அரசுப் பள்ளி 
செய்திகள்

9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Staff Writer

ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நேர்ந்துள்ளது. 

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், இன்று காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். காலை 8.40 மணியளவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அலறிய சக மாணவிகள் ஆசிரியர்களுக்குத் தெரிவித்தனர். ஓடிவந்து பார்த்த ஆசிரியர்கள் மாணவியின் உயிர் பிரிந்துவிட்டதையே உறுதிசெய்ய முடிந்தது. 

தகவல் அறிந்து வந்த சுரண்டை காவல்நிலையத்தினர் மாணவியின் உடலை, தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தனர். 

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் சூடுபிடிக்காத நிலையில், நடப்பு ஆண்டில் பள்ளித் தேர்வுகளை முன்னரே முடித்துக்கொள்ள கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தேர்வுகளுக்கான வேலைகள் நடந்துவரும் நிலையில், இப்படியொரு துயரம் நிகழ்ந்துள்ளது.