தலைமைச் செயலகம் 
செய்திகள்

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு!

Staff Writer

தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும், ஒரு நாளில் பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் மே 31ஆம் தேதி நிலவரப்படி 9.42 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். தற்போது மாநில அரசு ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயது 60.

பொதுவாக, தமிழக அரசு ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில்தான் பணி ஓய்வு பெறுவார்கள். எனவேதான் மே மாதங்களில் அதிகம் பேர் பணி ஓய்வு பெறுவது இத்தனை காலமாக வழக்கத்தில் இருந்துள்ளது.

இதற்குக் காரணம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த கல்வியாண்டு முடிவு பெறும்போது அதாவது மே மாதங்களில்தான் பணி ஓய்வு பெறுவார்கள் என்பதால், ஏராளமான ஆசிரியர்கள் இன்றுடன் அதாவது மே 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால்தான், ஒரே நாளில் சுமார் 8,144 பேர் பணி ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.