ஏ.ஐ. ஆய்வாளர் லுவோ ஃபுலி 
செய்திகள்

டீப்சீக் வெற்றிக்குப் பின்னால் 29 வயது இளம் பெண்!

தா.பிரகாஷ்

ஒரே இரவில் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது, சீனாவின் டீப்சீக் ஏ.ஐ. செயலி.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் பட்டியலில் முதலிடத்தை இது பிடித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குசந்தையில் அந்நாட்டு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. இப்போதைக்கு ஏ.ஐ. உலகில் அதிகம் பேசப்படும் மென்பொருளாக இது உள்ளது.

டீப்சிக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு அதன் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையே காரணம் என்கிறார்கள். குறிப்பாக, இந்த குழுவில் இடம்பெற்றிருந்த 29 வயதான லுவோ ஃபுலி குறிப்பிடத்தக்கவராக கருதப்படுகிறார்.

யார் இந்த லுவோ ஃபுலி?

பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்த இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஏ.சி.எல். மாநாட்டில் 8 கட்டுரைகளை வெளியிட்டு, பீக்கிங் பல்கலைக்கழத்தின் Institute of Computational Linguistics துறையில் இடம்பெற்றார்.

இவரின் திறமை பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, அலிபாபாவின் கவனத்தை ஈர்த்தன. பின்னர் அலிபாபாவின் DAMO நிறுவனத்தில் ஆய்வாளராக சேர்ந்தார். அங்கு AliceMind ப்ராஜெக்ட்டில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்காற்றியுள்ளார்.

கடந்த 2022இல் டீப்சிக்கில் இணைந்தார். லுவே ஃபுலி, நாம் பேசும் மொழிகளை கணினிகள் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (Natural Language Processing) மிக முக்கிய பங்காற்றியுள்ளார். இதற்காக அவருக்கு கிடைத்துள்ள பாராட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல.!

டீப்சீக் வரலாறு

டீப்சிக் கடந்த 2023இல் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் அறிமுகமான சீனாவின் டீப்சீக் செயலி சார்பில் வெளியிடப்பட்ட ஆர்1 மற்றும் வி3 ஏ.ஐ. மாடல்கள், அமெரிக்க பங்குச் சந்தைகளை உலுக்கியது. ஒரே நாளில், ஆப்பிள் ஆப்ஸ்டோரில் பதிவிறக்க எண்ணிக்கையில், சாட் - ஜி.பி.டி.யை சீனாவின் டீப்சீக் ஏ.ஐ. மாடல்கள் கடந்து, உலகின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்தன.

சீனாவின் புதிய ஏ.ஐ. மாடல்கள், குறைந்த விலையில் உற்பத்தி செய்யக்கூடிய சிப்களை பயன்படுத்தும் என்ற தகவல் வெளியானதும், சிப் தயாரிப்பில் கோலோச்சும் என்விடியா நிறுவன பங்கு விலை அதலபாதாளத்துக்கு சரிந்தது. அதனுடன், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், டெல் டெக்னாலஜிஸ் என, பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகளும் வீழ்ந்தன.

என்விடியாவின் 'எச்800' சிப் வாயிலாக செயல்படும் டீப்சீக் ஏ.ஐ., சேவைக்கு மிகக் குறைந்த தரவு போதுமானது. இதனால், ஓபன் ஏ.ஐ. யின் சாட் - ஜி.பி.டி.க்கு ஆகும் செலவை விட பலமடங்கு குறைவு என்பது, இந்த துறையினரின் புருவத்தை உயர்த்தி உள்ளது. இதனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சந்தையில், அமெரிக்கா மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் சீனா பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.