ஓவியம்: ரவிபேலட்
இலக்கியம்

காதல் போர்

அறிவுமதி

குன்றக்குறவனொடு

குறுநொடிபயிற்றும்

துணை நன்கு உடையள்,

மடந்தை: யாமே

துணைஇலேம்

தமியேம்பாசறையேமே!

-நற்றிணை -341

கொடிய பகைவரோடு

போரிடுவதற்கான

எல்லையின் பாசறையில்

காவல்

காக்கிற

போர்

வீரன்.

போர்வீரன் மட்டும்தானா

தன்

உயிருக்குயிரான

இல்லத்தாளிடமிருந்துத்

தன்னைப்

பாதியாகக்

கிழித்துக்கொண்டு

வந்தவன்போல்

அவளது

அன்பின் பிரிவில்

அல்லற்படுகிறவன்.

கொட்டும் மழை.

காட்டாற்றில் வெள்ளம்,

கூதிர்க்குளிர்.

வேறுநிலத்து வெறுப்புவாடை.

இவ்வளவுமாகக்

கூடிக்

கொடுமை செய்யும்

இந்தக்கொல்லும்

குளிர்ப்

பொழுதில்தானா

அந்தக்காட்சி

அவன்

கண்களில் படவேண்டும்!

அவள்

குன்றக்குறத்தி.

அவன்

அவளது குறவன்.

உலகமே அறியா

பழங்குடியில்

பிறந்த

உயிர்களையே

உடைகளாக

அணிந்து

உருண்டு திரண்ட உடலர்களாக அந்த

இளையர்கள்.

குறுங்கற்களாலான

ஓடையிலிருந்து

பாறையில் இறங்கும்

அருவியில்

கிச்சுகிச்சு

மூட்டியும் கிண்டல் பேசியும்

குளித்து மகிழும்

குருவிகளாய் அவர்கள்!

மதர்ப்பின் செழிப்பில்

மகிழ்ச்சி

வழிகிற

குறும்புகளின்

குத்தகைச்செல்லம்

அவள்!

நீராடல்

சலிக்க

ஓடிப்பிடித்து விளையாட

அவனை

உசுப்புகிறாள்.

ஒரு மரத்திலிருந்து

சடக்கென

ஒடித்த

சிறுகுச்சியைக் கொண்டு

அவனை

அடிக்க

ஓங்குகிறாள்.

அவன்

அஞ்சி நடுங்கி

கைகள் கட்டி

பணிந்து

நிற்கிறான்.

காதுகளைப் பிடி

என்கிறாள்

பிடிக்கிறான்

தோப்புக்கரணம்

போடுடா

என்கிறாள்.

போடுகிறான்.

வாழப்பிறந்த

இல்லை

இல்லை

வாழ்ந்துகொண்டிருக்கும்

இந்தப்

பழங்குடிப்

பிள்ளைகளுக்கு..

நாடு என்றால் என்னவென்று தெரியாது.

அரசு என்றால்

என்னவென்று தெரியாது.

படை என்றால்

என்னவென்று

தெரியாது.

போர் என்றால்

என்னவென்று

தெரியாது

சண்டை தெரியும்.

அதுவும்

காதலின்

பொய்ச்

சண்டை.

பொய்ச்சண்டை

போட்டுக்

கொண்டு

எவ்வித

சூதுவாதுமற்று

இயற்கையோடு

இயற்கையாய்

குதூகலித்துக்

கும்மாளமிடும்

இந்தப்

பூர்வகுடிச்

சிறுசுகளின்

வாழ்வழகைக்

கண்ட

படைவீரன் என்ன

சிந்தித்திருப்பான்!

நாடு

அமைக்காமல்

அரசு

நிறுவாமல்

படை

திரட்டாமல்

போர்

புரியாமல்

இந்தப்

பழங்குடியினரின்

வாழ்வு

முறையிலேயே

வாழ்ந்திருந்தால்

உயிருக்கினிய

என்

காதல்

துணையாளும் நானும்

இவர்களைப்போலவே

மழையில்

நனைந்தும்

அருவியில்

ஆடியும்

கடுங்குளிர்

வாழ்த்தக்

கட்டிப்புரண்டு கட்டிலை

உடைத்திருப்போம்தானே!

இதனைப் படிப்போரே!

உலக

அறமன்றத்திடம் சொல்லி

உலகப்போர்களை

உசுப்பி

விடும்

அறமற்ற

அரசுக்

கட்டில்களை

எப்போது

உடைக்கலாமென

தேதி

கேட்பீர்களா!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram