கமல்ஹாசன் 
செய்திகள்

‘நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா… மொழியியல் வல்லுநரா?’ – கமல்ஹாசனை விளாசிய நீதிமன்றம்!

Staff Writer

கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மொழி குறித்து பேச நீங்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ளது.

கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப், திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவில் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நடிகர் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதையடுத்து 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அதில் தனது படத்தை வெளியிட அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது எனவும், திரையரங்குகளில் படம் தடையின்றி வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா,”நீங்கள் ஒரு பிரபலம். கன்னடம் தமிழிலிருந்துதான் பிறந்தது என எப்படி கூற முடியும்? நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? இல்ல வரலாற்று ஆய்வாளரா? என்று கேள்வி எழுப்பியது.

தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என கூற உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனம் புண்படும் வகையில் கமல் பேசி உள்ளார். ஒரு மன்னிப்பு கேட்டாலே இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். நீர், நிலம், மொழி மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது. மொழியை சிறுமைப்படுத்திவிட்டு வணிக நோக்கில் கமல் நீதிமன்றம் வந்துள்ளார்.

மன்னிப்பு கேளுங்கள், அப்போதுதான் இங்கு சில கோடிகள் சம்பாதிக்க முடியும். இந்த மனு மீது இன்று மதியம் 2.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

1950களில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி இதுபோன்ற ஒரு கருத்தைத்தெரிவித்து அதன் பின்னர் மன்னிப்புக் கேட்ட சம்பவத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.