ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஆசி கந்தராஜா சென்னை புத்தகக் காட்சிக்கு வந்திருந்தார். அவரிடம் இந்த புத்தக்காட்சி பற்றி அவருடைய அனுபவங்களைக் கேட்டோம்:
கடந்த 2018 ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் எனது தெரிந்தெடுத்த சில சிறுகதைகளைக் கொண்டு ஒரு சிறுகதை தொகுதியை 'கள்ளக் கணக்கு' என்ற பெயரில் வெளியிட்டு இருந்தது.
அப்பொழுது, அதற்காக நான் கோயம்புத்தூரில் நடந்த புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தேன். அதன் பின்னர் இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக திருவிழாவுக்கு எனது பெருவிருப்பின் காரணமாக என் மனைவியுடன் வந்திருந்தேன். இந்த ஆண்டு மீண்டும் காலச்சுவடு தேர்ந்தெடுத்த எனது நெடுங் கதைகளை 'திரிவேணி சங்கமம்' என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமல்ல டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்தாபனத்தினர் எனது 'பணச்சடங்கு' சிறுகதை தொகுப்பினை, அதாவது இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற ஒரு தொகுப்பை, மீண்டும் இந்தியப் பதிப்பாக வெளியிட்டிருந்தார்கள்.
அதற்காகவும் சேர்த்தே நான் 2026 ஆம் ஆண்டு நடந்த சென்னை புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தேன்.
ஆன்லைன் விற்பனையும் மின்னூல்களும் பரவலாக உள்ள, இந்தக் காலத்திலே புத்தகக் கண்காட்சி தேவையற்ற ஓர் ஆடம்பரமாகக் கருதுவதாக சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால் அதன் தேவை மிக அவசியம் என்று நான் உணர்கிறேன்.எனது தொழில் விஷயங்களை ஆன்லைன் மூலம் அதன் மேற்கொண்ட பொழுதிலும் நான் என்றும் புத்தகங்களை வாசிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
உண்மையிலேயே புத்தகத் திருவிழாவைப் பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. பல நூற்றுக்கணக்கான பதிப்பகங்களை ஒரே கூடுகையாக அங்கே கண்டபோது நான் அடைந்த பிரமிப்புக்கு மகிழ்ச்சிக்கும் அளவில்லை. நான் அங்கே கழித்த நாட்கள் எனக்கு பெரிதும் உற்சாகமும் ஊக்கமும் தந்த நாட்கள் என்று கூறுவேன்.
பல எழுத்தாளர்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. கேள்விப்பட்ட பல பதிப்பகங்களையும் பதிப்பக அதிபர்களையும் ஊழியர்களையும் நேரடியாகச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.
எனவே புத்தகக் கண்காட்சி நிச்சயம் நடைபெற வேண்டும். அது மிக மிக அவசியமான ஒன்று . இதைப் பார்க்கின்ற பொழுது ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி மேலும் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் நடைபெறுவதற்கு எனது வாழ்த்துகள்.
நான் கேள்விப்பட்டவரை சென்னையில் மட்டுமல்ல மேலும்பல இடங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. ஆனால் நான் அறிந்தவரையிலே சென்னையிலே நடக்கின்ற இந்த புத்தகக் கண்காட்சி தான் மிகவும் பெரியது என எண்ணுகிறேன். நிச்சயம் பதிப்புத்துறை தொடரும், அது மிகவும் வீறு கொண்டு எழுச்சி பெறும் என்பதில் எனக்கு எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
எத்தனை மின் ஊடகங்கள் வந்தாலும் எத்தனை ஊடகங்கள் மூலம் வாசகர்களும் மாணாக்கர்களும் இளம் சந்ததியினரும் வாசிப்பு மேற்கொண்டாலும் நிச்சயம் புத்தகத்தில் வாசிக்கின்ற எழுச்சியும் மகிழ்ச்சியும் என்றுமே மின் ஊடகங்களிலே கிடைக்கப் போவதில்லை.
எனவே ஆன்லைன் விற்பனையும் மின் நூல்களும் பரவலாகியுள்ள இந்த நேரத்திலும் இந்தப் புத்தகக் கண்காட்சி நிச்சயம் நடைபெற வேண்டும். புத்தகங்கள் மேலும் மேலும் அச்சிடப்பட வேண்டும்.
இங்கே இந்தப் புத்தக கண்காட்சியில் எத்தனையோ பேர் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்பதைப் பார்க்கின்ற பொழுது எனக்கு ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய நம்பிக்கையும் ஏற்பட்டது . அப்போது இந்த பதிப்பகங்கள் தொடர்ந்தும் எழுச்சியுடன் நடைபெறும் என்று எண்ணினேன். பதிப்புத் துறை வீரியமுடன் வீறு நடை போட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.