேசுகின்றனர்.
கலைஞரை கடைசி வரை கண்டுகொள்ளாத சாகித்ய அகாடமி தற்போது கருத்தரங்கம் நடத்துவது விந்தைதான்!