இலக்கியம்

தணியாத தாகமும் அபரிதமான மோகமும்

நீல பத்மநாபன்

எழுத, வாசிக்கத் தொடங்கிய பிஞ்சு நாட்களி லிருந்தே புத்தகங்களின் மீது சொல்லத்தெரியாத பிரேமை... புத்தகம் கையில் கிடைத்துவிட்டால், முதலில் அதை முகர்ந்து பார்ப்பதில் ஒரு சுகம்... வாசிப்பதெல்லாம் பிறகுதான்….

பள்ளிப்படிப்பின்போதே, கிறுக்கிய எழுத்துகளை பக்கத்திலிருந்த அச்சகத்தில் கொடுத்து, தப்பும் தவறுமாய் புத்தகம் சொந்தமாய் வெளியிட்டப் கிறுக்குத்தனம்—மிஸ் அட்வேன்சர் (misadventure}…

இந்நூலுக்குத் தமிழ்ப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எழுதிய முன்னுரை; “ இதை எழுதியவன் பள்ளிச்சாலையில் படிக்கும் சிறுவன்,,,,கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவனை ஊக்குவிப்பது நமது கடமையாம்….”

இந்த ஊக்குவிப்பின் கதகதப்பில் பள்ளிப் படிப்பின்போதே இன்னுமொரு புத்தகத்தையும் கைப்பணத்தில் சொந்தமாய் அச்சிட்டக் கைங்கரியம்…

இதன்பிறகு நீண்ட இடைவெளி, புத்தகம் வெளியிடுவதில்… வாசிப்பும் எழுத்தும் ஓயவில்லை- சில சின்னப் பத்திரிகைகளில்…

அரசு உடைமையிலிருந்த பொது நூலகம், பல்கலைக்கழக நூலகம் எல்லாம் தவறாமல் சென்று தமிழ், ஆங்கிலம், மலையாளம் நூல் வரிசைகளிலிருந்து புத்தகங்களை எடுத்து வாசிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் முடிந்து உத்தியோக காண்டம் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு கதம்ப நூல்….எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் கிறுக்கிய கவிதை, கல்லூரி கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பாரதி பற்றிய கட்டுரை, உள்ளூர் மாதஇதழில் வெளியான இரண்டொரு கதைகள், அனைத்திந்திய கல்லூரி மாணவர்களின் வானொலி ஓரங்க நாடகப்போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் இப்படி ஒரு கதம்ப நூல். கேரளப்பல்கலைக்கழக தமிழ்த்துறை மேலாளரின் முன்னுரையுடன்… பக்கத்திலிருந்த ஓர் அச்சகத்தில் கொடுத்து சொந்தமாய் அச்சிட்டு, தன் வீட்டு முகவரியில் பிரசுரித்த நிகழ்ச்சி…

வயிற்றுப்பாட்டுக்கான வேலையின் கூட, ராப்பொழுதுகளில் தூக்கத்தைத் துறந்து எழுதிமுடித்த ஒரு நாவல்…இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மன், ரஷிய மொழிகளுக்கெல்லாம் எழுதியவனின் எந்த முயற்சியுமின்றிமொழிபெயர்க்கப்பட்ட நாவல்… இந்தியாவின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாய் கநாசுவால் புகழ்த்தப்பட்ட நாவல்…, த்மிழ்நாட்டுப்பத்திரிகைள், பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதால், வேறு வழியின்றி நெல்லைச்சீமைக்கு எடுத்துச்சென்று கைப்பணத்தைச் செலவிட்டு, ப்ரூப் பார்த்து, காகிதம் வாங்கிக்கொடுத்து சொந்தமாய் வெளியிட வேண்டிவந்த கட்டாயம்…

--பிறகு, ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் விருது எம்ஜிஆர் கரங்களிலிருந்து பெறுவதற்கு காரணமாயிருந்த ‘உறவுகள்’ நாவல் தமிழ்நாட்டு தலைநகர் பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதால் நாகர்கோவிலில் ஒரு அச்சகத்தில் கொண்டுபோய்க் கொடுத்து அச்சிடவேண்டிவந்த நிலைமை...

...இவ்வாறு பட்டியலிட்டு சொல்லிக்கொண்டேபோய் இந்தப் பழங்கதையை இங்கே நீட்டிச்சொல்லும் உத்தேசம் இல்லை.

----இதற்கெல்லாம் மூலகாரணம், முதலில் நான் குறிப்பிட்ட புத்தகங்கள்...—புது புத்தகங்களின் மீதுள்ள அபரிதமான பிடிப்புத்தான் என்றுதான் தோன்றுகிறது…

சொன்ன நேரத்தில் ப்ரூப் தராமல் ஏமாற்றி நாள்களைக் கடத்துவது, அநியாயமான அச்சுக்கூலி. –இக்காரணங்களினால் அச்சக உடமையாளர்களுடன் மோதல்கள், ஆரம்ப காலத்திலிருந்து இந்த 86 வயது தள்ளாமை காலத்திலும்… எதிர்ப்பும், ஆதரவுமான ஒரு மிக்ஸ்ட் ரியாக்‌ஷனுக்கு ஆட்பட்டு கசப்பான கணங்களுக்கு உள்ளாகி, மனவேதனைக்கும். சுய ரோதனைக்கும் ஆளாகி ‘போதுமடா சாமி’ என்று முடிவு செய்தாலும், பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம்போல், மீண்டும் மீண்டும் புதிய புத்தகங்களை வெளிக்கொணர உத்வேகமாக-உந்து சக்தியாக தனக்குள் தீவிரமாகச் செயல்படுவது புத்தகங்களின் மீதுள்ள இந்த தணியாத தாகம்-அபரிதமான மோகம்தான் என்று தோன்றுகிறது.

ஆதியோடந்தமாக, புத்தகம் போடுவதில் பட்ட பாடுகளைப்பற்றியெல்லாம் ‘தேரோடும் வீதி’ நாவலில் ஒரளவுக்கு சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்..அவற்றையெல்லாம் மீண்டும் இங்கே சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்…கடைசியாக இவ்வாண்டும் நிகழ்ந்ததும் இதுவேதான்..…எழுத்து, உழைப்பு, தவிர கைப்பணச்செலவு…! பதிப்பகங்களிலிருந்து ராயல்டியாக ஒன்றும் கிடைக்காதிருந்தும்கூட இது தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருப்பதற்கான காரணமும் மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்களின் மீதுள்ள இன்னும் தணியாத மோகம்தான்.

இதில் வேடிக்கை புத்தகங்களை விலைகொடுத்து வாங்கிறவர்கள் அதிகம்பேரில்லை என்பதுதான்… கூரியர், பதிவுத்தபால் பணம் செலவுசெய்து வேலை மெனக்கெட்டு அனுப்பிவைத்தால் கிடைத்தது என்று தெரிவிப்பவர்கள் அனேகமாக இல்லையென்றே சொல்லலாம்… (என்னிடம் கேட்காமல் புத்தகம் அனுப்ப உங்கிட்டெ யார் சொன்னார்கள்? என்று அவர்கள் கேட்டால் பதிலில்லை என்பதுதானே உண்மை, கசப்பாயினும்).

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram