எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

விஜய் கட்சியுடன் கூட்டணியா…? எடப்பாடி சொன்ன பதில்!

Staff Writer

தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு “தேர்தல் உத்திகளை தற்போது வெளியில் கூற முடியாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக வலிமையான கூட்டணி கட்சியா அல்லது நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தவெக வலிமையான கூட்டணி கட்சியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கும் பதில் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைந்தாலும், அதிமுக தலைமையிலான ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று அமித்ஷா தொடர்ந்து பேசி வருவதுதான். ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்திருக்கிறார். அதில் பாஜக, தவெக இருவரில் யார் வலிமையான கூட்டணி? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, “பாஜக ஒரு தேசியக் கட்சி. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பலம் இருக்கிறது. அதனால் கட்சிகளுக்கு இடையிலான பலத்தை ஒப்பிட முடியாது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த மனநிலையில் உள்ள கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு “தேர்தல் உத்திகளை தற்போது வெளியில் கூற முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.