திமுகவை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
"தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிப்பவர்களை எச்சரித்துதான் அனுப்ப வேண்டும். இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர்களின் உடமைகளை பறிப்பதையும் ஏற்க முடியாது. கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அனைவருக்கும் தெரியும். யார் ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது?
தர்மபுரியில் ஆட்சியர், எஸ்பியை மிரட்டுகிறார் திமுக பிரமுகர். திமுக ஆட்சியில் அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து என்ன பயன். திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் குறிக்கோள்; வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை.
திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை. தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. கூட்டணி குறித்து அப்போது பார்க்கலாம்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது ஆனால் மாநிலங்களவை சீட்டு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பேசிக்கொள்ளலாம் எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை" என்றவரிடம் சீமான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு எடப்படி பழனிசாமி, ”இது அவரின் தனிப்பட்ட பிரச்னை. அசிங்கப்படுத்துகிறார்கள் என சீமானே சொல்லியிருக்கிறார். இதை கேட்டுஅசிங்கப்படுத்தாதீர்கள். முக்கியமான கேள்விகளை” என்றார்.