ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை  
செய்திகள்

ஆன்லைன் சூதாட்டம் - 88ஆவது தற்கொலை தமிழகத்தில்!

Staff Writer

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 88ஆவது உயிரிழப்பாக திருச்சி மாவட்டத்தில் நேற்று வங்கி உதவி மேலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.        

திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த பிடாரமங்கலம் தேவர்மலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவர், ஈரோடு மாவட்டம், முத்தூரில் கரூர் வைஸ்யா வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் கடந்த சில மாதங்களில் ரூ.10 லட்சம்வரை இழந்துள்ளார்.  இதனால் தன் மனைவியிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் நெய்க்காரன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்ற ஜெயக்குமார், இரயில் பாதைக்குச் சென்றவர் அப்போது வந்த விரைவு ரயிலுக்கு முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். 


அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, “ஜெயக்குமாரின் தற்கொலை கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 11ஆம் தற்கொலை ஆகும். தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 28 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 88 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழந்துள்ளனர். அதை உறுதிசெய்யும்வகையில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.