பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மக்களவையில் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். அதன்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின் கீழும் முதலமைச்சர், அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31ஆவது நாளில் அவர்களை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
இதேபோல, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டால், அவர்களைக் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்யவும், அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படாவிட்டால், தானாகவே பதவி நீக்கம் செய்யப்படவும் வழிவகை செய்யப்படுகிறது. இந்த சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் வகையில், மூன்றாவது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு மாறாக இந்த மசோதா அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலஅவகாசம் தேவைப்படும் சூழலில், அதிலிருந்து விலக்கு அளித்து உடனடியாக தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு மக்களவைச் செயலாளருக்கு அமைச்சர் அமித் ஷா நேற்று கடிதம் எழுதி, இன்று இந்த மூன்று மசோதாக்களையும் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.