ஜி.கே. மணி 
செய்திகள்

பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை! – ஜி.கே. மணி

Staff Writer

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என்றும் வரும் ஜூலை 8ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு உள்ளதாகவும் அக்கட்சியின் கவுரத்தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாசுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாசுடன் இருப்பவர்களை அன்புமணியும் மாறி மாறி நீக்கி வருகிறார்கள். இதனால் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இருவருக்கிடையே நடைபெற்று வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த நிலையில் பா.ம.க. தலைமை நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருந்த அன்புமணி, திலக பாமா, பாலு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிதாக பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, முரளிசங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிர காசம், தீரன், பு.தா. அருள் மொழி ஆகியோர் நியமிக்கப் பட்டனர். அவர்களுடனேயே ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழு பொறுப்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் அன்புமணியின் பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என்று ஜிகே மணி கூறியுள்ளார்.

இந்த நிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜிகே மணி, பாமக நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கப்படவில்லை. வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.