செய்திகள்

3,409 பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ப்பு!

Staff Writer

தமிழ்நாட்டு அரசின் பத்திரிகையாளர் நல வாரியம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாளன்று தொடங்கப்பட்டது. இதுவரை மாநில அளவில் 3 ஆயிரத்து 409 பத்திரிகையாளர்கள் இதில் உறுப்பினர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் கல்வி, மருத்துவம், இயற்கை மரணம் உட்பட 21 வகைகளில் உதவி நிதி வழங்கப்படுகிறது.

இதற்கான தொகையானது, நாளேடுகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் முகமைகளுக்கு அரசால் தரப்படும் பணத்தில் ஒரு சதவீதத்தை பத்திரிகையாளர் நலவாரியத்துக்குத் தரப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

இதில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நீண்ட காலம் தெளிவில்லாமல் இருந்துவந்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருந்தும் இன்னும் முழுமையாக வாரியத்தில் பதிவுசெய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பத்திரிகைத் துறையில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் பத்திரிகையாளர்கள் இந்த வாரியத்தில் பதிவுசெய்துகொள்ளலாம் என இந்த ஆண்டுக் கொள்கைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.