செய்திகள்

3 வயது குழந்தை உட்பட 8 பாகிஸ்தானியர்கள் பலி!

Staff Writer

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 3 வயது குழந்தை உட்பட 8 பாகிஸ்தானியர்கள் பலியானதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பெகல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த கர்னல் சோபியா குரோஷி, “ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் 25 நிமிடங்கள் நடந்தது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ நிலையங்கள் குறிவைக்கப்படவில்லை. இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.” என்று கூறியிருந்தார்.

ஆனால், சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளில், இந்தியா ராணுவத்தினர், பாகிஸ்தான் மீது 6 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 3 வயது குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றன.

ஆனால், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரிப் சவுத்ரி கூறுகையில், இந்தியா நடத்திய தாக்குதல்களில் 26 கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும், பாகிஸ்தான் நடத்திய எதிர் தாக்குதலில் இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் 3 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் சில ராணுவ வீரர்களை சிறைபிடித்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.