ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படம் 
செய்திகள்

கும்பமேளாவில் மல்யுத்த வீரர்களுடன் ஷாருக் கான் இருக்கும் புகைப்படம் உண்மையா? -Fact Check

Srijit Das, தா.பிரகாஷ்

கும்பமேளாவில் மல்யுத்த வீரர்களுடன் நடிகர் ஷாருக்கான் இருப்பது போன்ற புகைப்படம் உண்மையல்ல; அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை.

பரவிய தகவல்: கும்பமேளாவில் மல்யுத்த வீரர்கள் ரோண்டா ரெளசி, ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோருடன் நடிகர் ஷாருக்கான் இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரலானது.

உண்மை சரிபார்ப்பு: மல்யுத்த வீரர்களுடன் ஷாருக்கான் இருப்பது போன்ற புகைப்படம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை.

உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இந்த ஆண்டு பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. இது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 26 அன்று மகா சிவராத்திரியுடன் முடிவடைகிறது. கடும் குளிர் நிலவும் நிலையிலும், இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து புனித நீராடிச் செல்கிறார்கள்.

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகரான ஷாருக்கான், மல்யுத்த வீரர்களான ரோண்டா ரெளசி, ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோருடன் இருப்பது போன்ற ஏ.ஐ. உருவாக்கிய படத்தைப் பலரும் உண்மை என நம்பி பரப்பி வருகின்றனர்.

இந்த படத்தினை, “கும்பமேளாவில் நடிகர் ஷாருக்கானுடன் ரோண்டா ரெளசி, ரோமன் ரெய்ன்ஸ்” என பகிர்ந்துள்ளனர் (இணைப்பு 1, இணைப்பு 2).

இந்த படத்தை பூம் (BOOM) நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம், இதன் உண்மைத்தன்மையை சரிபார்த்தது. அதில், இந்த படம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

உண்மை சரிபார்ப்பு

ஷாருக்கான் மல்யுத்த வீரர்களுடன் இருக்கும் இரண்டு படம் பற்றி தெரிந்து கொள்ள முதலில் ரிவர்ஸ் இமேஜ் சர்ஜ் (Reverse Image Search) மூலம் தேடிப்பார்த்தோம், ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர், படங்கள், வீடியோக்களை சரிபார்க்கும் ஏ.ஐ. கருவியான Hive Moderation மூலம் சோதித்துப் பார்த்ததில், இந்த புகைப்படம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது 80 சதவீதம் அளவுக்கு உறுதியானது.

முதல் படம்

ஏ.ஐ. டிடெக்டர் (AI-detector) கருவியின் முடிவுபடி இந்த படம் 85.8 சதவீதம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது அல்லது டீப்ஃபேக் என்பது உறுதியானது.

இரண்டாம் படம்

இரண்டாவது படத்தை ஏ.ஐ. டிடெக்டரைப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்தோம், இந்த படம் 81.5 சதவீதம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது அல்லது டீப்ஃபேக் என்பது உறுதியானது.

கும்பமேளாவையொட்டு பல்வேறு போலிச் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உண்மை செய்தி எது என்பதை மக்கள் தேடி அறிந்து கொள்வது நல்லது.

இந்த செய்திக்கட்டுரையை BOOM தளம் முதலில் வெளியிட்டது.

மூலச்செய்தி இணைப்பு : AI Photos Viral As Shah Rukh Khan With WWE Wrestlers At Maha Kumbh

இதை Shakti Collective fact check (சக்தி கலெக்டிவ்) குழுவின் ஒரு பகுதியாக அந்திமழை ஊடகம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.