குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தகவல் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண், அலைபேசி எண், இறந்தவர் பெயர் நீக்கம் ஆகியவற்றை அப்டேட் செய்வதற்கு ஜூன் 30ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
குறிப்பாக அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ளவர்கள், ரேஷன் பொருட்களை வாங்க ஜூன் 30ஆம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்த செய்தியில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இன்று விளக்கம் அளித்துள்ளது.
அதில் இது தவறான தகவல். அந்தியோதயா அன்னை யோஜனா மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம்.
ஆனால் அதற்கென கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை இல்லை என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.