எழுத்தாளர் மருதன் 
இலக்கியம்

‘புல்கூடப் போடாமல் புள்ளிமானைப் போருக்கு அனுப்பினால்....’ - எழுத்தாளர் மருதன் நேர்காணல்

தா.பிரகாஷ்

வரலாறு, வாழ்க்கை, அரசியல், சமூகம் ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியிருக்கும் மருதன் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார். அவருக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப் பேராயம்’ அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது ‘கண்ணாடி கிரகத்தின் கவலை’ என்ற அறிவியல் புனைகதை நூலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, கேள்விகளை முன்வைத்தோம்.

தமிழ்ப் பேராயத்தின் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் மதிக்கும் படைப்பாளர்களில் ஒருவரான அழ. வள்ளியப்பாவின் பெயரால் வழங்கப்படும் தமிழ்ப் பேராய விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். அதே நேரம், விருதுகளில் எனக்கு எப்போதுமே நாட்டம் இருந்ததில்லை என்பதையும் சொல்லியாகவேண்டும். ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்பது விருது மட்டுமே அல்ல. நான் அடிப்படையில் ஒரு வாசகன் என்பதால் வாசிப்புதான் ஒரு நூலுக்கான மெய்யான ஏற்பு என்று நம்புகிறேன்.

‘கண்ணாடி கிரகத்தின் கவலை’ நூலில் 12 அறிவியல் புனைகதைகள் உள்ளன. இதில் எந்த கதை எழுதுவதற்கு உங்களுக்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது?

தமிழ்ப் பேராயம் விருது பெற்ற புத்தகம்

எந்தக் கதைக்குமே தேவைப்படவில்லை. வாசிக்கும்போது, நடக்கும்போது, பயணம் செய்யும்போது அல்லது வேறு ஏதாவது வேலைகள் செய்துகொண்டிருக்கும்போது மனம் அது பாட்டுக்கு எதையோ கற்பனை செய்துகொண்டிருக்கும். வேலையைத் தள்ளி வைத்துவிட்டு அந்தக் கற்பனையில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்போது ஒரு கதை உருவாக ஆரம்பிக்கிறது. மனதுக்குள்ளேயே உணவிட்டு ஒரு பூனைக்குட்டிபோல் அதை வளர்க்க ஆரம்பிப்பேன். யாராவது கேட்கும்போது சட்டென்று அமர்ந்து எழுதிக் கொடுத்துவிடுவேன். ஒருவரும் கேட்காவிட்டால் அந்தப் பூனை எனக்குள்ளேயே வாலைச் சுழற்றியபடி உலாத்திக் கொண்டிருக்கும். பூனை வளர்ப்பதை யாராவது உழைப்பு என்று சொல்வார்களா என்ன? அப்படியே சொன்னாலும் பூனை ஒப்புக்கொள்ளுமா?

சிறார்களுக்கான அறிவியல் புனைவு எழுதுவதில் உள்ள சவால்கள் என்ன?

நான் படித்தது ஆங்கில இலக்கியம் என்பதாலும் நான் அதிகம் வாசிப்பது ஆங்கிலக் கதைகளை என்பதாலும் ஆங்கிலத்தில் வெளிவரும் அறிவியல் புனைவுகளோடு தமிழை ஒப்பிடுவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. அப்படிச் செய்யும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

ஒரு நல்ல அறிவியல் புனைவு எழுதுவதற்கு அபாரமான கற்பனை வளமும் ஆற்றலும் தேவை. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தள்ளி வைத்துவிட்டு ஒரு புதிய எதிர்காலத்தைப் படைக்கவேண்டும். நாம் படைக்கும் எதிர்காலத்தில் நிகழ்காலச் சமூக யதார்த்தங்களோ பிரச்சனைகளோ இருக்கலாம் ஆனால் அவற்றை இதுவரை நாம் காணாத, இதுவரை கற்பனையும் செய்திராத புதிய சூழலில், புதிய கோணத்தில் பொருத்திச் சிந்திக்கவேண்டும். கட்டுக்கடங்காத அதிகாரம் ஒரு சிலரின் கரங்களில் குவியும்போது என்னாகும் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் கற்பனை செய்தபோது உருவானதுதான் 1984 எனும் அறிவியல் புனைக்கதை. நம் செயல்கள் மட்டுமல்லாமல் நம் சிந்தனைகளும் எவ்வாறு ஆட்சியாளர்களால் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு கட்டுப்படுத்தப்படும் என்பதை இந்நாவல் அச்சுறுத்தும் வகையில் விவரிக்கிறது. எதிர்காலம் குறித்த அவர் கற்பனை மெல்ல, மெல்ல நிகழ்காலத்தில் நடைபெறுவதை நாம் காண்கிறோம். ஒரு நல்ல அறிவியல் கதை முழுப் புனைவாக இருக்கும் அதே நேரம் நாம் எல்லோரும் பொருட்படுத்தியே தீரவேண்டிய பெரும் பிரச்சினைகளையும் விவாதிக்கிறது. குழந்தைகள் தொடங்கி பொது வாசகர்கள்வரை அனைவருக்கும் ஏற்ற வடிவம்தான் என்றாலும் நல்ல அறிவியல் புனைவுக்கதைகள் தமிழில் மிக அரிதாகவே எழுதப்படுகின்றன.

தமிழ் சிறார் இலக்கியத்துக்கு நீண்ட பாரம்பரியம் இருந்தாலும், நீங்கள் சொல்வது போல், நல்ல அறிவியல் புனைகதைகள் தமிழில் ஏன் அரிதாகவே வருகின்றன?

இக்கேள்விக்கு எளிய விடை எதுவும் இல்லை. வங்க மொழியில் வெகு காலம் முன்பே அறிவியல் புனைவுகள் எழுதப்பட்டுள்ளன. மராத்தியில் ஜெயந்த் நார்லிகர், நாராயண் தரப் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். அறிவியல் புனைவு மட்டுமல்ல, இளம் வாசகர்களுக்கான திகில் கதைகள், சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள் போன்றவையும்கூடத் தமிழில் அதிகமில்லை. பழகிய தடங்களைத் துறந்து புதிய வடிவங்களை முயன்று பார்ப்பதற்கான ஊக்கத்தை தமிழ் எழுத்தாளர்கள் பெறவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர்கள் முயன்று பார்க்க விரும்பினாலும், பதிப்புலகில் அதற்கான சாத்தியங்கள் இருப்பதுபோல் தெரியவில்லை. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கென்றே நிறைய இதழ்கள் இருந்தன. அனைத்தும் இன்று நிறுத்தப்பட்டுவிட்டன. மொழியாக்கம் கடந்து தமிழில் காமிக்ஸ் வடிவத்தை ஒருவரும் முனைப்போடு முயன்று பார்த்ததுபோல் தெரியவில்லை. வண்ணத் தாளில் அச்சிட்டால் விலை கூடும், விலை கூடினால் ஒருவரும் வாங்க மாட்டார்கள் எனும் பல்லவி இன்றும் பாடப்படுகிறது. அடிப்படையே ஆட்டம் காணும்போது புதிய சிந்தனைகள் எப்படித் தோன்றும்? எப்படிக் கவனிக்கப்படும்? எப்படி வரவேற்பைப் பெறும்?

ஒரே சமயத்தில் பெரியவர்களுக்கும் எழுதுகிறீர்கள். சிறாருக்கும் எழுதுறீர்கள். இது எப்படிச் சாத்தியமாகுது?

வடிவத்தில் மட்டுமே மாறுபாடு; எடுத்தாளும் தலைப்புகளில் எந்த வேறுபாடும் நான் பார்ப்பதில்லை. இதைப் பொது வாசகர்களுக்குத்தான் எழுதவேண்டும், இதை இளம் வாசகர்களால் புரிந்துகொள்ளமுடியாது என்றெல்லாம் நான் கோடு கிழிப்பதில்லை. கபீரை வாசிக்கும்போது, அதிலிருந்து ஒரு சிறு விள்ளலை எடுத்து இளம் வாசகர்களுக்கு அளிக்கலாமே என்று மனம் ஏங்கும். மார்க்ஸைப் புரட்டும்போது, இந்த ஒரு வரியை மட்டும் கதை வடிவில் குழந்தைகளுக்கு அளித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வேன். பாரதி சொன்னதுபோல் 'எளிய பதங்கள், எளிய நடை...' எனும் வடிவத்தை நான் பழகிக்கொண்டதற்கு இளம் வாசகர்களுக்கு நான் தொடர்ந்து எழுதுவதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

உங்களைக் கவர்ந்த பிற அறிவியல் புனை ஆசிரியர்கள் யார்?

ஒரு பள்ளி மாணவனாக ஐசக் அசிமோவை முதல் முதலில் வாசித்து சிலிர்த்த தருணம் இப்போதும் நினைவில் இருக்கிறது. ஹெச்.ஜி. வெல்ஸ், மேரி ஷெல்லி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரே பிராட்பரி, மார்கரெட் ஆட்வுட் என்று என்னைக் கவர்ந்தவர்கள் ஏராளமானோர்.

தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் இன்றைய நிலை எப்படியிருக்கிறது?

சிறார் இலக்கியம் எனும் வகைப்பாட்டிலேயே எனக்குப் பிரச்சினை இருக்கிறது. நான் பார்த்தவரை குழந்தைகளுக்கான கதைகள் எழுதப்படுகின்றன. பொது வாசகர்களுக்கான கதைகள் எழுதப்படுகின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் மிகப் பெரிய ஒரு கடல் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. தமிழில் இந்தக் கடலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக யாரும் கால் வைத்ததுபோல் தெரியவில்லை.

ஆங்கிலத்தில் ‘யங் அடல்ட்’ என்று அழைக்கப்படும் இளம் வாசகர்களுக்காக எக்கச்சக்கமானோர் எழுதிவருகிறார்கள். ஹாரி பாட்டர், ஹங்கர் கேம்ஸ், டைவர்ஜண்ட் சீரிஸ், தி மேஸ் ரன்னர் என்று உலகெங்குமுள்ள இளம் வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த நூல்கள் ஏராளம் உள்ளன. தொடக்கநிலை பள்ளி மாணவர்கள், நடுநிலை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என்று தொடங்கி ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களுடைய வயது, வாசிக்கும் திறன் ஆகியவற்றை மனத்தில் கொண்டு பிரத்தியேகமாக ஆங்கிலத்தில் கதைகள் எழுதப்படுகின்றன. தமிழில் சிறார் இலக்கியம் எனும் ஒரு தலைப்பில்தான் நூல்கள் வெளிவருகின்றன. அவை குட்டிப் பாப்பாக்களுக்கான கதைகள் மட்டுமே. நான் என்னை இளம் வாசகர்களுக்கான எழுத்தாளன் என்றே அடையாளம் கண்டுகொள்கிறேன்.

எப்படிப்பட்ட சிறார் நூல்கள் எழுத வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

இளம் வாசகர்களுக்காகத் தொடர்ந்து கட்டுரைகளும் வாய்ப்புள்ளபோது கதைகளும் எழுதி வர வேண்டும் என்று நினைக்கிறேன். முழுநீள சாகச நாவல் எழுதிப் பார்க்கவேண்டும் எனும் குறுகுறுப்பு இருக்கிறது. எப்போது செய்வேன் என்று தெரியவில்லை.

நீங்கள் தேடித்தேடி வாசிக்கக்கூடியவர். இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறீர்கள். நீங்கள் கவனித்த வரை மற்ற மாநிலங்களில் சிறார் இலக்கியத்தின் நிலை என்ன?

மகிழும்படியாகவோ நிறைவளிக்கும்படியாகவோ எந்த இந்திய மொழிகளிலும் சிறார் இலக்கியமோ இளம் வாசகர்களுக்கான எழுத்துகளோ செழித்திருப்பதுபோல் தெரியவில்லை. நான் ஆங்கிலமும் தமிழும்தான் வாசிக்கிறேன் என்பதால் இந்த இரு மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளிவந்தால்தான் பிற மொழி இலக்கியங்களை மதிப்பிடமுடியும்.

சிறார்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

ரயிலில் ஏறினால் புத்தகமோ செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். பார்ப்பவர்களகவும் கேட்பவர்களாகவும் நாம் இன்று மாறிவிட்டோம். குழந்தைகளைக் காட்சிகளும் விளையாட்டுகளும் பாடல்களும் கவர்கின்றன என்பதால் அவர்கள் விரைவிலேயே செல்பேசியின் கட்டுப்பாட்டில் திரண்டுவிடுகிறார்கள். புத்தகம் என்பது அவர்களைப் பொருத்தவரை பாடப்புத்தகம் மட்டும்தான். வாசிப்பு என்பது மதிப்பெண்ணுக்காக வாசிப்பது. கண்கவர் சாதனங்களை ஒரு புத்தகம் போட்டிப் போட்டு வெல்வதும் ஓர் உக்கிரமான புலிக்கூட்டத்தை ஒரு புள்ளிமான் தனித்து நின்று மோதி வீழ்த்துவதும் ஒன்றுதான்.

இருந்தும் நாம் அதே அரதப்பழசான அறிவுரைக் கதைகளையும் சலிக்கச் செய்யும் நீதி போதனைகளையும்தான் கதை எனும் பெயரில் பெருமளவு உற்பத்தி செய்து வருகிறோம். வெறும் தகவல்களைச் சேர்த்துக் கட்டி கட்டுரையாகவும் நூலாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறோம். இது தகவல்களின் யுகம். ஒரு கணப்பொழுதில் எதையும் செல்பேசியில் கண்டடைந்துவிடமுடியும். குழந்தைகளையும் இளம் வாசகர்களையும் வாசிப்பை நோக்கி இழுக்கவேண்டுமானால் அவர்கள் கையிலிருக்கும் செல்பேசியைக் காட்டிலும் அல்லது அதற்குச் சமமான மாயத்தை நிகழ்த்தும் எழுத்துகளை அல்லவா நாம் அவர்கள் கரங்களில் அளிக்கவேண்டும்? புல்கூடப் போடாமல் புள்ளிமானைப் போருக்கு அனுப்பி வைத்தால் அது எப்படிப் போட்டியிட்டு வெல்லும்?

பலவிதமான கதைகளை பலவிதமான வடிவங்களில் எழுதிக் குவிக்கவேண்டிய காலம் இது. உள்ளடக்கத்தில் மட்டுமின்றி வடிவமைப்பிலும் பல புதுமைகளை நாம் செய்யவேண்டும். மொழி, களம், அச்சு, சித்திரம், வண்ணம், வடிவம் என்று அயல்நாட்டு ஆங்கில நூல்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. அறிவியல்போல் புனைவுக்கும் நாடு, மொழி, பண்பாடு போன்ற எல்லைகள் கிடையாது. எங்கிருந்தும் கற்கலாம். எங்கிருந்தும் அள்ளியெடுத்து வந்து தரலாம். எழுதும் முறை மாறவேண்டுமானால் சிந்தனை முறையும் மாறவேண்டும். அதற்கு நாம் அனைவருமே நிறைய வாசிக்கவேண்டும். குறிப்பாக எழுத்தாளர்கள் தம் எல்லைகளை இயன்றவரை விரிவாக்கிக்கொண்டே போக வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram