அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 
செய்திகள்

கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுகவினர்!

Staff Writer

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு இதன் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நேற்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது டாஸ்மாக விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 'அந்த தியாகி யார்?' என்ற பேட்ஜை சட்டையில் அணிந்து சென்றனர். மேலும் கேள்வி நேரம் முடிந்ததும் அதே விவகாரம் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரினார்.

எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பதாகைகளை பிடித்து வந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.